IMTP Epi 7(2)

ஆர்வம் மேலிட திரும்பிப் பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதானது. அதில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதட்டை ஒட்டி வைத்துக் கொண்டிருந்தனர்.

பாதி வழியில் அப்படியே நின்றவள்,

‘இந்த அண்ணன் ஏன் அக்கா உதட்டுக்கு ஒத்தடம் குடுத்துட்டு இருக்காரு?’ என ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

முக்கியமான அந்த ஆராய்ச்சிக்கு எந்தப் பதிலும் கிடைக்காததால் பார்வையைத் தொலைக்காட்சியில் இருந்து திருப்பியவள், அப்பொழுதுதான் தன்னைக் கோபத்துடன் முறைத்தவாறு அமர்ந்திருந்த எட்வர்டை கவனித்தாள்.

உடனே,

“போய்ட்டேன்” எனக் கத்தியபடியே ஓடி மறைந்தாள் சுப்பு.

“எத செய்ய வேணாம்னு சொல்றோமோ அததான் செய்வாங்க. டேம்ன் க்ரியோசிட்டி(damn curiosity)” என முனகியவன், தொலைக்காட்சியை அணைத்து விட்டுப் போய் படுத்தான்.

வேறு எந்த அசம்பாவிதமும் இல்லாமல், வேலைகளைக் கற்றுத் தேறிக் கொண்டிருந்தாள் சுப்பு. தனியாகவே காலை உணவை தயாரிக்கும் அளவு முன்னேறியிருந்தாள். மதிய உணவை இன்னும் பட்டு, அல்லது பவுனு வந்து சமைத்துக் கொடுப்பார்கள். ஏதோ ஒரு முறைதான் எட்வர்ட் வீட்டுக்கு வந்து மதிய உணவு உண்ணுவான். மற்ற நேரங்களில் பரசு வந்து வாங்கி செல்வான்.

“அடியே சுப்பு!”

சமைத்துக் கொண்டே, காய் நறுக்கிக் கொண்டிருக்கும் சுப்புவை அழைத்தாள் பட்டு.

“சொல்லுங்கக்கா”

“நாளைக்கு திடல்ல படம் போடுறாங்க புள்ள. எங்க கூட வரீயா?”

“ஐ!! படமா! வரேன்கா, வரேன். என்ன படம்கா? எம்ஜியாரு படமா?”

“இல்ல புள்ள. சிவாஜி படமாம். பராசக்தி”

“சாமி படமா?”

“அட யாருடி இவ ஒருத்தி! என்னைய கேட்டா எனக்கு என்ன தெரியும்? நானும் நாளைக்குத்தான் அந்தப் படத்தையே பார்க்கப் போறேன். படம் ஏழு மணிக்குப் போட்டுருவாங்க. நான் புள்ளைங்கள விட்டு திடல்ல பாய் போட்டு இடம் புடிக்க சொல்லுறேன். உங்க சின்னக்கா கொண்டக்கடலை அவிச்சு எடுத்துட்டு வருவா. நீ தண்ணி மட்டும் எடுத்துட்டு வா போதும்”

“அக்கா, எனக்கு பரபரன்னு இருக்கு. எப்பக்கா விடியும்? நான் வேணும்னா இப்ப போய் தூங்கிறவா? சீக்கிரம் விடிஞ்சிரும்!”

நங்கென ஒரு கொட்டு வைத்தப் பட்டு,

“உனக்கு மூளைக்கு பதிலா, களிமண்ண போட்டு அனுப்பிருக்காருடி கடவுள். நீலாம் எப்படி கல்யாணம் காட்சி பண்ணி, புள்ள குட்டிய பெத்து வளக்கப் போறியோ போ” எனத் திட்டித் தீர்த்தாள்.

தலையைத் தேய்த்துக் கொண்டவள்,

“ஏன்கா, நீ, சின்னக்கா, சித்தப்பூ, துரை எல்லாரும் என்னைய திட்டிட்டே இருக்கீங்களே, நான் எதுக்கும் லாயக்கு இல்லையா?” எனக் குரல் கம்ம, கண்கள் கலங்கக் கேட்டாள் சுப்பு.

செய்யும் வேலையை விட்டுவிட்டு அவளை அணைத்துக் கொண்டாள் பட்டு.

“என் வீட்டுப் புள்ளைங்கள திட்டற மாதிரி திட்டிப்புட்டேன். இதுக்கு கண்ண கசக்குவியா நீ? மண்டு, மண்டு! உன்னை மாதிரி வெள்ள மனசு யாருக்குப் புள்ள இருக்கு! சொக்கத் தங்கம்டி நீ!” எனச் சொல்லி சுப்புவின் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தாள் பட்டு.

“அட பாரேன்! படக்குன்னு நெட்டி முறியுது. நான் சொன்னது அம்புட்டும் நெஜம்டி”

வாடி இருந்த முகம், பளிச்சென மலர்ந்தது சுப்புவுக்கு.

ஞாயிற்றுக் கிழமை வேக வேகமாக வேலைகளை முடித்த சுப்பு, தலையைச் சிக்கெடுத்துச் சீவி அழகாக பின்னி அவளிடம் இருந்த சிகப்பு வர்ண ரிப்பனை இரண்டு ஜடைகளுக்கும் கட்டிக் கொண்டாள். கொட்டாங்குச்சியில் அவள் ஆத்தா செய்து தந்திருக்கும் கருப்பு பொட்டை நெற்றிக்கு இட்டுக் கொண்டாள். கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டவள், எட்வர்டின் முன் வந்து நின்றாள்.

“துரை”

சம்பளக் கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

“நல்லா இருக்கேனா?”

பளிச்செனத் தன் முன் நின்றிருந்தவளை ஆழ்ந்து நோக்கியவன்,

“நல்லாதான் இருக்க! எங்க கிளம்பிட்ட ப்ளேக்கி?” எனக் கேட்டான்.

“உங்களுக்குத் தெரியாதா? இன்னிக்கு படம் போடுறாங்க. நான் அக்கா கூட போறேன்”

“என் கிட்ட சொல்லிட்டுப் போறியா? இல்ல போகட்டுமான்னு சம்மதம் கேக்கறியா?”

இது என்ன கேள்வி என்பது போல முழித்தாள் சுப்பு.

“நீ என் வீட்டுல இருக்க ப்ளேக்கி! உன்னோட பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு. இனிமே எப்ப இந்த வீட்ட விட்டு வெளிய காலடி வைக்கனும்னாலும் என் கிட்ட சம்மதம் கேட்கனும். புரியுதா?” என்றவனின் குரலில் கண்டிப்பு இருந்தது.

அந்தக் குரலில் மிரண்டவள், சரியென வேக வேகமாகத் தலை ஆட்டினாள். அவளது ரிப்பன் கட்டிய சடையும் சேர்ந்து ஆடியது. அதற்கு மேல் எட்வர்டுக்கு கோபத்தை இழுத்து வைக்க முடியவில்லை.

“சரி, போ!”

விட்டால் போதும் என ஓடி விட்டாள் சுப்பு.

பட்டு, பவுனு குடும்பத்துடன் ஒரு மணி நேரம் நடந்தே திடலுக்குப் போனாள் இவள். ஏற்கனவே அவர்களின் பிள்ளைகள் இடம் பிடித்து வைத்திருந்ததால், நேராக அங்கே சென்று அமர்ந்துக் கொண்டார்கள். எஸ்டேட்டே திரண்டு வந்திருந்தது. அங்கங்கே குடிமகன்களால் சண்டை சச்சரவு வேறு. பெரிய வெள்ளைத் திரை விரித்து அந்தக் காலத்து ப்ரொஜெக்டரால் படம் திரையிடப்பட்டது. ஆரம்பித்தவுடன், ஒரே கூச்சல், கும்மாளம்.

அங்கிருந்த பெரியவர் ஒருவர்,

“சத்தம் போடாம பாருங்கப்பா. ஒன்னும் விளங்கல” எனச் சத்தம் போடவும்தான் கூச்சல் அடங்கியது.

சுப்புவுக்கு அவ்வளவு பரவசம். இதுதான் அவள் பார்க்கும் சிவாஜியின் முதல் படமும் கூட. சொக்கிப் போய் அமர்ந்திருந்தாள். படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் மீண்டும் சலசலப்பு.

“டீ பவுனு! துரை வந்துருக்காரு புள்ள படம் பார்க்க. இதென்ன அதிசயமா இருக்குது!” என வியந்தாள் பட்டு.

அவர்கள் பேச்சில் சுப்புவும் திருப்பிப் பார்த்தாள். பரசு, எட்வர்டுக்கு நாற்காலியைப் போட்டு அமர வசதி செய்து கொடுப்பதுதான் கண்ணில் பட்டது. அதற்குள் ஓ ரசிக்கும் சீமானே எனப் பாடல் வரவும் அவள் கவனம் முழுவதும் திரையில் பதிந்தது. மெய் மறந்து வாய் பிளந்து ஆட்டத்தைக் கவனித்தாள் சுப்பு. நடிப்பவர்கள், சிரிக்கும் போது சிரித்து, அழும் போது அழுது அப்படியே படத்தோடு ஒன்றிப் போனாள் அவள். படம் முடிந்து கூட அதன் தாக்கம் அவளை விட்டுப் போகவில்லை.  

எல்லோரும் எழுந்து கிளம்ப ஆயத்தமானார்கள். அவர்கள் அருகே வந்த பரசு,

“ஏ புள்ள சுப்பு, நீ துரை கூட பங்களாவுக்குப் போயிரு. நாங்க இப்படியே கெளம்புறோம்” என அவளை அழைத்துச் சென்று ஜீப்பின் பின்புறம் அமர்த்தினான். அவள் அமர்ந்ததும் எட்வர்ட் ஜீப்பைக் கிளப்பினான்.

“யோ! ஏன்யா அந்தப் புள்ளய துரை கூட அனுப்பி வச்ச? கூப்டு வந்த நமக்கு கூப்டு போக தெரியாதா?” எனக் கடிந்து கொண்டாள் பட்டு.

“அதானே! நல்லா கேளு பட்டு” எனப் பின் பாட்டு பாடினாள் பவுனு.

என்னதான் சக்களத்திச் சண்டைப் போட்டுக் கொண்டாலும், பரசுவை தாளிக்கும் போது மட்டும் இருவரும் இணைந்துக் கொள்வார்கள்.

“அவரு வீட்டுக்குப் போய் படுக்கறது இல்லையா? இந்தப் புள்ள ஆடி அசைஞ்சி ஒரு மணி நேரம் கழிச்சி வர வரைக்கும் அவரு டீக்கு காத்துக் கிடப்பாரா? புரியாம பேசிக்கிட்டு”

“மாமோய்! அந்தப் புள்ளய தனியா அங்க விட்டு வைக்க பயமா இருக்குயா. பாக்கியம் வேற எப்ப வரும்னு தெரியல. நம்ம வீட்டுக்கு ராத்திரி கூப்டு போயிரலாம்னாலும் உன்னை நம்ப முடியல” என நொடித்துக் கொண்டாள் பட்டு.

“நல்லா சொல்லு, நல்லா சொல்லு! ரப்பர் மரத்துக்கு சேலைய சுத்துனா கூட மூனு மணி நேரம் விடாம பாக்கும் இந்த ஆளு” என்றபடி மோவாய்கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள் பவுனு.

“அட போங்கடி! உங்க உங்க ரெண்டு பேர வச்சிக்கிட்டே மாரடிக்க முடியல. இதுல இன்னொன்னு வேறயா! எதுக்குடி பட்டு பயம்? துரை நம்ம இனத்தல்லாம் பார்வையால கூட தீண்டமாட்டாரு. தேவை இல்லாம பயந்துக்கிட்டு. விரசா நடங்க. ஆமா, இன்னிக்கு யாரோட முறை?”

“நான்தான்” என்றாள் பவுனு.

“ஏ, என்னடி ஆட்டம் காட்டுறயா? நேத்து எனக்கு மேலுக்கு முடியலைன்னு நீ தானே புள்ள போன?” என எகிறினாள் பட்டு.

“உனக்கு மேலுக்கு முடியாம போயிட்டா அதுக்கு நான் என்ன செய்ய? அது உன் தலை எழுத்து! இன்னிக்கு என்னோட முறை, சொல்லிப்புட்டேன்”

குடுமிப்புடி சண்டையாவதற்குள் இருவர் தோளிலும் கைப்போட்டு சமாதானப்படுத்தி அணைத்தவாறு நடத்திச் சென்றான் பரசு.

வீட்டிற்குள் நுழைந்ததும் சுப்பு, நேராக அடுப்படிக்குச் சென்று டீ போட்டுக் கொண்டு வந்தாள். எட்வர்டுக்கு டீ ஊற்றிக் கொடுத்தவள், கனவில் இருப்பதைப் போலவே எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

“ப்ளேக்கீ!”

“ஹ்ம்ம்… என்ன துரை?”

“என்ன ஒரு மாதிரியா இருக்க?”

“இன்னிக்கு படம் பாத்தீங்கல்ல துரை, அதுல வந்துச்சே புது பெண்ணின் மனச தொட்டுப் பாட்டு, நல்ல இருந்துச்சுல்ல?”

அவனுக்குப் படமே புரியவில்லை இதில் பாட்டு எங்கே விளங்கி இருக்கப் போகிறது.

“எனக்குத் தெரியலையே ப்ளேக்கி. எல்லா பாட்டும் எனக்கு ஒன்னாதான் தெரிஞ்சது”

“போங்க துரை! அவ்ளோ நல்ல பாட்டு அது, இப்படி சொல்லறீங்க. அந்தப் பாட்டு எனக்கு அப்படியே மனப்பாடம் ஆயிருச்சு தெரியுமா!”

“ஆமாவா? சரி பாடு கேப்போம்”

“பாடிக்கிட்டே ஆடவா? படத்துல கதாநாயகி நின்னுக்கிட்டே ஆடனாங்க. நான் சுத்தி சுத்தி ஆடறேன் பார்க்கறீங்களா? எங்க சின்னாத்தா என்னை ஆடவே விட மாட்டாங்க. அதென்னா பொட்டக் கழுதைக்கு கும்மாளம்னு தொடையைப் புடிச்சு திருவிருவாங்க”

எப்பவோ கிள்ளியது இப்பொழுது வலிப்பது போல முகத்தைச் சுளித்தாள் சுப்பு.

அவள் முகபாவனையில் புன்னகை எட்டிப் பார்த்தது எட்வர்டுக்கு.

“சரி ஆடு ப்ளேக்கி, நான் கிள்ள மாட்டேன்”

சந்தோஷமாக எழுந்து நின்றவள், பாடிக் கொண்டே சுழன்று ஆட ஆரம்பித்தாள்.

“என்னை சுத்தி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே

இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்பு கயிறிடுவாய்
அறுக்க யாராலும் ஆகாதையா
அன்பு கயிறிடுவாய்
அறுக்க யாராலும் ஆகாதையா

புது பெண்ணின் மனசைத் தொட்டுப் போவரே
உங்க எ
ண்ணத்தைச் சொல்லி விட்டுப் போங்க
இள மனசை தூண்டி விட்டு போ
வரே
அந்த மர்மத்தைச் சொல்லிவிட்டு போங்க
மர்மத்தைச் சொல்லிவிட்டு போங்க”

ஆடிவிட்டு மூச்சு வாங்க அவன் அருகில் அமர்ந்தவள்,

“நல்லா ஆடுனனா துரை?” என ஆசையாகக் கேட்டாள்.

அவனிடமிருந்து பதிலே இல்லை.

“சொல்லுங்க துரை!”

கை நீட்டி அவள் கன்னத்தை வருடியவன்,

“ரொம்ப நல்லா ஆடுன ப்ளேக்கி. இனிமே எனக்கு மட்டும்தான் ஆடிக் காட்டனும். புரியுதா?” எனக் கேட்டவன் டீயைக் கூட குடிக்காமல் ரூமுக்குள் புகுந்து கொண்டான்.

(தூண்டுவான்!!!)

Scroll to Top