அத்தியாயம் 6
“தானத்துல சிறந்தது அன்னதானம்னு சொல்வாங்க என் ஆச்சி! வீட்டுக்கு வரவங்களுக்கு சோத்தப் போடாம அனுப்ப மாட்டாங்க! ஆச்சி மாதிரி வருமா, ஆச்சின்னா ஆச்சித்தான்னு அப்படிலாம் புகழ்ந்திருக்காங்க எல்லாரும்! ஆனா எனக்கு எட்டு வயசு இருக்கறப்ப, ஆச்சி கிட்னி பெயிலியர்ல போய் சேர்ந்துட்டாங்க! அவங்களுக்கு டோனர் கிடைக்கல! எங்க வீட்டுல உள்ளவங்களதும் அவங்களுக்கு ஒத்து வரல! இப்ப வளந்து நிக்கற எனக்குத் தோணறது என்ன தெரியுமா? தானத்துல சிறந்த தானம் அன்னதானம் இல்ல! உடல் உறுப்புத்தானம்தான். மண்ணும், நெருப்பும் சாப்பிட்டுப் போறத இன்னொரு மனுஷன் வாழக் குடுத்துட்டுப் போறதுதான் பெரிய தானம்! நான் ஆர்கன் டோனரா பதிஞ்சிட்டேன்! செத்தாலும் நான் வாழ்ந்துட்டுத்தான் இருப்பேன்!”
(பாட்காஸ்ட் பை பரதேசி!!!)
(நானும் ப்ளேட்ஜ் பண்ணிட்டேன் உடல் உறுப்பு தானத்துக்கு! பெரிய போராட்டமே நடந்தது வீட்டுல! எடுத்து சொல்லியும் பாப்பாக்கு ஒரே அழுகை, ஏன் இப்படி செஞ்சீங்கன்னு! இன்னும் கொஞ்சம் வளந்தா புரிஞ்சுப்பான்னு நினைக்கறேன்!)
அந்த ஹோட்டல் அறை வாயிலில் நின்றுக் கதவைத் தட்டினான் விஷ்ணு. எந்தச் சத்தமும் இல்லாமல் போக, கொஞ்சம் இடைவெளி விட்டு மறுபடி தட்டினான். அப்பொழுதும் பதில் இல்லை. பெருமூச்சுடன், கையில் இருந்த ஸ்பேர் கீ கார்ட் கொண்டு அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் இவன்.
மெல்லிருட்டாய் இருந்தது அறை! சத்தமில்லாமல் அடி எடுத்து வைத்துக் கட்டிலை நெருங்கினான் இவன். அங்கே மருந்து மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள் ஊர்மி. கை ஒன்று தொட்டிலில் இருக்க, அதை வயிற்றின் மேல் போட்டிருந்தவள், இன்னொரு கையை தலையணை அடியில் வைத்திருந்தாள். தூக்கத்தில் இருந்தாலும், முகத்தில் வலியால் ஏற்பட்ட இறுக்கம் தெரிந்தது.
பக்கத்தில் இருந்த மேசையில், பகலில் ரூம் சர்விஸ் ஆட்களால் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த உணவு அப்படியே மூடிக் கிடந்தது. தண்ணீர் பாட்டில் மட்டும் காலியாகி இருந்தது. அறையில் இருந்த போன் எடுத்து ரூம் சர்வீசை அழைத்தான் விஷ்ணு. பதினைந்து நிமிடங்களில், கதவுத் தட்டும் மெல்லியச் சத்தம் கேட்க, வீணாகி இருந்த உணவை எடுத்துப் போய் அந்த ஆளிடம் கொடுத்து, அவன் கொண்டு வந்திருந்த உணவை அறைக்குள் எடுத்து வந்தான். ட்ரேயை மேசை மேல் வைத்தவன், ஊர்மியை நெருங்கி வந்து கட்டிலில் அமர்ந்தான்.
“ஊர்வசி!! ம்ப்ச்! அந்தப் பேரே வந்து தொலைக்குது! ஊர்மிளா!!” என மெல்லியக் குரலில் எழுப்பினான் அவளை.
இரண்டு தடவை அழைத்ததும்தான், ஹ்ம்ம் எனக் குரல் கொடுத்தாள் அவள்.
“எழுந்துக்கோ ப்ளீஸ்!”
“ஹ்ம்ம்!” என்றவளுக்குக் கண்களைத் திறக்க முடியவில்லை.
“ஊர்மிளா!” என மீண்டும் அழைத்தான் விஷ்ணு.
சிரமப்பட்டு விழி மலர்த்தியவள், அவனை அங்கே பார்த்துப் புரியாமல் விழித்தாள். சட்டென விழிகளில் கலக்கம் பரவியது.
“ஹேய்! கூல், கூல்! சாப்பாடு குடுக்கத்தான் வந்தேன்! தப்பா எடுத்துக்காதே ஊர்மி” என்றவனின் பரிவானக் குரல் தூக்கத்தில் மசமசத்த அவள் மூளைக்குள் சென்று, இவன் ஆபத்தானவன் இல்லை என உணர்த்தியது.
மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள் ஊர்மிளா.
“தேங்க்ஸ் ட்ரெய்னர்! நானே சாப்பிட்டுப்பேன், நீங்க போங்க! போகிறப்ப அந்த எக்ஸ்ட்ரா கீ கார்ட்ட டேபிள்ல வச்சிட்டுப் போங்க”
“நீயா சாப்பிட்ட லட்சணத்தத்தான் நான் பார்த்தேனே! பகல்ல வச்ச சாப்பாடு அப்படியே வீணாகிக் கிடக்கு! சாப்பிடாம எப்படி வலிக்கு மருந்து போடுவ! புண்ணாகிடும் வயிறு ஊர்மி!” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் இவள்.
அவன் முகத்தில் தெரிந்த அக்கறை இவளுக்குச் சக்கரையாய் இனிக்கவில்லை. மாறாக ஆயாசமாக இருந்தது. முந்தைய தினம் அவன் செய்திருந்த உதவி கண் முன்னால் வந்து போக, முகத்தில் அடித்தது போல பேசவும் முடியவில்லை.
பெருமூச்சொன்றை வெளியிட்டவள்,
“முகம் கழுவிட்டு வரேன்” என மெல்ல எழுந்து பாத்ரூம் நோக்கி நடந்தாள்.
“எதாச்சும் ஹெல்ப் வேணுமா ஊர்மி?”
“என்ன ஹெல்ப்? மூஞ்சுக்கு சோப் போடப் போறீங்களா, இல்ல பல்ல தேய்ச்சு விடப் போறீங்களா? ஒத்தைக் கைல நானே செஞ்சிப்பேன்” எனக் கடுகடுத்தவள், பாத்ரூம் கதவை மூடினாள்.
யாருக்கும் இடத்தைக் கொடுக்க இஷ்டப்படவில்லை இவள். நாளை மடத்தைக் கேட்டால், என்ன செய்வது எனும் பயம்தான். தட்டுத் தடுமாறி இயற்கை உபாதைகளை முடித்து, முகத்தைக் கழுவி, கலைந்து கிடந்த முடிகளை ஒதுக்கி விட்டாள். முகம் கொஞ்சமாய் வீங்கிக் கிடந்தது. காலில் பட்டிருந்த காயம் வலியைக் கொடுத்தது. கையோ விண்ணென வலியால் தெறித்தது. காய்ச்சல், சளி வந்தால் கூடவே இருந்து பார்த்துக் கொள்ள ஆளில்லாதவள் இவள். ஆகையால் முடிந்த அளவு பாதுகாப்பாய் தன்னைப் பார்த்துக் கொள்வாள். சரியான உணவு நேரம் அமையா விட்டாலும், விட்டமின்களை மறக்காமல் எடுத்துக் கொள்வாள். சின்னதாய் நோய் ஆரம்பிக்கும் போதே, உடனே மருத்துவரைப் பார்த்துச் சரி செய்து கொள்வாள். எப்படி ஜாக்கிரதையாக இருந்தாலும் விபத்தென்பதைத் தடுக்க முடியாதல்லவா!
விபத்தா இது? தேஜா எனும் கயவனின் பழி தீர்க்கும் படலம் அல்லவா இது!
‘பரதேசி! ஆள் அதுக்குள்ள கிளம்பிப் போய்ட்டான்! கைல மட்டும் மாட்டிருந்தான், பிச்சிப் பேன் பார்த்திருப்பேன்! பேடிப்பைய! நோ சொன்னா, நோவுது இவனுங்களுக்கு! உடம்பு மட்டும் சரியாகட்டும்! உனக்கு வேட்டு வைக்கல, என் பேரு ஊர்மிளா இல்ல’ என எண்ணிக் கொண்டே பல்லைத் துலக்கினாள்.
வெளியே இருந்தவன் ஏதோ பாடலை ஹம்மிங் செய்வது கேட்க,
“இவன நல்லபடி எப்படி தொரத்தி விடறது!” என மெல்ல முனகிக் கொண்டாள் ஊர்மி.
முந்தைய தினம் அவனது கை பலத்தில்தான் படிகளைக் கடந்து மேலே ஏறி வர முடிந்தது இவளால். நுழைவாயிலில் கார் ஒன்று இவர்களுக்காகக் காத்திருக்க, அதை கொண்டு வந்தவனிடம்,
“டீம்ல உள்ளவங்க எல்லாரையும் கரேக்டா பஸ் ஏத்தி கொண்டு போய் ரிசார்ட்ல சேர்த்திடு” எனச் சொன்னான் விஷ்ணு.
அவன் தலையாட்டியபடி செல்ல, இவளைப் பின் இருக்கையில் வசதியாய் அமர வைத்து விட்டு, வேகமாய் காரை இயக்கினான்.
“கொஞ்ச நேரத்துல கிளினிக் போய்டலாம் ஊர்மி!” என ரியர் வியூ கண்ணாடி வழியாக இவளைப் பார்த்துச் சொன்னான் விஷ்ணு.
சரியெனத் தலையை மட்டும் ஆட்டினாள் இவள். கார் அவன் கையில் சீறிப் பாய்ந்தது. சாப்பா டவுனில் இருந்த ஒரு கிளினிக் முன் காரை பார்க் செய்த விஷ்ணு, வேகமாய் வெளியே வந்து இவளை மெல்ல இறக்கி விட்டான். கைத்தாங்கலாய் அழைத்துப் போய் ரிஷப்சனில் ஒரு நாற்காலியில் அமர வைத்தான். ஊர்மியின் பேக்கில் தேடி பாஸ்போர்ட்டை எடுத்து ரிஜிஸ்ட்டர் செய்தவன் எதற்குமே அவளை அலைய விடவில்லை. வலியில் அமர்ந்திருந்தவள், அவன் ஓடிய ஓட்டத்தை அமைதியாய் பார்த்திருந்தாள்.
இது வரை தனக்கானதை இவளேத்தான் பார்த்திருக்கிறாள். என்னவோ அவன் ஓடி ஓடி இவளுக்கென செய்வது பிடிக்கவே இல்லை பெண்ணுக்கு! உடல் ஒத்துழைக்க மறுக்க, பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஊர்மி. ட்ரீண்ட்மெண்டுக்கு இவள் பெயரைப் பதிந்து விட்டு விஷ்ணு வரவும், இவள் பெயர் அழைக்கப்படவும் சரியாய் இருந்தது.
“போகலாம் வா” என இவளை மெல்ல நடத்தி டாக்டரின் அறைக்கு அழைத்துப் போனான்.
அவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து விட்டு, ஹெர்லைன் ஃப்ராக்சர்தான் என்றார்.
“அதுவாவே ஹீல் ஆகிடும்! நான் களிம்பு, மருந்துகள் எல்லாம் தரேன். ஒரு நாலஞ்சு நாளைக்குக் கைய ரொம்ப அசைக்க வேணாம்” எனச் சொன்னபடி இவன் போட்டு விட்டிருந்த சட்டை ஊஞ்சலை அகற்றி வேறு ஸ்லிங் போட்டு விட்டார் அவர்.
அவனது சட்டையை இவள் கையில் கொடுக்க, அப்பொழுதுதான் நன்றாக பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்த்தாள் ஊர்மிளா. உள் பனியனோடு நின்றிருந்தான் அவன். பிறந்தநாள் பார்ட்டியில் ஒல்லியாய் தெரிந்தவன், இப்பொழுது அவன் வளர்த்திக்கு ஏற்ற உடம்போடு, திடகாத்திரமாகத் தெரிந்தான். பாடி பில்டர் போல புஜங்கள் உருண்டுத் திரண்டு நிற்கவில்லை ஆனால் திண்ணெனத் தெரிந்தன. சற்று முன் அவன் மேல் சாய்ந்து வந்த போது, ஒரு பாதுகாப்பு உணர்வை அந்தப் புஜங்கள் இவளுக்குக் கொடுத்ததை உணர்ந்தே இருந்தாள் இவள். சட்டென முகம் கசங்கிப் போக, வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் ஊர்மி.
அவள் பார்வைப் போன திசையையும், கண்களில் வந்து போன மின்னலையும், பின் சட்டென இருண்ட முக பாவனையும் பார்த்துக் கொண்டே இருந்த விஷ்ணுவுக்குக் குழப்பமாய் இருந்தது!
