ஈரமில்லாமல் இருக்கவும், அவருக்கு சந்தோஷமாம்.
அவனது சிரிப்பில் மன பாரம் நீங்கி இவளுக்கும் சிரிப்பு வந்தது. அழுத்தமாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், புன்னகையுடனே வெளியே நடந்தாள். அவர்களுக்காக அங்கேயே காத்திருந்த இன்பனைப் பார்த்ததும் ஆச்சரியமாகிப் போனது இவளுக்கு.
இன்பனைப் பார்த்ததும்,
“டேகன்(ட்ராகன்) அங்கிள்!” எனத் தாவினான் சர்வா.
இவள் மகனை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள,
“குடு சம்பூ!” எனக் கை நீட்டினான் இன்பன்.
“ஷாப்பிங்க்கு வந்திருபீங்க! நாங்க எதுக்கு இடைஞ்சலா! பரவாயில்ல இன்பன் சார்” என்றாள் இவள்.
“அப்படிலாம் ஒன்னும் இல்ல! இங்க நமக்கொரு டாட்டூ ஷாப் இருக்கு! அங்க வந்தேன்! இப்போ ஃப்ரீதான்! குடு” என மீண்டும் கையை நீட்டினான்.
இன்னும் மறுத்தால் மரியாதையாக இருக்காது எனக் கையில் துள்ளிக் கொண்டிருந்த மகனை அவனிடம் நீட்டினாள் சம்பூர்ணா.
“சாப்டீங்களா ரெண்டு பேரும்?” எனக் கேட்டான் இவன்.
“இனிதான்”
“அப்போ வா! சேர்ந்து சாப்பிடலாம்! இங்க ஃபூட் கோர்ட்ல சாப்பாடு நல்லா இருக்கும்” எனச் சொல்லியவன், அவள் சம்மதம் சொன்னாளா இல்லையா எனக் கூட கண்டுக் கொள்ளாமல் சர்வாவைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தான்.
வேறு வழி இல்லாமல் இவளும் அவன் பின்னோடு போனாள். ஃபூட் கோர்ட்டில் இவன் இடம் பார்த்து உட்கார, பைகளையும் பேக்கையும் அங்கே வைத்து விட்டு உணவு வாங்கப் போனாள் இவள்.
“எனக்கு என்ன வேணும்னு கேக்கவே இல்லை பாரேன் உங்கம்மா! பெரியவனா ஆனதும், நீயும் அப்படி இருக்காதே! கூட வந்தவங்க வயித்த கவனிச்சுக்கனும்! அதான் மேனர்ஸ்! புரியுதா?” என இவன் கேட்க, குட்டியோ அவன் அம்மா கேட்கும் எல்லாவற்றுக்கும் சொல்லும் ஓகே எனும் பதிலை இவனுக்கும் சொன்னான்.
“நல்ல புத்திசாலி பையன்டா நீ!” என்ற இன்பன், சின்னவனின் கைப் பிடித்து ஹை ஃபை கொடுத்துக் கொண்டான்.
அது ஒரு விளையாட்டாகிப் போக, மீண்டும் மீண்டும் இருவரும் ஹை ஃபை கொடுத்துக் கொண்டார்கள். தூரத்தில் இருந்து அவர்கள் இருவரையும்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணா. என்னதான் இன்பனைத் தெரியும் என்றாலும், அவனை நம்பி மகனைக் கொடுத்தது கொஞ்சம் பயமாய்தான் இருந்தது. பத்திரமாகப் பிடித்திருக்கிறானா மகனை எனப் பார்த்தபடியே இருந்தாள்.
உணவை எடுத்துக் கொண்டு வேகமாய் வந்தவள்,
“அவனக் குடுத்துட்டு போய் சாப்பாடு வாங்கிக்குங்க” என்றாள்.
“நீ சாப்பிடு முதல்ல! நான் பிறகு சாப்பிடறேன்” என்று விட்டான் இவன்.
உணவு இடத்துக்குப் பக்கமாக ப்ளே ஏரியா இருக்க, அதையே கைக் காட்டியபடி இருந்தான் சர்வா. எப்பொழுதும் இங்கே வந்தால், சாப்பிட்டு விட்டு, ப்ளே ஏரியாவில் கொஞ்சம் விளையாட விட்டுத்தான் வீட்டுக்கு கிளம்புவாள் பூர்ணா.
“முதல்ல சாப்பிடு! அப்புறம் ப்ளே” எனச் சொல்லியபடியே வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த உணவை மகனுக்கு ஊட்டியபடி, தனது உணவையும் சாப்பிட்டாள் இவள்.
இன்பனின் பிடியில் இருக்க, எப்பொழுதும் போல ஆட்டம் காட்டாமல் சமத்தாய் சாப்பிட்டான் சர்வா.
இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அவர்களோடே அமர்ந்திருந்தான் இன்பன். அதன் பிறகே சின்னவனை பூர்ணாவிடம் கொடுத்தவன்,
“எனக்கு வேய்ட் பண்ணுவீங்களா அம்மாவும் மகனும், இல்ல இப்படியே தனியா உக்காந்து சாப்பிடட்டும்னு விட்டுட்டுப் போய்டுவீங்களா?” எனக் கேட்டான்.
அவன் குரலில் நக்கல் தொனி இருந்தாலும், கண்கள் இறைஞ்சுவது போல இருக்க, தலை தன்னாலேயே சரி இருக்கிறோம் என்பது போல ஆடியது இவளுக்கு.
“தேங்க்ஸ்” எனப் புன்னகையுடன் சொன்னவன், உணவு வாங்க சென்றான்.
அவனுக்கு உணவை வாங்கிக் கொண்டவன், அம்மாவுக்கும் மகனுக்கும் இனிப்பு வகைகள் வாங்கிக் கொண்டான்.
“நீயும் எடுத்துட்டு அவனுக்கும் குடு சம்பூ!” என்றவன், தனது உணவை மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தான்.
சின்னவனின் ஆர்ப்பாட்டமும், பூர்ணாவின் கெஞ்சலும் கொஞ்சலும் கேட்கவே ரம்யமாக இருக்க, அவர்களுடனான நேரத்தை இன்னும் கொஞ்சம் நீட்டிக்க வேண்டி மிக மெதுவாகவே சாப்பிட்டான் இன்பன். எவ்வளவு மெதுவாக சாப்பிட்டாலும் உணவு முடியத்தானே செய்யும்!
அதற்காகவே காத்திருந்தது போல, இவள் பாய் சொல்லிவிட்டு ப்ளே ஏரியாவுக்கு செல்ல, இன்பனும் கூடவே வந்தான்.
“என்ன?” எனப் பின்னால் வந்தவனை இவள் கேட்க,
“சாமான்லாம் வச்சிக்கிட்டு, எப்படி இவனுக்கு விளையாட்டுக் காட்டுவ? நானும் வரேன்” என்றான் இன்பன்.
“இத்தனை நாளா எப்படி வெளையாட்டு காட்டனனோ, அப்படியே காட்டிப்பேன்!” எனப் பட்டென சொன்னாள் பூர்ணா.
“அங்கிள்! கார்” என விளையாட்டுக் காரைக் காட்டினான் சர்வா.
எப்பொழுதும் அதில் மகனை அமர்த்தி, மியூசிக்கோடு அது அசைவதில் குதூகலிக்கும் மகனைப் பார்த்து மகிழ்வாள் இவள். அந்தக் காரைதான் காட்டினான் சின்னவன்.
“ஓ! போலாமே!” எனச் சொல்லி அதற்கான காய்ன்களைப் போய் வாங்கி வந்தான் இன்பன்.
“எதுக்கு இந்த வேலை பார்க்கறீங்க நீங்க?” எனச் சிடுசிடுத்தவளை ஆழ்ந்து நோக்கியவன்,
“நான் பேசனதுக்கு ஒரு மன்னிப்பு படலம்னு வச்சிக்கலாமா? சாரி சம்பூ! எதுவும் தெரியாம சட்டுன்னு வாய விட்டது என் தப்புதான். என்னை மன்னிச்சிடு! அதுக்குப் பிராயச்சித்தமா இந்த ப்ளே ஏரியாவுல ஆகற செலவுலாம் நானே பார்க்கறேன்” என மன்றாடலுடன் சொன்னான் இன்பன்.
என்னவோ அவ்வளவு பெரிய முரட்டு உருவம், கண்ணை சுருக்கி, லேசாய் குனிந்து, நயந்து பேசியது வேடிக்கையாகவும் அதே சமயம் மனதுக்கு இதமாகவும் இருந்தது பூர்ணாவுக்கு.
“இவ்ளோ ச்சீப்பான பிராயச்சித்தமா! அதெல்லாம் செல்லாது, செல்லாது!” என வம்பிழுத்தாள் அவனை.
“எனக்கு ஒரு தட்டு சாப்பாடு வாங்கிக் கொடுக்க கணக்குப் பார்க்கற உனக்குலாம் இதே போதும்!” எனச் சந்தடி சாக்கில் அவளை வாரி விட்டவன், புன்னகையுடன் சர்வாவைத் தூக்கிக் கொண்டு விளையாட்டுக் காட்டப் போனான்.
கார், பைக் என எல்லாவற்றையும் கைக் காட்டினான் சர்வா. கேட்ட எல்லாவற்றிலும் ஏற்றி காய்னைப் போட்டான் இன்பன். கார் ரைம் சத்தத்தோடு சுற்றும் போது கைத்தட்டி ஆர்ப்பரித்தான் குட்டி. வாயைத் திறக்கும் மீன் பொம்மைக்குள்ளே குட்டிப் பந்து போடும் விளையாட்டில், சின்னவனின் கைப் பிடித்து போட சொல்லிக் கொடுத்தான் இன்பன். எல்லா பந்தும் வெளியே போய் விழ, இவளுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.
இன்பனின் கையில் இருந்து காய்னை வாங்கி, ஹூக் போல இருக்கும் கம்பியை வைத்து பொம்மைப் பிடிக்கும் மிசினில் தனது கைவரிசையைக் காட்ட முயன்றாள் பூர்ணா. சின்னவனோடு வரும் பொழுது, கவனம் முழுக்க அவன் மேல் இருக்க, இதெல்லாம் இவள் முயன்றது இல்லை. பல காய்ன் போட்டும், ஒரு பொம்மையையும் பிடிக்க முடியவில்லை இவளால்.
காதருகே,
“இந்த குட்டி பொம்மைப் புடிக்க, என் சொத்தையே அழிச்சிடுவ போல! தள்ளு” என அவள் தோள் தொட்டு நகர்த்தியவன், சின்னவனை அவள் கையில் கொடுத்தான்.
அந்த மிசின் முன்னே, கைகள் இரண்டையும் பேண்ட்டில் துடைத்துக் கொண்டு, காய்னை உள்ளேப் போட்டு, அழகாய் நகர்த்தி, பொம்மையைத் தட்டித் தூக்கி இருந்தான் இன்பன்.
“வாவ்!” என இவள் சந்தோசக் கூச்சலிட, பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த மற்றவர்களும் கைத்தட்டினார்கள்.
அதில் பொம்மை ஜெய்ப்பது என்பது குதிரை கொம்பாயிற்றே. சிகப்பாய் இருந்த குட்டி பொம்மையை பூர்ணாவிடம் ஆட்டிக் காட்டியவன்,
“சாரி அக்செப்டெட் சொல்லு! பொம்மை தரேன்” எனப் பேரம் பேசினான்.
“தேவையில்லை”
“அப்போ போ! இந்தாடா குட்டி மனுஷா! நீ வச்சிக்கோ!” என சர்வாவிடம் நீட்டினான் அந்த பொம்மையை!
அதை வாங்கி திருப்பிப் திருப்பிப் பார்த்து விட்டு, அம்மாவிடமே நீட்டினான் சர்வா.
“நீ குடுக்கலனா என்ன? எனக்குன்னு உள்ளது என்னை வந்து சேர்ந்துடும்! பார்த்தியா?” என மிதப்பாக இன்பனிடம் கேட்டவள், அதை பையில் போட்டுக் கொண்டாள்.
“ரொம்பதான்!” என நொடித்துக் கொண்டான் இவன்.
மீண்டும் இன்னொரு ரவுண்ட் காரில் ஏற்றினார்கள் சர்வாவை.
அதன் பிறகு,
“வரியா, பாஸ்கேட்பால் வெளாடலாம்?” என பூர்ணாவை அழைத்தான் இன்பன்.
“நீ நெட்டைக் கொக்கு மாதிரி இருக்க! போடற பந்தெல்லாம் கூடைல விழும். நான் குட்டை வாத்து மாதிரி இருக்கேன்! எம்பி எம்பி போடறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்! வேணா போ”
“சும்மா வா! ஒலிம்பிக்லயா வெளையாட போறோம்! வா, வா!”
இடது பக்க இடுப்பில் சர்வாவை வைத்துக் கொண்டவன், வலது கையால் அசால்ட்டாய் பந்தைக் கூடைக்குள் போட, இவளோ இரண்டுக் கையாலும் தவ்வி தாவிப் போட்டுக் கூட வேலைக்காகவில்லை. இவள் தாவியதில் தோள் அவன் கையை இடிக்க,
“தள்ளிப் போய் விளையாடு சம்பூ! பேலன்ஸ் போகுதுல எனக்கு” என்றான்.
ஓரக்கண்ணால் அவனை முறைத்தவள், அதன் பிறகு வேண்டும் என்றே அவன் பந்தை போடும் போது, இடித்து வைத்து பந்தை தவற விட வைத்தாள். இரண்டு மூன்று முறை அப்படியே நடக்க, வேண்டும் என்றே செய்கிறாள் எனப் புரிந்துக் கொண்டவன்,
“சேட்டை! சேட்டை!” எனச் சொல்லி அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான்.
குழந்தையோடு குழந்தையாய் இந்த பெரிய குழந்தைகளும் விளையாடி அலுத்துப் போனார்கள். சின்னவன் தூக்கத்துக்குச் சொக்க,
“கெளம்பறேன் இன்பூ!” என்றாள் பெண்.
இன்பன் சார் போய் இன்பூ வந்ததில் இவனுக்குப் புன்னகை வந்தது.
“எப்படி வந்தீங்க?”
“ஆட்டோல!”
“இரு! நம்ம கடைல போய் சொல்லிட்டு வரேன்! நான் ட்ராப் பண்ணறேன் ரெண்டு பேரையும்”
“வேணா! நீ வேலைய பாரு! நாங்க ஆட்டோ எடுத்துப்போம்”
“இவ்ளோ பேக், தூக்கக் கலக்கத்துல பையன் வேற! எப்படி தனியா சமாளிப்ப! கொஞ்சம் இருன்னு சொல்றேன்ல” எனக் கோபமாய் சொன்னான் இன்பன்.
அந்த கோபத்தில் அக்கறையைக் கண்டவளுக்கு, அழுகை வரும் போல இருந்தது. இன்று ஒரு நாள் இந்த அக்கறை மழையில் நனைந்து விட்டால், மற்ற நாளிலும் அதை மனம் தேடுமல்லவா! எதையும் எதிர்ப்பார்க்கக் கூடாது, எதற்கும் ஏங்கக் கூடாது என்பது அவளின் தாரக மந்திரமாயிற்றே!
“வந்த எனக்குப் போகவும் தெரியும்!” எனப் பட்டெனச் சொன்னவள், விடுவிடுவென நடந்து விட்டாள்.
அவள் படக்கென திரும்புவதற்குள் கண்ணில் இருந்து வழிந்த நீர்த்துளியைக் கண்டு விட்டவனுக்கு, மேலும் அவளைத் தொடர்ந்து போய் சங்கடப் படுத்த மனம் வரவில்லை.
மீண்டும் ஒரு முறை, அவளது பிம்பம் பார்வை வட்டத்தை விட்டு மறையும் வரை பார்த்தப்படியே நின்றிருந்தான் இன்பன்.
