அத்தியாயம் 8
காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
சின்னத் தகரம் கூட தங்கம்தானே!!(பாடல் வரி)
என்னவோ தூக்கமே வரவில்லை இன்பனுக்கு. காலை மணி ஒன்றாகியும் இமைகள் ஒட்டுவேனா என அடம் பிடித்தன. புரண்டுப் புரண்டுப் பார்த்தவன், சலிப்புடன் எழுந்துக் கொண்டான். படுத்தவுடன் தூங்கி விடுவது வரமல்லவா! ஏனோ பல வருடங்களாய் அந்த வரம் இவனுக்குக் கிட்டாமலே போயிருந்தது.
வீட்டிலேயே அவன் வைத்திருக்கும் ஜிம்முக்கு நுழைந்தவன், டிஷெர்ட்டைக் கழட்டி விட்டு, ட்ரெட்மில்லில் ஏறி நின்றான். பக்கத்தில் வைத்திருக்கும் மீயூசிக் சிஸ்டத்தின் ரிமேட்டை எடுத்து ஆன் செய்தவன், பாடல்கள் ஒலிக்க, அதனுடன் சேர்ந்து ஓட ஆரம்பித்தான்.
“நான் ஆளான தாமரை” என ஆரம்பித்து, “மஸ்காரா போட்டு மயக்கறியே” என எல்லாம் குத்துப் பாடல்களாக ஓட, பாடிக் கொண்டே ஓடினான் இவன். சுமார் நாற்பது நிமிடங்கள் இடை விடாது ஓடியவன், ஹார்ட் பீட் அதிகரிப்பதாக ட்ரெட்மில் சிஸ்டம் காட்ட, மெல்ல ஓட்டத்தைக் குறைத்து மெது நடையாக்கினான். ஐந்து நிமிடங்கள் அது போல நடந்தவன், நடையையும் மெல்ல நிறுத்திக் கொண்டான். மூச்சு வாங்க, உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. துண்டினால் உடம்பையும், முகத்தையும் துடைத்துக் கொண்டவனின் பார்வை அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தில் நிலைத்தது.
ஆஜானுபாகுவான உடல், கருந்த நிறம், அழுத்தமான உதடு, பெரிய கண்கள், சதுர வடிவான முகம் என ஒவ்வொன்றையும் ஆராய்ச்சியாய் பார்த்தான்.
“நல்லதானடா இருக்க!! அப்புறம் ஏன்டா இன்னும் சிங்கிளாவே சுத்திட்டு இருக்க?” எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.
அவனது முரட்டு உருவம் ஒரு வகை த்ரீல் கொடுக்க, அவர்களாகவே வந்து இவனிடம் லவ் சொன்ன பெண்களும் இருக்கிறார்கள். இவனுக்குதான் யாரையும் பிடிக்கவில்லை.
வேலை விஷயமாக வெளியே போயிருந்த வேளையில் ஒரு மதக் கலவரத்தில் சிக்கி இவன் தந்தை உயிரை விட்டப் போது இவனுக்கு வயது எட்டு. குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் இவனது அம்மாவின் தோள்களில். பல போட்டிகள் நிறைந்த தொழில் ஒரு புறம், தந்தையின் அரவணைப்பைத் தேடும் மகன் ஒரு புறம், கணவர் வாங்கி இருந்த கடன் ஒரு புறம் என விழிப் பிதுங்கிப் போனது இன்பனின் அம்மாவுக்கு. மகன் பக்கம் கொஞ்சம் கவனம் குறைய, பள்ளியில் அடிதடி, பாடம் படிப்பதில்லை, குட்டி ரௌடியாய் இருக்கிறான் எனப் பல புகார்கள்.
இன்பனைக் கண்டித்தார் அவர். இவனோ அன்பை அள்ளித் தந்த தந்தை இறந்துப் போயிருக்க, அரவணைப்பைத் தந்த அன்னையும் தள்ளிப் போய் விட்டக் கோபத்தை எல்லோரிடமும் காட்டினான். அவருக்கிருந்த பிரச்சனைகளில், மகனை கொண்டுப் போய் ஊட்டியில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டு விட்டார் அவன் தாய். அழுது ஆர்ப்பாட்டம் செய்த குட்டி இன்பன், நாளாக ஆக அங்கே வாழப் பழகிக் கொண்டான். விடுமுறைக்கு வீட்டுக்குப் போனால், முகம் கொடுத்துப் பேச மாட்டான் அவன் அம்மாவிடம். அவர் மகனிடம் நெருங்க எவ்வளவோ முயன்றும் எதுவும் வேலைக்காகவில்லை.
அவரும் ஓரளவு பொருளாதாரத்தில் தேறி வந்திருக்க, மீதமிருந்த பள்ளிப் படிப்பை சென்னையிலேயே படிக்கலாம் என இன்பனை அழைக்க முழு மூச்சாய் மறுத்து விட்டான். கெஞ்சல், கொஞ்சல் எதுவும் வேலைக்காகவில்லை. ஏமாற்றத்துடன் சென்னைத் திரும்பினார் அவன் அம்மா. காலேஜ் படிக்கச் சென்னைக்கு வந்தவன், ஹாஸ்டலிலேயே தங்கிக் கொண்டான். ‘என்னால் ஒன்றும் செய்ய முடியாத வயதில், அன்பைக் காட்டாமல் தள்ளி வைத்தீர்கள். இப்பொழுது என்னால் என்னைப் பார்த்துக் கொள்ள முடியும். இனி நான் உங்களைத் தள்ளி வைக்கிறேன்’ என்பது போல படித்து முடித்து, டாட்டூ பார்லர் ஆரம்பித்து, வீடு வாங்கித் தனியாகவே இருந்துக் கொண்டான் இன்பன்.
தனக்காகத்தான் தன் தாய் போராடி குடும்பத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார் என இன்றைய முப்பது வயது இன்பனுக்குப் புரிந்தது. ஆனாலும் மனம் இன்னும் எட்டு வயது இன்பனாய் நின்று அன்னையை நெருங்காமல் தூரத் தள்ளி வைத்தது. அவன் டாட்டூ பார்லர் ஆரம்பிக்கப் போகிறேன் எனச் சொன்னதும் எந்த தடையும் சொல்லாமல் பணத்தை எடுத்து நீட்டினார். ஆனால் அதை வாங்காமல், அம்மாவின் செல்வாக்கினால் பேங்க் லோன் வாங்கி ஆரம்பித்தான் தனது டாட்டூ பார்லரை.
பெருமூச்சுடன் தனது அறைக்கு வந்தவன், சற்று நேரம் வியர்வை அடங்க காற்றாடி பக்கம் நின்றான். பின்பு போய் குளித்து விட்டு வந்தவன், பாக்ஸர் மட்டும் அணிந்து கட்டிலில் அமர்ந்தான். பக்கத்து டேபிளில் வைத்திருந்த ‘தே வோர்ல்ட் அட்லஸ் ஆஃப் டாட்டூ’ புத்தகத்தைக் கையில் எடுத்தவன், அதனுள்ளே மூழ்கிப் போனான். படிக்க ஆரம்பித்து அரை மணி நேரமாகியிருக்க கண்கள் மெல்லச் சொருக ஆரம்பித்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டுப் படுக்கையில் சரிந்த இன்பன் அப்படியே தூங்கிப் போனான்.
விடிகாலையில் அலாரத்துக்கு முன்னே அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தவனுக்கு படபடவென இதயம் அடித்துக் கொண்டது.
“என்ன கனவுடா இது! கடவுளே!!!!” என வாய் விட்டுக் கூறியவன், தலையை உலுக்கியபடி குளிக்கப் போனான்.
அலுவலகத்தில்,
“இன்பூ!!” எனும் பொறுமையிழந்த குரலில்,
“ஹ்ம்ம்! என்ன?” எனக் கேட்டான் இவன்.
“பகல் கனவு காணறியா நீ? எவ்ளோ நேரமா கூப்புட்டு இருக்கேன்!”
பூர்ணாவின் முகத்தையே ஊன்றிப் பார்த்தவன்,
“என்ன வேணும்?” எனக் கேட்டான்.
“பசிக்குது”
பட்டென எழுந்துக் கொண்டான் இன்பன்.
“காலையில சாப்பிடலியா நீ? போய் வாங்கிட்டு வரேன்! என்ன வேணும்னு சொல்லு” எனக் கேட்டான்.
“நைட்டுத் தூக்கம் இல்ல இன்பூ! லேட்டாதான் எழுந்தேன்”
‘எனக்கும்தான்! உன்னால தூக்கம் போச்சு’ என மனதில் நினைத்தவனுக்கு அன்று அதிகாலை கண்ட கனவு ஞாபகம் வந்து தொலைத்தது.
எங்கோ ஒரு குளிர் பிரதேசத்தில் இருக்கிறான் இவன். செடி கொடி என அவ்விடமே ரம்மியமாக தோற்றமளிக்கிறது. அவனுக்குப் பத்தடி தூரத்தில் ஒரு பெண் ஸ்வெட்டர் அணிந்து அவனுக்கு முதுகு காட்டி நிற்கிறாள். வேக வேகமாக அவளை நோக்கி எட்டு வைத்துப் போன இவன், பின்னால் இருந்து அப்பெண்ணைக் கட்டிக் கொள்கிறான். அக்குட்டி உருவம் வாகாய் இவனுள்ளே புதைந்துப் போகிறது.
“ஹாய்டி பொண்டாட்டி” எனச் சிரிப்புடன் சொன்னவன், முன்னால் குனிந்து அவள் கையில் தூக்கி வைத்திருந்த மகனுக்கு அழுத்தமாய் கன்னத்தில் ஒரு முத்தமிடுகிறான். பின் குட்டியின் கண்ணை லேசாய் பொத்தியவன், அவன் அம்மாவுக்கு ஆழமாய் ஓர் இதழ் முத்தம் கொடுக்கிறான்.
புன்னகையுடன் அவள் ‘இன்பூ’ என அழைக்க, ‘மை சம்பூ’ என இவன் சிரிக்கிறான். இவர்களுடன் சேர்ந்து சர்வாவும் சிரிக்கிறான். அந்த கனவுக்குத்தான் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான் இன்பவாணன்.
‘என்ன ஒரு கேவலமானப் பிறவிடா நீ! கனவா இருந்தாலும் கூட அவளை எப்படி நீ கிஸ் பண்ணலாம்! எவ்ளோ மரியாதையா உன்னை நம்பிப் பழகறா அவ! புருஷன் செத்துட்டது போலத்தான்னு சொன்னாளே தவிர, நெஜமா செத்துட்டான்னு சொல்லலியே! அதோட டைவர்ஸ் வாங்கிட்டாளா, இல்ல பிரிஞ்சு மட்டும் இருக்காளான்னு ஒரு மண்ணும் தெரியாத நெலைல எப்படிடா இந்த மாதிரி கீழ்த்தரமான கனவையெல்லாம் காணாலாம் நீ!’ என இவனின் மனசாட்சி இப்பொழுது வரை துப்பிக் கொண்டேதான் இருக்கிறது.
கனவையெல்லாம் கட்டுப்படுத்த சாமியால் கூட முடியுமோ என்னவோ! பாவம், ஆசாமி இவன் என்ன செய்வான்.
“இன்பூ!” என இவள் குரலை உயர்த்த, அவள் முகத்தை வெறித்திருந்தவன் சட்டெனத் தன்னிலை அடைந்தான்.
‘வெடலைப் பையன் மாதிரி என்னடா இதெல்லாம்! எருமைகடா வயசாச்சு! அடங்குடா சனியனே’ எனத் தன்னைத் தானே திட்டிக் கொண்டவன்,
“சொல்லு” எனக் குரல் கொடுத்தான்.
“டப்பால உப்புமா போட்டு எடுத்துட்டு வந்துருக்கேன். நான் போய் உள்ள சாப்பிட்டுட்டு வரேன்! ஃபோலோ ஆப் கால் ஒன்னு இருக்கு! ப்ளிஸ் நீ பண்ணிடு அத” எனச் சொன்னவள் தனது கைத்தொலைபேசியை எடுத்துக் கொண்டு சாப்பிடப் போனாள்.
அவள் போன ஐந்து நிமிடங்களில் அழைப்பு வந்தது. இவன் எடுத்து காதில் வைத்து ஹலோ சொல்வதற்குள் ஓர் ஆண் குரல் படபடத்தது.
“என்னடி திமிர் காட்டறியா? கட்டனப் புருஷன் வீட்டுக்கு வர முடியாதபடி அந்தக் கிழவிய உனக்குக் காவலா வச்சிருக்கியே, வெக்கமா இல்ல! அதோட உன் வீட்டு செக்கியூரிட்டியும் என் மூஞ்சப் பார்த்தாலே, சார் போய்டுங்க இல்லைனா போலிசுக்குப் போன் அடிப்பேன்னு மெரட்டரான். நல்லா சேர்த்துருக்கடி சப்போர்ட்டுக்கு ஆளுங்கள! போன்ல என்னைப் ப்ளோக் போட்டா, உன் ஆபிஸ் நம்பர் கண்டுப் புடிக்க முடியாதா எனக்கு? கண்டுப்புடிச்சேன் பார்த்தல்ல”
புருஷன் எனும் பதத்தில் இன்பன் அமைதியாகிப் போனான்.
“ஒழுங்கா நான் சொல்றதுக்கெல்லாம் ஒத்துக்கற வழிய பாரு! இல்லைனா ஆபிஸ் பக்கம் வந்து உன் மானத்த சந்தி சிரிக்க வச்சிடுவேன்! டைவர்ஸ் ஆகிட்டா நான் உன் புருஷன் இல்லைன்னு ஆய்டுமா? இல்லை நான் உன்னைத் தொட்டு ரெண்டுப் புள்ளைங்கள குடுக்கலன்னு ஆகிடுமா? நான் குடுத்தப் புள்ள வேணும்! ஆனா நான் வேணாமா? என்னடி நியாயம் உன் நியாயம்?”
டைவர்ஸ் எனும் வார்த்தையில் இன்பன் உழன்றுக் கொண்டு இருக்க, அங்கே பேசிக் கொண்டிருந்தவனின் குரல் குழைந்து ஒலித்தது.
“கல்யாணத்தப்ப விட இப்போ இன்னும் ஜம்முன்னு இருக்கடி! அடிக்கடி தூரத்துல இருந்து ரசிக்கறேன் உன்னை! டக்கர் ஃபிகராயிட்டடி! பார்த்துட்டு மட்டும் இருக்க முடியல! உன்னை ரொம்பத் தேடுதுடி! நீ குண்டா கிடந்தப்பவே உன்னை விட முடியல! இப்போ சத்தியமா தவிச்சுப் போறேன்டி! இனிமே எவ பின்னாடியும் போக மாட்டேன். சத்தியமா உன் ஒருத்தி கூட மட்டும் இருக்கேன்! முன்ன செஞ்சது போல பொய் சத்தியம் இல்லடி இது! எங்கப்பன் மேல சத்தியமா சொல்றேன்! என்னடி ஆம், ஹூம்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டற! சரி விடு! உனக்கும் வேணா எனக்கும் வேணா! கூடவே வாழப் புடிக்கலனா, வாரத்துல ரெண்டு மூனு தடவையாச்சும் வந்துட்டுப் போடி! சின்னவன வளக்க நாயாய் பேயா அலையறியே! என்னை சந்தோஷமா வச்சிக்கிட்டா, செலவுக்கு நான் குடுக்கறேன்டி பணம்”
கடைசி வார்த்தையைக் கேட்டதும், இன்பனுக்கு பட்டென பற்றிக் கொண்டது ஜ்வாலையாய் கோபம். ஆத்திரத்தில் உடல் விறைக்க,
“என் கண்ணுல மட்டும் பட்டுடாதடா _________! அப்படி பட்டுட்ட, தினவெடுத்து ஆட வைக்கற உன் _______க்கு அன்னைக்கே சங்கு ஊதிடுவேன்! எவ்ளோ திமிர் இருந்தா, கூட வாழ்ந்த பொண்டாட்டியையே கூத்தியா மாதிரி காசுக்குப் கூப்புடுவ! உன் ஸ்விட்ச கதற கதற அறுத்து கூவத்துலப் போட்டாக் கூட என் வெறி அடங்காதுடா! ஈனப்பயலே!” எனக் குரல் ஏற்றாமல் வார்த்தைகளைக் கொட்டினான் இன்பன்.
“டேய்! டேய் யாருடா நீ?”
“தெய்வம்! காவல் தெய்வம்! இனி பூர்ணாவுக்கோ சர்வாவுக்கோ உன்னால எதாச்சும் துன்பம் வந்துச்சு, உன்னைக் கிழிச்சுத் தோரணம் கட்டப் போற காவல் தெய்வம்! வைடா போனை” எனும் இன்பனது கோபக் குரலில் பட்டெனப் போனை வைத்திருந்தான் அழகிரி.
