அத்தியாயம் 7
காதல் வைத்து காதல் வைத்துக் காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்!!!(பாடல் வரி)
மழை இரவு அது. சர்வா நைநை என அழுதபடியே இருக்க, ராஜம் அவனுக்கு வெற்றிலை சூடமெல்லாம் வைத்து சுற்றிப் போட்டிருந்தார். தாயைக் கட்டிக் கொண்டவன், அவளை எந்த வேலையுமே செய்ய விடவில்லை.
“என்னாச்சு என் சர்வாவுக்கு?”
“ஸ்லீப்மா” எனப் பூர்ணாவின் கையைப் பிடித்து இழுத்தான்.
இரண்டு வயதில் சிற்சில வார்த்தைகள் பேசப் பழகி இருந்தான் சர்வா. எதாவது வேண்டும் என்றால் அப்பொருளைக் கைக் காட்ட, இவள் அதன் பெயரைக் கற்றுக் கொடுத்த பின்பே கையில் கொடுப்பாள். தமிழும், ஆங்கிலமும் சேர்த்தே மகனுக்குப் புகட்டினாள் பூர்ணா.
“ம்மா! நான் இவன தூங்க வச்சிட்டு வரேன்! அப்புறமா பாத்திரம்லாம் நானே தேய்ச்சுப் போடறேன்! நீங்க மெனக்கெடாதீங்க” என ராஜத்திடம் சொன்னவள், வேலைகளை அப்படியே விட்டுவிட்டு, மகனுடன் படுக்கையறைக்கு நுழைந்தாள்.
படுத்த உடனே, நெருங்கி வந்து பால் அருந்த ஆரம்பித்த மகனை அணைத்துப் பிடித்து வாஞ்சையாய் தலை கோதினாள் சம்பூர்ணா.
“தாயன்புக்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயைப் போலே அது ஆகாது” என மெல்லியக் குரலில் தாலாட்டுப் பாடினாள் தன் மகனுக்கு.
அவன் அப்படியே தூங்கிப் போக, இவளுக்கு கண்களில் இருந்து அருவியாய் கொட்டியது கண்ணீர். காலனுக்கு மூத்த மகனைத் தூக்கிக் கொடுத்து இரண்டு நெடிய வருடங்கள் ஓடிப் போயிருந்தது. ஆனாலும் மனது இன்னும் ரணமாய்த்தான் கிடந்தது. சின்னவன் அந்த ரணத்துக்கு லேசாய் மருந்திட்டாலும், பெரியவனை இவளால் நொடி நேரம் கூட மறக்க முடிந்ததில்லை. சில சமயங்களில், சின்னவனிடம் பெரியவனின் சாயலையும், சேட்டையையும் காணும் போது, நெஞ்சு வெடிப்பது போல துக்கம் பொங்கி வரும்.
மகனை இன்னும் கொஞ்சம் கெட்டியாகக் கையைப் பிடித்து இருக்க வேண்டுமோ, அந்த நாள் கடைக்கே சென்றிருக்கக் கூடாதோ இப்படி இருந்திருக்கலாமோ, அப்படி இருந்திருக்கலாமோ என மனம் குத்திக் கிழிக்கும். தனது கவனமின்மையே குழந்தை மரணத்துக்குக் காரணம் எனத் தன்னை வருத்திக் கொள்ளாத நாளில்லை. இந்த இரு வருடங்களில் என்றைக்குமே நிம்மதியான தூக்கமுமில்லை.
பெரியவன் கண்ணன் இறந்த பின்பு, பல நாட்கள் பித்துப் பிடித்தது போலதான் இருந்தாள் சம்பூர்ணா. சரியாக உண்ணாமல், உறங்காமல், உடல் சுத்தம் பேணாமல் இறுகிப் போய் கிடந்தாள்.
“பெத்து வளத்து கட்டிக் குடுத்தது போதாதுன்னு, இப்படி வளந்தும் சேவகம் பண்ண வேண்டி கிடக்கு! எல்லாம் என் தலை எழுத்து” எனக் கத்தியபடியே, இவளை தரதரவென இழுத்துப் போய் தலைக்குத் தண்ணீரை ஊற்றுவார் அவள் தாய் வீரம்மா.
மருதுதான் பக்கத்திலேயே இருந்து, அவளுக்கு உண்ணக் கொடுப்பதில் இருந்து, உறங்கவும் வைப்பான். எதிலும் பிடிப்பில்லாமல் விட்டத்தை வெறித்தபடி இருந்தாள் பூர்ணா.
இந்த பெண் சிலைக்கும் ஒரு நாள் உணர்வு வந்தது.
“எத்தனை நாளைக்குத்தான் இப்படி நம்ம வீட்டுலயே உட்கார்ந்திருப்ப! எப்போ உன் புருஷன் வீட்டுக்குக் கிளம்பற நீ? அடிச்சுக்கிட்டாலும், புடிச்சுக்கிட்டாலும் விட்டுப் போற பந்தமா இது? தாலிய தூக்கி வீசிட்டா, எல்லாம் முடிஞ்சதா? ஆனாலும் உனக்கு இந்தளவுக்குத் திமிர் இருக்கக் கூடாதுடி! தாலிய அத்த அன்னைக்கு கன்னங் கன்னமா அறைஞ்சுத் தள்ளிருக்கனும். உன் தம்பி கட்டையைப் போட்டுட்டான். இனியும் எங்கள அண்டிக் கிடக்காம அங்க போய் வாழற வழிய பாரு” என ஆரம்பித்து வைத்தார் வீரம்மா.
தரையில் அமர்ந்திருந்தவள், மெல்ல நிமிர்ந்து தன் தாயைப் பார்த்தாள். எப்பொழுதும் போல மனது விட்டுப் போனது தாயின் ஓரவஞ்சனையில். இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்தார்கள் இவளும், இவளோடு சேர்ந்து இன்னொரு ஆண் குழந்தையும். இவள் சற்று திடகாத்திரமாய் இருக்க, நோஞ்சானாகப் பிறந்த இவள் இரட்டை வெளி வந்த சில மணி நேரங்களில் உயிரை விட்டிருந்தான். ஆண் பிள்ளை வேண்டுமென ஆசையாய் இருந்த இவள் தாய்க்கு மகன் இறந்து மகள் தங்கிப் போனது பெரும் துயரமாய் போனது. அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஜன்னியை இழுத்துக் கொண்டவர், செத்துப் பிழைத்து உடல் தேறினார். என்னவோ அதன் பிறகு மகளைக் கவனித்துக் கொண்டாலும், என்னவோ ஒரு வெறுப்பு நெஞ்சின் ஓரம்.
“எல்லா சத்தையும் ஓரியாட்டம் உறிஞ்சு தின்னுட்டு, கூட பொறந்தவனையே கொன்னுப்புட்டா!”
“இந்நேரம் இந்த வீட்டுல ஒரு ஆம்பளை பையன் ஓடி ஆடியிருக்க வேண்டியது! நீதான்டி கொன்னுட்ட!” என, மகள் எதாவது தப்பு செய்யும் போது திட்டித் தீர்த்து விடுவார்.
சில வருடங்கள் கழித்து மருது பிறந்தப் பிறகே மனது ஆறியது அவருக்கு. ஆனாலும் சமயம் வாய்க்கும் போது மகள் மனதை குத்திக் கிழிக்கத் தவறுவதில்லை இவர். பூர்ணாவின் அப்பாவோ, ஒரு தண்ணி வண்டி. வேலைக்குப் போவார், வருவார், எல்லாம் செய்வார். ஆனால் இரவானால் சரக்கடித்து விட்டுக் கவுந்து விடுவார். வீட்டைப் பற்றி அக்கறையில்லை அவருக்கு.
எப்பொழுதடா இந்த நரகமான தாய் விட்டை விட்டுப் போவோம் என இவள் எண்ணாத நாளில்லை. கொழுக் மொழுக்கென இருந்தாலும் நல்ல கலராய் அழகாய் இருப்பாள் சம்பூர்ணா. பதினெட்டு வயதிலேயே வரன் வர, வரதட்சணை வேறு அதிகம் கேட்காமல் போக, படிக்க ஆசைப்பட்டப் பெண்ணை மணவறையில் அமர்த்தி விட்டார்கள்.
இவளுக்குப் பார்த்த பையன், அழகிரி, பெயருக்கு ஏற்றது போல அழகாய் இருக்க, இவளுக்கும் பிடித்துப் போனது. தாய் வீட்டை விட்டுப் போனால் போதுமென நினைத்தவள், எண்ணெய் சட்டிக்குப் பயந்து எரியும் நெருப்பில் போய் வீழ்ந்தாள்.
கல்யாணம் என்பதே கலவிக்குத்தான் எனும் எண்ணம் கொண்டவனாய் கணவன் இருக்க, திண்டாடிப் போனாள் புதுப்பெண். அன்னையிடம் லேசுபாசாய் சொல்லிப் பார்க்க,
“மோகம் முப்பது நாளு! ஆசை அறுபது நாளு! எல்லாம் செரியா போகும்! ஒவ்வொருத்தி புருஷன் சுத்தி வரலயேன்னு கலங்கறா! உனக்கு சுத்தி வரவன கைல போட்டுக்கத் தெரியல” எனத் திட்டிவிட்டார்.
அவன் ஆடிய ஆட்டத்துக்கு, வயிற்றில் சீக்கிரமே பிள்ளை வந்துவிட சோர்ந்துப் போனாள் பெண். வாந்தி, மயக்கம் என நொந்திருந்தவளை, எப்பொழுதும் போல கூடல் வேண்டுமென இன்னும் நோகடித்தான் அழகிரி. தவித்துத்தான் போனாள் சம்பூர்ணா.
கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருப்பவன், எப்பொழுது செலவுக்கு இவள் பணம் கேட்டாலும் இல்லையெனதான் சொல்வான். அவனது தந்தை இவனுக்காக கட்டிக் கொடுத்திருந்த வீட்டில் இருவரும் இருக்க, வாடகை செலவு இருக்கவில்லை. அதைத் தவிர, சமையல் பொருட்களை அவர்கள் கடையில் இருந்து மாமனாரே மாதா மாதம் கொண்டு வந்துப் போட்டு விடுவார். ஆனாலும் பெண்களுக்கென செலவுகள் இல்லாமல் போய் விடுமா! கணவனைத் தவிர வேறு யாரிடம் கேட்பாள்! மருது அப்பொழுதுதான் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்க, அக்காவுக்காகத் தன்னால் முடிந்ததைக் கொடுப்பான்.
வயிற்றுப் பிள்ளைக்கு ஏழெட்டு மாதங்கள் ஆகி இருக்க, கணவன் கூப்பிடும் போது மறுக்க ஆரம்பித்தாள் இவள். மனைவியின் மறுப்பு அப்படி ஒரு கோபத்தைக் கொடுத்தது அழகிரிக்கு.
“உன் அழகுக்குத்தான்டி, என் அப்பன் உன்னைக் காட்டனதுமே சரின்னு சொல்லி கட்டிக்கிட்டேன்! அந்த அழகே இப்ப எனக்கு யூஸ் ஆகாதப்போ, என்ன எழவுக்கு என் வீட்டுல இருக்கனும் நீ!” எனக் கத்தியவன் இரவு நேரம் எனவும் பார்க்காமல் அவளை வெளியே தள்ளிக் கதவடைத்தான்.
பக்கத்து வீட்டுப் பெண், அதைப் பார்த்துவிட்டு இவள் மாமனாருக்கு அழைத்து விட, ஓடோடி வந்தார் அவர். மனைவியை இழந்தவர், மகன் மேல் வைத்திருந்த அதீத பாசமே அவனுக்கு கேடாகிப் போனது. வாசலில் நிறை மாத மருமகள் அழுதபடி அமர்ந்திருக்க, உள்ளம் நொந்துப் போனார் அவர்.
தகப்பன் வந்ததும் கதவைத் திறந்து விட்டான் அழகிரி.
“டேய் அழகு! என்னடா இதெல்லாம்! எதுக்கு மருமகள வெரட்டி விட்ட? புள்ளத்தாச்சிப் பாவம் சும்மா விடாதுடா! கண்ட பொண்ணுங்க கூட கெட்டழிஞ்சுப் போறியே, சீக்கு வந்துடக் கூடாதுன்னுதானே மகாலெட்சுமி போல உனக்கு ஒரு பொண்ணப் பார்த்துக் கட்டி வச்சேன்! அவள ஒழுங்க வச்சி வாழத் துப்பில்லையாடா உனக்கு! குழந்தைக் குட்டின்னு ஆகப் போகுது! இன்னும் திருந்தாம சுத்திட்டு இருக்கியேடா! கிளி போல பொண்டாட்டி வந்தா அடங்கிடுவன்னு நெனைச்சது எவ்ளோ தப்பாப் போச்சு! அந்தப் புள்ள கலங்கி நிக்கறப்போ, பெரிய பாவத்தப் பண்ணிப்புட்ட மாதிரி மனசெல்லாம் கலங்குதுடா பாவி! இது சரிப்பட்டு வராது! இனி அவ கூட ஒழுங்கா குடும்பம் நடத்தற! இல்லைனா என் சொத்துல சல்லிக் காசு உனக்கு எழுதி வைக்க மாட்டேன்” என மிரட்டினார்.
