அத்தியாயம் 4
‘காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னைக் காணும் வரை’(பாடல் வரி)
“இப்படி மிரட்டற தொனில பேசுனா, கஸ்டமர்லாம் தெறிச்சிட்டு ஓடிடுவாங்க இன்பூ!”
ஆமாம்! இன்பவாணனை பூர்ணா இன்பூ எனத்தான் அழைக்கிறாள். பூர்ணா என அழைக்கச் சொல்லியும் அவன் சம்பூவிலே நிற்க, கடுப்பில் இன்பன் என அழைப்பதை இன்பூ என மாற்றி இருந்தாள் பெண்.
அவனுக்கு அந்த அழைப்பு சிரிப்பைக் கொடுக்க, அப்படியே அழைக்கட்டுமென விட்டுவிட்டான்.
“எனக்கு அப்படித்தான் பேச வருது! இது சரிப்படலனா வேற வேலை எதாச்சும் குடேன்”
“நாம ப்ராபர்ட்டி ஃபீல்ட்ல இருக்கோம் இன்பூ! இங்க வாயால வடை சுடத் தெரியனும். வாய்தான் நமக்கு இன்வெஸ்ட்மெண்ட்” எனச் சொல்லியவளின் வாயையே பார்த்தான் இவன்.
“என்ன?”
“குட்டி வாயா இருக்கே! இதுலயா நீ வடை சுடற?”
“செருப்பு! இதெல்லாம் ஒரு ஜோக்னு வெளிய போய் சொல்லிடாதீங்க! சாத்திப்புடுவாங்க சாத்தி” எனக் கடுப்பில் அவள் பொரிய, இவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
ஆள் கரடு முரடான தோற்றத்தில் இருந்தாலும், இவளுடன் மிக சகஜமாகப் பேசுவான். சில சமயம் கிண்டல் கேலி எல்லாம் கூட வரும். அதனாலேயே இவளுக்கும் அவனுடன் சகஜமாகப் பேச வந்தது.
“பீ சீரியஸ்! கஸ்டமர்ட்ட பேசறப்ப, நம்ம அட்டேன்ஷன் ஃபுல்லா பணத்து மேல இருந்தாலும், அதை வெளியக் காட்டிக்கக் கூடாது! அவங்க விருப்பத்த நாம மதிக்கற மாதிரி ஆக்ட் விடத் தெரியனும்! அப்படியே வார்த்தைல தேன் தடவிப் பேசனும்! பணிஞ்சுப் போகிற மாதிரி காட்டிக்கனும்!”
“என்னால யாருக்கும் பணிஞ்சுப் போக முடியாது சம்பூ”
“அப்போ நீங்க இந்த தொழிலுக்கே லாயக்கு இல்லை! அப்புறம் ஏன் இந்த வேலைக்கு வந்தீங்க? என் உசுர வாங்கவா? மேடம் என்னான்னா, இன்னிக்கு என்ன சொல்லிக் குடுத்த? எங்கலாம் கூட்டிப் போனன்னு அப்டேட் கேக்கறாங்க! நீங்க என்னனா எந்த வேலை சொல்லிக் கொடுத்தாலும், கத்துக்க மாட்டேன்ற மாதிரி நிக்கறீங்க! எனக்கு ரொம்ப ஸ்ட்ரேஸ் ஆகுது” என்றவள் நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள்.
அவன் வேலைக்கு சேர்ந்து இன்றோடு ஒரு வாரம் ஓடி இருந்தது. வருவான், நாற்காலியை இழுத்துப் போட்டு இவள் அருகில் அமர்வான். அவள் செய்யும் வேலையை எல்லாம் பார்த்திருப்பான். பத்து மணிக்கு டானென காபி கலந்து எடுத்து வருவான். இவளுக்கும் கொடுத்து அவனும் பருகுவான். பன்னிரெண்டு மணிக்கு கரேக்டாக லஞ்ச் சாப்பிடக் கிளம்பி விடுவான். நான்கு மணிக்கு டீ! ஐந்து மணிக்கு வீட்டுக்குப் போய் விடுவான். வெளியே வீடு பார்க்கப் போக அழைத்தால், அவளோடு போவான். அவன் கம்பெனி கார் ஓட்ட, இவள் அமர்ந்து வருவாள். எப்படி கஸ்டமரிடம் பேசிப் பழக வேண்டுமென வந்துப் பார் என்றால் கண்டுக் கொள்ளாமல் ட்ரைவர் போல காரிலேயே அமர்ந்துக் கொள்வான். இவனோடு பூர்ணாவால் மல்லுக் கட்ட முடியவில்லை.
மேகலையிடம் லேசு பாசாகச் சொல்லிப் பார்த்தாள். அவரோ ஒரு முறைப்புடன்,
“இத சொல்லறதுக்குதான் உனக்கு மாச சம்பளமும் குடுத்து, கமிஷனும் குடுக்கறனா பூர்ணா? என்ன செய்வியோ ஏது செய்வியோ, அவனுக்கு ஒழுங்கா வேலையைக் கத்துக் குடு!” எனத் திட்டி விட்டார்.
நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டிருப்பவளிடம்,
“தலை வலிக்குதா சம்பூ?” எனக் கேட்டான்.
அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,
“எனக்கு இந்த வேலையும் இதுல வர கமிஷனும் ரொம்ப முக்கியம்! உங்களால வேலையை விட்டு என்னைத் தூக்கிடுவாங்களோன்னு பயமா இருக்கு இன்பூ” என மெல்லியக் குரலில் சொன்னாள்.
அவள் கண்களில் கலக்கம் தெரிய,
“தூக்க மாட்டாங்க” என்றான் இவன்.
“ஆமா! இவன்தான் இந்த மன்னார் அண்ட் கம்பெனிக்கு ஓனர்! இவர் சொன்னா என்னைத் தூக்க மாட்டாங்க! போவியா நீ” என்றளைப் புன்னகையுடன் நோக்கினான்.
சில சமயங்களில் வாங்க, போங்க என்றும் சில சமயங்களில் வா, போ என்றும் குழப்பியடிக்கும் பூர்ணாவை மென்னகையுடன் பார்த்திருந்தான் இன்பன்.
“புன்னகை மன்னா! இப்போ வேலையைப் பார்க்கலாமா?” எனக் கேட்டவாறே, தலை வலி தைலத்தைப் பூசிக் கொண்டாள் பூர்ணா.
வெப்சைட்டில் இவர்கள் விளம்பரப் படுத்தி இருந்த வீடுகளைப் பிடித்தவர்கள், ‘காண்டேக்ட் அஸ்’ எனக் கொடுக்கப் பட்டிருக்கும் பாரத்தைப் பூர்த்தி செய்வார்கள். அவர்கள் நிரப்பும் விவரங்கள் இவர்களது வாட்ஸப்புக்கு/இமேயிலுக்கு வந்து விடும்! பல சமயங்களில் வாட்ஸாப்பிலேயே பதில் கொடுத்தாலும், சில சமயங்களில் ‘கால் மீ’ எனும் நோட்ஸ் இருக்க, அவர்களுக்கு அழைத்தும் பேசுவார்கள்.
அந்த வேலையத்தான் இவனுக்குக் கொடுத்திருந்தாள் பெண். அதை அவன் ஏனோ தானோவென செய்ததில்தான் அவளுக்குக் கோபம். காலையில் மகனுக்கு வேறு காய்ச்சலாக இருக்க, மருந்து கொடுத்து விட்டு வந்திருந்தாள். மனமெல்லாம் மகனைச் சுற்றியே வந்தது. அதோடு இன்பனின் அலட்சியப் போக்கும் சேர்ந்து கொள்ள, தலை வலி வந்து விட்டது.
பேசாமல் வீட்டுக்குப் போய் விடலாம் என்றால், இன்னும் ஒரு மணி நேரத்தில் அப்பாயிண்ட்மேண்ட் ஒன்று இருந்தது. தலை வலியை புறம் தள்ளி வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு, பெண் முகம் காட்டிய எரிச்சல் நன்றாகவே தெரிந்தது.
“தலை வலி மாத்திரை இல்லையா சம்பூ?”
“இல்ல!” என்றவள் தலையை லாப்டாப்பின் உள்ளே விட்டிருந்தாள்.
ஒன்றும் பேசாமல் எழுந்துப் போய் விட்டான் இன்பன். இருபது நிமிடங்கள் கழித்து வந்தவனின் கையில் தலை வலி மாத்திரையும், வாட்டர் பாட்டிலும் இருந்தது.
“மருந்துப் போட்டுட்டு வேலைப் பாரு!”
வலி தந்த அவஸ்தையில் கை நீட்டி வாங்கிக் கொண்டாள். இது போல அனுசரணையான உதவிகள் எல்லாம் இவளுக்கு யாரும் செய்ததில்லை. முகம் மென்மையாகிப் போக,
“ரொம்ப நன்றி இன்பூ” என உணர்ந்து சொன்னாள்.
“நட்புக்குள்ள நன்றி எதுக்கு!” எனச் சொன்னவன், அவள் சொல்லிக் கொடுத்தது போல கஸ்டமர்களை அழைக்க ஆரம்பித்தான்.
இந்த முறை குரலில் ஒரு பணிவும், மரியாதைத்தன்மையும், மென்மையும் வந்திருந்தது.
பூர்ணா ஆச்சரியமாகப் பார்க்க, அழைப்பை முடித்து வேண்டிய குறிப்புகளையும் எழுதி வைத்தவன் என்ன என்பது போல பார்த்தான்.
“இப்ப மட்டும் எப்படி பணிவு, கனிவு எல்லாம் வந்துச்சு?”
“நானே நெனைச்சாதான் என்னை ஒரு வேலை செய்ய வைக்க முடியும்! ஆனா நீ தலையைப் புடிச்சுட்டு உக்காந்து, சிம்பத்தி கிரியேட் பண்ணி என்னை வேலைப் பார்க்க வைக்கற! எனக்குப் புடிக்கல அது!” என்று ஆத்திரமாகச் சொன்னவன், எழுந்து புகைக்கப் போய் விட்டான்.
மீண்டும் தலையைப் பிடித்துக் கொண்டவள்,
“இவனப் புரிஞ்சுக்கவே முடியலடா சாமி! ஆனாலும் ஒரு தலை வலியே தலை வலி மாத்திரை வாங்கிக் குடுக்கிறதே! அடடா ஆச்சரியக்குறி!!!” எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து, இருவரும் காரில் அமர்ந்திருந்தனர். காரினுள்ளே ஜேசுதாஸ் உருகிக் கொண்டிருந்தார்.
“வைகை கரைக் காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு” எனப் பாடலோடு இவனும் சேர்ந்துப் பாடிக் கொண்டே வந்தான்.
