அவர் வெட்டிக் கொடுக்க, அப்படியே வாயில் சரித்துக் குடித்தவள், அதை வெட்டிக் குடிக்க சொல்லி உள்ளிருந்த வழுக்கையையும் உண்டு முடித்தாள். வயிறு கப்பென நிறைந்துப் போக, அவருக்குப் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு மீண்டும் அபார்ட்மெண்டுக்கு நடையைக் கட்டினாள்.
லிப்ட் பழுது எனும் நோட்டிஸைப் படித்தவள், பெருமூச்சுடன் படிகளில் ஏறினாள். நல்ல வேளை, இவள் பார்க்க வந்த அபார்ட்மேன்ட் நான்காவது தளத்தில் இருந்தது. வீட்டின் முன் வந்து நின்று வேக மூச்சுக்களை இழுத்து விட்டவள், தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்தாள். வீட்டின் உரிமையாளர் வேறு பெரிய வீடு வாங்கிக் குடியேறி இருக்க, இவ்வீட்டை வாடகைக்கு விட முடிவெடுத்து இவர்களின் நிறுவனத்தை அணுகி இருந்தார். இனி மேல்தான் இவள் வீட்டை புகைப்படம் எடுத்து, வீட்டில் எத்தனை அறைகள், எத்தனை குளியல் அறை, எத்தனை ஸ்குயர் மீட்டர் பரப்பளவு, ஃபர்னிஸ்ட் வீடா, அல்லது காலி வீடா என தகவல்களை எல்லாம் எடுக்க வேண்டும். அதைக் கொண்டுதான் இவர்களின் ப்ராபர்ட்டி வெப்சைட்டில் பதிவேற்றுவார்கள். அதைப் பார்த்து, விருப்பமுள்ளவர்கள் அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இவளது தொலைபேசிக்கு அழைப்பார்கள்.
எப்பொழுது அவர்களுக்கு வசதியெனக் கேட்டு, அவர்களை அழைத்து வந்து வீட்டைக் காட்டுவாள் இவள். வந்தவர்களுக்கு வீடு பிடித்தால், அதன் பிறகே பணப்பரிவர்த்தனை நடக்கும். அப்படி டீல் சக்ஸசாக முடிந்தால்தான் இவளுக்குக் கமிஷன் கிடைக்கும். அதற்காகவே நாயாய் பேயாய் அலைய வேண்டி இருக்கும். சில சமயம் ஒரு டீல் முடிய, முப்பது ஆட்களையாவது கடந்து வர வேண்டி இருக்கும்.
“கடவுளே! இந்த வீடு சீக்கிரமா ரெண்ட்டுக்குப் போயிடனும்டா சாமி” எனச் சத்தம் போட்டே வேண்டிக் கொண்டவள், இண்டு இடுக்கெல்லாம் படம் பிடிக்க ஆரம்பித்தாள். வீட்டை நன்றாகப் பரிசோதித்து, உரிமையாளர் சொன்ன விவரங்களும், தான் பார்த்துத் தெரிந்துக் கொண்ட விவரங்களும் சரியா எனக் குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.
அதற்குள் வேறு ஒரு வீட்டின் விஷயமாக போனில் அழைப்பு வந்தது.
“ஹலோ!” என ஆரம்பித்து பக்குவமாய், தழைந்துப் பேசி, அவர்கள் ஏற்கனவே வந்துப் பார்த்துப் போயிருந்த வீட்டைப் பற்றி நோண்டி நோண்டி ஆயிரம் கேள்விக் கேட்க, பொறுமையாய் எல்லாவற்றுக்கும் பதிலளித்து முடிக்க இருபது நிமிடமானது. அப்பொழுதும் அவர்கள் விபரங்கள் கேட்டார்களே தவிர வேண்டுமா வேண்டாமாவென முடிவைத் தெரிவித்திருக்கவில்லை. இது போல வீடு பார்ப்பவர்கள் ஒருத்தரை மட்டும் நம்பி இருப்பதில்லை. ஒரே நேரத்தில் பல ஏஜேண்டுகளை பார்ப்பார்கள். பலரும் காட்டும் பல வீடுகளைப் போய் பார்ப்பார்கள். இது போல இரண்டாவது முறை அழைப்பு வந்தால், அவ்வீட்டை இவர்களுக்குப் பிடித்திருக்கிறது எனக் கொள்ள வேண்டும். ஆனாலும் சட்டென முடிவெடுக்க மாட்டார்கள். வாடகைக்கு என்றாலும் ஒன்றிரண்டு வருடம் தங்கப் போகும் இடமல்லவா! யோசித்துதான் முடிவெடுப்பார்கள். முடிவெடுக்கும் வரை, ஏஜேண்டுகளை வைத்து செய்து விடுவார்கள் மக்கள்.
“நாய் பொழப்புடா சாமி!” என மீண்டும் முனகிக் கொண்டவள் வேலையை முடித்துக் கொண்டுக் கிளம்பும் போது மாலை நான்காகி இருந்தது.
இது போல் ரியல் எஸ்டெட் ஏஜெண்டாக இருப்பது, பெண்களுக்கு மிகவும் சவாலான வேலை. சிலர் பெண் ஏஜேண்டுகளைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். இன்னும் சிலரோ, தொட்டுப் பேசி எரிச்சல் படுத்துவார்கள். சில சமயங்களில் இரவில் கூட வீட்டைக் காட்ட வேண்டிய சூழல்கள் வரும். வேலைக்குப் போகும் தம்பதிகளுக்கு இரவுதானே வசதி. நேரம் காலம் பார்க்காமல் போன் அழைப்புகள் வேறு வரும். இவ்வளவு கஸ்டங்கள் இருந்தாலும், கமிஷன் தாராளமாக வர, இந்த வேலையைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டாள் பூர்ணா. இவளை வாடகைக்கு வரும் வீடுகளை மேனேஜ் செய்ய மட்டும்தான் நியமித்திருந்தார்கள். விற்பனை வேலைகள் இன்னும் சீனியர்கள் வசம்தான் இருந்தன. அதற்கான கமிஷன் இன்னும் கணிசமாக இருக்கும்.
அலுவலகத்துக்குக் கிளம்பியவள், மறக்காமல் அவர்கள் கேட்ட பஜ்ஜியை வாங்குவதற்கு ஒரு ரோட்டோரக் கடையில் ஸ்கூட்டியை நிறுத்தினாள். அங்கேயே நின்று இரண்டு பஜ்ஜிகளை சாப்பிட்டு, சுடச்சுட கருப்பட்டிக் காபியையும் வாங்கிப் பருகியவள், மற்றவர்கள் கேட்ட பஜ்ஜியும் வடையும் வாங்கிக் கொண்டாள். ஆபிசுக்குப் போய் அதை நீட்டியவள், கையையும் நீட்டினாள்.
“ஏன்மா!! உன் காசுல எங்களுக்கு பஜ்ஜி கூட வாங்கிக் குடுக்க மாட்டியா?” என ஒருத்தர் கேட்க,
“சார்! நானே வாங்கித் தந்தாதான் ட்ரீட்! நீங்களே கேட்டு நான் வாங்கிட்டு வந்தா அதுக்குப் பேரு ட்ரீட் இல்ல!” எனச் சிரித்தபடியே நின்றாள்.
பணத்தை அவர் எடுத்துக் கொடுக்கவும்தான் நகர்ந்தாள் பெண். தனது இடத்தில் அமர்ந்தவள், வீட்டின் உரிமையாளருக்குப் போன் செய்து, தான் சரிப்பார்த்ததில் எதெல்லாம் அவர் சொன்னதோடு மாறுபடுகிறது எனப் பேசி, அவரின் ஒப்புதலை வாங்கிய பின்பே, தங்களது வெப்சைட்டில் ‘வீடு வாடகைக்கு’ எனப் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தாள்.
அன்று வேறு அப்பாயிண்ட்மேண்ட் ஏதுமில்லாமல் போக, சீக்கிரமாகவே வீட்டுக்குக் கிளம்பினாள் பூர்ணா. இவளும் ஒற்றை அறை கொண்ட சொந்த அபார்ட்மெண்டில்தான் குடியிருக்கிறாள். மூன்றாவது தளத்தில் இருந்தது இவளது வீடு. அபார்ட்மேண்ட் பாதுகாவலரைப் பார்த்து புன்னகைத்தவள், ஸ்கூட்டரை நிறுத்திப் பூட்டி விட்டு லிப்ட் எடுத்து தன் இல்லத்தை அடைந்தாள்.
கதவைத் திறக்கும் போதே, அவன் சிரிப்பு சத்தம் காதை எட்டியது. புன்னகையுடன் உள்ளே நுழைந்தவளை,
“ம்மா!” என ஓடி வந்துக் கட்டிக் கொண்டான் அவள் மகன்.
“சர்வா!!!” எனச் சிரித்தபடியே மகனை அள்ளிக் கொண்டாள் சம்பூர்ணா.
அவன் கன்னம் முழுக்க ஈர முத்தமிட்டவளின் முகத்தில் அவ்வளவு கனிவு. செல்லம் கொஞ்சி முடித்த சின்னவனோ, அவளது மார்பைத் தடவ ஆரம்பித்தான்.
“பசிக்குதா செல்லத்துக்கு?” எனக் கேட்டவள்,
“ம்மா, என்ன சாப்பிடக் குடுத்தீங்க?” எனத் தங்கள் வீட்டோடு இருக்கும் ராஜத்தைக் கேட்டாள்.
“பகலுக்கு பால் சாதம் குடுத்தேன் கண்ணு! இப்போ கூட, சூசு குடுத்தேன்! உன் புள்ளைக்கு உன்னைப் பார்த்தாலே பசி வந்துடும் போல” எனச் சொல்லி சிரித்தார்.
“அம்மா முதல்ல குளிச்சுட்டு வரேன்டா சர்வா! கசகசன்னு இருக்கு! அப்பறம் மம்மம் குடிக்கலாம்” என்றவள், அவனை இறக்கி விட்டுவிட்டு அவசரமாகப் போய் குளித்து விட்டு வந்தாள்.
குளியலறை கதவையேப் பார்த்திருந்த சின்னவன், இவள் வந்ததும் ஓடிப் போய் காலைக் கட்டிக் கொண்டான். அவனைத் தூக்கிக் கொண்டு புன்னகையுடன் தங்களது குட்டி அறைக்குப் போய் கட்டிலில் அமர்ந்தவள், நைட்டியின் ஜீப்பைத் திறந்து, அமுதூட்ட ஆரம்பித்தாள். இரண்டு வயது ஆகியிருந்தது சர்வேஸ்வரனுக்கு. பகலெல்லாம் பாட்டி கொடுக்கும் உணவை சமத்தாய் சாப்பிட்டுக் கொண்டாலும், இவள் வந்தவுடன் பால் வேண்டுமெனப் பிடிவாதம் பிடிப்பான். இரவிலும் அவளை முட்டிப் பால் குடித்தால்தான் உறக்கம் வரும். இத்தனைக்கும் இவளுக்கு பால் வருவது ரொம்பவே குறைவு! அணைத்துப் பிடித்தபடி மகனைப் பார்த்திருந்தவளுக்கு கண்களில் நீர் துளிர்த்தது. தன் உயிரை இன்னும் இந்த பூமியில் பிடித்து வைக்க உதித்தவன் அல்லவா இந்த சர்வேஸ்வரன்.
அறைச் சுவரில் மாட்டி மாலை போடப் பட்டிருந்த பெரிய மகன் கண்ணனின் படத்தைப் பார்த்தவளுக்கு, கண்கள் பொங்கியது. அம்மாவின் முகத்தைப் பார்த்து பால் குடித்துக் கொண்டிருந்த சின்னவன், அதை நிறுத்தி விட்டு படக்கென எழுந்தான்.
“ரோரோ(அழுகை) வேணாம்மா!” என்றவன், தன் பிஞ்சுக் கரங்களால் அவளது கண்ணீரைத் துடைத்தான்.
“இல்லடா சாமி! அம்மா அழல!” என்றவள், மகனுக்காக முயன்றுப் புன்னகைத்தாள்.
“குட்டு(குட்) அம்மா!” என்றவன் மீண்டும் தான் விட்ட வேலையைத் தொடர ஆரம்பித்தான்.
