அத்தியாயம் 7
எட்வர்டின் கோபத்தில் பயந்த சுப்பு, சட்டையை மேல் நோக்கித் தூக்கப் போனாள்.
“ஏ ப்ளேக்கி! நில்லு, நில்லு. ஏன் அப்படி தூக்கற?”
“நீங்கதான் சட்டையைத் தூக்க சொன்னீங்க!” என்றவளின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.
“கண்ணைத் துடை இப்போ!” என அதற்கும் சத்தம் போட்டான் எட்வர்ட்.
வேகமாகத் துடைத்துக் கொண்டவள், அவன் முகத்தை கேள்வியாக நோக்கினாள். ஒரு கை இன்னும் சட்டையைப் பாதி தூக்கியபடி இருந்தது. அவனே சுப்புவின் சட்டையைக் கீழிறக்கி விட்டான்.
“சோத்து பக்க இடுப்புகிட்ட லேசா தூக்கனா போதும்”
அவனாகவே சட்டையை லேசாக தூக்கி, பாவாடையைக் கொஞ்சமாக இறக்கினான்.
“துரை சட்டைய தூக்குன்னு சொல்லவும் நான் பயந்துட்டேன் தெரியுமா?” எனச் சலுகையாகக் கோபித்துக் கொண்டாள் சுப்பு.
“எனக்கு தெரிஞ்ச தமிழ் இவ்வளவுதான் ப்ளேக்கி. நீதான் புரிஞ்சிக்கனும். சட்டையை இப்படியே புடிச்சுகிட்டு கட்டில்ல உட்காரு”
மர அலமாரியைத் திறந்து அவனது மருந்து பெட்டியைத் தூக்கி வந்தான் எட்வர்ட். அதைத் திறந்து ஒரு குப்பியை வெளியே எடுத்தவன், ஊசியில் அந்த மருந்தை ஏற்றினான்.
“நாய் கடிக்கு உள்ள மருந்து என் கிட்ட இல்ல ப்ளேக்கி. இது இன்ஃபெக்சன் ஆகாம இருக்கறதுக்கு உள்ள ஊசி. நம்ம ஜோனிக்கு எந்த சீக்கும் இல்ல. இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்கு ஊசி போட்டுக்கலாம்”
ஊசியும் கையுமாக அவனைப் பார்த்ததும், சுப்புவின் கண்கள் பயத்தில் பெரிதாக விரிந்தன. தோளில் இருந்த அவன் கையைத் தட்டி விட்டவள் அவன் சுதாரிப்பதற்குள் பாய்ந்து ஓடி கட்டிலின் மறுபுறம் நின்றுக் கொண்டாள்.
“ஏ ப்ளேக்கி! இங்க வா”
“நான் வர மாட்டேன் துரை. பயமா இருக்கு. இவ்ளோ பெரிய ஊசியா? அதுவும் என் இடுப்புக் கீழ குத்தப் போறீங்களா? வேணா துரை. வலிக்கும்!” எனப் பாவமாக மன்றாடினாள்.
“ஒழுங்கா இங்க வந்து ஊசிய போட்டுட்டுப் போ”
“நான் மாட்டேன்”
“நான் புடிச்சுட்டு வந்தேன், ரெண்டு ஊசியா போடுவேன்”
“இல்ல, இல்ல, வேணா! ஊசி வேணா துரை”
“வான்னு சொல்றேன்ல”
தலையை இடம் வலமாக ஆட்டினாள் சுப்பு. ஊசியை கட்டிலிலே வைத்தவன், அவளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்தான். அவன் வருவதைப் பார்த்தவள், கட்டிலைச் சுற்றி ஓட ஆரம்பித்தாள். இவனும் துரத்த ஆரம்பித்தான். நான்கு சுற்று சுற்றி இருப்பார்கள் இருவரும். மூச்சு வாங்க சுப்பு சற்று நிதானிக்கும் வேளையில், கட்டிலின் மேல் ஏறி சடாரென இந்தப் பக்கம் வந்தவன், அவளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
“என் கிட்டயே ஓட்டம் காட்டறியா?”
கோழி அமுக்குவது போல அமுக்கியவன், கட்டிலில் அவளை அழுத்தி உட்கார வைத்தான்.
“ஐயோ விடுங்க, விடுங்க துரை!” என ஓலமிட்டாள் சுப்பு.
“சத்தம் போடாதே ப்ளேக்கி! காது வலிக்குது எனக்கு. பேசாம இருந்தா சீக்கிரம் போட்டுருவேன். ஆட்டுனா வேற எங்கயாச்சும் குத்தி ரத்தம் ரொம்ப வரும்”
கத்தல், கூச்சல் எதுவும் செல்லாது எனப் புரிந்து கொண்ட சுப்பு அழ ஆரம்பித்தாள். சிறிது நேரம் அவள் அழுவதையே பார்த்தவன், அவள் முகத்தை இடது புறம் திருப்பி அப்படியே நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
“ஊசி போடல! சரியா? இனிமே அழாம இருப்பியா?”
சரி எனத் தலையாட்டினாள் சுப்பு. அவள் முகத்தை இடப்புறம் திருப்பி நெஞ்சில் அணைத்தவாறு வைத்திருந்தவன், அவள் உணரும் முன் கொஞ்சமாக குனிந்து வலப்பக்க இடுப்பின் கீழ் உள்ள சதைப் பகுதியில் ஊசியை போட்டிருந்தான். சிறிது நேரம் என்ன நடந்தது எனப் புரியாமல் இருந்தவள், வலி எடுக்கவும்தான் அவன் ஊசி போட்டுவிட்டான் எனத் தெரிந்து கொண்டாள். சத்தம் போடாதே என அவன் சொல்லி இருந்ததால், உடல் மட்டும் குலுங்கக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது சுப்புவுக்கு.
நெஞ்சில் இருந்து அவளை நிமிர்த்தி நகர்த்தியவன், காரியத்தில் கண்ணாக, ஊசிப் போட்ட இடத்தைத் துடைத்து விட்டான். பெட்டியில் இருந்து ஒரு க்ரீமை எடுத்து மணிக்கட்டிலும் பூசிவிட்டான்.
“அவ்வளவுதான் முடிஞ்சது. போ!”
“வலிக்குது துரை!”
“வலிக்குதா? நல்லா வலிக்கட்டும்! இனிமே ஜோனி பக்கம் போவியா?”
இல்லை எனத் தலையாட்டினாள் இவள்.
“குட்! பர்சுவோட வைஃப்ஸ் ரெண்டு பேரும் சாப்பாடு வைக்கட்டும். நான் பர்சு கிட்ட சொல்லுறேன்”
“அவங்க சாப்பாடு மட்டும் வச்சா, தண்ணி யாரு வைப்பா துரை?”
“ஏன், நீ போய் வை! அடுத்த முறை சதைய கடிச்சு இழுக்கட்டும். கேட்கற கேள்விய பாரு, ஸ்டுப்பிட்!”
“நான் வெளிய போறேன்!” எனக் கோபித்துக் கொண்டாள் சுப்பு.
அவன் முகத்தைக் கூட நிமிர்ந்துப் பார்க்காமல் வெளியே வந்துவிட்டாள். சோகமாக அடுப்படிக்கு வந்தவள், அவளது உணவை சாப்பிட்டு விட்டு சீக்கிரமாகவே படுத்துவிட்டாள். அவ்வளவு நேரமும் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டுதான் இருந்தது. வலி கூட அடங்கியிருந்தது, ஆனாலும் ஊசியைப் பார்த்தப் பயம் இன்னும் போகவில்லை.
அறையில் இருந்து வெளியே வந்த எட்வர்ட், அவளைக் காணாது சமையல் அறைக்கு வந்தான். கண்களில் நீர் வழிய, கையை தலைக்கு முட்டுக் கொடுத்து வெறும் தரையில் படுத்திருந்தவளைப் பார்த்தவன் சத்தம் செய்யாமல் திரும்பி சென்று விட்டான்.
“ப்ளேக்கி!”
அவனின் அழைப்பில் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்து ஓடினாள் சுப்பு. ஒன்றும் பேசாமல் அவன் அருகில் போய் நின்றாள்.
“பேசமாட்டியா?”
மாட்டேன் என்பது போல தலையை இடம் வலமாக ஆட்டினாள். அவளின் சிறுபிள்ளைத்தனமானக் கோபத்தில் எட்வர்டுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டான்.
“அப்போ சரி, நானே சவுண்ட் வச்சிக்கிறேன்”
“இல்ல, இல்ல! நானே வைக்கிறேன் துரை”
கோபம் காணாமல் போயிருந்தது, முகத்தில் சந்தோஷம் மீண்டிருந்தது.
தொலைக்காட்சியின் ஒலியைக் கூட்டியவள், மீண்டும் உள்ளே செல்ல எத்தனித்தாள்.
“எங்க போற ப்ளேக்கி? இன்னிக்கு என் கூட உட்கார்ந்து நீயும் பாரு”
“நெஜமாவா துரை? நான் இந்தப் பொட்டியைப் பார்க்கலாமா?”
ஆமெனத் தலையாட்டியவன், அவளை அமர சொன்னான். படக்கென அவன் காலடியில் சம்மணம் இட்டு அமர்ந்துக் கொண்டாள் சுப்பு. ஏதோ ஆங்கிலப் படம். இவளுக்குப் புரியாவிட்டாலும், அவர்களின் நடை, உடை, பாவனைகளை வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.
காதை மட்டும் தொலைக்காட்சியில் வைத்திருந்த எட்வர்ட், கையிலிருந்த புத்தகத்தில் கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டிருந்தான். படம் ஒரு இருபது நிமிடம் ஓடியிருக்கும். விலுக்கென நிமிர்ந்தவன்,
“போதும் ப்ளேக்கி, போய் படு” என்றான் அவசரமாக.
“இருங்க துரை! அந்த அண்ணன், அக்காகிட்ட என்னமோ சொல்லுறாரு. இத மட்டும் பார்த்துட்டுப் போறேன்”
“இத மட்டும்தான் நீ பார்க்கக் கூடாது! சீக்கிரம் போ”
எழுந்து கொண்டவள், அவளது ராஜாங்கமான அடுப்படிக்கு நடையைக் கட்டினாள்.
‘அப்படி என்னதான் இருக்கு, நம்மள பார்க்க வேணாம்னு விரட்டறாரு துரை?’
