IMM Epi 5(2)

“குடுத்து வச்ச குடிகாரன்” என முணுமுணுக்க மட்டும்தான் முடிந்தது இவளால்.

இத்தனை நாட்களில், இந்த இன்பன் மேகலைக்கு ஏதோ ஒரு வகையில் சொந்தக்காரன் எனும் அளவுக்குப் புரிந்தது பூர்ணாவுக்கு. இவளிடம் எப்படி கற்றுக் கொள்கிறான் என கேட்டுத் தெரிந்துக் கொள்பவர், அவனிடம் இதை செய், அப்படி இரு, அதைக் கற்றுக் கொள் என ஒரு வார்த்தை சொல்லி இவள் பார்த்ததில்லை. தலை அசைப்பு, இவர்களுக்குக் கொடுக்கப்படும் புன்னகையை விட இரண்டு மில்லிமீட்டர் உதட்டை இன்னும் கொஞ்சம் இழுத்து வைத்துப் புன்னகை, சாப்பிட்டாயா எனப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வார்த்தை என இன்பனுக்கு மட்டும் இக்ஸ்ட்ரா கேர் இருந்தது மேகலையிடமிருந்து.

அவர் கேட்கும் எல்லாவற்றுக்கும்,

“ஹ்ம்ம்” எனும் ஒற்றைப் பதில் மட்டுமே இவனிடம் இருந்து வரும்.

வேலையில் இன்னும் கால் ஊன்றி இருக்காத போது, எதற்கு முதலாளியின் சொந்தத்தைப் பகைத்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில்தான், தன் சொந்த விஷயத்தில் அவன் தலையிட்டும் ஒரு வார்னிங்கோடு ஒதுங்கிக் கொண்டாள். இவன் எதாவது மேகலையிடம் சொல்லி, அவர் இவளை வேலையயை விட்டுத் தூக்கி விட்டால், மீண்டும் முதலில் இருந்து வேறு இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமே.

மருதுவுக்குப் பிறகு இவள் எந்த தயக்கமும் இல்லாமல் சிரித்துப் பேசிப் பழகியவன் இந்த இன்பன்தான். உருவமும், நடையுடையும் ரௌடி போல இருந்தாலும், கல்மிஷமில்லாத பார்வையும், சில சமயம் அவனையறியாமல் வெளிப்படும் கனிவும் இவளுக்கு இதமாய் இருந்தது உண்மை. அவனது செய்கையால், கிடைத்திருந்த நல்ல நட்பை இவள் இல்லா நட்பு(அன்ஃப்ரேண்ட்) செய்ய வேண்டி வந்ததில், மனம் முழுக்க ஆதங்கம் பெண்ணுக்கு.

‘எவ்ளோ எண்ணெயைத் தடவிட்டு ரோட்டுல விழுந்துப் பொரண்டாலும், ஒட்டற மண்ணுதான் ஒட்டும். நமக்கு நட்பு, ப்ரேண்ட்ஷிப்பு எல்லாம் எட்டாக்கனிதான் போல’ என மனதைத் தேற்றிக் கொண்டாள் சம்பூர்ணா.

முதல் நாள் வர மாட்டேன் என முறுக்கிக் கொண்டவன், இப்பொழுது வந்து நிற்க, எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடையிட்டாள் இவள். ஹெல்மெட்டைக் கழட்டி அதை பூட்டி வைத்தவன், இவள் பின்னோடு வீட்டுக்குள் நுழைந்தான்.

அது ஒரு இரண்டு மாடி வீடு. வாடகைக்கு ஒரு வருடம் இருந்துவிட்டு, அதற்குப் பிறகு பிடித்தால் சொந்தமாய் வாங்கிக் கொள்வதாய் பேச்சு வார்த்தைப் போயிருந்தது. வீட்டைப் பார்க்க பெரியவர் ஒருவரும், அவரது மகனும் வந்திருந்தார்கள்.

ஏற்கனவே பெரியவருடன் போனில் பேசி இருந்தவள், புன்னகையுடன் வணக்கம் வைத்தாள். அவரும் புன்னகைத்தார். அவரது மகன் புன்னகையில் வழிசலைக் கண்டுக் கொண்டவள்,

‘மிஸ்டர் முருகா! எனக்குப் எருமைய விட பெரிய சைஸ் பொறுமைய குடுப்பா’ என வேண்டிக் கொண்டாள்.

கூடவே வந்தவனை பெரியவர் கேள்வியாகப் பார்க்க,

“என்னோட கலீக் சார்!” என அறிமுகப் படுத்தினாள் பூர்ணா.

சாவியை முந்தைய தினமே ஓனரிடம் வாங்கி வைத்திருக்க, வீட்டைத் திறந்து இவர்களை உள்ளே விட்டாள் பெண்.

“கீழ ரெண்டு ரூம் சார்! பெரிய ஹால், ஒரு டாய்லெட். பின்னால சமையலறை” எனச் சொல்லிக் கொண்டே அவர்களுக்கு ஒவ்வொரு இடமாய் காட்டினாள் பூர்ணா.

“கிச்சன் ரீசண்டாதான் ரெனோவேட் பண்ணாங்க சார்! அவங்க மருமகளுக்கு வேலை மாற்றம் கிடைக்கவும், மகன் குடும்பம் திருச்சிக்கு ஷிப்ட் ஆகிட்டாங்க. வயசான இவங்க ரெண்டு பேரும், சின்னதா அபார்ட்மேண்ட்கு குடிப் போய்ட்டாங்க! அதான் இந்த வீட்டை வாடகைக்குக் குடுக்க முடிவு பண்ணிட்டாங்க” என மகன்காரன் நோண்டி நோண்டிக் கேட்க, விவரமாய் சொன்னாள் இவள்.

“நானும் கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா, வைப் இருக்கற இடம்தான் எனக்கு அயோத்தின்னு மூட்டை முடிச்சக் கட்டிருவேங்க!” என மெல்லியக் குரலில் சொல்லி இளித்தவனைப் பார்த்து, கஸ்டப்பட்டுப் புன்னகைத்து வைத்தாள் இவள்.

அவன் தந்தை வெளியே இருக்கும் இடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நேரம்தான் இந்தப் பேச்சு வார்த்தை. இவர்களை அமைதியாகப் பார்த்தபடி ஓர் ஓரமாய் நின்றிருந்தான் இன்பன். வந்ததில் இருந்து இவளிடமும் சரி, வந்திருந்தவர்களிடமும் சரி ஒற்றை வார்த்தைப் பேசவில்லை அவன்.

“இந்த வருஷத்துக்குள்ள எனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கறதுக்கு இருக்காங்க பூர்ணா. எனக்காகத்தான் இந்த வீடு! ரெண்ட்டுக்கு இருக்காம இப்பவே வாங்கிடலாம்னு சொன்னா, எங்க அப்பாதான் முதல்ல இருந்துப் பார்த்துட்டு, வீட்டு ராசி எப்படி வொர்க் அவுட் ஆகுதுனு பார்க்கலாம்னு சொல்லி கட்டையப் போட்டுட்டாரு. பழைய பஞ்சாங்கம் அவரு! நான் அப்படி இல்லைங்க! என் வைப் உங்கள மாதிரி வேலை விஷயமா நாலு பேர்ட்ட பழகனாலும், நாலு இடம் போனாலும் பெரிய இஷூலாம் ஆக்கமாட்டேன்” எனக் கண்கள் மின்ன சொன்னான்.

“வாவ்! நாட்டுக்கே சுதந்திரம் கிடைச்சு எழுபத்து அஞ்சு வருஷம் ஆச்சி. ஆனா வெளிய போய் வேலை செய்யறதுக்கு, நாளு பேர பார்த்து பேசறதுக்கு புருஷன் அனுமதி வேண்டிக் கிடக்கு சுதந்திர தேசத்துப் பொண்ணுங்களுக்கு! உங்க வருங்காலம் ரொம்ப குடுத்து வச்சவங்க சார்” என நக்கலாக சொன்னாலும் சிரித்த முகத்துடன் சொன்னாள் பூர்ணா.

அவளது டாலடிக்கும் பல் வரிசையிலும், மினுமினுத்த கன்னத்தழகிலும், பளபளத்த உதட்டு வடிவிலும் மெய் மறந்திருந்தவனுக்கு, பெண்ணின் நக்கல் பேச்சுப் பின்னால் சென்றிருந்தது.

“வாட் அ ப்யூட்டி! நீங்க கமிட்டட்டா?” என வழிய ஆரம்பித்தவன் அருகே வந்து நின்றான் இன்பன்.

பூர்ணாவை முறைத்துப் பார்த்தவன்,

“பாஸ்! அவங்களுக்கு கல்யாணமாகி பால் குடி மறவா குழந்தை ஒன்னு இருக்கு! அதனால எனர்ஜிய வேஸ்ட் பண்ணாம மேல வாங்க, மீதி வீட்டக் காட்டறேன்” என்றான்.

அவன் சொன்ன விதத்தில் இவளுக்கு அவமானத்திலும் ஆத்திரத்திலும் குப்பென முகம் சிவந்துப் போனது. ‘வடை போச்சே’ என்பது போல பார்த்து நின்ற மகன்காரனையும் உள்ளே வந்திருந்த அப்பாவையும் அதற்குப் பிறகு இன்பனே கவனித்துக் கொண்டான். கோபத்தில் வாயடைத்துப் போய் நின்றிருந்த பூர்ணாவைக் கண்டுக் கொள்ளாமல் அவ்வீட்டைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளக்கினான். வீட்டைப் பற்றி விவரங்கள் சேகரித்தப் பொழுது, ஒன்றுமே தெரியாதது போல நின்றிருந்தவன், எல்லா விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்ததைப் பார்த்து கோபத்திலும் வியக்காமல் இருக்க முடியவில்லை பூர்ணாவால்.

ஒரு வழியாக திருப்தியான அப்பா, கூடிய சீக்கிரம் வீட்டில் கலந்துப் பேசி விட்டு தொடர்பு கொள்வதாக சொன்னார். அவர் வெளியே இருந்து வீட்டைப் படம் எடுக்கப் போக, மகனோ பூர்ணாவை நெருங்கி,

“நெஜமாலுமே கல்யாணம் ஆச்சாங்க? நான் என்னென்னமோ கோட்டைக் கட்டிட்டேனே!!!” என மெல்லியக் குரலில் ஆதங்கமாகக் கேட்டான்.

“வீட்டைப் பத்தி கேக்கறதுனா எது வேணும்னாலும் கேளுங்க சார்! பெர்சனலா எதுவும் பேச வேணாம்!” எனச் சிரித்த முகமாகவே சொன்னாள் இவள்.

“இந்த ஸ்மைலிங் ஃபேஸ்தாங்க ரொம்பப் பிடிக்குது! போங்கங்க! எனக்குக் குடுத்து வைக்கல” எனச் சொல்லிப் புன்னகைத்தவன், மழை வேறு ஆரம்பித்திருக்க, தங்களது காரில் தகப்பனோடு கிளம்பி போய் விட்டான். 

தூறலாய் ஆரம்பித்து, சடசடவென வேகத்தைக் கூட்டி இருந்தது மழை. இன்பனுக்கும் பூர்ணாவுக்கும், சற்றுப் பொறுத்துக் கிளம்ப வேண்டிய கட்டாய சூழ்நிலை. இந்த மாதிரி மழை நேரங்களில், குண்டும் குழியுமான சாலைகளில் இரு சக்கர வாகனம் செலுத்துவது பாதுகாப்பு இல்லையே.

வேறு வழியில்லாமல் எந்த தளவாடப் பொருட்களும் இல்லாத அந்த வீட்டுக்குள் நுழைந்தனர் இருவரும். அவன் மாடிக்கு செல்ல அமைக்கப்பட்டிருந்த படிகளில் உட்கார்ந்துக் கொள்ள, இவள் வரவேற்பறையின் ஒரு மூலையில் தரையில் அமர்ந்துக் கொண்டாள். மேகம் கருத்துக் கிடக்க, அவ்வீடும் இருளில் மூழ்க ஆரம்பித்தது. இவன் எழுந்து போய் மின் விளக்கைப் போட்டு விட்டு மீண்டும் அவனது இடத்தில் அமர்ந்துக் கொண்டான்.

மாலை மணி ஆறாகி இருக்க, உணவு வாங்கி வருவதாக சொல்லி வந்தது நினைவுக்கு வந்தது பூர்ணாவுக்கு. மழை அடித்து ஊற்ற, எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும் இந்த மழை தூறலாய் மாற என எண்ணியவள், தம்பிக்கு அழைப்பெடுத்தாள்.

“மருது! இங்க மழைல மாட்டிக்கிட்டேன்டா. என்னால சாப்பாடு வாங்கிட்டு வர முடியாது போல! நீயே போய் வாங்கிட்டு வந்துடுடா! எனக்கு வேய்ட் பண்ணாம, முதல்ல சாப்பிடுங்க! நான் மழை விட்டதும் மெதுவா வரேன்” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

பொருட்கள் இல்லாத வீட்டில் அவளது குரல் எதிரொலித்தது. தரையில் நீண்ட நேரம் அமர முடியாமல் இடுப்பு வலி எடுக்க, கால்கள் இரண்டையும் மடித்து, இரு கைகளால் கட்டிக் கொண்டு, கன்னத்தை கால் முட்டியில் வைத்தபடி அமர்ந்துக் கொண்டாள் பூர்ணா. அங்கொருவன் அமர்ந்திருப்பதைப் பொருட்படுத்தாமல், கண்களையும் மூடிக் கொண்டாள்.

சிலை போல அந்த அசைவும் இல்லாது, மூச்சு மட்டும் ஏறி இறங்க அழகோவியமாய் அமர்ந்திருந்தவளை பார்த்தவன் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. படியில் அமர்ந்திருப்பது கஸ்டமாய் இருக்க, அவனும் கீழிறங்கி சுவரில் சாய்ந்துத் தரையில் அமர்ந்துக் கொண்டான். மழைக்கு பஜ்ஜிதான் இல்லை, இளையராஜாவையாவது துணைக்கழைக்கலாம் என முடிவெடுத்தவன், மெல்லிய சத்தத்தில் தனது போனில் இருந்து பாடல்களை ஒலிக்க விட்டான். அங்கொருத்தி அமர்ந்திருக்கிறாள் என்பதைக் கணக்கில் கொள்ளாது இவனும் மெல்லியக் குரலில் சேர்ந்துப் பாடிக் கொண்டிருந்தான்.

“சங்கீத மேகம்

தேன் சிந்தும் நேரம்

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்”

‘உடம்பு ஃபுல்லா திமிரு!!! ஆனா குரல்ல மட்டும் தேனைத் தடவி வச்சிருக்கான்! திட்டி விட வாய் நமநமங்குது! நக்கலா பேசற அந்த வாய பிறாண்டி வைக்க கை துருதுருன்னுது! நாளைக்கு நம்ம பொழப்பு என்னாகுமோன்னு கையையும் வாயையும் இறுக மூடிட்டு இருக்க வேண்டி இருக்கு! குடும்பத்த கரையேத்தற பொண்ணுங்க எவ்ளோலாம் தாங்கிக்க வேண்டி கிடக்கு! ச்சைக்!’ என மனதில் அவனைத் திட்டியபடியே கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டாள் பூர்ணா.

ஒன்று மாற்றி ஒன்றாக பாடல்கள் வரிசைக் கட்டி வர, அதோடு மழை சத்தமும் காதில் இனிமையாய் ரீங்காரமிட, கண்களை சுழற்றியது பூர்ணாவுக்கு. முயன்று கண்ணை மூடிக் கொண்டே விழித்திருக்கப் போராடினாள்.

இவனது பார்வை வட்டத்தில் பெண் சிலை அசைய, என்னவென்று திரும்பிப் பார்த்தான் இன்பன். தள்ளாடிய பூர்ணா, மெல்ல சரிந்து அப்படியே தரையில் படுத்துத் தூங்கி விட்டதைப் பார்த்தவனுக்கு, அவள் மீதிருந்த கோபத்தையும் தாண்டிப் புன்னகை வந்தது.

‘சிலுசிலு தரையில தூக்கத்தைப் பாரேன் இவளுக்கு! அம்மா, பொண்டாட்டி, வர்க்கிங் வூமன்னு பல பதவிகள திறம்பட நடத்தறதுன்னா சும்மாவா! உடம்புல எப்பவும் டயர்ட்னஸ் இருந்துட்டேத்தான் இருக்கும் போல. இப்படித்தானே எங்கம்மாவுக்கும் இருந்திருக்கும்!’ என எண்ணியவன், பாட்டு சத்தத்தைக் குறைத்தான்.

சத்தமில்லாமல் எழுந்து போய் வெளியேப் பார்க்க, மழை இப்பொழுது விடும் போல தோன்றவில்லை. மீண்டும் வந்து அமர்ந்தவன், அவள் புறம் பார்க்காமல் கண்ணியமாக வெளி வாசலை வெறித்தபடி அமர்ந்துவிட்டான்.

எவ்வளவு நேரம் தூங்கினாளோ, திடுக்கென எழுந்து அமர்ந்தாள் பூர்ணா. அவ்விடமே இருளில் மூழ்கி இருக்க, பதறிப் போனாள் பெண்.

“பயப்படாதே! மழைல கரண்ட் போய்டுச்சு! என் போன்ல பேட்டரி முடிஞ்சது! அதான் கும்மிருட்டு” எனும் அவன் குரல் வந்த திசையை நோக்கினாள் இவள்.

இருட்டில் இன்பனின் உருவம் வரி வடிவமாக மட்டுமே தெரிந்தது. கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டவள், முடியையும் கோதி சரி செய்தபடி எழுந்து நின்றாள். இருட்டில் கைக் கடிகாரத்தில் மணி தெரியாமல் போக, தொலைபேசியில் மணி பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாய் கட்டாந்தரையில், அந்நியன் ஒருத்தன் அருகிருக்க, நிம்மதியாக தூங்கி இருந்திருக்கிறாள்.

“ஏன் எழுப்பல?” என இவள் கேட்க,

“எதுக்கு எழுப்பனும்?” என அவன் பதில் தந்தான்.

“ம்ப்ச்! இதென்ன பதில்? மழை விட்டக் கையோட எழுப்பி இருந்தா இன்னேரம் வீட்டுக்குப் போயிருக்கலாம்ல!” எனப் படபடத்தவள், வெளி வாசலுக்குத் தனது தொலைபேசியின் டார்ச் லைட் துணையோடு வந்தாள்.

மழை விட்டிருந்தாலும், வானம் இன்னும் இருண்டுக் கிடந்தது.

எழுப்பித்தான் பார்த்தான் இன்பன். ஒரு முறை சம்பூ எனவும் பத்து நிமிடம் கழித்து பூர்ணா எனவும் குரல் கொடுக்க, ஹ்ம்ம் எனப் பதில் வந்ததே தவிர அவள் உறக்கம் கலையவே இல்லை. அதன் பிறகு அவளே எழுந்துக் கொள்ளட்டும் என அப்படியே விட்டுவிட்டான் இவன்.

இவள் வீட்டைப் பூட்ட, இருவரும் தங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடம் நோக்கிப் போனார்கள். அவள் ஸ்கூட்டியைக் கிளப்பும் வரை காத்திருந்தான் இன்பன். ஸ்கூட்டியை ஓட்டியபடியே அவன் அருகே வந்து நின்றவள்,

“மிஸ்டர் இன்பவாணன்!” என அழைத்தாள்.

என்ன என்பது போலப் பார்த்தான் இவன்.

“ஏன் தாலி போடலன்னு ஓவரா சவுண்டு விட்டல்ல! உன் அருகாமைல பாதுகாப்பா ஃபீலாகி தூங்கிருக்கேன்ற காரணத்துக்காக மட்டும் சொல்லறேன்! புருஷன் செத்துட்டா நம்ம கலாச்சாரத்துல தாலி போட மாட்டாங்க! உசுரோட இருந்தாலும், என்னைப் பொருத்த வரைக்கும் அவன் செத்துட்டான்! அதான் தாலி போடல, குங்குமம் வைக்கல, மெட்டிப் போடல! போதுமா விளக்கம்???” எனக் கேட்டவள் விருட்டென ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டாள்.

அவள் பிம்பம் புள்ளியாய் மறைந்து காணாமல் போகும் வரை அத்திசையையேப் பார்த்தபடி நின்றிருந்தான் இன்பவாணன்.

Scroll to Top