அத்தியாயம் 5
நிவேதா மதுரை சென்று இறங்கிய போது ரவீந்திரன் விமானத்தில் சென்னை சென்று விட்டார்.
ரவீந்திரன் தொழில் சம்பந்தமாகத் தான் சென்னை சென்றார். ஆனால் அவர் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு நிவேதாவுடன் சுற்றிய இளைஞன் பற்றிய தகவலை சேகரிக்க எண்ணினார். ஆனால் அந்த டிரைவர் ஊரில் இல்லாததால் வந்த வேலையை மட்டும் முடித்துக் கொண்டு ஊர் திரும்ப முடிவு செய்தார்.
ரவீந்திரன் மதுரை செல்ல விமானத்தை பிடிக்கக் கிளம்பினார். காரில் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டார். அவருக்கு உதவிய சென்னையை சேர்ந்த உதவியாளர் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். ரவீந்திரன் தன் வாட்சை திருப்பி மணி பார்த்தார்.
“டிரைவர்! நேரமாகுதே. ஃபிளைட்டை பிடிச்சிடலாமா? கரெக்ட் டைமுக்கு போயிடலாமா?” என்று ரவீந்திரன் சந்தேகமாக இழுக்க…
டிரைவரை முந்திக் கொண்டு அவரது உதவியாளர், “சார்! ஷார்ட் கட்டிலே போயிடலாம்.” என்று சொல்லி டிரைவரிடம் வழி சொல்ல ஆரம்பித்தார்.
பின் அவரே, “இந்த மெட்ரோ ரயிலுக்காக அங்கங்கே தோண்டிப் போட்டிருப்பதால் நிறைய ரோடு ஒன் வே ஆகிடுச்சு. போக்குவரத்தும் அடிக்கடி ஸ்தம்பித்து போகுது. ஆனால் சென்னை மாதிரி பெரிய சிட்டிக்கு மெட்ரோ ரயிலும் அவசியம் தேவை தான். அதனால கொஞ்ச நாளுக்கு இந்த அசௌகரியங்களை நாம பொறுத்து தான் போகணும்.” என்று சொன்னார்.
ரவீந்திரன் எந்த பதிலும் சொல்லவில்லை. முதலாளிகளுக்கு இது ஒரு வசதி. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலோ, கருத்தோ சொல்லத் தேவையில்லை.
“அடடா! இதை ஒன் வே ஆக்கிட்டாங்களா? நான் இந்த ரோடை நம்பித் தானே இந்த வழியா வரச் சொன்னேன். இப்போ சுத்திப் போனால் லேட் ஆகிடுமே. என்ன சார் செய்யலாம்?” என்று உதவியாளர் விழிக்க…
ரவீந்திரன் டிரைவரிடம், “உள்ளே விடுப்பா. மதிய நேரம் என்பதால் ரோடிலே ஆளே இல்லை. மெதுவா மட்டும் ஓட்டு. வருவதை பார்த்துக்கலாம்.” என்றார்.
டிரைவரும் அவரின் கூற்றின் படி அது ஒரு வழிச் சாலை என்று தெரிந்தும் அந்த சாலையில் திரும்பி மெதுவாக ஓட்டினான். அவர்கள் அந்த சாலையை கடக்கும் தருவாயில் எதிரே டி.வி.எஸ்- 50 ஐ ஓட்டி வந்த ஆள் நிலை தடுமாறி விழுந்தான்.
எதிரே வண்டி வரும் என்று எதிர்பார்க்காததால் அந்த ஆள் காரில் மோதிக் கீழே விழும் போது அவனருகில் வந்து கொண்டிருந்த ராஜீவின் மீது மோதி அவனையும் கீழே விழச் செய்தான்.
திருப்பம் என்பதால் வண்டியை மெதுவாக ஓட்டி வந்ததால் ராஜீவுக்கு லேசான சிராய்ப்போடு போனது.
கீழே விழுந்ததில் அந்த ஆளுக்குத் தான் அடிபட்டு ரத்தம் கசிந்தது. ராஜீவ் ஓட்டி வந்த வண்டியின் முன் பக்க கண்ணாடி நொறுங்கிச் சிதறியது. சாலையில் இருந்து எழுந்த ராஜீவ் வண்டியை தூக்கி நிறுத்தி ஸ்டாண்ட் போட்டான்.
முழங்கையை ஊதி விட்டுக் கொண்டே கார் டிரைவரை பார்த்து, “கீழே இறங்கி வா.” என்று கத்தினான்.
வண்டி மோதியதுமே டிரைவர் இறங்குவதற்கு தான் தயாரானான். தனது வண்டியின் சேதத்தை கணக்கிட வேண்டுமல்லவா?
“எதுக்குய்யா ராங் சைடிலே வண்டியை ஓட்டிட்டு வந்தே?அங்கே போர்டு மாட்டி இருக்கு தானே? உனக்கு டிராபிக் சிம்பள் தெரியாதா?” என்று கோபத்துடன் ராஜீவ் கத்தவும்,
“சார் தான் போகச் சொன்னார்.” என்று ரவீந்திரனை பார்த்து அந்த டிரைவர் கை காட்டினான்.
நிலைமையை சமாளிக்க காரில் இருந்து இறங்கிய ரவீந்திரன், “தெரியாமல் நடந்திடுச்சு. பெருசு பண்ணாமல் போங்க.” என்று ராஜீவை பார்த்துச் சொன்னவர், தன் உதவியாளரை பார்த்து அந்த அடிபட்ட ஆளை கவனிக்கும்படி கண் ஜாடை காட்டினார்.
“என்னது தெரியாமல் நடந்திடுச்சா? தெரிஞ்சு தானே சார் ராங் ரூட்டிலே வந்திருக்கீங்க. ஏதோ எங்க நல்ல நேரம். ஸ்லோவா வந்ததால் அடியோட போச்சு. இல்லைன்னா உயிரில்ல போயிருக்கும். அது எப்படி சார் தப்பையும் செஞ்சுட்டு உங்களால இவ்வளவு கூலா பேச முடியுது?” என்று எகத்தாளமாகக் கேட்க,
“அவசரமாப் போக வேண்டி இருந்துச்சு. அதான் வந்துட்டோம்.” என்று அப்பொழுதும் விறைப்புடனே ரவீந்திரன் சொல்ல,
“அவசரமாவா? யாருக்காச்சும் உடம்பு சரி இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே அவரது வண்டிக்குள் எட்டிப் பார்த்தவன், “அப்படி யாரும் இல்லையே? இல்லை ஒரு வேளை நீங்களே டாக்டரா? உயிரை காப்பாத்த அவசரமா போறீங்களா?” என்று கேட்கவும்,
“இப்ப உனக்கு என்ன வேணும்? உன் கண்ணாடி உடைஞ்சதுக்கு நஷ்ட ஈடா பணம் தரணுமா?” என்று ரவீந்திரன் தன் மரியாதை பன்மையை கைவிட்டு திமிராகக் கேட்டார்.
“பணமா? உங்க பணம் யாருக்கு சார் வேணும்? தப்பு செஞ்சுட்டு அதை ஒத்துக்காமல் தெனாவட்டா பேசவா செய்யுறீங்க?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கே டிராபிக் போலீஸ் ஒருவர் வந்தார்.
ராஜீவ் அவரிடம், “சார்! இவர் மேல கேஸ் எழுதி ஃபைன் போடுங்க சார். ராங் ரூட்டிலே வந்து ரெண்டு பேருக்கு அடிபட வச்சிருக்கார்.” என்றான்.
ரவீந்திரனின் உதவியாளர் அந்தக் காவலாளியிடம் சென்று அவரது காதில், “சார்! அவர் பேர் ரவீந்திரன். மதுரையிலே பெரிய பணக்காரர். அடிபட்ட ஆளை சரி கட்டி பணம் குடுத்து அனுப்பிட்டோம். இந்த தம்பி மட்டும் தான் தகராறு பண்ணுது. கொஞ்சம் பேசி அனுப்பி விடுங்க. சாருக்கு ஃபிளைட்டுக்கு நேரமாச்சு.” என்றார்.
அந்தக் கான்ஸ்டபிள் ரவீந்திரனை பார்த்து ஒரு சலாம் போட்டுவிட்டு ராஜீவ் அருகே வந்து, “அவர் தான் பணம் குடுத்து செட்டில் பண்ணுறேன்னு சொல்லுறார் தானே சார். அடி ஒண்ணும் பெருசாப் படலையே.” என்றதும்,
“சார்! உங்களுக்கு சம்பளம் தருவது கவர்மென்ட்டா? இல்லை இவரா? வாங்குற சம்பளத்துக்கு வேலை பாருங்க சார். நானும் கவர்மென்ட் செர்வென்ட் தான் சார். பொறுப்புள்ள இந்தியக் குடிமகனா ரூல்ஸை மதிங்கன்னு சொல்லுறேன். அது தப்பா?” என்று அவன் மேலும் வாதாடியதில், அந்தக் கான்ஸ்டபிள் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் திணறினார்.
கடைசியில் ரவீந்திரன் இறங்கி வந்து ஃபைனை கட்டிவிட்டு ராஜீவை முறைத்துக் கொண்டே வண்டியில் ஏறினார்.
‘உன்னை வச்சுக்கிறேன்டா!’ என்று சொல்லாமல் சொல்லியது அவர் பார்வை.
அவர் விமான நிலையம் அடையத் தாமதம் ஆனதால் அவரால் அவர் முன்பதிவு செய்திருந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் போனது. அந்தக் கடுப்பும் சேர்ந்து ராஜீவ் மேல் திரும்பியது.
மதுரை விமான நிலையம் வந்திறங்கி அவர் வீட்டை அடைந்ததும் நிவேதா அவரை எதிர்கொண்டு வரவேற்றாள்.
அவர் மீது சாய்ந்து கொண்டு, “மிஸ் யூ சோ மச் டாட். உங்களை பார்த்து நாலு நாளாச்சு தெரியுமா?” என்று செல்லம் கொஞ்சினாள்.
அவளது தலையை வருடிக் கொடுத்தவர், “மறுநாளே திரும்ப வருவேன்னு சொல்லிட்டுப் போன நீ தான் வீட்டுக்கு வராமல் உன் பிரண்டுஸுங்களோடு ஊரை சுத்தின.” என்றார்.
தன் மகளே அந்த இளைஞன் (ராஜீவ்) யாரென்ற விவரம் சொல்லுவாள் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவளோ அது பற்றி வாய் திறக்கவில்லை.
“நான் வந்த பின்னாடி நீங்க சென்னைக்கு போயிருக்கலாம் தானே? அதை விட்டுட்டு நான் வரும் முன்னாடியே போயிட்டீங்க. இப்பவும் பாருங்க. சாயங்காலம் வரேன்னு சொல்லிட்டு நைட் தான் வந்து சேர்ந்து இருக்கீங்க.” என்று அவள் அலுத்துக் கொள்ளவும்,
“உன்னை பார்க்கத் தான்டா குட்டிம்மா நான் அவசர அவசரமா வந்தேன். வழியிலே ஒரு திமிர் பிடிச்சவன் குறுக்கே புகுந்து காரியத்தை கெடுத்துட்டான்.” என்று சொன்னவர் அன்றைய நிகழ்வை மகளிடம் எடுத்துரைத்தார்.
“அவன் சரியாத் தானேப்பா சொல்லியிருக்கான். நீங்க தப்பா தானே போயிருக்கீங்க.”
