“வேணாம் குட்டிம்மா. அவனை மட்டும் சப்போர்ட் பண்ணிப் பேசாதே. அப்புறமா உன்னையும் திட்டிடப் போறேன். நான் அவன் மேல செம கடுப்பில் இருக்கேன். சின்னப் பயல். என்ன துள்ளு துள்ளுறான். ரூல்ஸ் பேசுறானாம் ரூல்ஸ். அரை மணி நேரம் வாதாடுறான். அவன் என் பணத்தையும் மதிக்கலை. என் வயசுக்கும் மதிப்புக் குடுக்கலை.”
“சரிப்பா. அவனை பத்தி நாம பேசவும் வேண்டாம். நீங்க உங்க பிரஷரை ஏத்திக்கவும் வேண்டாம்.”
“அம்மா எங்கேடா?”
“கோவிலுக்கு போயிருக்காங்க.”
“சாப்பிடுறீங்களா? நான் சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?”
“இல்லைடா. அம்மா வரட்டும். அவளுக்கு அவ கையால நமக்கு பரிமாறினால் ஒரு திருப்தி. நாம ஏன் அதைக் கெடுக்கணும்?”
ராதா வந்து பின் சாப்பிட்டு முடித்து தனது அறைக்கு தூங்குவதற்கு வந்தவள் ராஜீவின் கைப்பேசிக்கு அழைத்தாள்.
“என்னங்க மேடம் சென்னையில தங்கிட்டதால ரெண்டு நாளா விட்டுப் போன வேலை எல்லாம் முடிச்சிட்டீங்களா?”
“யெஸ் ராஜ். எல்லா வேலையும் முடிச்சாச்சு.”
“ஸ் ஆஆ!” என்று ராஜீவ் மெலிதாக முனுகவும்…
“என்னாச்சு ராஜ்?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.
“ஒண்ணுமில்லைம்மா. கையிலே லேசா சிராய்ப்பு. அதே இடத்திலேயே சுவரில் இப்போ மோதிக்கிட்டேன்.”
“சிராய்ப்பா? எப்படி வந்துச்சு? எங்கேயாவது விழுந்துட்டீங்களா?”
“எதுக்கு இத்தனை கேள்வி. நானே டாக்டர் தானே! என்னைப் பார்த்துக்க மாட்டேனா?”
“நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட நீங்க பதில் சொல்லலை ராஜ்.” என்று கடுப்புடன் கூற,
“மதியம் ஒரு பணக்கார மனுஷன் செஞ்ச வேலை…” என்று அவன் மதியம் நடந்ததை கூற ஆரம்பிக்கவும்,
கடகடவென சிரித்த நிவேதா, “நீங்க தான் அந்த ‘அம்பி’ ராமானுஜமா?” என்று கேட்டாள்.
“என்ன சிரிப்பு? எதுக்கு இப்போ என்னை நக்கல் பண்ணுற?”
“ராஜ்! அது என்னோட டாடி தான். அவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து இந்த விஷயத்தை சொன்னதும் நான் உங்களுக்கு மனசுக்குள்ளே இந்தப் பேரைத் தான் வச்சேன்.” என்று சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டு வந்தவளுக்கு,
தந்தை சொல்லிய ‘அவனை மட்டும் சப்போர்ட் பண்ணிப் பேசாதே. அப்புறமா உன்னையும் திட்டிடப் போறேன்.’ என்ற வரிகளே காதில் ரீங்காரமிட்டு அவளை சிந்தனைக்குள்ளாக்கியது.
‘நிவி… நிவேதா’ என்று பல முறை ராஜீவ் அழைத்த பின்பே நனவுலகத்திற்கு வந்தவள், “என்ன ராஜ் கேட்டீங்க?” என்று கேட்டாள்.
“நான் பாட்டுக்கு உங்க அப்பா கூட சண்டை போட்டுட்டேனே! இதனால எல்லாம் பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட மாட்டாரே?”
“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது ராஜ். நான் எதுக்கு இருக்கேன். நான் பார்த்துக்குவேன்.”
“சரியான அடாவடியா உங்க அப்பா? விட்டால் என்னை அறைஞ்சிருப்பார். நீ எப்பவாது அவர்கிட்ட அடி வாங்கி இருக்கியா?”
“அடியா? எங்கப்பாவா? என்னையா? நல்லா கேட்டீங்க போங்க. எங்கம்மா என்னைக் கொஞ்சினால் கூட அவருக்கு பொறுக்காது. அவருக்கு என் மேல அவ்வளவு பாசம். அப்படிப்பட்டவர் என்னை அடிக்கிறதாவது?”
‘அப்போ வருங்காலத்திலே என் பாடு கஷ்டமா?’ என்று மனதில் நினைத்தவன், “ஒரு வேளை உன் அப்பா உன்னை எதிர்த்தால்…” என்று கேட்டு நிறுத்த,
“அப்படி ஒரு நாள் என் லைஃபிலே வராது ராஜ். அப்படி வந்தால் என் வாழ்க்கையின் கடைசி நாள் அது தான்.” என்றாள்.
“ஹேய்! நான் விளையாட்டுக்கு கேட்டால் நீ என்ன எதையோ உளறிக்கிட்டு இருக்கே. இனி ஒரு தரம் இப்படிப் பேசாதே.” என்று வருத்தத்துடன் ராஜீவ் சொன்னதும்,
“இனிமேல் பேசலை. ராஜ். உங்களுக்கு ஸ்டடி ஹாலிடேஸ் எப்போ? நீங்க எப்போ மதுரைக்கு வருவீங்க?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
அவனிடம் பேசிவிட்டு கைப்பேசியை அணைத்தவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
‘அப்பா வந்த பின்னால ராஜீவ் பத்தி சொல்லணும்னு நினைச்சேன். ராஜீவோட அந்தஸ்து நம்மை விடக் குறைவானதுன்னு அப்பா கண்டிப்பா மறுப்பார். போராடித் தான் வெல்லணும்னு நான் கணக்குப் போட்டு வச்சிருக்க இறைவன் வேறு மாதிரி கணக்குப் போட்டு இருக்காரோ? இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம்’ எனத் தீர்மானித்தாள்.
பத்து நாள்கள் கழிந்த பின் ராஜீவ் சோழவந்தான் வந்திருந்தான்.
“எனக்கு உன்னை பார்க்கணுமே நிவி. நாம பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. உன்னை எங்கே வந்து பார்க்கட்டும்?” என்று அவன் கேட்டும்,
“இப்ப வேண்டாம். நானே உங்களை கூப்பிடுறேன் ராஜ். அப்போ வந்து பாருங்க.” என்றாள்.
“உனக்கு என்னை பார்க்கணும்னு தோணலையா நிவி?” என்று அவன் ஏமாற்றத்துடன் கேட்க,
“ஐ டூ மிஸ் யூ சோ மச் ராஜ். ஆனால் நான் கொஞ்சம் பிசியா இருக்கேன். நாம வியாழக்கிழமை பார்ப்போமா? இடத்தை நான் அப்புறமா உங்களுக்கு போன் பண்ணிச் சொல்லுறேன்.” என்று சொன்னதும்,
“உன் போனுக்காகவும், வியாழக் கிழமைக்காகவும் நான் காத்திருப்பேன்டா நிவி.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
வியாழக்கிழமை காலை…
ராதா காபியை எடுத்துக் கொண்டு மகளது அறைக்கு சென்றார். பல் துலக்கி விட்டுக் குளியலறையில் இருந்து வெளியே வந்த நிவேதா ஒரு தாங்க்ஸ் மா சொல்லி அதை வாங்கிப் பருகினாள்.
காலிக் கோப்பைக்காக ராதா கை நீட்ட அவள் அதை அவரிடம் தராமல் அருகிலுள்ள மேஜையில் வைத்துவிட்டு அவரை கைப்பிடித்து படுக்கையில் அமர வைத்தாள். அவர் அமர்ந்ததும் அவரது மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
அவளது தலையை கோதிக் கொடுத்துக் கொண்டே, “என்னடா நிவி இன்னும் தூக்கம் போகலையா?” என்று கேட்டார்.
அவரது இடுப்பை சுற்றி கைகளை போட்டுச் செல்லம் கொஞ்சிக் கொண்டே, “உங்களுக்கு ஏதாச்சும் வேலை இருக்காம்மா?” என்று கேட்டாள்.
“மடியிலே இருக்கிற என் பொண்ணைத் தள்ளி விட்டுட்டுப் போய் முடிக்கிற அளவுக்கு எந்த வேலையும் இல்லை.” என்றதும் நிவேதா புன்னகைத்தாள்.
“உங்க அப்பா பார்த்தால் தான் பொறாமைப்படுவார். கடவுள் மட்டும் ஆண்களுக்கு குழந்தை பெத்துக்குற பாக்கியத்தை குடுத்திருந்து… உன் அப்பா மட்டும் உன்னை சுமந்து பெத்திருந்தாரு… அவ்வளவு தான். உன்னை தொடக் கூட விட்டிருக்க மாட்டார்!” என்று கணவரைக் கேலி செய்தவர்,
மகளின் முகத்தை வருடிக் கொண்டே, “உன்னை கல்யாணம் முடிச்சுக் குடுத்துட்டு உன் புருஷனுக்கு எப்படி விட்டுக் குடுக்கப் போறாருன்னு தான் தெரியலை.” என்று கூறி பெருமூச்சொன்றை வெளியிட்டார்.
சரியாக அந்த நேரம் ‘நிவி’ என்று அழைத்துக் கொண்டே ரவீந்திரன் வந்தார்.
“பாரு பாரு! உங்க அப்பாக்கு மூக்கிலே வியர்த்திருச்சு. சரியா வந்துட்டார்.” என்று ராதா கேலியாகக் கூற,
உள்ளே நுழைந்த ரவீந்திரன், “என்ன குட்டிம்மா அம்மாவை கட்டிக்கிட்டுப் படுத்திருக்கே?” என்றார்.
“நான் அப்பவே சொன்னேன் தானே!” என்று மகளை பார்த்து ராதா கூற,
“அதுக்கு அப்படி அர்த்தம் எடுத்துக்கக் கூடாதும்மா. நீ எப்படி என் வைஃபை கட்டிப் பிடிக்கலாம்னு அர்த்தம். இல்லையாப்பா?” என்று கண் சிமிட்டித் தனது தந்தையை பார்த்து நிவேதா வினவினாள்.
“இப்போதைக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் விரும்பலைம்மா. நான் வேற முக்கியமான விஷயமாப் பேச வந்தேன். உங்க அம்மாவும் இங்கேயே இருக்காள். அதனால ஒரேடியா உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே விஷயத்தை சொல்லிடுறேன்.” என்று சொல்லிக் கொண்டே, தான் கொண்டு வந்திருந்த கவரில் இருந்து புகைப்படம் ஒன்றை உருவினார்.
தந்தை அறைக்குள் வந்ததும் நிவேதா அவரைப் பார்க்கும் வண்ணம் ஒரு பக்கமாக திரும்பிப் படுத்திருந்தாள். அவர் அவளிடம் அந்தப் புகைப்படத்தை நீட்ட, அவளோ சற்றும் அசையாமல் படுத்திருந்தாள்.
இவர்களது மௌன நாடகம் புரியாத ராதா அதைக் கை நீட்டி வாங்கிக் கொண்டார்.
“இது தான் நான் நிவிக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை. அவர் பேரு சுரேஷ். இஞ்சினியருக்கு படிச்சிருக்கார். நம்மளை மாதிரி வசதியானவங்க.” என்று ஒவ்வொன்றையும் மகளை பார்த்துக் கொண்டே அழுத்தமாகக் கூறிக் கொண்டு வந்தவர் தன் மனைவியிடம்,
“என்ன ராதா மாப்பிள்ளை எப்படி இருக்கார்? அவரோட அழகைப் பார்த்து ராஜ்..” என்று சொல்லி ஒரு நொடி நிறுத்தியவர் “ராஜகுமாரன் என்று கூப்பிடணும்னு தோணலை.” என்றார்.
அந்த ராஜ் என்ற பேரைச் சொல்லும் போது தகப்பனின் கண்களும் மகளின் கண்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
“மாப்பிள்ளை போட்டோவிலே நல்லா இருக்காருங்க. அவர் குடும்பத்தை பத்தி, மாப்பிள்ளையோட குணத்தை பத்தியெல்லாம் விசாரிச்சுட்டீங்களா?”
“அதெல்லாம் விசாரிக்காமல் இருப்பேனா? அவங்க அப்பா சாதாரண பள்ளிக்கூடத்து டீச்சர் இல்லை. பெரிய பிசினஸ் மேன். மாப்பிள்ளையின் குணம் பத்திக் கேட்ட இல்ல… அவர் யாரையும் நியாயம் பேசுறேன்னு எதிர்த்து நிக்க மாட்டார். முக்கியமா என்னை.” என்று மனைவியிடம் சொன்னவர்,
“என்னடா குட்டிம்மா நீ ஒண்ணும் சொல்லாமல் அமைதியா இருக்கே.” என்று சீண்ட வேறு செய்தார்.
“நீங்க தான் என்னோட அபிப்ராயத்தை கேட்கலையேப்பா. உங்க அபிப்ராயத்தை தானே என் மேல திணிக்கப் பார்க்கிறீங்க.” என்று இடக்காக நிவேதா பதில் கூற,
“குட். நான் உன் மீது இதைத் திணிக்கிறேன்னு உனக்கு புரியுது தானே! எனக்கு அது போதும்.” என்று சொன்னவர் வெளியே செல்லத் திரும்பினார்.
போகும் போது “இன்னும் ரெண்டு நாளில் நம்ம வீட்டுக்கு அவங்களை வரச் சொல்லி இருக்கேன்.” என்று சொல்லிக் கொண்டே சென்றார்.
மகள் அந்தப் புகைப்படத்தை கையால் கூடத் தொடாததும் கணவன் தன் பெண்ணிடம் பேசிய பாங்கும் ராதாவை சிந்திக்க வைத்தன.
ராதா தன் மகளிடம், “நிவி! நீ யாரையாச்சும்… உனக்கு வேற யாரையாவது பிடிச்சு இருக்கா?” என்று கேட்டார்.
மகள் ஆம் என்னும் விதமாகத் தலையாட்ட சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்த ராதா, “அவரோட அப்பா டீச்சரா? அவர் பேர் ராஜ் ஆ? அவர் உன் அப்பாவோட சண்டை போட்டாரா?” என்று வரிசையாகக் கேள்விகளை அடுக்க,
“யூ ஆர் டூ ஸ்மார்ட் மம்மி.” என்று சொல்லி எம்பி தன் தாயின் கன்னத்தில் முத்தம் பதித்தவள் மீண்டும் தாயின் இடுப்பை கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.
ராதாவின் கை மகளது முதுகை வருடிக் கொடுக்க ஆரம்பித்தது. அவரின் மனதை கவலை ஆட்கொள்ள ஆரம்பித்தது. இரு பிடிவாதக்காரர்களின் இந்தப் போராட்டத்தில் வெற்றி யார் பக்கம் இருக்கக் கூடுமோ என்ற பயமும் எழ அவரது வருத்தம் அதிகரித்தது.
ஐந்து நிமிடங்கள் அதே நிலையில் அமர்ந்திருந்தவர், “எழுந்து போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடும்மா.” என்று சொல்லி மகளது தலையை மடியில் இருந்து படுக்கையில் இறக்கி வைத்தார்.
மகளது ஆசை தெரிந்த பின்னும்… அது தன் கணவனுக்கு எதிரான ஆசை என்ற காரணத்தால் மகளின் ஆசைக்கு ராதா பச்சைக் கொடி காட்டவில்லை. அதே சமயம் சிகப்புக் கொடியையும் காட்டாது அவ்விடம் விட்டு அகன்றார். தாயின் நிலையை பார்த்து நிவேதாவிற்கு பெருமூச்சு தான் வந்தது.
