அத்தியாயம் 9
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்!!!(பாடல் வரி)
அன்றைய தினம், மதியத்துக்கு மேலே எந்த அப்பாயின்ட்மேன்ட்களும் இல்லை. அலுலவகத்தில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் பூர்ணாவின் அருகில் இருப்பது அவஸ்தையாக இருக்க, மேகலைக்கு கிளம்புவதாக ஒரு மேசேஜ் போட்டுவிட்டு வெளியேற முயன்றான் இன்பன்.
“வ்வேர்?” எனப் பூர்ணா கேட்க,
“என்ன?” எனப் புரியாமல் நின்றான் இவன்.
“வெளியே போறப்போ எங்க போறன்னு கேக்கக் கூடாது! அதான் இங்கிலிஸ்ல கேட்டேன்!” எனச் சொல்லி புன்னகைத்தவளைப் பார்த்து, என்ன முயன்றும் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை இவனால்.
எப்படி இவள் புன்னகைக்கும் போது மட்டும் கண், மூக்கு, கன்னம் என எல்லாமே புன்னகைப்பது போல இருக்கிறது என எப்பொழுதும் போல ஆச்சரியப்பட்டுப் போனான் இன்பவாணன்.
“டாட்டூ பார்லர் போறேன் சம்பூ!”
“ஹ்ம்ம்!! குடுத்து வச்ச குப்பன்டா நீ! மேடம் சொந்தக்காரங்களா இருக்கவும், இஸ்டத்துக்கு எல்லாம் செய்யற! இதே நான் போய், அப்பாயிண்ட்மேன்ட் இல்ல, வீட்டுக்குப் போகவா மேடம்னு கேட்டேன்னு வை!!!!”
“என்னாகும்?”
“என்னாகுமா? ‘அது எப்படி அப்பாயிண்ட்மேன்ட் எதுவும் இல்லாம போகும்? ஒழுங்கா வேலையைப் பார்த்தா, மூச்சு விட முடியாத அளவுக்குள்ள ஸ்கேடியூல் நெறஞ்சிருக்கும்! சும்மா வந்து உக்காந்து, சம்பளம் வாங்கிட்டு, பெஞ்ச தேய்ச்சிட்டுப் போக வேண்டியது! உனக்குலாம் சம்பளம் கொட்டி அழறேன் பாரு, என்னை சொல்லனும்னு’ மேகலை, நானே வீட்டுக்குப் போகலைன்னு சொல்ற அளவுக்கு வச்சி செஞ்சிடுவாங்க” என மேகலை போலவே மாடுலேஷனில் பேசிக் காட்ட, இவனுக்கு பக்கென சிரிப்பு வந்தது.
“இப்போ நீ சொன்னத அப்படியே மேகலைட்ட போட்டுக் குடுக்கவா?”
“யப்பா சாமி! உனக்குப் புண்ணியமா போகும்! என் வீட்டு சோத்து சட்டியில மண்ணள்ளிப் போட்டுடாதே!” என முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொன்னாள் பூர்ணா.
“அப்போ எனக்கு என்ன தருவ?”
“இதுக்குத்தான் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கனும்னு சொல்றது! உன் கிட்ட போய் சிக்கிட்டேனே!” எனக் கடுப்பாகிப் போனாள் இவள்.
“பெருசா ஒன்னும் வேணா சம்பூ! பார்க்கவே உமட்டிட்டு வரப் போல, குட்டி டப்பால உப்புமா செஞ்சி எடுத்துட்டு வருவல்ல! அது எனக்கும் வேணும்! நாளைக்கு எடுத்துட்டு வா”
“உமட்டற போல இருக்கற என் உப்புமாவ அவ்ளோ கஸ்டப்பட்டுலாம் நீ சாப்பிட வேணா! உப்புமாக்கான பைசா தரேன்! ஹோட்டல்ல போய் சாப்டுக்கோ!”
அவளை முறைத்தபடி தனது போனை எடுத்தவன், கால் பட்டனை அழுத்தி விட்டு காதில் வைத்தான். பின்,
“ஹலோ மேகலை மேடம்” எனக் குரல் கொடுக்க, படக்கென எழுந்து நின்ற பூர்ணா,
“கொண்டு வரேன்! ப்ளிஸ்! ப்ளிஸ்! மாட்டி விட்றாதே!” என வாயசைத்து, அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.
அவள் முகம் கெஞ்சலுக்கு மாறி இருந்தது. இவன் புன்னகையுடன்,
“ஒன்னும் இல்ல! போய்ட்டு வரேன்னு சொல்லக் கூப்டேன்!” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
படக்கென அமர்ந்துக் கொண்டவள், யாரும் இவர்களைக் கவனிக்கிறார்களா எனச் சுற்றிப் பார்த்து விட்டு, நின்றுக் கொண்டிருந்தவனின் கையைக் கிள்ளினாள்.
“சேட்டைப் புடிச்சவனே! கிளம்பனியே, அப்படியே போ வேண்டித்தானே! ஏன்டா என் வவுத்தெரிச்சலக் கொட்டிக்கற!”
“நான் பாட்டுக்கு போய்கிட்டே இருந்திருப்பேன்! வேர்னு கேட்டு வேதாளத்த இழுத்து தோளுல போட்டுக்கிட்டது நீ!” என்றவனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
ஏற்கனவே கிளம்புவதாக மேசேஜ் போட்டவன், மறுபடி அழைத்து வேறு கிளம்புவதாக சொல்ல, முக மலர்ச்சியுடன் கேபினை விட்டு வெளியே வந்தார் மேகலை. பூர்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தவனின் சிரிப்பும், மலர்ந்த முகமும் கண்டவருக்கு மனது நிறைந்துப் போனது. அமைதியாக அப்படியே நின்று சற்று நேரம் இன்பனைப் பார்த்திருந்தவர், பின் தனது கேபினுக்குள் நுழைந்துக் கொண்டார்.
சிரித்த முகத்துடனே அலுவலகத்தில் இருந்து வந்து பைக்கைக் கிளப்பினான் இன்பன். சம்பூர்ணா பாதி நேரம் அவளது பிடிவாதத்தால் இவனைக் கோபப்படுத்தி எரிச்சல் மூட்டுவாள். மீதி நேரம் சிரிக்க வைத்து இன்பத்தைக் கூட்டுவாள். அவளை நினைத்தபடியே தனது டாட்டூ பார்லருக்கு வந்தவன், கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பித்தான். அதை முடித்ததும் ஸ்டோக் கம்மி ஆகிருக்கும் பொருட்களை ஆர்டர் போட்டான். இந்த வேலைகளுக்கு நடுவே இரண்டு கஸ்டமருக்கு டாட்டூவும் வரைந்து விட்டான்.
மாலை நேரமாகியிருக்க,
“கைய்ஸ்! நான் காபி ஷாப்க்கு போய்ட்டு வரேன்! உங்களுக்கு என்ன வேணும்?” எனக் கேட்டு அவர்களுக்கும் ஆர்டர் எடுத்துக் கொண்டுப் போனான்.
அந்த மாலில் இருந்த ஸ்டார்பக்சுக்குப் போனவன், அவனது டாட்டூ ஆர்டிஸ்ட் இருவரும் கேட்டதை ஆர்டர் செய்து விட்டு, தனக்கு கெரமல் லாட்டே ஒன்றை வாங்கிக் கொண்டு அமர்ந்தான். அவனுக்கு சற்றுத் தள்ளி தகப்பன், தாய், மகன் என ஒரு குடும்பம் அமர்ந்திருக்க, அவனது எண்ண ஓட்டங்கள் மீண்டும் பூர்ணாவை மையம் கொண்டது.
அவள் மாஜி கணவன் பேசிய பேச்சில் இருந்து பல விஷயங்களைக் கிரகித்திருந்தான் இன்பன். பூர்ணாவின் கணவன் பல பெண்கள் பின்னால் சுற்றிய ஸ்திரி லோலன், இரண்டு குழந்தைகள் பிறந்திருக்க தற்பொழுது சர்வா மட்டுமே இருக்கிறான், மனைவியின் உடல் மேல் மட்டும்தான் அவனுக்குக் காதல் இருந்தது, மற்றபடி உடலின் உள்ளே தங்கமென ஜொஜொலிக்கும் அவள் மனதை பற்றியக் கவலை அறவே அவனுக்கு இல்லை. விவாகரத்து ஆகியும் கூட அவனது படுக்கையை அலங்கரிக்க அவள் வேண்டுமென நாய் போல அலைகிறான்!
இதையெல்லாம் யோசித்துப் பார்த்த இன்பனுக்கு, பூர்ணா எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருப்பாள் எனப் புரிந்துக் கொள்ள முடிந்தது. யாரோ ஒரு பெண்ணுக்கு இப்படி எல்லாம் நடந்திருந்தால், பரிதாபப்பட்டுக் கடந்துப் போயிருப்பான் இவன். ஆனால் இவையெல்லாம் சம்பூர்ணாவின் வாழ்க்கையில் நிகழ்ந்திருந்தது, இவனுக்கு அதீத கோபத்தைக் கொடுத்தது. கடந்துப் போக முடியாமல் மனதை அறுத்தது. அவள் மேல் மட்டும் ஏனிந்த ஈடுபாடு? அவள் மேல் மட்டும் ஏனிந்த தனி அக்கறை என மனம் கேள்விக் கேட்டது இன்பனை. முத்தக் கனவு வந்ததில் இருந்துதான் தனக்கு அவள் மேல் ஈர்ப்பு வந்ததோ என மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டான் இவன்.
‘இல்லையே! அதுக்கு முன்ன இருந்தே சம்பூ மேல ஒரு அக்கறை இருந்ததே! முதல் முறை ஆபிஸ்க்கு வந்து கடுப்புல உட்கார்ந்திருந்தப்ப, படார்னு கதவ திறந்து, நனைஞ்சுப் போன கோழி குஞ்சு இறகு உலர்த்துவது போல சிலிர்த்துக்கிட்டவளப் பார்த்து சிரிப்பு வந்ததே! குளிர்ல உதடு டைப்படிக்க எங்க ஈரம் வழுக்கி விட்டுருமொன்னு, மெல்ல அடி எடுத்து நடந்து வந்தவள பார்க்க கியூட்டா தோணுச்சே! என்ன முயற்சி பண்ணியும் நடுக்கம் போகாம, சாமியாடிட்டு இருந்தவள பார்க்க பாவமா இருக்கவும்தானே காபி கொண்டு வந்து தந்தேன். அவ கிட்ட பேசும் போதே சர்வ சாதாரணமா ஒருமைல வந்ததே வார்த்தைகள். என் தோற்றத்தப் பார்த்து மூஞ்சு பேயடிச்சப் போல ஆனாலும், கெத்தா இருக்கற போல காட்டிக்க ட்ரை பண்ணவள பார்த்து அப்படி ஒரு சிரிப்பு வந்ததே! என் மேல இருந்த பயத்துல காலை இடிச்சுக்கவும் கட்டுக்கடங்காத கோபம் வந்ததே எனக்கு. என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரியா இருக்குன்னு நல்லா காய்ச்சி விட்டுட்டேனே! யாரையும் சட்டுன்னு மன்னிக்காத நான், அவ சாரின்னு சொன்னதும் சரின்னு விட்டுக் குடுத்தது எதனால? சந்திச்ச முதல் நாளுலயே, என்னை சிரிப்பு, கோபம், கடுப்பு, எரிச்சல், சந்தோஷம் என வித விதமா ரியாக்ட் பண்ண வச்சது சம்பூ மட்டும்தான்.’ என எண்ணியபடியே காபியை மிடறு விழுங்கினான் இன்பன்.
சம்பூர்ணா வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு, கஸ்டமரிடம் காட்டும் மரியாதைத்தன்மை, செலவு செய்வதில் அவள் காட்டும் சிக்கனம், இவன் உணவு வாங்கித் தருகிறேன் என்றாலும் வேண்டாமென மறுத்துத் தன் பங்கை எடுத்து வைப்பதில் இருக்கும் தன்மானம், சிரித்துப் பேசினாலும் அதில் இருக்கும் தள்ளி நில் எனும் எச்சரிக்கை, மகனிடம் அவள் காட்டும் பாச முகம், சொந்தக் காலில் நிற்க முயலும் தன்னம்பிக்கை என அவள் காட்டிய பல முகங்களும் இவனுக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் அவள் மேல் ஈர்ப்பு வந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது இவனுக்கு. அழகாய் இருந்தாள்தான். ஆனாலும் தினம் பல அழகிகளை டாட்டூ பார்லரில் பார்க்கிறானே! இப்படி மனம் அலைபாயவில்லையே!
