வீட்டிற்குப் போன போது அவள் திருமணம் ஆனவள் என அறிந்துக் கொண்டவனுக்கு, ஆத்திரம் ஏன் வந்தது? நல்ல வேளை நட்பாகத்தான் பார்த்தேன் இல்லையென்றால் என் கதி என்ன எனக் கேட்டவனுக்கு, மனதின் ஓரத்தில் அவள் மேல் கண்டிப்பாய் சலனம் இருந்திருக்கிறது என இப்பொழுது புரிந்தது.
அவளுக்கு விவாகரத்து ஆனது பற்றி தெரியாமல் இருந்த போது கூட, பூர்ணாவின் மேல் இருந்த அக்கறையை விட்டு விடவில்லையே இவன். வீடு பார்க்க வந்தவன் இளித்து வைத்த போது, நடுவில் புகுந்து காப்பாற்றி விட்டானே. அன்றைய தினம் முக்கியமான வேலை டாட்டூ பார்லரில் இருந்தும், அவள் நிம்மதியாக உறங்க அமைதியாக காவல் இருந்தானே!
மாலில் தாயையும் மகனையும் பார்த்தவன், இவன்தான் டாட்டூ போட வேண்டும் என அப்பாயிண்ட்மேண்ட் எடுத்திருந்தவர்களைக் கூட தாமதமாக வர சொல்லி மேசேஜ் போட்டு விட்டு இவர்களுடனே பொழுதைப் போக்கி இருந்தான். பூர்ணா மேல் ஈர்ப்பு என அறியும் முன்னரே, சர்வாவைப் பிடித்துப் போனதே! அவனுக்கு ட்ராகன் வரைந்து விட்டு, முத்தம் கூட கொடுத்திருந்தானே! இப்பொழுது சர்வாவைப் பற்றி நினைக்கும் போது, சிறு வயதில் தான் இருந்த இடத்தில் அவன் இருப்பதைப் போல தோன்றியது. தனக்காவது அப்பா என்பவர் இல்லாமல் போய்விட்டார். அவனுக்கு இருந்தும் இல்லாத நிலையல்லவா! மகனின் செலவுக்குப் பணம் கொடுப்பதற்கு அப்பன்காரன் வைத்த ப்ரோபோஷலை நினைத்தால் இப்பொழுது கூட கோபம் சுருசுருவென ஏறியது இவனுக்கு. சை! என்ன மனிதன் இவன் எனப் பற்றிக் கொண்டு வந்தது.
அன்றைய தினம் மாலில், எங்கே சாப்பிட்டு முடித்துத் தன்னை தனியாக விட்டுப் போய் விடுவார்களோ என மனம் கிடந்து அடித்துக் கொண்டது இவனுக்கு மட்டுமே தெரியும். அம்மாவும் மகனும் கண்ணை விட்டு மறைந்த நொடி பாரமாய் எதுவோ மனதைப் போட்டு அழுத்தியது. அவர்களோடு விளையாடிய பொழுதுகள் இனி தினமும் வேண்டுமென நெஞ்சம் ஆசைக் கொண்டு அவனைப் பாடாய்படுத்தியது.
பாசத்துக்கு ஏங்கித் தனியாய் வளர்ந்தவனுக்கு, தன்னைப் போல ஒருத்தியை இனங்கண்டுக் கொள்ள முடிந்தது. சில சமயங்களில் அந்த அழகிய கண்களில் தென்படும் வெறுமையை இவனால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. அதனால் கூட பூர்ணாவின் மேல் ஈர்ப்பு வந்திருக்கலாம் எனத் தோன்றியது இன்பனுக்கு.
“யெஸ்! ஐம் இன் லவ் வித் திஸ் மதர் அண்ட் சன் கம்போ! சம்பூ அண்ட் சர்வா! சம்பூர்வா!!!” என மெல்லியக் குரலில் சொல்லிக் கொண்டவனுக்குத் தன் தனிமைக்கு ஒரு இனிமை வந்து விட்டது போல அப்படி ஒரு புன்னகை.
வேகமாய் டாட்டூ பார்லருக்கு ஓடியவன், தனது மேசையில் அமர்ந்து மனதில் ஆர்ப்பரித்த டிசைன் ஒன்றை வரைய ஆரம்பித்தான். சம்பூர்வா என அழகாய் எழுதி அதை சுற்றி மயிலிறகை வரைந்து அலங்கரித்தவன், அதற்கான வர்ணங்களையும் கோர்த்தான்.
“யாரு இப்போ ஃப்ரீ? எனக்கு ஒரு டாட்டூ போட்டுக்கனும்” எனக் கேட்க, அவனது ஆர்டிஸ்ட் இருவருமே நான் நீ எனக் குதித்தனர்.
அவர்களுக்குள்ளே பேசி முடித்து, ஒருவன் வந்து நின்றான்.
“பாஸ், டிசைனக் காட்டுங்க!” என வாங்கிப் பார்த்தவன்,
“ஆவ்சம் பாஸ்! சம்பூர்வா!!! யாரு பாஸ் அது?” எனக் கேட்டான்.
“உங்க பாஸ்க்கு பாஸ்!” எனப் புன்னகையுடன் இவன் மொழிய, ஒரே ஆர்ப்பாட்டம்.
“கைய்ஸ்! ப்ளிஸ்! இது இப்போதைக்கு ஓன் சைட்தான்! சோ ஆர்ப்பாட்டம் வேணாமே” என அடக்கினான் அவர்களை.
“எங்க போடனும் பாஸ்?”
“லெப்ட் சைட் ச்செஸ்ட்ல! ஹார்ட் துடிக்கற இடத்துல!”
“கலக்கறீங்க பாஸ்!” எனக் கூறியவன், பொறுமையாய், அழகாய் அந்த டாட்டூவை இன்பனின் இதயத்தருகே போட்டு விட்டான்.
எப்பொழுதும் டாட்டூ போடும் போது வரும் வலி, ஸ்ட்ரெஸ் ரிலீவர் என்றால், இன்றைய வலியோ சுகமாய் தாலாட்டியது இன்பனை. ஆனந்தத்தில் கண்கள் கூட கலங்கிப் போனது. போட்டு முடித்ததும் கண்ணாடியில் அதன் பிம்பத்தைப் பார்த்தவனுக்கு அப்படி ஒரு பேருவுவகை!
“’சம்பூர்வா” என முணுமுணுத்துக் கொண்டான்.
இந்தக் காதல் வெற்றிப் பெறுவதற்கு வாய்ப்பு மிக மிக கம்மி என நன்றாகவே புரிந்தது இவனுக்கு. இன்னொரு ஆணை வாழ்க்கைத் துணையாக சம்பூ ஏற்றுக் கொள்வது கடினம் எனத் தெரிந்தது இவனுக்கு. சட்டென காதல் சொல்லி இப்பொழுது இருக்கும் சுமூகமான உறவைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை இன்பன். கொஞ்ச காலத்துக்கு புதிதாய் பூத்திருந்த காதலை தன் இதயத்துக்குள்ளேயே பூட்டி வைக்க முடிவெடுத்தான் இந்தக் காதலன்.
