அத்தியாயம் 5
‘காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்’ (பாடல் வரி)
சனி, ஞாயிறுகளில்தான் கஸ்டமருக்கு வீட்டைக் காட்டும் வேலை நிறைய இருக்கும். அந்த நாட்களில் விடுமுறையில் இருப்பவர்கள், நின்று நிதானமாக வீட்டைப் பார்ப்பார்கள். சில சமயம் ஒருத்தர் மட்டும் வருவார். பல சமயங்களில் வீட்டில் உள்ள நண்டு சிண்டு எல்லாம் வரும். ஆளாளுக்கு கேட்கும் கேள்விகளை, அவர்களுக்கு ஏற்றது போல பொறுமையாய் இனிமையாய் பதிலளிக்க வேண்டும். அது போன்ற நேரங்களில் களைத்துப் போய் விடும் இவளுக்கு.
அன்றும் ஒரு சனிக்கிழமை. தாம்பரத்தில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்குப் பார்க்க வருவதாக ஒருத்தர் மதியம் நான்கு மணிக்கு அப்பாயிண்மேண்ட் வாங்கி இருந்தார். காலையில் இருந்து ஃப்ரியாக இருந்தவள், மெல்ல வீட்டு வேலைகளைப் பார்த்தாள். அவசர சமையல் இல்லாமல் நிதானமாகச் சமைத்தாள். சர்வேஸ்வரனுக்கு காய்ச்சல் விட்டிருக்க, அவனும் இவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
காலையில் எழுந்ததுமே,
“ம்மா! ஊஞ்சல்” எனக் குதித்த சர்வாவை, பாத்ரூம் விட்டு, பால் கொடுத்து, கீழே இருக்கும் குட்டி பார்க்குக்கு அழைத்துப் போனாள்.
சின்னக் குழந்தைகள் விளையாட ஊஞ்சல், ஸ்லைட், சீசா எல்லாம் இருந்தது. ஏற்கனவே சில குழந்தைகள் அங்கே விளையாடி கொண்டிருந்தார்கள். மகனை ஊஞ்சலில் அமர்த்தி, மெல்ல ஆட்டினாள்.
“வேகம்மா”
“இல்லடா கண்ணா! மெதுவாதான் ஆட்டனும். இல்லைனா டொம் விழுந்துடுவ!”
மகன் அருகிலேயே இருந்து, எல்லா விளையாட்டுக்களையும் விளையாட வைத்தாள். ஸ்லைடில் மேல ஏற்றி விட்டு, கீழே அவன் வரும் போது படக்கெனப் பிடித்துக் கொள்வாள். ஒரு மகனைக் காலனுக்கு அள்ளிக் கொடுத்திருந்தவளுக்கு, இந்த மகன் மீது அதீத கவனம். வெளியே அழைத்துப் போனால் கூட, கை வலித்தாலும் தூக்கியே வைத்திருப்பாள். ஓய்வு வேண்டுமென்றால் இவள் அமர்ந்து அவனை மடியில் அமர்த்தி, கை வளைவுக்குள்ளேயே வைத்துக் கொள்வாள். இரண்டு வயது துருதுரு மகனை எத்தனை நாளைக்குத்தான் பொத்தி வைக்க முடியும். சில சமயங்களில், மீண்டும் அவனை சிறிதாக்கி வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாமா எனத் தோன்றும். தன் பைத்தியக்கார எண்ணத்தை நினைத்து இவளே சிரித்துக் கொள்வாள்.
மணி மூன்றாகி இருக்க, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தவள், அப்படியே மகனையும் குளிக்க வைத்தாள். தான் ரெடியாகி லாப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளி வந்த சமயம் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
“அக்கா” எனும் அழைப்பில் முகம் மலர்ந்து விட்டது இவளுக்கு.
ராஜத்துக்கும் ஒரே புன்னகை. குடுகுடுவென சமையலறைக்கு ஓடினார் காபிக்கு பால் சூடு செய்ய.
கதவைத் திறந்த பூர்ணா,
“வாடா, நல்லவனே!” எனத் தம்பியை வரவேற்று, கர்ப்பிணியான தம்பி மனைவியை அணைத்துக் கொண்டாள்.
“மாமா!” என ஓடி வந்தான் சர்வா.
“மருமகனே!” எனச் சிரிப்புடன் குட்டியைத் தூக்கிக் கொண்டான் மருது.
உள்ளே வந்தவர்களை, ராஜமும் வரவேற்றார்.
“வாங்க மாப்பிள்ளை! வாம்மா கண்ணு” என்றவர் தன் மகளைக் கட்டிக் கொண்டார்.
மருதுவின் மனைவி உமா, ராஜத்தின் கடைசி மகள். அவருக்கு நான்கும் பெண் குழந்தைகள். எல்லோருக்கும் திருமணமாகி இருக்க, யார் வீட்டிலும் இருக்க மாட்டேன் எனத் தனியாகத்தான் இருந்தார். மருதுதான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருங்கள் என பூர்ணாவிடம் ராஜத்தை சேர்த்து விட்டான்.
அம்மாவும், மகளும் செல்லம் கொஞ்ச மாமன் மடியில் வாகாய் அமர்ந்துக் கொண்டான் சர்வா. வாங்கி வந்திருந்த திண்பண்டங்களைப் பிரித்து, சின்னவனுக்கு கொடுக்க, ஒரே குதூகலம் அவனுக்கு.
“என்னக்கா? அப்பாயிண்ட்மெண்டா?”
“ஆமாடா! நாலு மணிக்கு ஒன்னு இருக்கு! அதுக்கு மேல இன்னிக்கு ஃப்ரீதான்! நைட்டு இங்கதான தங்க போறீங்க ரெண்டு பேரும்?”
“ஆமாக்கா! உமாவுக்கு அவங்கம்மா ஏக்கம்! அதான் கூட்டிட்டு வந்தேன்!”
“அப்போ உனக்கு இந்தக்கா மேல ஏக்கம் இல்ல?” என இவள் வம்பு செய்ய,
“போக்கா! என் நெனப்பு எப்பவுமே உன் மேலயும் என் மருமகன் மேலயும்தான்” என்றான்.
“டேய்! பொண்டாட்டி முன்னாடியே இப்படிலாம் சொல்லாதடா! நாள பின்ன, உனக்கு நான் முக்கியம் இல்ல, உங்கக்காத்தானே முக்கியம்னு வம்புக்கு வந்திடப் போறா”
“போங்க அண்ணி! அப்படிலாம் நான் நெனைக்க மாட்டேன்!” எனச் சிணுங்கினாள் உமா.
கலகலவென நகைத்த பூர்ணா, காபி கலக்க உள்ளேப் போக, மகளுக்குப் பிடித்த ரவா கேசரி செய்ய ராஜமும் கூடவே போனார்.
“மகளையும் மருமகனையும் நல்லா கவனிச்சுக்கோங்க! நைட்டு நான் வெளிய எதாவது வாங்கிட்டு வந்துடறேன்! உமா ரெஸ்ட் எடுக்கனும்னா, என் ரூமுல படுத்துக்க சொல்லுங்க” என்றவள், காபியை இருவருக்கும் கொடுத்து தானும் குடித்துக் கிளம்பினாள்.
“அக்கா! நான் ட்ராப் பண்ணவா?”
“நீ உன் மருமகன பாருடா! நான் ஸ்கூட்டில போய்க்குவேன்”
தாம்பரத்தில் இருந்த வீட்டுக்குச் சரியான நேரத்தில் போய் சேர்ந்தாள் பூர்ணா. அங்கே அவளுக்கு முன்னமே வந்து நின்றிருந்த இன்பனின் ஹார்லி டேவிட்சனைப் பார்த்தவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
தாலியைப் பற்றி இன்பன் பேசிய தினம், முதலில் அதிர்ந்துப் போனாலும், அதன் பிறகு கட்டுக் கடங்காத கோபம்தான் வந்தது பூர்ணாவுக்கு. தன் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைத்தவன் மீது ஆத்திரமும், ஆவேசமும் வந்தது. இருக்க இடம் கொடுத்தால்தானே மடத்தைப் பிடுங்குவான்! அதற்கு இனி இடம் கொடுக்கவே கூடாது என முடிவெடுத்தவள், வேலை சம்பந்தப்பட்ட விஷங்களுக்கு மட்டுமே அவனிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.
மறுநாள் வேலையிடத்தில் எப்பொழுதும் போல பேச்சுக் கொடுத்தவன், இவள் அளந்துப் பேசுவதைப் பார்த்து கடுப்பாகிப் போனான்.
“என்ன மூஞ்ச திருப்பற நீ! நல்லது சொன்னா இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு புடிக்காதே! தாலி, மல்லிப்பூ, மெட்டி, வகிட்டுல குங்குமம்னு வெச்சிட்டுத் திரியற பொண்ணுங்களுக்கே இங்க பாதுகாப்பு இல்ல. நீ அழகா வேற இருந்து தொலைக்கற! கல்யாணம் ஆச்சுன்ற சைன் ஒன்னுமே இல்லாம திரிஞ்சா எவனாச்சும் லவ் டார்ச்சர் குடுப்பான்ற நல்ல எண்ணத்துல ஒரு அட்வைஸ் பண்ணிட்டேன்! அதுக்கு இவ்ளோ சீன் வேணாம் சம்பூ!”
அவனை முறைத்தபடி,
“என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும் மிஸ்டர் இன்பன். பூமர் அங்கிள் போல அட்வைஸ் மழையக் கொட்டறதுலாம் என் கிட்ட வேணாம். அதக் கேட்டுட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்!” எனப் படபடவென வார்த்தைகளைக் கொட்டி விட்டாள்.
“எதே!!!! பூமர் அங்கிளா???? நானா??? திமிர் புடிச்ச திமிங்கலம்! இனிமே உன் கிட்ட எனக்கு என்னப் பேச்சு!” என அவனும் கோபமாகச் சொல்லி, அவளுடன் பேச்சு வார்த்தையைச் சுருக்கிக் கொண்டான்.
அன்று முதல் வேலை விஷயங்களைத் தவிர இருவருக்கும் வேறு பேச்சு வார்த்தை இல்லாமல் போனது.
முந்தைய தினம், சனிக்கிழமை அப்பாயிண்ட்மேன்ட் இருக்கிறது என இவள் சொல்ல,
“மை வீக்கேண்ட் இஸ் ஃபுல்லி புக்ட் வித் 3 எஸ்!!! சரக்கு, சாப்பாடு, சயனம்! சோ டோண்ட் டிஸ்டர்ப் மீ ஆன் வீக்கேண்ட்ஸ்” எனத் திமிராய் சொல்லியிருந்தான் இன்பன்.
