உம்மென வந்தவன் ஜம்மென பாடிக் கொண்டு வர, தயக்கமானக் குரலில்,
“கோபம் போய்டுச்சா?” எனக் கேட்டாள் இவள்.
இல்லையெனத் தலையாட்டினான் இன்பன்.
பூர்ணா அமைதியாகி விட,
“கோபம் போகனுமா?” எனக் கேட்டான் அவன்.
“ஆமா!”
“அப்போ என் கூட சேர்ந்து பாடு! குரல் நல்லா இருந்தா கோபத்தை கை விட்டுடறேன்” என்றான்.
“நான் பாடுனா கன்றாவியா இருக்கும்”
“நான் என்ன சூப்பர் சிங்கர் ஜட்ஜா, சுருதி சேரல, ராகம் தேறலன்னு மார்க் போட! கமான் சம்பூ, சிங்!”
“காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு” என இவள் பாட,
“ஐயோ! காதோரம் எதையும் சொல்லிடாதே! பாட்டுன்னு நீ கத்துன கத்துல என் காதுல ரத்த ஆறே ஓடிட்டு இருக்கு” என்றவனைப் பார்த்து முறைத்து வைத்தாள் பூர்ணா.
அதோடு அவள் பாடுவதை நிறுத்திக் கொள்ள, அவன் கெக்கெபெக்கெவென சிரித்து வைத்தான்.
காரை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான் இன்பன்.
“ஏன் இங்க?” என இவள் கேட்க,
“இன்னிக்கு நீ லஞ்ச் பாக்ஸ் எடுத்து வந்தது போலவே தெரியல! அதோட நானும் உன் மேல இருந்த கோபத்துல சாப்பிடப் போகல! இப்போ பசிக்குது” என்றான்.
“அப்பாயிண்ட்மென்கு லேட்டாகிடும்”
“இங்கருந்து பக்கம்தான் சம்பூ! சட்டுபுட்டுன்னு நீ சாப்டினா, பத்து நிமிஷத்துல போய்டலாம்” என்றவன் காரை விட்டு இறங்கி நின்றான்.
வேறு வழி இல்லாது இவளும் இறங்கிக் கொண்டாள். உள்ளே போய் அமர்ந்தார்கள் இருவரும். டம்ளரில் நீரூற்றி அவள் புறம் ஒன்றை நகர்த்தி வைத்தவன்,
“என்ன சாப்பிடற?” எனக் கேட்டான்.
இவளுக்கும் பசிதான். மகன் கவலையில், டப்பாவில் போட்டு வைத்திருந்த உணவை எடுத்து வர மறந்திருந்தாள்.
“தயிர் சாதம் போதும்” அவளுக்குள் இருந்த சிக்கனக்காரி குரல் கொடுத்தாள்.
அவளுக்கு தயிர் சாதம் சொன்னவன், தனக்கு ஃபுல் மீல் ஆர்டர் செய்தான். தட்டில் வகை வகையான வியஞ்சனங்கள் இருக்க, சிலதை அவள் புறம் நகர்த்தி வைத்தான் இன்பன்.
“இல்ல வேணாம்”
நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், வேறொன்றும் சொல்லாமல் எல்லாவற்றையும் அவனே உண்டு முடித்தான்.
அவள் கைக் கழுவி விட்டு வந்ததும், இவனும் போனான். திரும்பி வரும் போது, பில்லுடன் பேரர் அவள் அருகே நிற்பதைக் கண்டவன் அவசரமாக அவர்கள் அருகே வந்தான். தயிர் சாதத்துக்கான பணத்தை மட்டும் எடுத்து பேரரிடம் கொடுத்தவள், இவனைப் பார்த்து,
“உங்க பில்லை கட்டிட்டு வாங்க! நான் கார் கிட்ட வேய்ட் பண்றேன்” எனக் கிளம்பி விட்டாள்.
‘குடுத்தா முழுசா குடுக்கனும். இல்லை என்னை முழுசா குடுக்க விட்ருக்கனும்! இது என்ன பிச்சு பிச்சுக் குடுக்கற பழக்கம்!’ என நினைத்தவனுக்குக் கடுப்பாய் வந்தது.
பேரர்,
“வைப்புக்கு உங்க மேல கோபமா சார்? விடுங்க, விடுங்க! நம்ம ஹோட்டல் அல்வா ஒரு பாக்கேட் வாங்கிக் குடுங்க! கோபம் போய் கொஞ்சல் வந்துடும்” என ஃப்ரீ அட்வைஸ் செய்தவனை முறைத்து வைத்தான் இவன்.
காரில் வந்து அமர்ந்தவன், அவள் மடியில் ஒரு பொட்டலத்தைத் தூக்கிப் போட்டான்.
“என்னதிது?” எனக் கேட்டாள் இவள்.
“அல்வா! கோச்சிக்கிட்ட பொண்டாட்டிக்கு குடுத்தா கொஞ்சிக்கிட்டு வருவாளாம்!”
“வாட்!!!!”
“பேசாதே நீ!”
“ஏன்?”
“கோபமா வருது எனக்கு?”
“இப்போ ஏன்?”
“உன்னோட இத்துனூண்டு தயிர் சாதத்துக்குக் கூட பணம் குடுக்க முடியாத பிச்சைக்காரன்னு என்னைக் காட்டிட்டு வந்துருக்க நீ”
“அப்படிலாம் இல்ல இன்பூ”
“அப்படித்தான் சம்பூ!”
“விபரம் தெரிஞ்சதுல இருந்து எனக்கான எல்லாமே நானே செஞ்சிதான் பழக்கம் எனக்கு! அதனாலத்தான் என் சாப்பாட்டுக்கு நானே பணம் குடுத்தேன்! அதுல இப்படி ஒரு கோணம் இருக்கும்னு நான் நெனைக்கல! இனிமே சாப்பிடப் போனா, நீயே காசு குடு இன்பூ! காருக்கு வந்ததும் என் பங்க உன் கிட்ட குடுத்துடறேன்! சரியா?” எனக் கேட்டவளை விசித்திரமாகப் பார்த்தான் இவன்.
“பொண்ணுங்க ஆம்பளைங்கள யூஸ் பண்ணிக்கறததான் நான் பார்த்திருக்கேன்! நீ வித்தியாசமா இருக்க சம்பூ”
“அதையே நானும் சொல்லவா! ஆம்பளைங்க பொண்ணுங்கள யூஸ் பண்ணிக்கறததான் நான் பார்த்திருக்கேன்! நீ வித்தியாசமா இருக்க இன்பூ”
“சரி, சரி ஆர்கியூமேண்ட் வேணா! அந்த அல்வாவ கொஞ்சம் பிச்சுக் கொடு! சண்டைப் போட்ட வாய்க்கு சர்க்கரைய கொஞ்சம் குடுப்போம்”
சிரிப்புடன் இருவரும் அல்வாவைப் பகிர்ந்து உண்டார்கள். அதற்கும் பணம் கொடுக்கிறேன் என அவள் ஆரம்பிக்க, மீண்டும் முருங்கை மரம் ஏறினான் இன்பன்.
அவர்கள் பார்க்க வந்த வீட்டை நெருங்கும் நேரம் மழை அடித்து ஊற்றத் தொடங்கியது. எப்பொழுதும் போல இவன் ட்ரைவர் வேலை மட்டும் பார்ப்பான் எனும் எண்ணத்தில் தனது குட்டிக் குடையை விரித்தப்படி காரில் இருந்து இறங்கினாள் இவள். அவனும் மறுபக்கம் இறங்க,
“இன்பூ! உள்ளயே இரு!” எனச் சொன்னாள் இவள்.
“வரேன் உன் கூட!” என்றவன் காரை பூட்டி விட்டு நனைந்தபடியே வர, மனது கேட்காமல் குடையை உயர்த்தினாள் இவள்.
அவன் வளர்த்திக்கு எங்கே உயர்த்த!! அவள் கையில் இருந்த குடையை வாங்கிக் கொண்டவன் இருவருக்கும் சேர்த்துப் பிடித்தான். சின்ன குடையாகிப் போக ஒட்டி நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருவருக்கும். அவள் அருகே நடந்தவனுக்கு, என்ன பர்பியூம் இவள் பயன்படுத்துகிறாள் என யோசனை ஓடியது. அவள் அருகே அமரும் போதும் சரி, இப்படி ஒட்டி வரும் போதும் சரி என்னவோ ஒரு வாசம் அவள் மேல். அது என்னவாக இருக்கும் என யோசித்தப்படியே கூட நடந்தான்.
கஸ்டமரிடம் பேசி முடித்து விட்டுக் காரில் ஏறி அமர்ந்தனர் இருவரும். மழை பொழிவு லேசாய் இருக்கத்தான் செய்தது.
“இன்பூ! போற வழியிலதான் எங்க வீடு! கொஞ்ச நேரம் போய்ட்டு போகலாமா?”
ராஜம் இன்னும் சர்வாவுக்குக் காய்ச்சலாகத்தான் இருக்கிறது என இவள் போன் செய்த போது சொல்லியிருக்க, மகனைப் பார்க்க மனம் துடித்தது.
“ஓகே!” என்றவன் அவள் வழி சொல்ல, சொல்ல காரை செலுத்தினான்.
அபார்ட்மேண்ட் அருகே வந்ததும், கீழே இறங்கி இரண்டடி நடந்தவள், திரும்பி இன்பன் அருகே வந்தாள்.
“குட்டி வீடுதான் இன்பூ! உனக்கு இஸ்டம்னா வரலாம்” என்றாள்.
“கூப்பிட மாட்டியோன்னு நெனைச்சேன்” என்றவன், காரை பார்க் செய்து விட்டு அவளோடு சேர்ந்து நடந்தான்.
வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு இவள் உள்ளெ செல்ல, இவனும் பின்னோடு வந்தான். ராஜத்தின் மடியில் படுத்திருந்த சின்னவன், இவளைப் பார்த்ததும் தாவி ஓடி வந்தான்.
“அம்மா!!!” என்றவனைப் புன்னகையுடன் தூக்கிக் கொண்டாள் இவள்.
ஆச்சரியமாக இருவரையும் பார்த்து நின்றான் இன்பன். அவன் பார்த்த வரை, கல்யாணமாகிய எந்த அறிகுறியும் அவளிடம் தென்பட்டது இல்லை.
“உட்காரு இன்பூ” என அங்கிருந்த ஒற்றை சோபாவைக் காட்டியவள், மகனின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.
அவனோ எப்பொழுதும் போல, அவளது மார்பில் கை வைத்து,
“ம்மா! மம்மம்” என்றான்.
மகனின் செயலில் முகம் சிவந்துப் போக, சட்டென அவனை அணைத்தபடி உள்ளறைக்குப் போய் விட்டாள்.
‘ஓஹோ!!! இவ போட்டுருக்கறது பால் பர்பியூமா!’ என நினைத்தவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
ராஜம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, அவனைப் பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தார். பின் காபி கலந்து கொண்டு வந்து உபசரித்தார்.
மகனின் பசியாற்றி அவனை வெளியே தூக்கிக் கொண்டு வந்தாள் இவள்.
“பையனுக்கு காய்ச்சல் தம்பி! மருந்து குடுத்துட்டோம்! ஆனாலும் இன்னும் விடல! தூக்கத்துல கூட அம்மான்னு பொலம்பிட்டு கிடக்கான்” எனச் சொல்லிக் கொண்டிருந்தார் ராஜம்.
வெளியே வந்த சர்வாவோ, அம்மாவின் இடுப்பில் ஒய்யாரமாய் அமர்ந்துக் கொண்டே இன்பனை நோட்டமிட்டான்.
இன்பன் வா என்பது போல கையைக் காட்ட, தாயின் பிடியில் இருந்து கீழே இறங்கியவன் அவன் அருகே போய் நின்றான்.
“ஹலோ குட்டி சார்! உங்க பேர் என்ன?”
“சவ்வேஸ்ரன்!”
“நல்லா இருக்கே பேரு”
“சர்வாக்கு காச்ச”
“அச்சச்சோ, காய்ச்சலா? சும்மா சும்மா படுக்காம, வீட்டுக்குள்ளயே ரெண்டு ரவுண்டு ஓடினா, காச்ச ஓடிப் போய்டும்!” என்றான் இன்பன்.
இன்பனின் கையில் தெரிந்த ட்ராகன் டாட்டூவை அதிசமமாகப் பார்த்த சின்னவன்,
“தேகன்(ட்ரேகன்)!!! சர்வாக்கும் வேணும்” எனக் கேட்டான்.
அதோடு நில்லாமல் இன்பனின் கையையும் தடவித் தடவிப் பார்த்தான் சர்வா. இளம் கன்று பயமறியாது என்பதற்கிணங்க, தனது பெரிய உருவத்தைப் பார்த்து பயமில்லாமல் தன் முன்னே நிற்கும் சின்னவனை ஆசையாகத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டான் இன்பன். சட்டைப் பையில் இருந்த கருப்பு பேனாவை எடுத்து, அவனது பிஞ்சுக் கரத்தில் அழகாய் குட்டியாய் ஒரு ட்ராகனை வரைந்து விட்டான்.
அதில் அப்படி ஒரு குதூகலம் சின்னவனிடம். கையைத் திருப்பிப் திருப்பிப் பார்த்து வியந்துப் போனான்.
“தேங்யூ அங்கிள்!” என நன்றி சொன்னக் குட்டிக்கு கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தான் இன்பன்.
இருவரையும் பார்த்திருந்த பூர்ணா,
“மணியாகுது இன்பூ! கிளம்பலாமா?” எனக் கேட்டாள்.
“உன் பையனுக்கு உடம்பு முடியலத்தானே! நீ வீட்டுலயே இரு சம்பூ” என்றான் அவன்.
“வீட்டுல இருந்தா என் வேலையை யார் பார்க்கறது! வா கிளம்பலாம்”
“எது? இப்போ பார்த்த வீட்டப் பத்தி வெப்சைட்ல இன்புட் பண்ணறதுதானே! அந்த வேலைய நான் பார்த்துக்கறேன்! நீ இவன பார்த்துக்க” என்றவன் கிளம்ப ஆயத்தமானான்.
“ம்ப்ச்! இன்புட் பண்ணறதப் பத்தி ஓன் டைம்தான் சொல்லிக் குடுத்துருக்கேன்! சொதப்பிடுவ நீ” என இவள் கவலைப்பட,
“ஓன் டைம்லயே நான் கேட்ச் பண்ணிட்டேன்! என்னமோ நீதான் அந்த மன்னார் அண்ட் கம்பெனிய தலைல தூக்கி சுமக்கற மாதிரி ஓவர் பில்ட் அப் குடுக்காத!” எனச் சொல்லியவன், சின்னவனுக்கு ஃளையிங் கிஸ் கொடுத்து விட்டு விடுவிடுவென கிளம்பி விட்டான்.
அவன் பின்னே இவளும் வேகமாய் ஓடி வந்து நின்று மூச்சு வாங்கினாள்.
“சொன்னா கேட்க மாட்டியா நீ?” என முறைத்தாள் அவனை.
“சம்பூ! நீ ஏன் தாலி போடல? இனிமே ஒழுங்கா போட்டுக்கோ! நல்ல வேளை உன்னை நட்பா பார்த்ததுல எனக்கு உன் மேல எந்த ஃபீலிங்கும் டெவலப் ஆகல. அப்படி ஆகியிருந்தா கல்யாணம் ஆனவள காதலிச்ச என் நெலமை என்ன ஆகியிருக்கும்?” எனப் படபடத்தவன், அவள் அதிர்ந்து நிற்பதைக் கண்டுக் கொள்ளாமல் லிப்டினுள் நுழைந்து விட்டான்.
அவனது வார்த்தைகளில் அப்படியே அதிர்ந்துப் போய் நின்ரு விட்டாள் இவள்.
“அம்மா!” என அழைத்த மகனின் குரலில்தான் உயிர் வந்தது பெண் சிலைக்கு.
கலங்கிப் போன கண்களைத் துடைத்தவள், புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.
