UU Epi 16(2)

அவள் அவ்வாறே செய்ய அவன் தூங்க ஆரம்பித்தான். அவனை பார்த்துக் கொண்டே அருகே அமர்ந்திருந்தவள் எப்பொழுது தூங்கினாளோ! அதை அவளே அறியாள். யாரோ தன்னை உலுக்கி எழுப்பவும் தான் கண் விழித்துப் பார்த்தாள்.

“அக்கா வரும் நேரமாச்சு. நீ முகம் கழுவித் தயாராகணும் இல்லையா… அதுக்கு தான் எழுப்பினேன்.” என்றதும் குளியலறைக்குள் சென்று முகம் கழுவ ஆரம்பித்தாள்.

முகத்தைச் சீர் செய்து தயாராகி படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தவள், “ராஜ்! அண்ணிக்கு சாப்பிடக் குடுக்க…” என்று ஆரம்பித்ததும்,

“ஸ்வீட் வாங்கிட்டு வந்துட்டேன் நிவி.” என்று சொன்னான்.

“யூ ஆர் சோ ஸ்வீட்.” என்று இருந்த இடத்தில் இருந்தவாறே கணவனை கொஞ்சிக் கொண்டாள்.

“பால் வாங்குனீங்களா?” என்று அடுத்த கேள்வியை கேட்க அவன் அதற்கு ஆமாம் என்று சொன்னதும் அவள் அமைதியாகி விட,

“என்ன நிவி. இப்ப நான் சோ மில்கியா?” என்று கேட்டான்.

“பக்கத்திலே வந்தேன்… கடிச்சு வச்சிருவேன்.” என்று சொல்லி அவனைக் கடிப்பது போல் பாவனை காட்ட, அவன் சிரித்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் அழைப்பு மணி அடித்தது.

“வாங்கக்கா. வாங்க மாமா!” என்று ராஜீவும், “வாங்கண்ணி. வாங்கண்ணா!” என்று நிவேதாவும் அவர்களை வரவேற்றார்கள்.

“மது வரலையா அண்ணி?” என்று நிவேதா கேட்டதும்,

“எதுக்கு உங்கூடச் சேர்ந்து விளையாட ஆள் தேடுறியா?” என்று ராஜீவ் கிண்டலாகக் கேட்க,

காயத்ரியோ, “அவ வரணும்னு அடம் பிடிச்சாள். எங்க அத்தை தான் விட மாட்டேனுட்டாங்க. தண்ணி ஊத்தியாச்சுன்னாலும் சடங்கு முடியுற வரைக்கும் வெளியே அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க.” என்றாள்.

ஓ என்று மட்டும் சொன்னவள் தனது கருத்தை வெளியிட விரும்பவில்லை. நிவேதாவிற்கு இந்த மாதிரி சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை இல்லை. ஆனால் அது அவர்களது நம்பிக்கை. இதில் தான் எதுவும் சொல்லக் கூடாது என்று நினைத்து அமைதியானாள்.

வந்தவர்களுக்கு ஸ்வீட் காரத்தை தட்டில் வைத்துக் கொண்டு வருவதற்காக சமையலறைக்குள் புகுந்தாள். பொதுவாக காயத்ரியும் அவள் பின்னோடு எழுந்து வருவாள். ஆனால் இன்று அப்படி வராமல் இருக்கவும் அவள் தன் தம்பியிடம் தனித்துப் பேச விரும்புகிறாள் என நிவேதா புரிந்து கொண்டாள். அதனால் அவள் சமையலறையை விட்டு வெளியே வர முயற்சிக்கவில்லை.

அவள் எதிர்பார்த்த மாதிரியே காயத்ரி ராஜீவிடம் பேசினாள். அது நிவேதா காதிலும் விழுந்தது. அது என்ன பெரிய அரண்மனையா? அந்த சின்ன வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து பேசியது அவளது காதிலும் தெளிவாகவே விழுந்தது.

“அம்மா காலையிலே போன் பண்ணியிருந்தாங்கடா ராஜீவ்.” என்று காயத்ரி ஆரம்பித்ததுமே, ராஜீவின் முகம் மாறியது.

அவனது கையை எடுத்து தனது கையில் வைத்து அழுத்திக் கொடுத்தவள், “அம்மா தான் ஆரம் வாங்கி வச்சு இருக்காங்களே! அதுவே போதும்டா. நம்ம குடும்பத்து பரிசுன்னு சொல்லிக்கலாம். அம்மா இப்போ செய்யுறாங்க. நீ அவ கல்யாணத்துக்கு செய். எப்படியும் அதுக்குள்ளே நீ நல்ல நிலைமைக்கு வந்துடுவே தானேடா! அப்புறம் என்னடா? கவலைப்படாதே.” என்று சொல்லியும் அவனது மனக் கலக்கம் அகலவில்லை என்பதை அவன் முகமே எடுத்துக் காட்டியது.

சரியாக ராஜீவின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் அதை எடுத்துப் பேசிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான். அவன் அருகில் இல்லை என்ற தைரியத்தில் நிவேதாவை மறந்தவர்களாய் காயத்ரியும், மகேஷும் பேச ஆரம்பித்தார்கள்.

“என்னங்க இவ்வளவு வருத்தப்படுறான்.”

“அவன் குணம் நமக்கு தெரிஞ்சது தானே காயு?”

“ப்ச்சு. இதுக்குத் தான் இந்த சடங்கே வேண்டாம்னு சொன்னேன். உங்க அம்மா பிடிவாதமா வைக்கணும்னு சொல்லுறாங்க. நீங்களும் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் போயிட்டீங்க.”

“நான் உன் பக்கம் பேசினாலும் தப்பாத் தான்மா போகும். நான் வேண்டாம்னு சொன்னால் என்ன காரணம்னு கேட்பாங்களே!”

“நம்ம மதுக்கு பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே!”

அவர்களது பேச்சினை கேட்டுக் கொண்டிருந்த நிவேதா ‘ஐயோ! எங்களால இவங்களுக்குள்ளே தகராறு வந்துடுமோ?!’ என பயந்து போனாள்.

“அவங்க கடந்த ரெண்டு வருஷமாவே நம்ம மதுகிட்டே இது விஷயமா பேசிப் பேசியே அவளை சம்மதிக்க வச்ச விஷயம் உனக்கு தெரியும் தானே! உன் கல்யாணத்தை பார்க்க நாங்க உயிரோட இருப்போமோ இல்லையோ! அதனால உன் சடங்கையாச்சும் பெரிய அளவில் செஞ்சு எங்க கண் குளிரப் பார்க்கணும்னு சொல்லிச் சொல்லியே அவளை சம்மதிக்க வச்சுட்டாங்க. அவளுக்கு விருப்பம் இல்லைன்னால் கூட அவ தன் பாட்டிக்காக மண்டையை ஆட்டி இருக்காள். அதனால அந்தக் காரணம் எல்லாம் சொல்ல முடியாதும்மா. ராஜீவ் பற்றியும் நம்மால ஒண்ணும் சொல்ல முடியாது. வேற என்ன காரணம் சொல்லுறது?  நீயே சொல்லு?” என்று மகேஷ் கேட்டதும்,

“இதுக்கு வேற வழியே இல்லையா?” என்று வருத்தத்துடன் கேட்ட காயத்திரியிடம்,

“எனக்கு இப்பத் தான் ஒரு ஐடியா தோணுச்சு. அவன் சார்பா நாமளே நகை வாங்கிடுவோம்.” என்று சொன்ன அடுத்த நொடி,

“ஹேய்! இது நல்லா ஐடியா! எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணாமல் போச்சு. அவன்கிட்ட அப்படியே சொல்லிடலாம்.” என்று முகம் கொள்ளா சந்தோஷத்துடன் சொன்னாள்.

“அவசரப்படுறியே காயு. நீ சொன்ன உடனே உன் தம்பி இதுக்குச் சம்மதிச்சுடுவானா?”

“ஆமாங்க. அவன் தான் பெரிய தன்மானச் சிங்கமாச்சே!” என்று ஒரு விதக் கோபத்துடனும், வருத்தத்துடனும் கூறிய காயத்ரி, “அப்போ என்ன செய்யலாம்?” என்று மகேஷை பார்த்துக் கேட்க,

“நாம நம்மோட ஐடியாவை இப்ப அவன்கிட்ட சொல்ல வேண்டாம். சபையிலே அவனோட நகைன்னு உங்க அம்மாவை வச்சுக் குடுக்க வச்சிடலாம். அப்படிச் செஞ்சால் தான் அவனால மறுத்துச் சொல்ல முடியாது. என்ன நம்மளை முறைப்பான். அதெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.” என்றான்.

“நீங்க சொல்லுறது தாங்க சரி. ஆனால் விழா முடிஞ்ச பின்னாடி சண்டை போடுவான். அதை நினைச்சா எனக்கு இப்பவே வயித்திலே புளியை கரைக்குதுங்க.”

“உன் வீட்டிலே நீ பெரியவளா?  இல்லை அவனா? உன் அக்கா கெத்தை காட்டு.”

“யாரு நானு? அவன்கிட்ட? நீங்க வேற… அவனுக்கு விவரம் தெரியுற வரைக்கும் தாங்க நான் அவனுக்கு அக்காவா இருந்தேன். அதுக்கப்புறம் அவன் தான் எனக்கு அண்ணணா இருக்கான். இங்க உட்காரு… அங்க நிக்காதேல ஆரம்பிச்சு நான் டிரஸ் பண்ணுற வரை ஐயா அதிகாரம் பண்ணுவார்.” என்று பெருமூச்சுவிட்டாள்.

“நீ எனக்கு கூட இப்படிப் பயந்ததில்லையே காயு.” என்று புன்சிரிப்புடன் கூறிய  மகேஷ்,

“அப்போ என் தங்கச்சி நிவேதா நிலைமை அதோ கதி தான் என்று சொல்லு.” என்று தன் மனைவியை வம்புக்கு இழுத்தான்.

“சே சே! உங்க தங்கச்சி யாரு… அவ போடச் சொல்லுற தோப்புக் கரணத்தை என் தம்பி போடுவான்ல.” என்று கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ராஜீவ் போன் பேசிவிட்டு திரும்பும் வரையிலும் நிவேதா சமையலறையில் இருந்து வெளியே வரவில்லை.

‘இப்படிப்பட்ட உறவுகளை அடைய ராஜீவ் ரொம்பவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டாள்.

அவர்கள் இருவரையும் பத்திரிக்கை வைத்து அழைப்புவிடுத்தவர்கள் நகையை பற்றி பேச்செடுக்காமல் சென்றார்கள்.

Scroll to Top