IMM Epi 15(epilogue)

எபிலாக்

காதல் சொல்வது உதடுகள் அல்ல

கண்கள்தான் தலைவா!!!(பாடல் வரி)

மூணாறின் அழகிய ரிசார்ட் அது. காலையில் கண் விழித்து எழுந்தவனின் கண்ணில் பட்டது காகிதம் ஒன்று. சோம்பல் முறித்து, எழுந்து நின்றவன், அதை எடுத்துப் படித்தான்.

“ஹலோ மிஸ்டர் ஹல்க்

உன் கனவுக்கன்னி சில்க்

ராத்திரி குடிக்க மில்க்

போறோம் நாங்க வால்க்” என இருந்தது அதில்.

“குசும்புப் புடிச்சவ! வால்க் போறேன்னு சொல்றதுக்கு கவிதையே எழுதி வச்சிருக்கா” என்றவனுக்கு முகமெல்லாம் புன்னகை.

இன்பூ வெட்ஸ் சம்பூ என்ற சம்பவம் முடிந்து இரு மாதங்கள் ஓடியிருந்தது. மிக எளிமையானத் திருமணம். தெருவோரம் உணவில்லாமல் திரியும் பலருக்கு கல்யாணச் சாப்பாடு போட்டு திருப்தியாக திருமணம் செய்துக் கொண்டார்கள்.

மருதுவுக்கும், ராஜத்துக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.

“உமாவுக்குப் புள்ள பொறந்தா, உங்க ரெண்டு பேரை விட்டுட்டு எப்படி அவ வீட்டுல போய் இருக்கன்னு மனசு அடிச்சுக்குச்சும்மா! இப்போத்தான் எனக்கு நிம்மதியாவும் சந்தோசமாவும் இருக்கு” எனச் சின்னவனைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

மருதுவோ,

“எங்கக்கா வாழ்க்கையில எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கல! உள்ளார்ந்து அவ சிரிச்சு நான் பார்த்ததே இல்ல. உங்க கூட இருக்கறப்போ அவ கண்ணும் முகமும் மலர்ந்து சிரிக்குது! அந்த சிரிப்பு வாடாம கண் கலங்காம வச்சிக்குங்க மாமா!” என அழுதே விட்டான் இன்பனிடம்.   

அவளது தகப்பன் எப்பொழுதும் போல இருந்தும் இல்லாதது போல இருக்க, தாய் வீரம்மாவோ,

“இந்த வாழ்க்கையையாச்சும் சூதனமா இருந்து தக்க வச்சிக்க!” என்பதோடு முடித்துக் கொண்டார்.

ஆர்ப்பாட்டம் செய்வான் என எதிர்ப்பார்த்த அழகிரியோ ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தான். யாரிடம் இருந்து எந்த வியாதியை வாங்கி வந்திருந்தானோ, பாதியாய் இளைத்துப் போயிருந்தான். கண்ணெல்லாம் டொக்கு விழுந்திருக்க, கஞ்சிக் கொடுக்கக் கூட ஆளில்லாமல் அனாதையாய் படுத்திருந்தான். வாழ்க்கை அவனுக்குப் பூந்தோட்டத்தைப் பரிசளித்திருக்க, அதை ஊதாசினப்படுத்தி விட்டுப் புதைக்குழியில் போய் விழுந்திருந்தான்.

திருமணம் முடித்து இன்பனின் வீட்டிலேயே பூர்ணாவும் சர்வாவும் இருந்துக் கொண்டார்கள். இவளின் வீட்டை இவர்கள் வெப்சைட்டிலேயே ‘வீடு வாடகை’க்கு என விளம்பரம் செய்திருந்தார்கள். கையில் இருந்த வேலைகளை முடித்துக் கொண்டு, ஹனிமூன் கிளம்பி வர இரண்டு மாதம் எடுத்திருந்தது இவர்களுக்கு.

தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை எனக் கண்டிப்பாக சொல்ல முடியாது. கிடைத்தான் காதல் கிறுக்கன் ஒருவன் என இன்பனை நன்றாக வைத்து செய்தாள் பூர்ணா. தான் தொலைத்திருந்த வாழ்க்கையின் இன்பத் தருணங்களை இன்பன் மீட்டுக் கொடுக்க, வாழ்க்கை இனிப்பாய் இனித்தது இவளுக்கு. மகனுக்கு மேலாக செல்லம் கொஞ்சுவது, வேலை வாங்குவது, கோபித்துக் கொள்வது, ‘நான் ஆரோ தானே’ எனச் சொல்லி காரியம் சாதித்துக் கொள்வது என இன்பனைக் கொலையாய் கொன்றாள். அவனோ கொல்லாமல் கொன்று புதைப்பவளைக் கொண்டாடித் தீர்த்தான். தனது தனிமைத் தவத்தைக் கலைக்க வந்த மேனகையை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான்.

பெயருக்கு ஏற்றது போல இன்பன் தன் இனியவளுக்கு இன்பத்தை அள்ளிக் கொடுத்தான். கலவி என்றால் கடமை, கலவி என்றால் கன்றாவி, கலவி என்றால் கற்பழிப்பு, கலவி என்றால் கச்சடா என நினைத்திருந்தவளுக்கு கலவி கன்றால் காதல், கலவி என்றால் கரிசனை, கலவி என்றால் கலகலப்பு எனக் கற்றுக் கொடுத்தான் இன்பன். காமம் மட்டுமே செய்யாமல், நிரம்பக் காதல் செய்தனர் தம்பதிகள்.

எவ்வளவுதான் முயன்றாலும் முதல் திருமணத்தின் கச்சடாக்கள் மனதில் மிச்சம் மீதி இருக்குமே! நெஞ்சு முழுக்க இந்த முரட்டுக்கட்டை மேல் காதல் இருந்தாலும், காதல் செய்வதை (லவ் மேக்கிங்) நினைத்து முதலில் கலங்கித்தான் போனாள் பூர்ணா. சில ஆண்கள் வெளியுலக்குக்கு காட்டும் பிம்பமும், கட்டிலில் காட்டும் பிம்பமும் வேறு, வேறு அல்லவா. திருமணம் என்றால் இதுவும் ஓர் அங்கம்தான் என அறிந்திருந்தவளுக்கு, இன்பன் மேல் நம்மிக்கை இருந்தாலும், மனதின் ஓரத்தில் சின்னதாய் பயமும் இருந்தது.

இன்பனின் அணுகுமுறையும், தன் துணையின் இன்பம் நாடி சுயநலமில்லாமல் அவளை காதல் செய்த விதமும் பூர்ணாவைப் பூவாய் மலர வைத்தது. வலிக்க வைப்பானோ எனப் பயந்திருக்க, வர்ணிக்க வார்த்தையில்லாத புது வித உலகை இவளுக்குக் காட்டியிருந்தான்.

“என்னை எங்கயோ கூட்டிப் போனயே நீ, அந்த இடத்துக்குப் பேர் என்ன?” என கிசுகிசுப்பானக் குரலில் கேட்டாள் இவள்.

“இன்பலோகம்!” எனப் புன்னகைத்தான் இவன்.

சர்வா இவர்கள் காதல் வாழ்க்கைக்கு ஒரு பாலமாய் இருந்தான். அப்பா, அங்கிள் எனக் குழப்பியடித்தாலும், இன்பனிடம் நன்றாகவே ஒட்டிக் கொண்டான். மகனுக்கு உணவு ஊட்டும் போது, இவர்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டிக் கொண்டனர். சர்வாவுக்கு ரைம்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது, இவர்களும் சேர்ந்துப் பாடி மகிழ்ந்தனர். கார்ட்டுன் பார்ப்பது இவர்கள் குடும்பப் பொழுதுபோக்காய் ஆகிப் போனது.

அடிக்கடி இவர்களை வந்துப் பார்த்துப் போனார் மேகலை. குடும்பமாய் இருக்கலாம் என இவர்கள் சொல்ல, முதலில் ஒருத்தரை ஒருத்தர் அறிந்துப் புரிந்துக் கொள்ளுங்கள், பிறகு சேர்ந்து இருக்கலாம் என சொல்லி விட்டார் அவர்.

அவசரமாய் குளித்து விட்டு வந்தவன், தன் மனைவியையும் மகனையும் தேடிப் போனான். பச்சைப் பசேலென இருந்தது அவ்விடம். லேசாய் குளிர, இரு கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்து விட்டுக் கொண்டான்.

அதோ அவனுக்குப் பத்தடி தூரத்தில் நின்றிருந்தாள் சம்பூர்ணா.  பச்சை வர்ணத்தில் ஸ்வெட்டர் அணிந்து இவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள். வேக வேகமாக அவளை நோக்கி எட்டு வைத்துப் போன இன்பன் பின்னால் இருந்து தன் சம்பூவைக் கட்டிக் கொண்டான். அக்குட்டி உருவம் வாகாய் இவனுள்ளே புதைந்துப் போனது.

“ஹாய்டி பொண்டாட்டி” எனச் சிரிப்புடன் சொன்னவன், முன்னால் குனிந்து அவள் கையில் தூக்கி வைத்திருந்த சர்வாவுக்கு அழுத்தமாய் கன்னத்தில் ஒரு முத்தமிட்டான். பின் குட்டியின் கண்ணை லேசாய் பொத்தியவன், அவன் அம்மாவுக்கு ஆழமாய் ஓர் இதழ் முத்தம் கொடுத்தான்.

புன்னகையுடன்,

“குட் மார்னிங் இன்பூ” என்றாள் அவள்.

“குட் மார்னிங் மை சம்பூ” என்றான் இவன்.

இருவரையும் பார்த்து,

“குட் மார்னிங்” என்ற சர்வா மலர்ந்து சிரித்தான்.

இன்பனை தூக்கச் சொல்லி அவன் கை நீட்ட, ஆசையாய் தன் மகனை வாங்கிக் கொண்டான் இன்பன்.

ஒரு நாள் கனவில் கண்டது இன்று நிஜமாகிப் போக, அப்படி ஒரு பேருவகை அவன் நெஞ்சில். ஒரு கையில் சர்வா இருக்க, இன்னொரு கையால் பூர்ணாவின் தோள் பற்றி தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,

“என்னைக்குமே முழுசா மீள முடியாத பாசமெனும் புதைக்குழில என்னைத் தள்ளிட்டாருடி அந்தக் கடவுள். நானும் தெரிஞ்சே சுகமா அமிழ்ந்துப் போறேன் உங்க ரெண்டு பேர் அன்புல! ஐ லவ் மை சம்பூர்வா” எனக் கரகரத்தக் குரலில் சொன்னான்.

“தப்பு, தப்பு! நாங்க ரெண்டு பேர்தான் இன்ப ஊற்றா பொங்கி வழியற உன் பாசத்துல தினம் முங்கி முங்கி எழுந்திரிக்கறோம்” எனப் புன்னகைத்தாள் இவள்.

துன்பங்கள் நீங்கி இவள் இனி இன்பமாய் வாழ்வாள்! இன்பனின் வாழ்க்கை இந்த சம்பூர்ணாவால் பூரணம் அடையும்! நாமும் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்!

முற்றும்.

(எல்லோருக்கும் பூர்ணாவுக்குக் கிடைத்தது போல ஓர் இன்பனை வாழ்க்கைக் கொடுத்து விடுவதில்லை. இவளைப் போல பல பெண்கள் சொல்ல முடியாத காரணங்களுக்காக விவாகரத்துப் பெற்று, சிங்கிள் பேரண்ட்டாக வாழ்க்கையைத் தைரியமாக எதிர் கொள்கிறார்கள். பக்க பலமாய் இல்லா விட்டாலும், தூற்றிப் பேசி அவர்கள் துணிவைத் துணிக் கொண்டு துடைத்து விடாமல் இருப்போமே!)

Scroll to Top