IMTP Epi 19(2)

எட்வர்டும் முதல் ராத்திரி அன்று நடந்தது போல் மறுபடியும் நடந்து கொள்ளாதது அவளுக்கு அவன் மீது இருந்த சிறு பயத்தை தெளிவித்திருந்தது. அவனை ஒதுக்கி வைக்காமல் முன்பு இருந்தது போலவே பழக ஆரம்பித்தாள் அவள்.

இரவில் இருவரும் ஒரே அறையில் இருந்தாலும், கொடுத்த சத்தியத்தை கஷ்டப்பட்டுக் காப்பற்றிக் கொண்டிருந்தான் எட்வர்ட். பரிசோதனை எலியாக அவனைப் பயன்படுத்தி, முத்த ஆராய்ச்சி நடத்தும் சுப்புதான் அவனின் கஷ்டத்துக்கு காரணம். முத்தா, முத்தா என இவனைப் பித்தாக்கிக் கொண்டிருந்தாள் சுப்பு.

மத்தியான வேளையில், வாசலில் ஹாரன் சத்தம் கேட்க வெளியே ஓடி வந்தாள் சுப்பு. அழகிய வெள்ளை நிற கார் ஒன்று அங்கே நின்றிருந்தது. ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கிய எட்வர்ட், இங்கே வா எனக் கையாட்டினான்.

ஓடி வந்து அவன் அருகில் மூச்சு வாங்க நின்றவள்,

“துரை, காடி புதுசா இருக்கு!” எனக் கேட்டு சுற்றி சுற்றி பார்த்தாள்.

“நம்ம கார்தான் ப்ளேக்கி. உனக்கு பிடிக்கும்னு வெள்ளைக் கலர்ல வாங்கினேன். பிடிச்சிருக்கா?”

“ரொம்ப அழகா இருக்கு உங்கள மாதிரியே!”

“எத பார்த்தாலும் என் அழகுலதான் வந்து நிப்பியா?” எனச் சிரித்தான்.

“இது மோரிஸ் மைனர் கார். இந்த மாடல் இங்க கிடைக்க கொஞ்ச நாள் ஆகிருச்சு”

“மோரிசுன்னு ஒரு மைனரா? எங்க எஸ்டேட்டு மைனருக்கு எம்புட்டு அழகா மாயாண்டின்னு பேரு வச்சிருக்காங்க தெரியுமா! உங்க ஊருல பேரு வைக்கிறதே சரியில்ல துரை. மோரிசு, கோரிசுன்னு!”

“ஆமா ப்ளேக்கி. எங்க ஊரு பேருங்களே சரியில்லதான். இனிமே உன்ன கேட்டே பேரு வைக்க சொல்லலாம். புது கார்ல இன்னிக்கு ஒரு ரைட் போலாமா பீச்சுக்கு?”

“பீச்சுனா?”

“கடல். மோரிப்(எஸ்டேட் தாண்டி அரை மணி நேர பயணத்தில் உள்ளது இந்தக் கடல்) கடலுக்கு போவோம். போய் கிளம்பு ப்ளேக்கி”

“நெஜமா கடலுக்குப் போறமா? நான் கடல பாத்ததே இல்ல துரை” என உற்சாகமாக உள்ளே ஓடியவள், மீண்டும் திரும்ப அவனிடம் ஓடி வந்தாள்.

“என்ன ப்ளேக்கி?”

“சித்தப்பூ புள்ளைங்கள கூட கூட்டிக்கலாமா துரை?”

“நோ!”

“ஏன் நோ? மூனு முத்தாவுக்கு மேல கேட்டாலும் இப்படிதான் நோ சொல்லுறீங்க! எப்ப பாரு நோ சொல்லுறவங்க கண்ணு நொள்ளையா போயிருமாம்!”

முகவாய் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள்.

“ஏ ப்ளேக்கி! எனக்கு சாபம் குடுக்கறியா?” என்றவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“சாபம்லாம் இல்ல. சும்மா சொன்னேன்! கூட்டிக்கலாம் துரை. ப்ளீசு துரை!” எனக் கண்களைக் சுருக்கி கெஞ்சினாள்.

“ப்ளேக்கி! உன் கூட தனியா ஜாலியா போகனும்னு ஆசைப்படறேன். அவங்கலாம் எதுக்கு? எனக்கு பிடிக்காது” என முகத்தை சுளித்தான் எட்வர்ட்.

“நானும் அவங்க மாதிரிதானே இருக்கேன்! என்னை மட்டும் ஏன் பிடிக்குது?” என முறைத்தவாறே கேட்டாள்.

“அதானே, உன்னை மட்டும் ஏன் பிடிக்குது? அதுக்குப் பதிலதான் இன்னும் தேடிட்டு இருக்கேன் ப்ளேக்கி”

அவளின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான்.

“வரட்டும் துரை. பாவம்ல அவங்க. என்ன மாதிரியே கடல பார்த்துருக்க மாட்டாங்க”

தலையை மறுப்பாய் ஆட்டினான்.

“முத்தா குடுத்தா, அவங்கள கூட்டிட்டு போக சரி சொல்லுவீங்களா துரை?”

சிரிப்பை அடக்கியவன்,

“என்னோட வீக்னஸ கண்டு வச்சிருக்க ப்ளேக்கி. இந்த தடவை அவங்களும் கூட வரட்டும். இனிமே நான் முடியாதுன்னு சொன்னா கேட்கனும். முத்த லஞ்சம் குடுக்கற வேலைலாம் வச்சிக்க கூடாது. இப்போ போய் கிளம்பி வா. இருட்டறதுக்குள்ள திரும்பி வந்துரலாம்” என்றான்.

இன்னும் உள்ளே போகாமல், தயங்கி நின்றாள் சுப்பு.

“இன்னும் என்ன ப்ளேக்கி?”

“இல்ல, சரின்னு சொன்னா முத்தா குடுக்கறேன்னு சொன்னனே! இப்போ தரவா துரை?”

“ஒன்னும் வேணா! உள்ள போ” எனச் சிரிப்புடன் துரத்தி விட்டான் எட்வர்ட்.  

பரசுவின் நான்கு வாண்டுகளும், அக்காவென இவள் பாவாடையைப் பிடித்தபடி வந்தன. அதில் கடைசி பையன் மூக்கை ஒழுக விட்டுக் கொண்டு வந்தான். எட்வர்டுக்கு கண் கொண்டு அவர்களைப் பார்க்கவே முடியவில்லை.

அவர்கள் பின்னோடு வந்த பட்டு,

“வேணான்னு சொன்னேன் துரை, உங்க பொண்டாட்டிதான் கேக்கல. பிடிவாதம் பிடிக்கறா!” என மென்று முழுங்கினாள்.

“ஹ்ம்ம்ம், பரவாயில்ல”

முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு பதிலளித்தான். பெரிய பிள்ளைகள் மூவரும் பின்னால் அமர, நான்கு வயதான சின்னவனை தன் மடியில் இருத்திக் கொண்டு முன்னால் அமர்ந்தாள் சுப்பு.

“துரை போலாம்! ஓட்டுங்க” முகம் கொள்ளா சிரிப்பு

டன் அவன் முகம் நோக்கினாள்.

காரைக் கிளப்பினான் எட்வர்ட். காரில் பிள்ளைகளுடன் சலசலத்தவாறே வந்தாள் அவள். போகும் வழியில் இருந்த குட்டி டவுன் பந்திங்கில் (இடத்தின் பெயர்) சுப்புவுக்கு மட்டுமல்லாது, பிள்ளைகளுக்கும் குச்சி ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தான் எட்வர்ட்.

“ஐஸ் சாப்டதும் இன்னும் ரொம்ப ஒழுகுதுடா உனக்கு” என்றவாறே பாவாடையைத் தூக்கி சின்னவனின் மூக்கைத் துடைத்து விட்டாள் சுப்பு.

“ஏ ப்ளேக்கி! என்ன பண்ணுற?”

“பாத்தா தெரியலயா துரை? இது பாவாடை, இது மூக்கு, இது மூக்கு சளி. பாவாடையை இப்படி தூக்கி இப்படி துடைச்சேன்” என மீண்டும் செயல் முறை விளக்கம் கொடுத்தாள்.

“மை காட்! இந்தா ஹென்கர்சீப். பாவாடைல துடைக்காதே. அருவருப்பா இருக்கு”

“அருவருப்புன்னு சொல்லக் கூடாது! சாமி கண்ண குத்தும். இப்படி சொன்னா நாளைக்கு நம்ம புள்ளைக்கு இன்னும் ரொம்ப ஒழுகும்! சாமி என் துரைய மன்னிச்சிரு, என் புள்ளைக்கு மூக்கு ஒழுக வச்சிராத!” எனக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

“நம்ம புள்ள இப்படியா ப்ளேக்கி வளரும்? நான் ராஜா மாதிரி பார்த்துப்பேன் நம்ம பிள்ளைகள” என ஆசையாக சொன்னான் எட்வர்ட்.

“துரை! நான் கருப்பா இருக்கேன், நீங்க வெள்ளையா இருக்கீங்க. நம்ம புள்ள என்ன கலருல இருக்கும்?”

“கருப்பு டீல, பால் ஊத்துனா என்ன கலரா மாறும் ப்ளேக்கி?”

“அந்தக் கலரு பேரு எனக்கு தெரியலையே!”

“ப்ரவுன். ஹ்ம்ம் பழுப்பு நிறம். நம்ம புள்ள அந்தக் கலருலதான் இருக்கும்” என முறுவலித்தான்,

“அந்தக் கலருல வேணாம். பால் ரொம்ப போடுங்க துரை. எனக்கு உங்கள மாதிரியே வெள்ளையாதான் புள்ள வேணும்”

“என்ன கலரா இருந்தாலும் அது நம்ம பிள்ளை ப்ளேக்கி. ராஜாவா, ராஜாத்தியா வளர்ப்பேன்”

“நமக்கு ஏன் இன்னும் புள்ள வரல? தெனமும் தான விடாம நான் முத்தா குடுக்கறேன். அப்புறம் ஏன் பிள்ள வரல?”

‘ஓ! இதுக்குத்தான் தினமும் என்னை முத்தம் குடுத்து கொல்லுறியா?’

“முத்தம் குடுத்தா புள்ள பொறக்கும்னு யாரு சொன்னது ப்ளேக்கி? அலமுவா?”

“அலமுக்கு முத்தாலாம் தெரியாது. நானே உங்க கிட்டதான் கத்துக்கிட்டேன்.”

“அப்போ யாரு சொன்னா?”

“எனக்குதான் கல்யாணம் ஆச்சே, எப்போ புள்ள பொறக்கும்னு பவுனு அக்காட்ட கேட்டேன். மொதல்ல ரொம்ப வெக்கப்பட்டாங்க. அப்புறம்தான் முத்தா குடுத்தா உடனே பொறக்கும்னு சொல்லிட்டு ஓடிப் போயிட்டாங்க”

பிள்ளைகள் பின்னால் விளையாடிக் கொண்டிருக்க, மெல்லிய குரலில் குழந்தை எப்படி உருவாகும், குழந்தைப் பிறப்பு எல்லாவற்றையும் அவளுக்குப் புரியும் விதத்தில் விளக்கினான். பல கேள்விகள் கேட்டு அவனைக் குழப்பி அடித்தாள் சுப்பு. பொறுமையாக மீண்டும், மீண்டும் விளக்கினான்.

“அப்போ நான் சூரியகாந்திக்கு ஆமா சொன்னாதான் புள்ள பொறக்குமா?”

ஆமெனத் தலையாட்டியவனை யோசனையாகப் பார்த்தாள்.

“அப்படினா எனக்கு சம்மதம்”

அதிசயமாக அவளைப் பார்த்தான் எட்வர்ட்.

“குழந்தை வேணும்னு அவ்வளவு ஆசையா ப்ளேக்கி?”

“கல்யாணம் ஆகி, குழந்தைப் பொறக்காட்டி தள்ளி வச்சிருவாங்க துரை. நீங்க என்னை தள்ளி வச்சிட்டா, நான் எப்படி இருப்பேன்? ரொம்ப அழுவேன். அழுது, அழுது செத்துப் போயிருவேன்”

“சாவறதப் பத்தி பேசுனா அடிச்சிருவேன் ப்ளேக்கி. என்னிக்குமே தைரியமா, எந்தக் கஷ்டத்தையும் எதிர்த்து வாழனும். சாவனும்னு நினைக்கக் கூடாது. என்ன ஆனாலும் நான் உன்னை விட்டுக் குடுக்கமாட்டேன். அப்புறம் எப்படி தள்ளி வைப்பேன்! இந்த மாதிரி இனிமே பேசக்கூடாது, சரியா?”

கல்யாணம், கணவன், குழந்தை இப்படி குறுகிய வட்டத்துக்குள்ளேயே இந்தியப் பெண்களின் வாழ்க்கை அடங்கி விடுவதை நினைத்தப்படியே காரை செலுத்தினான் எட்வர்ட்.

கடற்கரையை நெருங்கி இருந்தார்கள். காரை ஒரு இடத்தில் நிறுத்திப் பூட்டியவன், அவர்களை அழைத்துக் கொண்டு கடலை நோக்கி நடந்தான். அங்கும் இங்குமாக ஆட்கள் நிறைய இருந்தனர். தண்ணீருக்குப் போக வேண்டும் எனப் பிள்ளைகள் சுப்புவை இழுக்க, இவனும் அவர்களுடன் சென்றான்.

அலைகள் கால் தொடும் அருகில் அமர்ந்தவன், பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டும் சுப்புவையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். மனதில் பல சிந்தனைகள். மற்ற மூன்று பிள்ளைகளும் அருகிலேயே விளையாட, கடைசி பையனைத் தூக்கிக் கொண்டு அவன் அருகே வந்து அமர்ந்தாள் சுப்பு.

எட்வர்ட் ஏற்கனவே கொடுத்த கைக்குட்டையால், சின்னவனின் முகத்தைத் துடைத்தவள் தன் மார்பில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள். அவனும் கடல் காற்றுக்கு சுகமாகத் தூங்கிப் போனான். இயற்கையாக அவளுக்கு இருந்த தாய்மை உணர்வை கண் இமைக்காமல் பார்த்திருந்தான் எட்வர்ட்.

“என்ன துரை பார்க்கறீங்க?”

மற்ற மூவர் மேலும் ஒரு கண்ணை வைத்தவாறே கேட்டாள் சுப்பு.

“எப்படி எல்லார் மேலயும் உன்னால பாசமா இருக்க முடியுது ப்ளேக்கி?”

“தெரியலையே துரை. அதுவா வருது!”

“தேவதைய பார்த்துருக்கியா ப்ளேக்கி?”

“இல்லையே! அது எப்படி இருக்கும்?”

“உன்னை மாதிரியேதான் இருக்கும். எனக்காக படைக்கப்பட்ட தேவதை நீ”

அருகில் நெருங்கி தோளோடு அவளை அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.

“அப்படினா, எனக்காக படைக்கப்பட்ட தேவதன் நீங்க துரை”

அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“பொம்பளைங்கள மட்டும்தான் அப்படி சொல்லுவாங்க. ஆம்பளைங்களுக்கு அது பொருந்தாது ப்ளேக்கி”

“அதெல்லாம் எனக்கு தெரியாது! எனக்கு நீங்கதான் தேவதன்”

நகர்ந்து வந்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“ப்ளேக்கி, என்ன பண்ணுற? பிள்ளைங்க இருக்காங்க!”

“பசங்களா, துரைக்கு கன்னத்துல தூசி. துடைச்சி விட்டேன், அவ்வளவுதான். ஆத்தாகிட்ட சொல்லக்கூடாது” என விளையாடி கொண்டிருந்தவர்களை கூப்பிட்டு வைத்து விளக்கம் கொடுத்தாள் சுப்பு.

“சரிக்கா! துரைக்கு நீங்க முத்தா குடுத்தத நான் ஆத்தா கிட்ட சொல்லமாட்டேன்” எனச் சொல்லி விட்டு விளையாட ஓடிப் போனான் பெரியவன்.

திருதிருவென விழித்த சுப்புவை அணைத்துக் கொண்டு வாய் விட்டு சிரித்தான் எட்வர்ட்.

வீட்டுக்குக் கிளம்பும் போது, மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் சின்னவனோடு எழ கஷ்டப்பட்டாள் சுப்பு. கீழே குனிந்து சின்னவனைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டவன், அவள் எழ கைக் கொடுத்தான்.

அதிசயமாக அவனைப் பார்த்த சுப்பு,

“புள்ளைங்கள அப்படி கரிச்சுக் கொட்டுனீங்க! இப்ப தூக்கிக்கிட்டீங்களே துரை” எனக் கேட்டாள்.

“உன் அணைப்புல இருந்ததால இவனையும் எனக்குப் பிடிச்சிருச்சு ப்ளேக்கி” எனப் புன்னகைத்தவன் பிள்ளைகள் புடைசூழ அவளை அணைத்தவாறு நடந்தான்.

சுப்புவின் வீட்டில்,

“தங்கம், முத்து வீட்டுக்கு ஆள் அனுப்பனியே, அந்தப் பையன் சேதி ஏதாச்சும் கொண்டு வந்தானா?” எனக் கேட்டார் அன்னம்.

“முத்து தொலைவா எங்கயோ எஸ்டேட்டுக்கு வேலைக்குப் போயிருக்கானாம். நான் போய் அங்கேயே சேதி சொல்லுறேன் கொஞ்சம் பணம் குடுங்கன்னு கேட்டான். காதுல கிடந்த தோட்டை கழட்டிக் குடுத்துட்டேன். நம்ம புள்ளய வேலைக்கு அனுப்பன சமாச்சாரத்தையும், கண்ணால கூட பார்க்க முடியலைங்கறதையும் சொல்லி விட்டிருக்கேன். அடுத்த மாசம் எப்படியும் வந்துருவான். நீ விசனப்படாம இருக்கா”

“ஆத்தா மகமாயிதான் நம்ம புள்ளய நம்ம கிட்ட நல்லபடியா கொண்டு வந்து சேர்க்கனும்”

ஆத்தா யாருக்கு செவி சாய்ப்பார்?

(தூண்டுவான்…)

Scroll to Top