“என் உசுரு இந்த உடம்புல இருக்கற வரைக்கும், நான் இங்கிருந்து வர மாட்டேன் மாமா!” கண் கலங்கி குரல் கரகரத்தாலும், வார்த்தைகள் அழுத்தமாக விழுந்தன.
“என்ன புள்ள சொல்லுற? விளையாட இது நேரமில்ல, வாடி போலாம்”
“துரைக்கு வாக்குக் குடுத்துருக்கேன் மாமா. அவரே போக சொல்லாம அந்த வீட்ட விட்டு போக மாட்டேன்னு”
‘டேய் துரை! எங்கக்கா மக நல்லா தள தளன்னு இருக்கவும், உன் கிட்டயே புடிச்சு வச்சிக்கப் பார்க்கறயா! மானங்கெட்டவனே! புள்ளயே மிரட்டி வச்சது மட்டும் இல்லாம வாக்கு வேற வாங்கி வச்சிருக்கியா? பாக்கலாம்டா உன் மிரட்டல் ஜெயிக்குதா இல்ல என் காதல் ஜெயிக்குதான்னு.’
“உங்காத்தா அன்னம் சாக கிடக்கறா! அப்ப கூட குடுத்த வாக்கு தான் முக்கியம்னு இப்படி பிடிச்சு வச்ச புள்ளையாரு மாதிரி நிப்பியா புள்ள? அங்க அக்கா என் புள்ள, புள்ளன்னு உசுர கையில புடிச்சுகிட்டு உன்னை ஒரு தரம் பார்த்திர மாட்டோமான்னு எமன் கிட்ட போராடிகிட்டு இருக்கு. இங்க நீ அடம் புடிச்சுட்டு நிக்கறே” பொய்யை அவிழ்த்து விட்டு வராத கண்ணீரை துடைத்தான் முத்து.
“ஆத்தா!!!! நான் பயந்தது மாதிரியே நடந்துருச்சே! ஐயோ கடவுளே, அதனால தான் ஒரு வாரமா சோத்தாங்கை பக்கம் கண்ணு துடிச்சுகிட்டே இருந்துச்சா?” மடிந்து சகதி மண்ணில் அமர்ந்து முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள் சுப்பு.
அவள் அழுவதை சகித்துக் கொள்ள முடியாமல்,
“தோ புள்ள! விரசா வா. உன்னைப் பார்த்தாலே அவங்களுக்கு உசுரு உடம்புல நின்னுரும்” என சமாதானப் படுத்தினான்.
அப்பொழுதும் கதறிக் கொண்டே முடியாது என தலையை இடம் வலமாக ஆட்டினாள் சுப்பு. அவன் எறிந்த தாய்ப்பாசம் எனும் அஸ்த்திரம் அணைந்துப் போனதில் ஆடிப்போய்விட்டான் முத்து.
“நீ வீட்டுக்கு என் கூட வா! துரை கிட்ட சொல்லலாம். அவரு ஆத்தாவப் பார்க்க கூட்டிட்டுப் போவாரு. துரை கிட்ட சொல்லாம நான் ஒரு அடி கூட இங்கிருந்து நகர மாட்டேன். அவருக்கு என்னை விட்டா யாரும் இல்ல. பாவம் மாமா, சொல்லிட்டே போலாம்”
கீழே முழங்காலில் அமர்ந்திருந்தவள், முத்துவை நிமிர்ந்துப் பார்த்து கையேந்தி கண்ணீர் வழிய கெஞ்சினாள்.
“அட கருமாந்திரம் புடிச்சவளே! குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்பே! ஆத்தா செத்தாலும் பரவாயில்ல, எனக்கு வெள்ளைக்காரன் குடுக்கற சொகுசு தான் வேணும்னு அலையிறியே! நீயெல்லாம் எங்க ஜாதிக்காரிதானாடி? என்னடா இவ கிட்ட கெஞ்சிட்டு இருக்க? அருவாவ எடுத்து சீவுடா அவ தலைய!” கர்ஜித்தார் வீராண்டி.
இவர்கள் பேசுவதை காட்டுக்குள் ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தவர், ரத்தம் கொதிக்க வெளியே வந்திருந்தார். வீராண்டி திட்டமிட்டப்படியே, இவர்கள் ஜாதிக்காரன் ஒருவனை எட்வர்டின் எஸ்டேட்டுக்கு நடராசுவைப் பார்க்க அனுப்பினார்கள். அவன் மட்டும் போனால் பரிசல்காரனுக்கு சந்தேகம் வரும் என்பதால், அவன் மனைவி பிள்ளைகளையும் அவனோடு சேர்த்து சொந்தங்களைப் பார்க்க போவது போல அனுப்பி வைத்தார்கள்.
நடராசுவின் மூலமாக பங்களாவைச் சுற்றி காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொண்டார்கள். அவர்கள் திட்டமே ஜாதி கலவரம் செய்து வீடுகளை அடித்து நொறுக்கி கலகம் செய்வதுதான். எப்படியும் எட்வர்ட் வெளியே கலகத்தை அடக்கப் போகும் போது, இவர்களில் சிலர் சென்று சுப்புவை தூக்கி வருவது என முடிவெடுத்தார்கள். அதற்காக நான்கு நான்கு பேராக வேறு வேறு நாட்களில் எட்வர்டின் எஸ்டேட்டுக்கு இருந்த பக்கத்து எஸ்டேட்டுக்கு சென்று பரிசலில் இறங்கினார்கள். அவர்கள் இறங்கிய எஸ்டேட்டில் திருவிழா சமயம் அதனால் நிறைய பேர் வந்த வண்ணம் இருக்கவும், யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லாமல் போனது. முனியனும் பரிசல்காரனும் கூட இவர்களின் தந்திரத்தில் ஏமாந்துதான் போனார்கள்.
அடுத்த எஸ்டேட்டில் இறங்கி, காட்டுப் பாதையாக எட்வர்டின் எஸ்டேட்டுக்கு நடந்தே வந்தவர்கள், காட்டுக்குள் ஒழிந்தே இருந்து நல்ல நேரம் பார்த்திருந்தார்கள். மழைக்கு யாரும் வேலைக்கு வராதது வேறு அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. நடராசுவின் உதவியால் சாப்பிட்டு, செம்பணை மட்டையால் ஓய்வெடுக்க சின்ன கூடாரம் கட்டி சமாளித்தார்கள்.
வேறு மாநிலத்தில் சுப்புவோடு தங்க முத்து இடம் கூட பார்த்துவிட்டான். இதெல்லாம் முடிக்க தான் நாட்கள் நகர்ந்து விட்டன. இவர்கள் வீடு புகுந்து தூக்க நினைக்க லட்டு மாதிரி சுப்புவே கோயிலுக்கு வந்து இவர்களிடம் மாட்டிக் கொண்டாள்.
சுப்புவைத் தேடி கண்டிப்பாக எட்வர்ட் தங்களிடம் வருவான். பெண்களிடம் அவனால் வாலாட்ட முடியாது, தங்களிடம் வந்தால் தெரியவே தெரியாது என சமாளித்து விடலாம் என நினைத்தார்கள். அதோடு அவர்களுக்கு சாதகமாக மலாயாவின் சுதந்திர தினமும் நெருங்கி இதோ நாளை என்னும் நிலையில் நின்றது. இப்பொழுதே பாதி பிரிட்டிஷ்காரர்கள் பல் பிடுங்கிய பாம்புதான். இனிமேல் அவர்களும் தங்களைப் போலவே குடியேறிகள் தான். படித்த தங்கள் எஸ்டேட் மண்டோரிடம்(சூப்பர்வைசர்) கேட்டு தெளிவாக திட்டமிட்டிருந்தார்கள். ஜாதிக்காக ரத்தம் சிந்துவது இவர்களுக்கு தியாகமாக பட்டது. இந்த யுகத்தில் குற்றத்துக்கு தண்டனை கிடைக்கும் என தெரிந்தும் கௌரவக் கொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. அந்தக் காலத்தில் பெயரிலேயே ஜாதியை சேர்த்து வைக்கும் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலையை நான் சொல்லத்தான் வேண்டுமோ?
வீராண்டியைப் பார்த்ததும் ஜோனி பாய்ந்து கடிக்கப் போனது. முத்துவை ஒன்றும் செய்யாத ஜோனி வீராண்டியின் காலை ஆக்ரோஷமாக கௌவியது. மனிதனால் பகுத்தறிய முடியாத சில விஷயங்களை ஐந்தறிவு ஜீவனால் உணர்ந்து கொள்ள முடிவது விந்தையல்லவா! வலியில் அலறிய வீராண்டி கையில் வைத்திருந்த பெரிய கட்டையால் ஓங்கி அடித்தார் ஜோனியை. ஜோனி பல்டி அடித்து பல அடிகள் தாண்டி விழுந்தது. அதன் உடம்பில் இருந்து ரத்த ஆறு பெருகி மழை நீரோடு கலந்தது.
“ஐயோ ஜோனி!” கதறிய சுப்பு, அதன் அருகில் ஓடினாள். அவளைப் பார்த்து தீனமாக குரைத்தது அந்த பாவப்பட்ட ஜீவன்.
“ஜோனி, டேய். செத்துறாதடா! கடவுளே, வீட்டுலயே இருக்க சொன்னேனே, இப்படி வந்து சாவ கிடக்கறியே. ஐயோ ஜோனி!’ அதன் ரத்தத்தை துடைத்தவாறே நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள் சுப்பு.
நடப்பதைப் பார்த்து கத்திக் கொண்டு ஓடி வந்த பவுனுவை மேலும் சிலர் காட்டில் இருந்து ஓடி வந்து, மறைத்துக் கொண்டனர்.
“டேய், பாவிகளா! என்னடா பண்ணுறீங்க! விடுங்கடா எங்கள, பரதேசி பொட்ட பயலுகளா!” அரைப் போச விடாமல் வாயிலே குத்தினர் சுப்புவின் ஜாதிக்கார மனிதர்கள். அவர் கதற கதற கோயில் சுவற்றில் வைத்து கட்டிப் போட்டனர்.
அருவாளை ஓங்கிக் கொண்டு சுப்புவை வெட்ட வந்த வீராண்டியை தடுத்த கீழே தள்ளினான் முத்து. திக்பிரமை பிடித்து முழித்துக் கொண்டிருந்த சுப்புவை ஓங்கி ஒரு அறை விட்டான் அவன். அந்த ஒரு அறையிலேயே மயங்கி சரிந்தாள் சுப்பு. ஒற்றைக் கண்ணால் அதை பார்த்த ஜோனி தீனமாக அவளை விடுங்கடா என்பது போல குரைத்தது.
“தோ பாரு மச்சான், ஒனக்கு வேண்டியது நம்ம புள்ள இங்க அந்த துரை கூட இருக்க கூடாது, அம்புட்டு தானே? அதுக்கு நான் பொறுப்பு. அவ மேல ஒரு சின்ன காயம் கூட படக்கூடாது” என கத்தினான். எங்கே சுப்பு முரண்டு பிடித்தால் இவர் ஏடாகூடமாக ஏதேனும் செய்து விடுவாரோ என்ற பயத்தில் தான், பூப்போல பார்க்க விருப்பப்பட்டவளை பேய் போல அறைந்திருந்தான் முத்து.
“அது சரி! உன் பிரச்சனை உனக்கு! இந்தக் கழுதைய தூக்கிட்டு கிளம்பு. இங்க முடிக்க வேண்டியத நாங்க முடிச்சுட்டு வரோம்.” ஜாதி கலவரத்தை மூட்டி, சுப்புவைத் தேடி எட்வர்ட் போகும் நேரத்தை இழுத்தடிக்க ஊருக்குள் நுழைந்தார் வீராண்டி. அவரோடு அவரது எடுபிடிகளும்.
கீழே கிடந்தவளை பூப்போல தன் கைகளில் ஏந்திக் கொண்டான் முத்து. எட்வர்டுக்கு கொடுத்த வாக்கின் படி, அவளாக அவனை விட்டுப் போகவில்லை. சுயநினைவு இல்லாமல் தூக்கி செல்லப்பட்டாள் சுப்புலெட்சுமி.
