‘காட்டு பசங்களாச்சே அவனுங்க! வாய் பேசற முன்னுக்கு அருவால்ல பேசும்’ குலை நடுங்கியது அவளுக்கு.
பரசு ஏற்கனவே சுப்பு மேல் கை வைத்தவனை எட்வர்ட் மேலோகத்துக்கு மூட்டை கட்டி அனுப்பி இருந்ததை மனைவிகளிடம் சொல்லி இருந்தான்.
தாங்களாகவே சுப்புவை திருப்பி அனுப்ப முடியாது என்பது இவர்களுக்குப் புரிந்து இருந்தது. அவளாகவே போக வேண்டும் என அடம் பிடித்தால் மட்டுமே, அது நடக்கும் என நம்பினாள் பட்டு. படிக்காவிட்டாலும் பெண்களுக்கான சூட்சும புத்தி இருந்தது அவளுக்கு.
“சுப்பு! உனக்கு உங்க ஆத்தாவ பார்க்கனும்னு ஆசை இல்லையா புள்ள?”
“ஆமா பார்க்கனும் அக்கா. தங்கச்சிங்க நினைப்பாவே இருக்கு. ஆனா நான் இன்னும் வயசுக்கு வரலியே! வந்தாதானே வீட்டுக்கு கூட்டி போறேன்னு ஆத்தா சொன்னுச்சு”
“அதெல்லாம் இன்னும் ரெண்டு வருஷம் ஆகும். அது வரைக்கும் ஆத்தாவ பார்க்காம இருப்பியா?”
“ரெண்டு வருஷம் ஆகுமா?”
கண் கலங்கியது அவளுக்கு.
“இன்னிக்கு துரைகிட்ட, வீட்டுக்கு போக போறேன்னு கேளு. முடியாதுன்னு சொன்னாருன்னா, அடம் பிடிச்சு அழ ஆரம்பிச்சிரு. போக சொல்லிருவாரு.”
“சரிக்கா”
இரவில் அவளுக்கு மருந்து கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தவன் கையைப் பிடித்துக் கொண்டாள் சுப்பு.
“என்ன ப்ளேக்கி? என்ன வேணும்?”
“நான் எங்க வீட்டுக்குப் போறேன் துரை”
அமைதியாக அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தான் எட்வர்ட்.
“ஏன் திடீர்னு?”
“ஆத்தாவ பார்க்கனும், தங்கச்சிங்கள பார்க்கனும். அவங்க நினைப்பாவே இருக்கு துரை”
“ஓ!”
“போகவா துரை?”
“நீ வயசுக்கு வந்தாதான், வந்து கூட்டிட்டுப் போவாங்கன்னு சொன்னியே ப்ளேக்கி!”
“அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்! அது வரைக்கும் நான் எப்படி அவங்கள பார்க்காம இருப்பேன்?”
“ரெண்டு வருஷம் ஆகுமோ? அப்படினு யார் சொன்னா?” என ஆணிவேரைப் பிடித்துக் கேட்டான்.
“அக்காதான் சொன்னாங்க”
“நான் போக வேணாம்னு சொன்னா, என்ன செய்வ ப்ளேக்கி?”
“அடம் பிடிச்சி அழுவேன்”
“அதயும் அக்காதான் செய்ய சொன்னாங்களா?”
“ஆமா! இல்ல, இல்ல நானே தான் சொல்லுறேன்” எனப் பேய் முழி முழித்தாள்.
அவள் தலையில் வலிக்காமல் கொட்டியவன்,
“உனக்கு பொய் சொல்ல வராது ப்ளேக்கி. அதுவும் என் கிட்ட அறவே வராது” எனச் சொன்னான்.
“ஆமா, அக்காதான் அடம் பிடிக்க சொன்னாங்க”
தலையைக் குனிந்துக் கொண்டே சொன்னாள் சுப்பு.
“இப்போ போக வேணாம் ப்ளேக்கி. உங்க ஆத்தா சொன்ன மாதிரி, வந்து கூப்பிடறப்ப போகலாம். சரியா?”
“சரி துரை”
சிறிது நேரம் அமைதியாகப் போனது.
“என்னை விட்டுட்டுப் போறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமா ப்ளேக்கி?”
அவளை ஆழ்ந்து பார்த்தவாறே கேட்டான் எட்வர்ட்.
“சந்தோஷம்னு யார் சொன்னா துரை? இல்லையே! நான் ஆத்தா வீட்டுக்குப் போனா கூட உங்கள நினைச்சிகிட்டே இருப்பேன். இப்போ கூட நீங்க வேலைக்குப் போயிட்டா, நீங்க எப்ப வருவீங்கன்னு வாசலையே பார்த்துட்டு இருப்பேன். துரை பக்கத்துல இருக்கறப்போ நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?”
கைகளைப் பெரியதாக விரித்துக் காட்டினாள். அவள் சொல்வதும் நிஜம்தான். எந்த நேரத்துக்கு அவன் வீட்டுக்கு வந்தாலும், ஜீப் சத்தம் கேட்டு ஓடோடி வருவாள் சுப்பு. அவன் கையில் இருக்கும் பைல்களை வாங்கி கொண்டு போய் அவன் ரூமில் வைப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு.
“என் கூட இருக்கறப்போ ஏன் இவ்வளவு சந்தோஷம்?”
அவனும் கைகளைப் பெரிதாக விரித்துக் காட்டினான்.
“படம் பாக்கற பொட்டிய என்னை தொட விடறீங்களே அதனால. அப்புறம் சிவப்பு மிட்டாய் பாட்டில் எனக்கே எனக்கு குடுத்துருக்கீங்களே அதனால. அப்புறம் என்னை அழகி அழகின்னு உங்க பாஷைல கூப்புடுறீங்களே அதுக்காகவும்தான்”
சிரிப்பு வந்தது அவனுக்கு.
“ப்ளேக்கி, ப்ளேக்கி, ப்ளேக்கி” எனச் சிரிப்புடனே கூப்பிட்டான்.
முகம் பூவாய் மலர்ந்தது அவளுக்கு.
“நான் அம்புட்டு அழகா துரை?”
“ஆமா ப்ளேக்கி! நான் பார்த்த மனுஷங்களிலேயே நீதான் ரொம்ப அழகு. கள்ளம் கபடம் இல்லாத அழகு” என மென்மையாகக் கன்னத்தைத் தடவினான்.
“நீங்கதான் அழகு துரை. அந்த வெள்ளை மேகம் மாதிரி அழகோ அழகு”
அவளும் அவன் கன்னத்தைத் தடவினாள்.
“தொட கூடாதுனு சொல்லிருக்கேன்ல! என் கூட இருக்க சந்தோஷமா இருக்குன்னா, எப்பவும் இங்கயே இரு ப்ளேக்கி. சரியா?”
“இல்ல, இல்ல. ஆத்தா வந்து கூப்டா போயிருவேன் துரை” எனக் கறாராகச் சொன்னாள் சுப்பு.
“கூப்பிடறப்ப பார்த்துக்கலாம். இப்ப தூங்கு”
அவன் கையைப் பிடிக்க வந்தவளின் கரங்களை தட்டி விட்டான் எட்வர்ட்.
“ஏன் துரை? நேத்து மாதிரி பிடிச்சிக்கறேனே, நல்லா நிம்மதியா தூக்கம் வந்துச்சு. கை குடுங்க துரை” எனக் கெஞ்சினாள் சுப்பு.
முடியாது எனத் தலையாட்டியவன்,
“நீதான் ஆத்தா வந்தா என்னை விட்டுட்டுப் போயிருவியே! அப்போ யார் கைய பிடிச்சிக்குவ?” என முறுக்கிக் கொண்டான்.
கையைக் கொடுக்காததால் அந்த புறம் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்துக் கொண்டாள்.
“ப்ளேக்கி! சரி, சரி கோச்சிக்காத. இந்தா கையப் பிடிச்சிக்க”
சிரித்தபடி திரும்பியவள், அவன் கையைப் பற்றி கொண்டு தூங்கிப் போனாள். அவள் கோபித்துக் கொண்டால், எட்வர்ட் இறங்கி வருவதை அறிந்த அந்த நாளில் இருந்து அடிக்கடி அதைப் பயன்படுத்த ஆரம்பித்தாள் சுப்பு. பல சமயங்களில் விட்டுக் கொடுப்பவன், சில சமயங்களில் மிரட்டி வைப்பான். நாளுக்கு நாள் அவர்களின் பாசம் என்பதா, நட்பு என்பதா அதிகரித்துக் கொண்டே வந்தது.
சுப்புவிடம் மூட்டிக் கொடுத்தது பட்டு என்பதை அறிந்து கொண்டவன், பரசுவை வார்த்தைகளால் பஸ்பமாக்கி இருந்தான்.
“பர்சு”
“சொல்லுங்க துரை”
“ஆத்து தண்ணி ஆழமா இருக்கா இல்லையான்னு எனக்கு சந்தேகமா இருக்கு”
‘திடீர்னு துரைக்கு எதுக்கு இந்த சந்தேகம்?’
“இப்போ உம்முன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க துரை, ஆளை இறக்கறேன் ஆத்துல. அப்போ தெரியும் ஆழமா இல்லையான்னு”
“வேற ஆள் எதுக்கு பர்சு? அதான் நீ இருக்கியே! உன்னை இறக்கிறலாமா?”
“துரை!!!” உடம்பு லேசாக நடுங்கியது பரசுவுக்கு.
“சுபூ விஷயத்துல நீயும் உன் ரெண்டு வைப்பும் ஒதுங்கி இருக்கறதுதான் உங்களுக்கு நல்லது. நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?”
முழித்தவனிடம்,
“உன் முதல் வைப் கிட்ட நான் சொன்னத சொல்லு, அவங்களுக்குப் புரியும்” என்றவன்,
“ஜீப்ப எடு பர்சு. ஆத்து பக்கம் போய் பாத்துட்டு வரலாம்” என்றான்.
“ஐயோ துரை! என்ன விட்டுருங்க. நான் புள்ளக்குட்டிக்காரன்” எனக் காலில் விழுந்து விட்டான் பரசு.
“எழுந்திரு பர்சு! இனிமே உனக்குக் குடுத்த வேலைய மட்டும் பாரு” எனக் கடுமையாக எச்சரித்தான் எட்வர்ட்.
அன்றிலிருந்து பட்டுவும், பவுனும் சுப்புவிடம் எப்பொழுதும் போல் பழகினாலும் எட்வர்டை பற்றி எதுவும் தூண்டித் துருவுவது இல்லை. தங்கள் மாங்கல்யம் சுப்புவின் வாழ்க்கையைவிட முக்கியம் என தோன்றிவிட்டது அவர்களுக்கு.
இப்படியே எந்தச் சிக்கலும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
நடு இரவில் அறை கதவை தட்டும் மெல்லிய சத்தத்தில் பட்டென எழுந்து அமர்ந்தான் எட்வர்ட். மேசையில் இருந்த கடிகாரம் காலை மணி இரண்டு எனக் காட்டியது. கதவைத் திறந்த சுப்பு ஓடி வந்து எட்வர்டைக் கட்டிக் கொண்டாள். ஏற்கனவே, கண்கள் கலங்கி இருந்தன. தேம்பியபடி தன்னைக் கட்டிக் கொண்டிருக்கும் சுப்புவைத் தட்டிக் கொடுத்தான் எட்வர்ட்.
“என்னாச்சு ப்ளேக்கி?”
“துரை நான் சாகப் போறேன்!”
(தூண்டுவான்!!!)
