IMTP Epi 19(1)

அத்தியாயம் 19

பட்டுவைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு கூடவே பயமும் வந்தது சுப்புவுக்கு.

“அக்கா!” எனச் சொல்லி வாய் மூடுவதற்குள் பளீரென அறைந்திருந்தாள் பட்டு.

அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பயந்து போய் பார்த்தாள் சுப்பு.

அவளின் குரல் கேட்டு துயில் கலைந்து வெளியே வந்த எட்வர்ட், அடுத்த அறை விழுவதற்குள் சுப்புவைப் பிடித்து தன் பின்னால் நிறுத்தி இருந்தான்.

தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவன்,

“ஹவ் டேர் யூ!” எனப் பட்டுவைப் பார்த்து கர்ஜித்தான்.

முகம் சிவக்க, உறுத்து விழித்தவனின் கோபத்தில் சர்வாங்கமும் நடுங்கியது பட்டுவுக்கு. தன் முதுகில் ஒண்டித் தேம்பிக் கொண்டிருக்கும் சுப்புவின் அழுகை வேறு அவன் கோபத்துக்கு மேலும் தூபம் போட்டது.

“என் பொண்டாட்டி மேல கை வைக்க நீ யாரு?”

பட்டுவை மட்டும் எப்பொழுதும் கொஞ்சம் மரியாதையாய் நடத்தும் எட்வர்ட், கோபத்தில் அதை எல்லாம் காற்றில் பறக்க விட்டிருந்தான்.

கை நீட்டும் அளவுக்கு வந்த ஆத்திரத்தைக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அவன் உடல் மொழி காட்டிக் கொடுத்தது.

சுப்புவைப் அப்படி ஒரு கோலத்தில் பார்த்த அதிர்ச்சியில்தான் கை ஓங்கி இருந்தாள் பட்டு. அவளைக் கொட்டுவதையே பொறுத்துக் கொள்ள முடியாமல் அடைக்காக்கும் அவன் குணம் தெரிந்தும், இப்படி உணர்ச்சிவசப்பட்டு கை நீட்டி இருந்ததை நினைத்து அவளே ஆடிப் போயிருந்தாள்.

அவனின் கத்தலில் பயம் பக்கென பற்றிக் கொள்ள, தன்னிச்சையாக சில அடிகள் பின்னால் எடுத்து வைத்தாள் பட்டு. காதில் நுழைந்த எட்வர்டின்  வார்த்தைகள் மூளையை எட்ட சில நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு. அந்த வார்த்தைகள் புரிந்த வேளை, அவள் முகம் பயம் கலந்த அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

“பொண்டாட்டியா?”

குரல் நடுக்கத்துடன் வெளி வந்தது பட்டுவுக்கு.

“ஆமா, பொண்டாட்டிதான். என் பொண்டாட்டி! இனிமே அவதான் உன்னோட துரையம்மா. இந்த புரூக்லேண்ட்ஸ் எஸ்டேட்டுகே துரையம்மா!”

தன் முதுகில் நடுங்கியவாறு ஒண்டிக் கொண்டிருந்தவளை, முன்னே இழுத்து அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.

“அழாதே ப்ளேக்கி. இனிமே யாரும் உன் மேல கை வைக்க மாட்டாங்க. அப்படி வச்சவங்க கண் காணாம போயிருவாங்க”

அவள் கண்ணீரைத் துடைத்துத் தேற்றினான்.

பார்வை மட்டும், சொன்னது புரிந்ததா என்பது போல பட்டுவை எரித்தது.

“அக்கா இருக்காங்க, என்னை விடுங்க துரை!”

பட்டுவின் முன் அவன் அணைத்திருந்தது கூச்சத்தைக் கொடுக்க நெளிந்தாள் சுப்பு.

அவள் கூச்சத்தை மதித்து அவளைத் தள்ளி நிறுத்தினாலும், கையை இறுக்கமாக பிடித்திருந்தான் எட்வர்ட்.

அவன் விலக்கியதும், பட்டுவின் பார்வை சுப்புவின் கழுத்தை ஆராய்ந்தது. அவள் தேடியது அங்கில்லாமல் முகம் மாறியது.

பட்டுவின் பார்வையைக் கண்டு கொண்ட எட்வர்ட், சுப்புவின் கையைத் தூக்கிக் காட்டினான்.

“சர்ச்சுல வச்சு மோதிரம் போட்டுருக்கேன். கையெழுத்துப் போட்டு கல்யாணத்தை பதிஞ்சிருக்கேன். நம்புறீங்களா இல்ல ஆத்து வழியா சர்ச்சுக்கு கூட்டிட்டு போகனுமா?” எனக் கிண்டலாக கேட்டான்.

‘கல்யாணமே பண்ணிக்கிட்டாங்களா? தாலி இல்லாம என்னாத்த கல்யாணமோ! திக்கு திக்குன்னு இருக்கே. இவ ஜாதிக்காரங்களுக்கு தெரிஞ்சா இத கல்யாணம்னு ஒத்துக்குவாங்களா? நாங்கதான் கூட்டி குடுத்துட்டோம்னு நம்மள உரிச்சு ஊறுகாய் போட்டுருவாங்களே! மனுஷ ஊறுகா நல்லா இருக்காதுன்னு அந்தக் காட்டுப் பயலுகளுக்கு யாரு விளக்கறது!’

பயப்பந்து உருண்டது அவளுக்குள்.

“மத்தவங்க மாதிரி இல்லாம, உங்க இனத்துல நீங்க கொஞ்சம் புத்திசாலின்னு நினைச்சேன். அது தப்புன்னு நிரூபிச்சிட்டீங்க. இத்தனை வருசமா இங்கிருக்கேனே வேற பொம்பளைங்க யாரயாச்சும் கூட்டிட்டு வந்துருக்கேனா? அப்படிப்பட்டவன் இவ பின்னாலயே சுத்தி வரத உத்து உத்து பார்த்தீங்களே, அப்ப கூட என் மனசு புரியலயா? கெட்ட எண்ணம் இருந்தா இவ்வளவு நாள் என் கூட தனியாதானே இருந்தா, விட்டு வச்சிருப்பனா? யோசிக்க வேணாம்? உங்க முகத்த பாக்கவே கோபமா வருது. இனிமே நீங்க யாரும் இங்க வேலைக்கு வர வேணாம். எஸ்டேட்ட விட்டு வெளிய போங்க! அவுட்!” எனக் கையை வாசலை நோக்கிக் காட்டினான்.

வாயடைத்துப் போனாள் பட்டு.

‘இத்தனை வருஷமா பொம்பள சகவாசம் இல்லாம இருந்துட்டு திடீர்னு இந்தப் புள்ள மேல கண்ண வச்சா அது காதலா இல்ல கர்மமான்னு மைப் போட்டா கண்டுபுடிப்பேன்? இதுவாதான் இருக்கும்னு லேசா சந்தேகம் இருந்துச்சுதான். நான் கட்டன வடிகட்டன முட்டாளுதான் துரைக்கு நம்ம இனத்தலாம் புடிக்குமான்னு சொல்லி சொல்லியே என் வாய அடைச்சிட்டான்’

மனதுக்குள் பரசுவுக்கு பால் ஊற்றி அர்ச்சனை செய்தாள் பட்டு.

“இல்ல துரை, வேணாம்! அக்காவ போக சொல்லாதீங்க. தெரியாம அடிச்சிட்டாங்க. எனக்கு வலிக்கவே இல்ல! எறும்பு கடிச்ச மாதிரிதான் இருந்துச்சு” எனக் கெஞ்சினாள் சுப்பு.

“எறும்பு கடிச்சா இப்படிதான் தேம்பி தேம்பி அழுவியா? முடியாது ப்ளேக்கி. நீ எது சொன்னாலும் கேப்பேன். இது முடியாது”

“அப்போ நானும் அக்கா கூட போயிருவேன்” எனக் கையை நீட்டி மிரட்டினாள் அவள்.

சுப்புவை நேராக நோக்கியவன்,

“என்னை மீறி உங்கக்கா உன்னைக் கூட்டிட்டுப் போயிருவாங்களா?” என இவளிடம் சிரித்தாலும், பட்டுவைச் சவாலாகப் பார்த்தான்.

‘சர்ச்சுக்கே ஆத்து வழியா கூட்டிப் போறேன்னு சொன்ன ஆளு, உன்னை இங்கருந்து நகர்த்துனா எங்க குடும்பத்துக்கே ஆத்துல சமாதி கட்டிருவாரு புள்ள. சும்மா இருக்கற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி கணக்கா, நீ வேற உசுப்பேத்தி விட்டுறாத!’ எனச் சுப்புவைப் பாவமாகப் பார்த்தாள் பட்டு.

“பாருங்க துரை! அக்கா எவ்வளவு பாவமா பார்க்கறாங்க. நான் அவங்க கூடவே போறேன்!”

‘அடி ஆத்தி! சமாதிய சங்கூதி அழைக்கிறாளே இவ’

பார்வையைச் சுப்புவிடம் திருப்பியவன்,

“விட்டுப் போக மாட்டேன்னு வாக்கு குடுத்துருக்க. மறந்துட்டியா ப்ளேக்கி?” என்றான்.

“நீங்க அக்காவ இருக்க சொன்னா நான் ஏன் போவ போறேன்?  நீங்கதான் என்னை வாக்கு தவற வைக்கறீங்க. நீங்க செய்யறதுதான் தப்பு. நேத்தும் அப்படிதான் மொத ராத்திரிய தப்பு தப்பா பண்ணீங்க!”

இன்னும் பேச வந்தவள் வாயைக் கப்பென மூடினான் எட்வர்ட்.

கோப முகம் மாறி புன்னகை எட்டிப் பார்த்தது அவன் முகத்தில்.

“சரி கோபப்படாத! உங்கக்கா இங்கயே இருக்கட்டும். இப்போ போய் நீ குளிச்சுட்டு சாப்பிடு”

சுப்புவின் பயமறியா பேச்சையும், எட்வர்டின் விட்டுக் கொடுத்தலையும் அதிசயமாக பார்த்திருந்தாள் பட்டு.

அவரை நோக்கி திரும்பியவன்,

“உங்க துரையம்மாவுக்கு சாப்பாடு செஞ்சு குடுங்க. வீட்டு வேலைக்கு எல்லாம் வேற ஆள் ஏற்பாடு செஞ்சிருக்கேன். நாளையில இருந்து வருவாங்க. இனிமே என் பொண்டாட்டிய நல்லா பார்த்துக்கறது மட்டும்தான் உங்க வேலை”

நல்லா எனும் வார்த்தையை அழுத்தி சொன்னான்.

லேசாக விரல் தடம் பதிந்திருந்த சுப்புவின் கன்னத்தை வருடிக் கொடுத்தவன், மீண்டும் பட்டுவை முறைத்து விட்டு ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.

“அக்கா!”

பிரமைப் பிடித்தது போல நின்றிருந்தார் பட்டு.

“அக்கா!!!!”

“என்னடி சுப்பு? இல்ல, இல்ல துரையம்மா”

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டது சுப்புவுக்கு. 

“துரை சொன்னாருன்னு அப்படிலாம் கூப்டாதீங்க! எனக்கு புடிக்கல. நான் எப்பவும் சுப்புதான்”

பட்டுவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் சுப்பு. பட்டுவின் கைகள் தன்னாலேயே மேல் எழும்பி அவள் முதுகைத் தடவிக் கொடுத்தது.

“என் மேல கோபமாக்கா?”

“உன் மேல கோபப்பட்டு என்ன செய்ய? விதிச்சது தானே நடக்கும்னு என் மரமண்டைக்கு விளங்காம போச்சு. புத்தி கெட்டு போய் அடிச்சுப்புட்டேன். மன்னிச்சுடு புள்ள. இனி என்ன நடக்கப் போகுதோ, ஏது நடக்கப் போகுதோ! மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்னு போக வேண்டிதான். நீ வந்து குளி புள்ள”

கடவுள் மேல் பாரத்தைப் போட்டு வேலையைக் கவனிக்கப் போனாள் பட்டு.

அதற்கு பிறகு மற்றவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் சுப்புவின் நிலை தலைகீழாக மாறியது.

சுற்றி சுழன்று வேலை செய்பவளுக்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டது. அவளை எந்த வேலையும் செய்ய அனுமதிக்கவில்லை எட்வர்ட். கெஞ்சி, மிரட்டி, அழுது, அடம் பிடித்து சமையல் வேலையை மட்டும் தக்க வைத்துக் கொண்டாள் அவள்.

வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் இவளை அதிசயமாகவும், பொறாமையாகவும் பார்த்துச் செல்வார்கள். பட்டுவும், பவுனுவையும் தவிர மற்றவர்கள் அவளைப் பார்க்கும் பார்வையில் ஒரு மரியாதை வந்திருந்தது.

Scroll to Top