அத்தியாயம் 2
காதல் மழையே காதல் மழையே
எங்கே விழுந்தாயோ(பாடல் வரி)
“பூர்ணா! கேபினுக்கு வா”
“யெஸ் மேம்” எனச் சொல்லி முடிப்பதற்குள் அழைப்புத் துண்டிக்கப் பட்டிருந்தது.
“ச்சைக்! சம்பளம் கொஞ்சம் அதிகமா இருக்கேன்னு தெரியாத்தனமா இந்தப் புதைக்குழில வந்து மாட்டிக்கிட்டேன்! வேலைக்கு மேல வேலைக் குடுத்து கொலையா கொல்றாங்க!” என முனகியவாறே தனக்கென கொடுக்கப்பட்டிருந்த டேப்லட்டை கையில் தூக்கிக் கொண்டு விடுவிடுவென தனது பாஸின் அறைக்குள் புகுத்தாள் சம்பூர்ணா.
“சொல்லுங்க மேடம்!”
“மைலாப்பூர் கிட்ட டூ பெட்ரூம் ப்ளட் ஒன்னு வந்துச்சுல்ல ரெண்ட்டுக்கு?”
“ஆமா மேடம்”
“இன்ஸ்பெக்ஷன் பண்ணி டீட்டேய்ல் கலேக்ட் பண்ணிட்டீங்களா?”
“அது வந்து.. இன்னும் இல்ல மேடம்! இன்னிக்கு முடிச்சிடறேன்!”
“என்னதிது பூர்ணா! எக்ஸ்பீரியன்ஸ் இல்லைனாலும் நல்லாப் படிச்சிருக்கியேன்னு நம்பி வேலைக்கு எடுத்தேன். இண்டர்வியூல ஆகாசத்த வளைச்சிடுவேன், மலைய கரைச்சிடுவேன்லாம் பேசன! இப்போ இவ்ளே அசால்ட்டா இன்னும் செய்யலைன்னு சொல்ற! இந்த யங்ஸ்டர் கிட்ட உள்ள ப்ராப்ளமே இதான்! தன்னால எல்லாம் முடியும்னு நெனைக்கறது. ஆனா ஒரு தம்படிக்கு பிரயோஜனமா இருக்கறது இல்ல” எனத் திட்டித் தீர்த்து விட்டார் மணிமேகலை.
‘மேகலை ரியல் எஸ்டேட்’ எனப் பெயரிட்டு என்பதுகளில் தொழிலை ஆரம்பித்திருந்தார் அவரது கணவர் வாசவன். அவர் உயிரோடு இருக்கும் வரை அவ்வப்பொழுது என்ன நடக்கிறது ஏது நடக்கிறது எனக் கண்டுக் கொண்ட மேகலைக்கு, கணவர் இறந்ததும் மேகலை ரியல் எஸ்டேட்தான் புகலிடமாகிப் போனது. துக்கத்தைக் கடின உழைப்பால் தள்ளி வைத்தார் இவர். கணவர் வைத்திருந்தது போல அப்படியே பழைய பஞ்சாங்கமாக இருந்து விடாமல் இப்பொழுது ட்ரேண்டாக இருக்கும் ஆன்லைன் ப்ராபெர்ட்டி சைட் வைத்து தொழிலை விரிவுப்படுத்தி இருந்தார் மேகலை. கணவரிடம் வேலைக்கு சேர்ந்த ஏஜெண்டுகளோடு, இவரும் வேலைக்கமர்த்திய ஆட்களை சேர்த்து இப்பொழுது மொத்தமாக பத்து பேர் இங்கே வேலைப் பார்த்தார்கள்.
அங்கே ஆகக் கடைசியாக வேலைக்கு சேர்ந்தவள்தான் இந்த அப்பாவி சம்பூர்ணா. அங்கு வேலைப் பார்ப்பவர்களை விட வயதிலும் ஜூனியர், அனுபவத்திலும் ஜூனியர்.
“பூர்ணா! ப்ரீண்டர் காட்ரீட்ஜ் மாத்திடு!”
“பூர்ணா! பேண்ட்ரில காபி தூள் முடிஞ்சிடுச்சே, ஸ்டாக் வாங்கி வைக்கலியா?”
“இந்தாம்மா பூர்ணா! வயசாகுதுல்ல, கண்ணு சரியா தெரிய மாட்டுது! இந்த காண்டிராக்ட கொஞ்சம் படிச்சு சரியா எல்லா டீட்டேய்லும் இருக்கான்னு பார்த்துடறியா?”
“பூர்ணா பொண்ணு! காலையில நேரமா போய், அடையார்ல கடை வாடகைக்கு வந்ததே ப்ராபர்ட்டி, அதோட ஓனர் கிட்ட இந்த டாக்குமெண்ட்ல எல்லாம் சைன் வாங்கிட்டு வந்துடறியா?”
இப்படியாக பாதி வேலைகள் இவள் தலையில்தான் சுமத்தப்படும். இத்தொழிலில் உள்ள நெளிவு சுழிவுகளை, ஏற்ற இறக்கங்களை இவர்கள்தான் பூர்ணாவுக்குக் கற்றுத் தருகிறார்கள். அதற்காகவே முகத்தைத் திருப்பாமல், தன்னுடைய வேலைகளோடு மற்றவர்கள் கொடுக்கும் வேலைகளையும் சேர்த்து செய்கிறாள் இவள்.
ஒருத்தியாக எவ்வளவு வேலைகளைத்தான் பார்ப்பாள் இவளும். சில சமயங்களில் இரவு எட்டாகி விடுகிறது வீடு போய் சேர. அலுவலகத்திலே உட்கார்ந்து செய்யக் கூடிய வேலையா இது! அங்கங்கே அலைய வேண்டும். தூரமான இடங்களுக்கு கம்பேனி கார் இருந்தாலும், அருகில் இருக்கும் இடங்களுக்கு இவளது ஸ்கூட்டியில்தான் போக வேண்டும். ட்ராவல் அலவன்ஸ் எனக் கிடைத்தாலும் என்னவோ வேலை முடிவதற்குள் களைத்துக் கருத்து விடுவாள் பெண்.
“கொஞ்சம் ஃபோலோ ஆப் கால்ஸ் செய்ய வேண்டி இருந்தது மேடம்! அது முடிஞ்சதும் மைலாப்பூர் போகலாம்னுதான் ஆபிஸ் வந்தேன். வேலையை முடிச்சுட்டேன்! இப்போ கிளம்பிடுவேன் மேடம்!”
அவளைத் தீர்க்கமாகப் பார்த்தவர்,
“வேலைல எத முதல்ல செய்யனும் எத அடுத்து செய்யனும்கற ப்ரியோரிட்டி தெரியனும் பூர்ணா! இல்லைனா இந்த ஃபீல்ட்ல நிலைச்சு நிக்க முடியாது! எத்தனை வெப்சைட் இருக்குத் தெரியுமா ப்ராபர்ட்டி ஃபீல்ட்ல? நம்ம மாதிரி ப்ரைவட்டா எத்தனை கம்பேனி இருக்குத் தெரியுமா? அதோட சேர்த்து காலங்காலமா இதையே தொழிலா செய்யற எத்தனை ப்ரோக்கர்ங்க இருக்காங்க தெரியுமா? நாம கொஞ்சம் அலட்சியம் காட்டுனாக் கூட சட்டுன்னு டீல் கை விட்டுப் போயிடும்! புரியுதா? போ, போய் முதல்ல இந்த வேலையைப் பாரு!” என அழுத்தமானக் குரலில் சொன்னார் மேகலை.
“ஓகே மேடம்!” எனச் சொல்லியவள், கேபின் கதவில் கை வைக்க,
“நாளையில இருந்து பையன் புதுசா வேலைக்கு வரான்! நீதான் அவனுக்கு எல்லாத்தையும் கைட் பண்ணனும்! சரியா? உனக்கு அசிஸ்டெண்ட் போல வச்சிக்கோ” எனும் குரலுக்குத் திரும்பிப் பார்த்து,
“ஓகே மேடம்!” எனச் சொல்லி விட்டு வெளியேறினாள் பூர்ணா.
‘அப்பாடா! புதுசா ஒரு பையன் வேலைக்கு வந்தா, நான் சீனியர் ஆயிடுவேனே! ஜாலி! ஜாலி! இனிமே இந்த லொட்டு லொசுக்கு வேலையெல்லாம் அவன் தலையிலக் கட்டிட வேண்டிதான்!’ என எண்ணிக் கொண்டவளுக்கு மேகலை திட்டியது கூட பின்னால் சென்றிருந்தது.
“மேகம் கருக்குது!! ஜிங்கிஜிக்கு ஜிங்குச்சா!” என மெல்லியக் குரலில் பாடியபடியே, லாப்டாப்பை மூடி, அவளுக்கெனக் கொடுக்கப்பட்டிருந்த காமிராவையும் எடுத்துக் கொண்டு, ஸ்கூட்டி சாவியுடன் வெளியேறினாள்.
“பூர்ணா! திரும்பி வரும் போது பஜ்ஜியும் வடையும் வாங்கிட்டு வா” எனும் குரலுக்கு சரியெனத் தலையாட்டியவள் விடுவிடுவென நடந்து விட்டாள். இல்லாவிட்டால் இன்னும் வேறு ஏதாவது வேலையைத் தலையில் சுமத்தி விடுவார்கள்.
“நாளைக்கு பஜ்ஜி, சொஜ்ஜிலாம் வாங்கற வேலைக்குப் புது ஆள் வரப் போறானே! இனி பூர்ணாவுக்கு பூர்ண நிம்மதியா இருக்கப் போகுது!” என முணுமுணுத்தப்படியே ஸ்கூட்டி இருக்கும் இடம் நோக்கி நடந்தாள்.
வீட்டுச் சாவியின் நகல் ஒன்றை உரிமையாளர் ஏற்கனவே இவளிடம் கொடுத்திருந்தார். வீட்டை இன்ஸ்பெக்ட் செய்ய வருவதாக அவருக்கு ஒரு மேசேஜைத் தட்டி விட்டவள், தலைக்கவசம் அணிந்த பிறகே ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.
மதிய உணவு வேளையது! சென்னை ட்ராபிக்கை சொல்லவா வேண்டும்! ஆட்டோக்கள் இண்டு இடுக்கெல்லாம் நுழைந்துப் போக, இவளும் ஸ்கூட்டியை கிடைத்த கேப்பில் ஹாரன் அடித்தப்படியே ஓட்டினாள். மைலாப்பூரில் இருந்த கொஞ்சம் பழமையான அந்த அபார்ட்மெண்டில் ஸ்கூட்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு, தனது உடமைகள் அடங்கிய பேக்கை எடுத்துக் கொண்டாள் இவள்.
வயிறு லேசாகச் சத்தம் போட ஆரம்பித்தது. ம்ப்ச் எனச் சலித்துக் கொண்டவள், சுற்றி முற்றிப் பார்வையை ஓட்டினாள். அத்தெரு முனையில் இளநீர் விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். அங்கே நடந்துப் போனவள்,
“ண்ணா! இளநி ஒன்னு குடுங்க” என்றாள்.
