IMTP–EPI 8(2)

வாய் விட்டுச் சிரித்தவன், தூங்கலாம் என ரூமினுள்ளே நுழைந்து கொண்டான். சிரிக்க வைத்தவள் அந்த இரவே அழ வைக்கப் போகிறாள் எனத் தெரியாமல் நிம்மதியாக உறங்கிப் போனான் எட்வர்ட்.

சுப்பு, பரசுவின் குடும்பத்துடன் சந்தோஷமாக திருவிழா பார்க்க கிளம்பினாள். எஸ்டேட்டுக்கு நடுநாயகமாக கட்டப்பட்டிருந்தது அந்த மாரியம்மன் கோயில். கோயிலை தள்ளி வீடுகளும், செம்பணை காடுகளும் இருந்தன. இவர்கள் போகும் போதே ஆற்றோரத்தில் இருந்த இன்னொரு கோயிலில் தீமிதி இறங்க போகிறவர்கள் மேல் மஞ்சள் கலந்த ஆற்று நீர் ஊற்றி நெற்றியில் திருநீறு வைத்து சாமி அழைத்து முடித்திருந்தார் பூசாரி.

தீக்குழியைச் சுற்றிக் கயிறு கட்டி மக்கள் யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு செய்திருந்தனர். ஓரமாக நின்றிருந்த இவர்கள், தீமிதி உற்சவம் ஆரம்பிக்க காத்திருந்தார்கள்.

தீக்குழியில் உப்பை அள்ளி வீசிக் கொண்டிருந்தாள் பவுனு. அதிசயமாகப் பார்த்த சுப்பு,

“சின்னக்கா, ஏன்கா உப்பு போடறீங்க நெருப்புல?” எனக் கேட்டாள்.

“கடைசி பையனுக்கு முதுகு, கழுத்தெல்லாம் மரு ரொம்ப வருது புள்ள. சாமி கிட்ட வேண்டிக்கிட்டு தீக்குழில உப்பு போட்டா மரு தன்னாலே விழுந்துரும்”

அதற்குள் வரிசையாக நேர்த்திக்கடன் வைத்திருந்தவர்கள் தீமிதிக்க ஆரம்பித்தார்கள். ஆத்தா, மகமாயி என ஒரே கூச்சல். சுப்புவும் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

தீமிதி முடித்து அம்மனுக்கு பூஜை புனஸ்காரங்கள் முடிந்து பந்தி ஆரம்பித்தது. மக்கள் அடித்துப் பிடித்து பக்கத்தில் இருந்த திடலில் வரிசைப் பிடித்து அமர்ந்தார்கள். ஏற்கனவே பரசுவின் பிள்ளைகள் இடம் பிடித்து வைத்திருக்க இவர்கள் அமர்ந்து கொண்டார்கள். வாழை இலை போட்டு, சோறு, சாம்பார், பயிற்றங்காய் கூட்டு, அப்பளம், வடை, பாயாசம் பரிமாறப்பட்டது. சுப்பு ஆசையாக சாப்பிட்டாள்.

“இந்தா வடை. வயசு புள்ள நல்லா சாப்புடு” எனப் பட்டு தனக்கு கிடைத்ததை சுப்புவுக்கு கொடுத்தாள்.

பரசுவும் இவர்கள் எதிரில் இருந்த ஆண்கள் பந்தியில் அமர்ந்திருந்தான். இவர்கள் குடும்பமாக சாப்பிட்டுவிட்டு திடலை சுற்றி போட்டிருந்த கடை வீதிகளை சுற்றி வர ஆரம்பித்தார்கள். வளையல் கடைகள், மிட்டாய் கடைகள், சாமி படங்கள் விற்கும் கடைகள், குச்சி ஐஸ் கடைகள் எனத் திடலை நிறைத்திருந்தன.

மிட்டாய் கடையில் பத்து காசுக்கு கை நிறைய கிடைத்த மிட்டாய்களை பரசுவின் பிள்ளைகளுடன் பகிர்ந்துக் கொண்டாள் சுப்பு. பட்டுவுக்கு இரண்டு, பவுனுக்கு இரண்டு என நான்கு பிள்ளைகள் பரசுவுக்கு. நீதி வழுவாத நியாயவான் பரசு. சரி சமமாக பிள்ளைகளைக் கொடுத்து தர்மத்தை நிலை நாட்டி இருந்தான்.

குச்சி ஐஸ் வாங்கிப் பிள்ளைகளுடன் காக்கா கடி கடித்து சாப்பிட்டவள், சந்தோஷமாக சுற்றித் திரிந்தாள்.

“ஏதுடி காசு?” எனக் கேட்டாள் பவுனு.

“துரை குடுத்தாரு” என வெள்ளையாகச் சொன்னாள் சுப்பு.

எதற்கு துரை இவளுக்குக் காசு கொடுத்தார் என மனதில் உறுத்தியதை பட்டுவிடம் பகிர நினைத்த நேரத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

“எந்த கீழ் சாதி பயடா, என் தங்கச்சி நடந்து போறப்ப பின்னால தட்டனவன்? ஆம்புளையா இருந்தா இப்ப வாடா என் முன்னால. வகுந்துபுடறேன் வகுந்து”

கையில் அரிவாளுடனும், கண்ணில் கள் அடித்த போதையுடனும் நின்றிருந்தான் ஒருவன். அவன் பின்னால் அவன் ஜாதிக்காரர்கள் கையில் கம்புடன் நின்றிருந்தனர். திருவிழா கூட்டத்தில் சலசலப்பு.

“உன் தங்கச்சி முகரைக்கு எங்க ஜாதிக்காரனுங்களாச்சும் கைய வச்சானுங்களே! சந்தோசப்படுக்கடா! வேற எவன்டா வருவான்?” என இன்னொருவன் சிலிர்த்துக் கொள்ள, கைக்கலப்பு ஆரம்பமாகியது.

கடைகள் பிய்த்து எறியப்பட்டன. பெண்கள், பிள்ளைகள் எனப் பாராமல் எல்லாரும் தாக்கப்பட்டனர். திருவிழா கூட்டம் அங்கும் இங்கும் சிதறி ஓடியது.

பரசு, பொண்டாட்டி பிள்ளைகளை காபந்து செய்து ஒரு வழியாக ஒதுக்குப்புறமாக கூட்டி வந்திருந்தான். மூச்சு வாங்க நின்றிருந்தவர்கள், ஆசுவாசப் பெருமூச்சு விட்டனர்.

“யப்பா, சுப்பக்கா எங்கப்பா?” எனக் கேட்டான் பரசுவின் மகன்.

அப்பொழுதுதான் கவனித்தார்கள் சுப்பு அவர்களோடு இல்லாததை. பரசு மீண்டும் கூட்டத்தில் புகுந்து தேடிப் பார்த்தான். ஆளையே கண்டுஒ பிடிக்க முடியவில்லை. நேரம் வேறு அந்தி சாய்ந்திருந்தது. பட்டுவும், பவுனும் ஒப்பாரி வைக்க, பரசு ஆடிப் போய்விட்டார்.

“பர்சு, சுபூ பத்திரம்! அவளுக்கு இங்க இடமெல்லாம் தெரியாது. ஏதாவது ஒன்னுனா பாக்யம்கு நாமதான் பதில் சொல்லனும்” அழுத்தி சொன்ன எட்வர்டின் குரல் காதில் எதிரொலித்து பீதியைக் கிளப்பியது அவனுக்கு.

“ஏ, புள்ள பட்டு, பவுனு! அழுவறத நிப்பாட்டிட்டு துரை பங்களாவுக்கு ஓடுங்க. விரசா அவர் கிட்ட விஷயத்த சொல்லுங்க. நான் மறுபடியும் தேடிப் பார்க்கறேன்” என விரட்டி விட்டான்.

படபடவெனக் கதவு தட்டப்பட்ட சத்தத்துக்கு வாசல் கதவைத் திறந்தான் எட்வர்ட். அழுத முகத்துடன் பரசுவின் குடும்பத்தைப் பார்த்தவன், அதில் சுப்பு இல்லாமல் பயந்து போனான்.

“சுபூ எங்க?” எனக் கேட்டவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் இருந்தது.

படபடவென ஒப்பித்தாள் பட்டு.

“ஓ மை காட்” என ஆத்திரமாக கத்தியவன், போட்டிருந்த சிங்ளேட், கால் சட்டையுடன் ரூமுக்கு ஓடி துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு ஜீப்பை விரட்டிக் கொண்டு பறந்தான்.

கோயிலை அவன் அடைந்த நேரம் இன்னும் கலவர பூமியாகத்தான் இருந்தது. எட்வர்டின் ஜீப்பை பார்த்ததும் பரசு ஓடி வந்தான்.

“கிடைச்சாளா?”

“இல்லை துரை. கூட்டத்தோட கூட்டமா அலசிப் பார்த்துட்டேன். நம்ம ஆளுங்களும் தேடறாங்க”

“டேம்மிட் பர்சு!”

இன்னும் வண்ண வண்ணமாக ஆங்கிலத்தில் திட்டினான். அவன் ஜீப்பைப் பார்த்தும் கூட குடிமகன்கள் அடங்கவில்லை. சண்டை விடாமல் நடந்தது.

துப்பாக்கியை வெளியே எடுத்த எட்வர்ட் வானத்தை நோக்கிச் சுட்டான். சட்டென அந்த இடமே மயான அமைதியானது.

“இப்ப எல்லாரும் இந்த இடத்த விட்டு கிளம்பல, நெஞ்சுல சுடுவேன்” எனக் கத்தினான் எட்வர்ட்.

கூட்டம் அடித்துப் பிடித்து ஓடியது.

“நம்ம ஆளுங்கள வீட்டுப் பக்கம், காட்டுப் பக்கம் எல்லாம் அனுப்பு பர்சு. கமான் குவீக். சுபூக்கு மட்டும் எதாச்சும் ஆச்சு, அடுத்த குண்டு உன் நெஞ்சுக்குத்தான்”

பரசு அடித்துப் பிடித்து ஓடினான். எட்வர்டும் சில பேரை அழைத்துக் கொண்டு தீப்பந்தங்களுடன் அருகில் இருந்த செம்பணை காட்டுக்குள் நுழைந்தான்.

மனம் தடதடக்க,

“ப்ளேக்கி!” எனக் கத்தியபடியே தேடினான்.

மற்றவர்களிடம் சுபூ எனச் சொன்னாலும், அவளை ப்ளேக்கி எனதானே அழைக்கிறான்.

பாதி தூரம் காட்டில் அலைந்திருப்பார்கள்.

“துரை” எனச் சன்னமாக குரலோசை கேட்டது.

சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான் எட்வர்ட். அங்கே மரத்தின் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள் சுப்பு. கண்களில் கண்ணீர் கறை. செம்பணை முட்கள் குத்தி பாவாடை சட்டை எல்லாம் அங்கங்கே கிழிந்திருந்தது. முகத்தில், கையிலெல்லாம் லேசாக ரத்தக் கறை.

கூட வந்தவர்களை போகச் சொல்லி கையாட்டியவன், அவர்கள் தலை மறைந்ததும் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

“ப்ளேக்கி, ப்ளேக்கி, ப்ளேக்கி”

சொல்லிக் கொண்டே தலை, முதுகு, கன்னம் எனத் தடவி தடவிக் கொடுத்தான். அவன் நெஞ்சில் சாய்ந்து பயத்தில் அழுது கொண்டே இருந்தாள் சுப்பு.

பின்னால் காலடி சத்தம் கேட்கவும், அவளைத் தள்ளி நிறுத்தியவன் கையை மட்டும் இறுக பற்றிக் கொண்டான். வந்தது பரசுதான்.

“துரை, புள்ள கிடைச்சிட்டதா சொன்னாங்க. இருட்டுது, வாங்க கிளம்பலாம்”

“பர்சு, ஜீப்ல என்னோட கோட் இருக்கும். எடுத்துட்டு வா” என அனுப்பினான்.

“சொல்லு ப்ளேக்கி என்ன ஆச்சு?”

“சண்டை நடந்துச்சா, நான் பயந்து போய் ஓட ஆரம்பிச்சேன். திரும்பிப் பார்த்தா அக்கா, சித்தப்பூ எல்லாரையும் காணோம். அங்கிருந்த அண்ணா கிட்ட இவங்கள பத்தி கேட்டனா. அவங்க என்னை ஒரு மாதிரியா பாத்தாங்க. அப்படியே தோளு மேல கை வச்சாங்க. நான் கைய தட்டி விட்டேன். மறுபடியும் வச்சாங்க. எனக்கு பயமா போச்சு. நான் ஓடுனேன். அவங்களும் தள்ளாடிட்டே என் பின்னால வந்தாங்க. பயந்துட்டு காட்டுக்குள்ள ஓடி வந்துட்டேன். வெளிய வர பயமா இருந்துச்சு. அதான் இங்கயே உக்காந்திருந்தேன்”

மீண்டும் இறுக அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.

“அழாதே ப்ளேக்கி. அதான் நான் வந்துட்டேன்ல. உன்னைப் பத்திரமா பாத்துக்குவேன். இனிமே நான் இல்லாம இப்படி வெளிய போறேன்னு அடம் பண்ண கூடாது. சரியா?”

தலையை சரி என ஆட்டினாள். எட்வர்டுக்கு உள்ளுக்குள் கோபம் கனன்றது. பரசு வந்ததும் கோட்டை வாங்கி அவளுக்கு அணிவித்தவன், கைப்பற்றி அழைத்துச் சென்றான். ஜீப் பின்னால் சுப்பு அமர, முன்னே அமர்ந்து கொண்டான் எட்வர்ட். பரசு ஓட்ட ஜீப் பங்களாவுக்கு விரைந்தது. விஷயத்தை பரசுவிடம் பகிர்ந்தவன்,

“பர்சு, எவன்னு விசாரிச்சு கண்டுப்பிடிக்கற. அவன் உடம்பு நாளைக்கு இந்நேரத்துக்கு ஆத்துல மிதக்கனும். காட் இட்?” எனக் கட்டளையிட்டான்.

“சரிங்க துரை”

சுப்புவின் மேல் எட்வர்ட் காட்டிய இந்த அக்கறை பரசுக்குப் பயத்தைக் கொடுத்தது. சம்பளம் கொடுப்பவனை எதிர்த்துக் கேள்வியும் கேட்க முடியாது. சுப்புவை சீக்கிரம் சேதாரம் இல்லாமல் எப்படி கிளப்புவது என மண்டையைக் குடைய ஆரம்பித்தான் பர்சு.

வீட்டை அடைந்ததும்,

“சுபூவ நான் பார்த்துக்கறேன்! உங்க வீட்டுல போய் இதெல்லாம் சொல்ல வேணாம் பர்சு” எனச் சொல்லி அனுப்பினான் எட்வர்ட்.

உள்ளே நுழைந்தவுடன், தன் கைப்பிடியிலே சுப்புவை தனது அறைக்கு அழைத்து சென்றான். விளக்கு வெளிச்சத்தில் அவளை நன்றாக ஆராய்ந்தான். சிராய்ப்பு காயங்கள் மட்டுமே இருந்தன.

“குளிச்சுட்டு வா ப்ளேக்கி! காயத்துக்கு மருந்து போடறேன்”

“ஊசி போடுவீங்களா?” பயத்துடன், உதடு நடுங்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

மாட்டேன் எனத் தலை அசைத்தவன், வலது கை விரல்களை மட்டும் அவள் இன்னும் மடக்கியவாறு வைத்திருந்ததை கவனித்தான்.

“கைல அடிப்பட்டுருக்கா ப்ளேக்கி?”

“இல்ல, அது வந்து” எனத் தயங்கினாள்.

“சொல்லு”

“துரைக்கு மிட்டாய் வாங்குனேன். அதை கையிலயே இவ்வளவு நேரமா அழுத்திப் பிடிச்சு வச்சிருந்தேன். லேசா கரைஞ்சி போச்சி. இது வேணா. கையிலாம் வேர்துருச்சுல உப்புக் கரிக்கும்”

எட்வர்டுக்கு கண்கள் கலங்குவதைப் போல இருந்தது. கண்களை சிமிட்டி கட்டுப்படுத்தியவன்,

“இவ்வளவு நேரமும் எனக்காக பிடிச்சிருந்தியா கையில?” எனக் கேட்டான்.

ஆமென தலையாட்டினாள் சுப்பு. அவள் கையைப் பிரித்து அந்தப் பிசுபிசுத்த மிட்டாயை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டான் எட்வர்ட். இனிப்பு, உப்பு, எல்லாம் கலந்து அவன் தொண்டையில் அன்பாய் இறங்கியது அந்தச் சுவை.

(தூண்டுவான்..)

Scroll to Top