அத்தியாயம் 8
சுப்பு வேலைக்கு வந்து ஒரு மாதம் சில வாரங்கள் ஓடி இருந்தன. இப்பொழுதெல்லாம் இரவு நேர டீ இருவருக்கும் பொதுவாக ஆகிவிட்டது. அவளது கப்பில் டீ ஊற்றிக் குடித்தபடியே எட்வர்டின் காலடியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதும்தான்.
எட்வர்ட் கணக்கு வழக்குகளையோ, படிப்பதையோ செய்து கொண்டிருக்க இவள் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பாள். சார்லி சாப்ளின் படம் ஓடினால், எட்வர்டே அழைத்து அவளை அருகே அமர்த்திக் கொள்வான். கைத்தட்டி குதூகலித்து அவள் பார்ப்பதை, புன்னகையுடன் இவன் பார்த்திருப்பான்.
அன்றும் அப்படிதான் இருவரும் டீ கப்புகளுடன் அமர்ந்திருந்தனர். அவள் கையில் எப்பொழுதும் போல ஸ்ட்ராபேரி ஜாம். அந்த ஜாம் அவளுக்கே அவளுக்காகக் கிடைத்தது இன்னொரு கதை.
இவள் வந்த புதிதில் யாரும் இல்லாத வேளைகளில் எல்லாம் அந்த ஜாம் பாட்டிலுள் ஒரு விரல் விட்டு அள்ளி, நாக்கில் வைத்துக் கொள்வாள். மிட்டாய் சாப்பிடுவது போல, ஜாம் இருக்கும் விரலை சப்பிக் கொண்டிருப்பதில் அப்படி ஒரு குஷி அவளுக்கு. அவள் கை விட்ட ஜாம்தான் எட்வர்டுக்கும் ரொட்டியில் தடவிக் கொடுக்கப்படும் என்பதை சொல்லத் தேவையில்லை.
ஒரு நாள் இரவு எட்வர்ட் தண்ணீர் எடுக்க அடுப்படிக்கு திடீரென வந்தப் போது, வாயில் ஆட்காட்டி விரலை விட்டுக் கொண்டு திரு திருவென முழித்தப்படி நின்றிருந்தாள் இவள். ஏன் இப்படி நிற்கிறாள் என அவன் கூர்ந்து நோக்கவும் கண்களில் தானாகவே அருவி இறங்க ஆரம்பித்திருந்தது சுப்புவுக்கு.
“ப்ளேக்கி! இப்ப எதுக்கு அழுகற?”
வாயிலிருந்த விரலை எடுக்காமலே,
“இனிமே இப்படி செய்ய மாட்டேன் துரை” எனக் கண்ணீர் வழிய சொன்னாள்.
“என்ன செய்ய மாட்டே?”
“சிவப்பு மிட்டாய திருடி சாப்பிட மாட்டேன்” என்றவளின் விரல் இன்னும் வாயில்தான் இருந்தது.
அப்பொழுதுதான் மேசையில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஜாம் பாட்டிலைப் பார்த்தான் இவன்.
திருட்டுத்தனம் செய்து விட்டுத் தாயிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் குழந்தைப் போலவே நின்றிருந்தாள் சுப்பு.
எட்வர்ட் அவளை நெருங்கி வரவும், எங்கே அடிக்கப் போகிறானோ எனப் பயம் வர கண்ணீர் இன்னும் மடமடவென இறங்கியது. அருகில் வந்தவன், அவள் வாயில் இருந்த விரலை வெளியே எடுத்து விட்டான். உதட்டோரம் ஒட்டி இருந்த ஒரு துளி ஜாமை தன் விரலால் துடைத்து விட்டவன்,
“இதுக்கு தான் அழறியா? கண்ணை துடை ப்ளேக்கி” என்றான்.
அவனுக்குக் கோபம் இல்லை என அறிந்துக் கொண்டவள், அவசரமாக கண்களைத் துடைத்தாள்.
“இத்தனை நாளா கைய வச்சி எச்சி வேற பண்ணிட்டு அதையே ப்ரேட்ல தடவி எனக்கு குடுத்துருக்க!” எனக் குழந்தையை மிரட்டுவது போல மிரட்டினான் எட்வர்ட்.
பட்டென அவன் கையைப் பிடித்துக் கொண்டவள்,
“மன்னிச்சிக்குங்க துரை” என்றபடி தோப்புக்கரணம் போட ஆரம்பித்தாள்.
பத்து போடும் வரை அமைதியாக கைக்கட்டிப் பார்த்திருந்தவன்,
“போதும் ப்ளேக்கி” என்றான்.
“துரைக்கு கோவம் போயிருச்சா?”
“இன்னும் இல்ல”
மீண்டும் அழ தயாரானவளை,
“இப்ப மறுபடி அழுத, அடிப்பேன்” எனச் சொன்னான்.
“பொம்பளைங்கள அடிக்க மாட்டேன்னு சொன்னீங்களே துரை” எனப் பாவமாகக் கேட்டாள் சுப்பு.
“பொம்பளைங்கள அடிக்க மாட்டேன். உன்னை மாதிரி ராங்கி செய்யற பாப்பாவ அடிக்கலாம்”
கோபம் கொண்டு அவனுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்று கொண்டாள் சுப்பு.
“ப்ளேக்கி!”
“ஹ்ம்ம்”
“முன்னுக்கு திரும்பு”
முடியாது எனத் தலையை மட்டும் இடம் வலமாக ஆட்டினாள்.
“பேச மாட்டியா?”
ஆமென தலை அசைப்பை மட்டும் கொடுத்தாள் சுப்பு.
“அப்போ பரவாயில்ல. ஜாம் பாட்டிலை உனக்கே கொடுத்தரலாம்னு நினைச்சேன். விடு, நீதான் பேச மாட்டிக்கிறீயே”
வேகமாக முன்னே திரும்பியவள்,
“பேசுவேன், பேசுவேன்” என அவசரமாக சொன்னாள்.
சிரிப்பு எட்டிப் பார்த்தது எட்வர்டுக்கு. பாட்டிலைக் காட்டியவன்,
“இத நீயே எடுத்துக்க ப்ளேக்கி. எனக்கு புதுசு எடுத்து வை. அதுலயும் கையை வச்சா எனக்கு நிஜமா கோபம் வரும். புரியுதா?” என்றான்.
“சரி துரை” எனச் சந்தோஷமாக தலையை ஆட்டினாள் இவள்.
அன்றிலிருந்து இரவு டீக்கு ஜாமை தொட்டு வாயில் அதக்கிக் கொள்வது பழக்கமானது சுப்புவுக்கு. எட்வர்டும் கண்டுக் கொள்ள மாட்டான்.
தொலைக்காட்சியில் ஒரு கண்ணும், எட்வர்டின் மேல் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தவள்.
“துரை” எனக் கெஞ்சலாக அழைத்தாள்.
நிமிர்ந்து பார்த்தவன்,
“என்ன ப்ளேக்கி?” எனக் கேட்டான்.
“கோயில்ல காப்பு கட்டிட்டாங்களாம், அக்கா சொன்னாங்க. நான் திருவிழாவுக்குப் போகவா?” எனச் சம்மதம் கேட்டாள்.
அவன்தான் எங்கு போவதென்றாலும் சம்மதம் கேட்க வேண்டும் என கண்டித்து சொல்லி இருக்கிறானே!
மற்ற எஸ்டேட்டுகளை விட இங்கே திருவிழா பிரமாதமாக இருக்கும். எட்வர்ட் பாதி செலவை ஏற்றுக் கொள்ள மீதியை மக்களிடமே வசூலித்துக் கொள்வார்கள். தீமிதி, தேர் உலா, பால் குடம் எடுப்பது எனக் களை கட்டும். திருவிழா முடியும் நாள் அன்று, வழுக்கு மரம் ஏறும் போட்டி, கோலம் போடும் போட்டி, சின்ன பிள்ளைகளுக்குச் சாக்கு ஓட்டம் இப்படி எஸ்டேட்டே அல்லோலகல்லோல படும். மாமன், மச்சான் மீது மஞ்சள் நீர் ஊற்றுகிறேன் என ஊர் குழந்தைகளில் இருந்து கிழடு கட்டைகள் வரை தெரு தெருவாக ஓடுவார்கள். இதையெல்லாம் பட்டுவும், பவுனுவும் வாய் ஓயாமல் இவளிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டனர். அதனாலேயே இவளுக்கும் ஆசையாக இருந்தது.
அவள் அப்பா இருந்த வரை அவர் தோள் மேல் அமர்ந்து அவர்கள் எஸ்டேட் தீமிதியைப் பார்த்தவள்தான் சுப்பு. நாக்கில் அழகு குத்தி, அருவாள் மேல் ஏறி நடக்கும் சாமி ஆடுபவர்களை அவர் நெஞ்சில் ஒளிந்துக் கொண்டே எட்டி எட்டிப் பார்ப்பாள் அவள். அவர் போனதில் இருந்து, ஆத்தாக்கள் இருவருமே, நல்ல நாள் பெருநாள்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். பிள்ளைகளையும் அனுப்ப மாட்டார்கள்.
தாடையைத் தடவி யோசித்த எட்வர்ட்,
“நீ போக வேணாம் ப்ளேக்கி” என்றான்.
முணுக்கென கண்ணீர் கண்களை நிறைத்தது சுப்புவுக்கு.
“ஆத்தாவும் என்னை போக விடாது. இப்ப துரையும் போக விட மாட்டிக்கிறீங்க. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?” கண்ணீர் குரலில் கேட்டவள் எழுந்து போய் அவள் இடத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
அவள் பின்னாலேயே எழுந்து வந்த எட்வர்ட், தேம்பி கொண்டிருக்கும் அவளையே பார்த்தபடி நின்றான்.
“ப்ளேக்கி!”
குப்புறப் படுத்துக் கொண்டாள். சிரிப்பு வந்தது அவனுக்கு.
“சரி, போ!” எனச் சம்மதம் சொன்னான்.
படக்கென எழுந்து அமர்ந்தவள்,
“நெஜமாவா துரை?” எனக் கண்களில் எதிர்பார்ப்பைத் தாங்கி கேட்டாள்.
ஆமென அவன் தலை ஆட்டவும் எழுந்துக் கொண்டவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“எனக்கு இப்போத்தான் சந்தோசமா இருக்கு துரை” என்ச் சொல்லி மகிழ்ச்சியில் அவன் கையைப் பிடித்துக் கொண்டே குதித்தாள்.
கையை உருவிக் கொண்டவன்,
“தொடாதேன்னு சொன்னா கேட்க மாட்டியா ப்ளேக்கி?” எனக் கடிந்துக் கொண்டான்.
அவன் திட்டியது கூட உறைக்கவில்லை. அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.
திருவிழா நாளும் அழகாகப் புலர்ந்தது. பட்டு அவரது பழைய சேலையை வெட்டி தன் கையாலேயே இவளுக்கு ஒரு பாவாடை சட்டை தைத்துக் கொடுத்திருந்தார் திருவிழாவுக்காக. சுத்த பத்தமாக குளித்து. அந்த வெளிர் நீல நிற பாவாடை சட்டையை அணிந்துக் கொண்டு தனது அக்மார்க் அலங்காரங்களுடன் கிளம்பி எட்வர்ட் முன்னே வந்தாள். ஞாயிற்றுக் கிழமை ஆதலால் அவன் வீட்டில்தான் இருந்தான்.
“துரை நல்லா இருக்கேனா?”
ஒரு சுற்று சுற்றிக் காட்டினாள்.
தலையை மட்டும் ஆட்டியவன்,
“பர்சு வீட்டு ஆளுங்க கூடவே பத்திரமா இருக்கனும் ப்ளேக்கி! தனியா எங்கயும் போக கூடாது. புரியுதா?”
அவள் திருவிழா செல்ல சம்மதம் சொன்னதிலிருந்து அடிக்கடி சொல்வதுதான். சலிக்காமல் மீண்டும் சொன்னான். பரசுவிடம் பட்டும் படாமலும் அவளைப் பார்த்துக் கொள்ள சொல்லி இருந்தான். எட்வர்டுக்கு இந்த மாதிரி மக்கள் குவியும் இடம் கொஞ்சம் அலர்ஜி. கொஞ்சம் என்ன ரொம்பவே அலர்ஜி. உருமி சத்தம், நாதஸ்வர மேள தாளம், கூச்சல், வியர்வை வாடை, இந்திய(அடிமை) மக்கள் இவை எல்லாம் அவனுக்கு அறவே ஒத்துக் கொள்ளாத விஷயங்கள். முடிந்த அளவு இதில் எல்லாம் ஒதுங்கி இருந்து கொள்வான்.
“ஐயே துரை! நான் என்ன பச்ச பாப்பாவா? பத்திரமா இருப்பேன்”
‘பச்ச பாப்பாவா இருந்தாத்தான் பரவாயில்லையே. உன் கிட்ட பேசனா மட்டும்தானே நீ இன்னும் பச்ச பாப்பான்னு மத்தவங்களுக்குப் புரியும்’ என நினைத்துக் கொண்டவன் மீண்டும்,
“பத்திரம் ப்ளேக்கி” என்றான்.
ஜடை ஆட சரி என்றவள் கிளம்ப எத்தனித்தாள்.
“நில்லு!” என்றவன் பேண்ட் பாக்கேட்டில் இருந்து அவனது வாலட்டை எடுத்து அப்பொழுது வழக்கில் இருந்த ஐந்து வெள்ளியை அவள் கையில் திணித்தான்.
“எதாச்சும் வாங்கி சாப்பிட்டுக்க ப்ளேக்கி”
“ஐயே துரை! இது என்ன தாளு குடுக்கறீங்க? எனக்கு வட்டமா இருக்குமே அந்தக் காசு குடுங்க”
“அத விட இது இன்னும் மதிப்பு கூட ப்ளேக்கி”
“இல்ல இது வேணா! ஆத்தா பத்து காசு தான் குடுக்கும். அதுக்கு தான் குச்சி ஐஸ் தருவாங்க. அதயே குடுங்க துரை” என விழி விரித்துக் கெஞ்சினாள்.
தன் தலையிலே அடித்துக் கொண்டவன், பாக்கேட்டில் தேடி இரு பத்து காசுக்களை எடுத்துக் கொடுத்தான்.
சந்தோஷமாக வாங்கிக் கொண்டவள் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு,
“தேங்சூ துரை” என்றாள்.
“ஏ ப்ளேக்கி, என்ன சொன்ன?”
“நன்றி சொன்னேன். தேங்சூ! சித்தப்பூ சொல்லிக் குடுத்தாரு”
சொல்லியபடியே பட்டுவையும், பவுனையும் தேடி அவர்கள் வீட்டுக்கு ஓடிப் போனாள்.
