SC Epi 8(1)

அத்தியாயம் 8

“ரீல்ஸ் போடுங்க! எவ்ளோ வேணும்னா எடுத்துப் போடுங்க! உங்க கேமரா, உங்க நெட்டு, உங்க டைமு, உங்க இஷ்டம்! அதுக்குன்னு ஒரு லிமிட் இல்லையாங்க? பார்க்கற நாங்க பாவம் இல்லையாங்க? சைட்டடிச்சு, பொண்ணுப் பார்க்கப் போய், கல்யாணம் கட்டி, மொத ராத்திரிக்கு ரூமுக்குள்ள பால் சொம்ப எடுத்துட்டு போய், ப்ரேண்ட்ஸ் என் வைஃப்பூ கன்சீவ் ஆகிட்டா ப்ரேண்ட்ஸ்! தேங்கஸ் டூ யூ ஆல்னு (நாங்க என்னடா பண்ணோம்????) அலப்பறையக் கூட்டி, வளைக்காப்பு பண்ணி, புள்ளைய பெத்து, அதுக்குப் பேர வச்சி, ஒரு வயசு கொண்டாடி, ஸ்கூலுக்கு அனுப்பின்னு எங்கள மூச்சு முட்ட வைக்கறீங்களேடா! அப்பாடி பாப்பா ஸ்கூலுக்கு போய்டுச்சுடான்னு நாங்க நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த நொடி, கைஸ், என் வைஃப் ரெண்டாவது பேபிக்கு ப்ரெக்னெண்ட்டா இருக்கான்னு மீண்டும் அடுத்த ரவுண்ட ஆரம்பிக்கறீங்க!!!! இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு???”

(பாட்காஸ்ட் பை பரதேசி!!!)  

கிளினிக்கில் இருந்து வெளியே வந்து நின்றாள் ஊர்மிளா. கையில் போட்டிருந்த ஊஞ்சல் கட்டைப் பிரித்திருந்தார்கள். ஓரளவுக்குக் கையையும் விரல்களையும் இவளால் அசைக்க முடிந்தது. வலி இருக்கத்தான் செய்தது! ஆனாலும் கை செயல்படுகிறது என்பதே வலியை மறக்கடிக்கக் கூடியதாக இருந்தது.

“இனிமே நார்மலா நீங்க செய்யற வேலைகள பார்க்கலாம்! ஆனாலும் கைக்கு ரொம்ப அழுத்தம் குடுக்கக் கூடாது! நான் சொல்லிக் குடுக்கற பயிற்சிகள தினமும் செய்ங்க! இந்தியாக்கு போனதும், இன்னொரு டாக்டர்ட்ட ஃபோலோ அப் செஞ்சுக்கோங்க! எஞ்சாய் ரெஸ்ட் ஆஃப் த ட்ரீப்” எனச் சொல்லி புன்னகையுடன் இவளை அனுப்பி வைத்திருந்தார் டாக்டர்.

பணத்தைச் செலுத்தி விட்டு வெளியே வந்து மற்றக் கட்டிடங்களைப் பார்த்தபடி இருந்தவளின் நினைவில் வந்து நின்றான் விஷ்ணு. டாக்டரைப் பார்க்க இவளுடன் வருவதாகச் சொல்லி இருந்தான் அவன். கான்பரன்ஸ் ஹாலில் அவன் லாப்டாப்பில் ஏதோ ஆன்லைன் மீட்டிங்கில் இருந்த போது தனியாகவே கேப் எடுத்து வந்து விட்டிருந்தாள் ஊர்மி. வேலையில் இருப்பவனைத் தொல்லைச் செய்யப் பிடிக்கவில்லை. அதோடு தனிமைத் தேவைப்பட்டது பெண்ணுக்கு! அவன் முகம் பார்க்காமல் சிந்திக்க வேண்டியிருந்தது.

கிளினிக்கைத் தள்ளி இருந்த ஒரு கஃபே கண்ணைக் கவர, அங்கே போய் அமர்ந்தாள் ஊர்மிளா. ப்ளூபெரி சீஸ் கேக் ஒன்றும், மாட்ச்சா லாட்டே(Matcha Latte) ஒன்றும் ஆர்டர் செய்தவள், இவள் அமர்ந்திருந்த சீட்டின் பக்கமாய் இருந்த கண்ணாடி ஜன்னல் வழி மக்கள் கடந்து போவதை அவதானித்தாள். சிலர் குடும்பமாக வந்திருந்தாலும், பலர் கணவன் மனைவியாய், காதல் ஜோடிகளாய்த்தான் இருந்தார்கள். மலை, குளிர், பனி எல்லாம் காதலர்களின் பூலோக சொர்க்கம் அல்லவா! கை கோர்த்தபடி ஒருத்தர் சூட்டை இன்னொருத்தர் அனுபவித்தபடி கவலைகளின்றி சுற்றித் திரிந்தார்கள்.

சட்டென ஒரு கோட் இவள் மனதில் வந்து போனது! குவீன் எலிசபெத் சொன்னது அது!

“Grief is the price we pay for love!”(துக்கம்/துயரம்தான் நாம் காதலுக்கு/அன்புக்கு கொடுக்கும் விலை!) என மென்மையாய் முணுமுணுத்தாள்.

இப்பொழுது ஜோடி போட்டு குதூகலமாய் சுற்றும் இவர்கள், இன்னும் சில வருடங்களில் அதே மனநிலையோடு இருப்பார்களா? இதே காதல் அப்பொழுதும் இருவருக்குள்ளும் இருக்குமா? இதே அந்நியோன்யம் நிலைத்திருக்குமா? இருக்கவே இருக்காது என இவளாகவே பதில் சொல்லிக் கொண்டாள்.

‘போட்டுக்கற துணி பழசாகற மாதிரி, காலுல போடற செருப்பு தேஞ்சுப் போகிற மாதிரி, இந்தக் காதலும் கூட பழசாகி தேஞ்சிப் போய்டும்! ப்ளைட்ல வரப்ப பார்த்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துல கூட அந்தப்பா என்ன சொன்னாரு? உங்கம்மா மேல இருந்த காதல் குறைஞ்சு போய்டுச்சு! அது இன்னொருத்தி மேல வந்திடுச்சுன்னு சொன்னாருல்ல! அப்போ இந்தக் காதல்ங்கற விஷயம் நிலையானது இல்ல! மனிதனோட சூழ்நிலைக்கும், சுயநலத்துக்கும் தக்க மாறக் கூடியது! எனக்கு அது வேண்டாம்!’

சில நாட்களுக்கு முன்பு இவளை அந்தப் பையன்கள் இடித்து விடாமல் இருக்க, விஷ்ணு அணைத்து நின்ற போது, உள்ளுக்குள் படபடத்து விட்டது ஊர்மிளாவுக்கு. அவளை யாருமே அணைத்தது இல்லை எனச் சொல்ல மாட்டாள். நட்பாய் ஆண், பெண் என இவளுடன் படித்தவர்கள், வேலைப் பார்த்தவர்கள் அணைத்தது உண்டு. வேலையிடத்தில் சில கஸ்டமர்கள் தப்பாய் இவளை நெருங்கக் கட்டாயமாக அணைத்தது உண்டு! நண்பர்களிடம் புன்னகையுடன் சில வினாடிகளில் விலகி நின்றிருக்கிறாள். தப்பாய் அணைத்தவர்களிடம் திமிறி விலகி வந்திருக்கிறாள்.

அது எதுவுமே மனதளவில் இவளை நடுங்க வைத்தது இல்லை. விஷ்ணுவின் இறுகிய அணைப்பில் இது வரை உணர்ந்திராத பாதுகாப்பை உணர்ந்தாள் ஊர்மி! நான் இருக்கிறேன் உனக்கு என அணைப்பால் சொல்ல முடியுமா? அந்த ஒற்றை அணைப்பு அதைத்தானே உணர்த்தியது இவளுக்கு! அதை எண்ணும் போது இப்பொழுது கூட மேனி சிலிர்த்தடங்கியது ஊர்மிளாவுக்கு. எங்கே அந்த உணர்வு தன்னையும் மீறி காதலில் கொண்டு போய் விட்டு விடுமோ எனும் பயம் வந்தது! கண்களில் துருத்தி நின்றக் கண்ணீரைச் சுண்டி விட்டவள், ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டாள்.

‘ஊர்மி! விட்டில் பூச்சிக்கு நெருப்பு சுடும்னு தெரியாது! ஏன்னா அதுக்கு அறிவென்றது இல்ல! அதனால நெருப்போட ஒளில ஈர்க்கப்பட்டு அதுல விழுந்து அழிஞ்சு போகுது! உனக்கு என்னடி கேடு வந்திச்சு? அறிவு இருக்குத்தானே? குடும்பம்ங்கற அமைப்பே ஒரு நெருப்பு மாதிரி! அதுல போய் விழுந்தா காஞ்சிக் கருகிப் போய்டுவோம்னு தெரியும்தானே! பிறகேன் இந்த ஃபீலீங்? ஆள் இருக்குன்னு அவனே சொன்னான்! பிறகெங்க நான் இருக்கேன் உனக்குன்னு ஹக் பண்ணிருப்பான்! மறுபடி அடிப்பட்டுக்கிட்டா மேனேஜ்மென்ட் அவன வச்சி செஞ்சிடுவாங்கன்ற பயத்துல கட்டிப் பிடிச்சிருப்பான்! ஓவரா கற்பனைக் குதிரைய ஓட்டாம, புத்தம் சரணம் கச்சாமின்னு ஆன்மீக பக்கம் வழி பாரு!’ என எண்ணியவளுக்கு சாப்பாவுக்குப் பக்கமாய் இருக்கும் ஃபான்சிப்பான் மலையில்(Fansipan) வீற்றிருக்கும் புத்தர் சிலையைப் போய் பார்த்தால் என்ன எனத் தோன்றியது!

அவளது கேக்கும் பானமும் வர, மன சஞ்சலங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

“எங்க பார்த்தாலும் மாட்ச்சா ப்ளேவர் கேக், பானம்னு ஒரே ஃபேமஸா இருக்கேன்னு ஆர்டர் பண்ணிட்டேன்! க்ரீன் டீல கொஞ்சம் பால கலந்து விட்டது போல இருக்கே டேஸ்ட்! பரவால்ல! வித்தியாசமா நல்லாத்தான் இருக்கு” என முணுமுணுத்தபடியே மாட்ச்சா லாட்டேவை அருந்தினாள்.

அதன் பிறகு போனை எடுத்து ஃபான்சிப்பான் மலைக்கு எப்படி போவது என சேட்ஜீ.பி.டியை ஒரு வழி செய்தாள். அந்த நேரம் இவளுக்கு அழைப்பு வந்தது. ட்ரெய்னர் என பெயர் ஒளிர, எடுக்கலாமா வேண்டாமா எனப் பட்டிமன்றம் நடத்தியபடி போனையே வெறித்திருந்தாள் ஊர்மி.

அழைப்பு நின்று மேசேஜ்கள் வரிசையாய் வர ஆரம்பித்தன!

“ஊர்மி! எங்கிருக்க?”

“ஆர் யூ ஓகே?”

“டாக்டர் என்ன சொன்னாரு?”

“கை ஓகேவா?”

“எங்கிருக்க ஊர்மி?”

“அன்ஸ்சர் த டேம்ன் போன்”

‘அடேய்! இருடா! இருடா!’ என வரிசையாய் வந்து விழுந்த மேசேஜ்களை பார்த்து மூச்சு வாங்கியவளுக்கு மறுபடியும் அழைப்பெடுத்தான் அவன்.

இந்த முறை அழைப்பை ஏற்றாள் ஊர்மி.

“ஊர்மி! எங்கிருக்க நீ? கிளினிக்ல, வந்துட்டு போய்ட்டன்னு சொன்னாங்க! ரிசார்ட்டுக்கு போன் போட்டா நீ இன்னும் வரலன்னு சொல்றாங்க!” எனப் படபடத்தான் விஷ்ணு.

கஃபேவின் பெயரைச் சொல்லி அங்கிருப்பதாக சொன்னாள் இவள். அடுத்த ஐந்தாவது நிமிடம் இவள் முன்னே வந்து அமர்ந்திருந்தான் விஷ்ணு.

“நான் கிளினிக் கூப்ட்டு போறேன்னு சொல்லிருந்தேன்தானே! என்ன அவசரம் உனக்கு! கிளினிக்ல இருந்து அழைச்சிட்டு போகலாம்னு வந்தா ஆள காணோம்! போனையும் எடுக்கல! பயமா இருக்காதா ஊர்மி? வெளிநாட்டுல வந்து காணாம போய்ட்டா நான் எங்கன்னு போய் உன்னைத் தேடுவேன்?” என விடாமல் பேசியவன், முன்னே இருந்த அவளது பானத்தை எடுத்து மடக் மடக்கென குடித்து முடித்து விட்டான்.

“ட்ரேய்னிங்தான் முடிஞ்சதுல! நீ ஏன் இன்னும் இங்கயே இருக்க விஷ்ணு?” என அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பதில் கேள்வி கேட்டாள் இவள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“எனக்கு வெய்ட் பண்ணாம ஏன் கிளம்பி வந்த?” என அவன் கேள்வியிலேயே நின்றான்.

“எதுக்கு வெய்ட் பண்ணனும்? என் கை, என் வலி! அத நான்தானே பாத்துக்கனும்?” எனக் கேட்டவளை ஆயாசமாகப் பார்த்தவன்,

“எனக்கு நெக்ஸ்ட் ப்ராஜேக்ட் ஓசாக்கா, ஜப்பான்ல! அங்க போனதும் வேலை மூச்சுக் கூட விட முடியாத அளவுக்கு வச்சி செஞ்சிடும்! ஒரு ரெண்டு மூனு மாசம் அங்கிங்க நகர முடியாது! அதான் என்னைப் புத்துணர்வா வச்சிக்க இப்போ லீவ்ல இருக்கேன்!” என்றான்.

“ஓஹோ!!”

“டாக்டர் என்ன சொன்னாரு?”

“ஆல் ஓகே”

“எங்க கைய காட்டுப் பார்க்கலாம்”

அவள் நீட்டியக் கரத்தைத் தொடாமல் ஆராய்ச்சியாய் பார்த்தான் இவன்.

“என்ன விஷ்ணு சார்! கண்ணுல எக்ஸ்ரே மிசின் இருக்கா என்ன? ஸ்கேன் பண்ணற மாதிரி பார்க்கறீங்க!” எனக் கிண்டலாய் கேட்டவள், எழுந்து கொண்டாள்.

இவனும் அவளோடு எழுந்து கொண்டான்.

தயக்கமாய்,

“நெக்ஸ்ட் என்ன ப்ளான் ஊர்மீ?” எனக் கேட்டான் விஷ்ணு.

“ஃபான்சிப்பான் மலைக்குப் போகலாம்னு நெனைக்கறேன்! பாய் விஷ்ணு”

“நானும் வரேன் ஊர்மி!” என்றவனை முறைத்தாள் இவள்.

“என்னாச்சு உனக்கு? நானும் பார்க்கறேன், ரெண்டு நாளா ரூம விட்டு வெளிய வரவே இல்ல! சாப்பாடும் உள்ளயே வர வச்சி சாப்பிட்டுக்கற! உடம்பு முடியல, ரெஸ்ட் எடுக்கட்டும்னு நானும் ஒன்னும் கேட்டுக்கல! இப்போ என்னான்னா தள்ளி வச்சுப் பேசற! உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல ஊர்மி! எவ்ளவோ பேர அசால்ட்டா டீல் பண்ணிருக்கேன் நான்! ஒத்தை மனுஷி நீ என் மண்டையக் காய விடற!” எனச் சலிப்பாகப் பேசியவனைப் பார்த்துச் சிரிப்பு வந்து விட்டது இவளுக்கு.

தப்பைத் தன் மேல் வைத்துக் கொண்டு நட்பாய் பழகும் இவனை வாட்டி எடுப்பது முறையல்ல என நினைத்தவள்,

“கைடா வரதுன்னா வா விஷ்ணு! ஆனா காசு எதுவும் குடுக்க மாட்டேன்” என்றாள்.

முகத்தில் நகை துலங்க,

“கைடுக்கு காசுத்தான் குடுக்க மாட்ட, கண்ணுல காப்பித் தண்ணியவாவது காட்டுவியா?” எனக் கேட்டான்.

“அதான் நான் வாங்கி வச்சிருந்தத சொட்டு விடாம குடிச்சிட்டியே, உனக்கு காபியும் கிடையாது, ஒன்னும் கிடையாது” என வழக்காடியபடியே இவள் பணத்தைக் கட்டி விட்டு, இவனுக்கு ஒரு ஐஸ் லாட்டே வாங்கி வந்து கொடுத்தாள்.

“தேங்க்ஸ்! உன்னோடத நான் குடிச்சிட்டேனே! பதிலுக்கு நீ இதை குடிச்சிட்டு குடு” என்றான் கள்ளன்.

“ஐம் ஃபுல்” என மறுத்தாள் கள்ளி.

தோளைக் குலுக்கியவன்,

“அதோ தெரியுது பார் பெரிய கடிகாரம் வச்ச சன் ப்ளாசா பில்டிங், அங்க போய்த்தான் நாம ட்ரேய்ன் எடுக்கனும்!” என ஒரு கட்டிடத்தைக் காட்டினான் விஷ்ணு.

ஐரோப்பா கட்டிடக் கலையில், பில்டிங் மேலே மூன்று அழகிய கடிகாரங்கள் வைத்து அழகாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை ஆசையாய் பார்த்தாள் இவள்.

“போட்டோ புடிச்சு தரவா மேடம்? கைடு வேலைல இதுவும் ஒன்னாச்சே” எனக் கேட்டான் விஷ்ணு!

Scroll to Top