அத்தியாயம் 14
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றைப் பார்வை
ஓடி வந்து உயிரைத் தொட்டதோ!!!(பாடல் வரி)
திருவான்மியூர் ஏரியாவில் இருந்தது அந்த அழகிய அபார்ட்மெண்ட். ஒருவர் காதலை மற்றவர் அறிந்து கொண்ட அடுத்த நாளே, தன் அம்மாவிடம் திருமணத்தைப் பற்றிப் பேசி விட்டான் இன்பவாணன். முறையாக தன் தாயை அறிமுகப்படுத்தத்தான் பூர்ணாவை அழைத்து வந்திருந்தான்.
“என் குடும்பத்தப் பத்தி, என் அம்மாவ விட்டு நான் தள்ளிப் போனதைப் பத்தி எல்லாம் ஓரளவுக்கு சொல்லிட்டேன் உன் கிட்ட. மத்ததெல்லாம் அவங்களே சொல்லுவாங்க! அம்மா கொஞ்சம் கட் அண்ட் ரைட்டான ஆளு! பயப்படாம பேசு! நான் கூடவே இருப்பேன்” எனச் சொல்லித்தான் அழைத்து வந்திருந்தான் இன்பன்.
இவர்களை வரவேற்க வந்த மேகலையைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் பூர்ணா. இவனுக்கு சொந்தமென்பதால் அவரை அழைத்திருக்கிறார்கள் என எண்ணியவள்,
“வணக்கம் மேடம்” என்றாள்.
“உள்ள வாம்மா!” எனச் சொன்னவர் அமர இருக்கைகளைக் காட்டினார்.
“உட்காரு! நான் போய் ஜூஸ் எடுத்து வரேன்” எனச் சொன்னவரை,
“ம்மா! உட்கார்ந்து உங்க மருமக கிட்ட பேசுங்க! நான் போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன்” எனச் சொல்லி பக்கத்தில் அமர்ந்திருந்தவளை ஓரக் கண்ணால் பார்த்தான் இவன்.
பூர்ணாவுக்கு முகம் வெளிறிப் போனது. மேகலையைப் பற்றி கிண்டலடித்தது, மிமிக்ரி செய்தது எல்லாம் மனக் கண்ணில் படமாய் ஓடியது.
“எதே!! அம்மாவா???” என அதிர்ந்தவளைப் பார்த்து, இவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
சிரிக்கும் மகனைப் புன்னகையுடன் பார்த்த மேகலை, அவன் தலையில் வலிக்காமல் கொட்டினார்.
“இன்னும் சொல்லலியா நீ? போடா, போய் குடிக்க எடுத்துட்டு வா” என மகனைத் துரத்தி விட்டார்.
“மேடம்! மேடம்! எனக்கு இன்பூ உங்க மகன்னு சத்தியமா தெரியாது மேடம்” எனத் திக்கியவளைப் பார்த்து,
“ஏன்? தெரிஞ்சா அவனை வேணாம்னு சொல்லிடுவியா?” எனக் கேட்டார் மேகலை.
அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்தவள்,
“அப்படி சொல்லனுமா மேடம்?” என உள்ளேப் போனக் குரலில் கேட்டாள்.
“பைத்தியம்! ஒரு முடிவு எடுக்கற வரைக்கும்தான் தயக்கம் இருக்கலாம், பயம் இருக்கலாம். எடுத்துட்டா அதுல நிலைச்சி நிக்கனும்”
“பயந்துட்டே வந்தேன் மேடம்! இன்பூ அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோன்னு! நீங்கதான் அம்மான்னு தெரிஞ்சதும் இன்னும் பயமா போச்சு! தைரியமா மனசுல உள்ளத இன்பூக்கிட்ட சொல்ல முடிஞ்சது! ஆனா அதுக்கு அடுத்த ஸ்டேப் எடுத்து வைக்கனும்னு நெனைக்கறப்போ, ரொம்ப பயமா இருக்கு மேடம்! நீங்க என்னை ஏத்துப்பீங்களா, உங்க சொந்தங்கள்லாம் என்னை ஏத்துப்பாங்களான்னுலாம் மன உளைச்சலா இருக்கு!” என மனதில் அழுத்திக் கொண்டிருந்ததை அப்படியே சொன்னாள் பூர்ணா.
“உன்னை ஏத்துக்கத் தயங்கற அளவுக்கு நீ என்ன கொலை குத்தமா செஞ்சிட்ட. ரெண்டாவது கல்யாணம் செய்யப் போற, அதுல என்ன குத்தம்? ஆம்பிளைங்க அம்பது, அறுபது வயசானாலும் பொண்டாட்டி செத்துட்டா மறுமணம் செஞ்சிக்கிறாங்க! அதையெல்லாம் ஏத்துக்கற சமூகத்துக்கு பொண்ணுங்கள குத்தம் சொல்ல என்ன உரிமை இருக்கு? இப்போ முன்னப் போல இல்ல பூர்ணா. மக்கள் ரொம்ப மாறிட்டாங்க! மனசு விசாலமாகிடுச்சு! சோ, மத்தவங்க என்ன நெனைப்பாங்கன்ற இன்செக்கியூர் ஃபீலீங்க தூக்கித் தூரப் போடு! உனக்கு இன்னும் சின்ன வயசு! வாழ வேண்டிய காலம் இன்னும் நீண்டுக் கெடக்கு! உன் மாஜி புருசன பார்த்ததுமே புரிஞ்சது நீ என்ன மாதிரி நரக வாழ்க்கையை வாழ்ந்துருப்பன்னு! வயசானவ என்னையே அப்படிப் பார்த்துத் தொலைக்கிறான். இனி இந்தப் பக்கமே தலை வச்சிப் படுக்கக் கூடாதுன்னு மெரட்டி அனுப்பனேன்! இனியாச்சும் சந்தோஷமா இரு”
“தேங்க்ஸ் மேடம்” எனச் சொன்னவளுக்கு குரல் கரகரத்தது.
“உன்னை எனக்கு பிடிக்கும் பூர்ணா. உன்னோட டெடிகேஷன் ரொம்பப் பிடிக்கும். பார்ஷியாலிட்டிக் காட்டக் கூடாதுன்னுதான் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாவே ட்ரீட் பண்ணேன் உன்னை. வேலைல எனக்கு உதவிக்கு வரேன்னு சொன்ன சொந்த மகன் இவனையே பாஸ்னு உள்ளக் கொண்டு வராம, சாதாரண ஆளாத்தான் அறிமுகம் பண்ணேன். உங்க கூடலாம் பந்தா இல்லாம பழகிப் பார்க்கனும், கீழ் நிலையில இருந்து வேலையைக் கத்துக்கனும்னு நெனைச்சேன். உன் கூட சேர்த்து விட்டா உன்னோட பாஸிட்டிவிட்டி அண்ட் டெடிகேஷன் கொஞ்சமாச்சும் இவனுக்கு ஒட்டிக்காதான்னுதான் உனக்கு கீழ வேலைக்குப் போட்டேன்! நல்லாவே ஒட்டிக்கிட்டான் போ” எனச் சொன்னவருக்கு அப்படி ஒரு சிரிப்பு.
இவளோ அசடு வழிந்தாள்.
“உடம்பு முடியாத என்னைப் பார்த்துப் பாவப்பட்டு பொறுப்ப ஏத்துக்கறேன்னு ஆபிஸ் வந்தாலும், உன் இன்பூக்கு அங்க ஒட்ட முடியல! அவனோட இண்ட்ரேஸ்ட் இந்த டாட்டூ பக்கம் போய்டுச்சு! அவனுக்குப் புடிச்சத தொழிலா செய்யறதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லைனாலும், அவங்கப்பா தொடங்கன இந்த ரியல் எஸ்டேட் எனக்குப் பிறகு ஒன்னும் இல்லாம போய்டக் கூடாதே! இப்போ எனக்கு சந்தோசம்தான். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே ரெண்டு தொழிலையும் பார்த்துக்குங்க!” என்றவருக்கு அப்படி ஒரு நிறைவானப் புன்னகை.
“என்ன புன்னகைலாம் தூள் பறக்குது?” எனக் கேட்டபடியே பானத்துடன் வந்தான் இன்பன்.
“பொசிட்டிவிட்டி படிச்சுப்பன்னு நம்பி அனுப்பனா, அவள பொண்டாட்டியா ப்ரோமோட் பண்ணட்டியேன்னு சொல்லிட்டு இருந்தேன்”
“அம்மா!” என்றவனுக்கு முகமெல்லாம் சூடாகிப் போனது.
வாய் விட்டு சிரித்த மேகலை,
“ரொம்ப சந்தோசமா இருக்குடா!” எனச் சொல்லி அடுத்த நொடி அழுகையில் குலுங்க ஆரம்பித்தார்.
“மேடம்! அம்மா” என இருவருமே எழுந்து அவர் அருகே போனார்கள்.
“அப்படியே என்னை விட்டுத் தள்ளிப் போய்டுவியோன்னு ரொம்ப பயந்துட்டே இருந்தேன். எனக்கு மட்டும் ஹார்ட் அட்டாக் வரலன்னா, என் பக்கம் ஓர் எட்டு எடுத்து வச்சிருக்க மாட்ட நீ! எல்லாருக்கும் அட்டாக் ஒரு பயம்னா எனக்கு அதுவே வரமாகிப் போச்சு! இல்லைனா என் வேலைப் பளுவ குறைக்கறேன்னு நெருங்கி இருக்க மாட்ட நீ! அப்படியே தனிமைல செத்துப் போய்டுவேனோன்னு விரக்தியா வாழ்ந்துட்டு இருந்த எனக்கு, என் மகன் கிடைச்சிட்டான். இப்போ ஒரு மருமகளும், பேரனும் கூட கிடைச்சிட்டாங்க! இனி செத்தாக் கூட நிம்மதியா போவேன்டா” எனக் கலங்கினார்.
இவள் அவரது முதுகை நீவிக் கொடுக்க, மகன் கையைப் பிடித்து கண்ணீர் விட ஆரம்பித்து விட்டான். முரட்டுக் குழந்தையின் அழுகையைப் பார்த்து, பூர்ணாவுக்கு பாவமாகிப் போனது.
“அப்பா இல்லாம, நீயும் இருந்து இல்லாம போனத என்னால தாங்கிக்கவே முடியலம்மா! என்னை விட கம்பெனிதான் முக்கியம்னு கொண்டு போய் என்னை ஹாஸ்டல்ல விட்டுடன்னு அவ்ளோ கோபம். நீ எனக்காக திரும்பி வந்தும், என்னை விட்டுப் போனவங்க எனக்கு வேணாம்ங்கற பிடிவாதம். அப்படியே ஒட்டாம இருந்துட்டேன். உனக்கு உடம்பு முடியாம போனப்போ பதறிப் போச்சுமா! தான் ஆடாட்டாலும் தன் தசை ஆடும்னு சொன்னத அப்போத்தான் நம்பனேன்மா. ஆனாலும் என்னமோ மனசுக்குள்ள உன்னை நெருங்க ஒரு தடை. ஆனா, சம்பூ கூட பழக ஆரம்பிச்சதுலதான் உன்னோட நெலமைய நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்மா. அதுக்குப் பிறகுதான் உன்னைப் பார்க்க அடிக்கடி வந்தேன்! வேலையையும் ஒழுங்கா கத்துக்கிட்டேன்! உன் மேல உள்ள கோபதாபம்லாம் கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சிப் போச்சு” என்றவனுக்கு அப்படி ஒரு அழுகை.
‘என்னால அம்மா மேல உள்ள கோபம் போச்சா! நான் என்னடா பண்ணேன்!’ என்பது போலப் பார்த்தாள் இவள்.
மகனின் கண்ணைத் துடைத்து அவன் பெரிய உருவத்தை அணைக்க முடியாமல் அணைத்தவரை, டெடி பேர் போல கட்டிக் கொண்டான் இன்பன்.
“டைம் குடும்மா எனக்கு! கண்டிப்பா நல்ல மகனா நடந்துக்க முயற்சி செய்வேன்”
“உங்கப்பா உனக்காக உருவாக்குன கம்பெனிடா இது! அவர் இறக்கற முன்ன தெரிஞ்சவங்க கிட்ட கடன் வாங்கி ரியல் எஸ்டேட்ல நெறைய இன்வெஸ்ட் செஞ்சிருந்தாரு. பாங்க்லயும் கடன் இருந்தது. திடீர்ன்னு அவர் இல்லன்றதே எனக்குப் பெரிய இடி! கடன்காரன் கழுத்தை நெறிக்கறப்போ, நாம ரெண்டுப் பேருமே பிச்சைக்காரங்களா தெருவுக்கு போக வேண்டிய நெலமை. அழுக கூட நேரம் இல்லாத ஓட்டம். என்னால உனக்கு வேண்டிய அட்டேன்ஷனத் தர முடியல! என்னைப் போல சின்ன வயசுல புருஷன இழந்தவ, பிஸ்னஸ்ல, அதுவும் ஆம்பளைங்க கொடி கட்டி நிக்கற பிஸ்னஸ்ல இருந்தா என்னாகும்னு நான் சொல்லாமலே புரியும் உனக்கு! அவ்ளோ ஸ்ட்ரேஸ், அவ்ளோ டார்ச்சர்! சின்னப் பையன்தானே! உனக்கு என் நெலமைப் புரியல. நைட்டுல வீட்டுக்கு வர நான் தூங்கிட்டு இருக்கற உன் முகத்தப் பார்த்து அழுவேன். என் மகனை நடுத்தெருவுல நிறுத்த மாட்டேன்னு உன்னைப் பார்த்து, பார்த்து வைராக்கியத்த ஏத்திக்கிட்டேன். டிசிப்ளின் பிரச்சனை வரவும் வேற வழி தெரியாமத்தான் கொஞ்சம் நாள்தானேன்னு ஹாஸ்டல்ல சேர்த்தேன். அது அப்படியே நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சிடும்னு நான் நெனைக்கவே இல்லைடா” எனக் கண்ணீர் உகுத்தார்.
பூர்ணாவின் முன் தங்கள் மனதில் இருந்த அனைத்தையும் பகிர்ந்துக் கொண்டனர் அந்த அன்னையும் மகனும்.
“இப்போ எனக்கு உன் நெலைமை நல்லாப் புரியுதுமா! சிங்கிள் பேரண்ட்டா இருந்து மகனுக்காக நல்லதா கூட சாப்பிடமா பணத்தை சேர்த்து வைக்கற சம்பூவப் பார்த்து, என் அம்மாவும் இப்படித்தானேன்னு தோண ஆரம்பிச்சது! சம்பூ வேலை விஷயமா பேசும் போது கூட வழிஞ்சுட்டு நின்ன ஆம்பளைங்களப் பார்த்து, என் அம்மாவும் அந்த வயசுல இதையெல்லாம் கடந்துதானே வந்திருப்பாங்கன்னு தோணுச்சு! சம்பூவோட ஒவ்வொரு பரிமாணத்திலும் உன்னைத்தான் பொருத்திப் பார்த்தேன்மா! நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு ரொம்ப நாளாகவே உறுத்த ஆரம்பிச்சிருச்சு”
“அப்போ பூர்ணா வந்துதான் உன்னைப் பூரணமாக்கிருக்கா” எனச் சிரித்தார் மேகலை.
“என்ன பூரணம் மேடம்? தேங்காய் பூரணமா எள்ளு பூரணமா?” எனக் கேட்டாள் சம்பூர்ணா.
“இதுக்கு பேரு ஜோக்கா!! சகிக்கல!” எனச் சொன்னவன் பூர்ணாவின் தலையில் செல்லமாய் கொட்டினான்.
“தலையில மட்டும் கொட்டாதே இன்பூ! வளர்ச்சி குறைஞ்சிடும்”
“இனிமே நீ வளந்துட்டாலும்!!! வெளியெ தெருவ ஒன்னாப் போனா, சார் உங்க தங்கச்சிய எனக்குப் புடிச்சிருக்கு! பொண்ணு கேட்டு வரவான்னு எவனும் வராம இருந்தா சரி! அப்படி மட்டும் நடந்துச்சு, சேகர் செத்துடுவான்”
இவள் முறைக்க, இவன் அட்டகாசமாய் சிரிக்க, இருவரையும் பார்த்து மனம் விட்டு நகைத்தார் மேகலை.
