அத்தியாயம் 16
அன்று மதியம் ராஜீவ் வீடு திரும்பியதும் கதவை திறந்துவிட்ட நிவேதா கதவை சாற்றிவிட்டு அவன் கொண்டு வந்திருந்த பொருட்களை கீழே வைக்கும் வரைக்கும் தான் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதன் பின் அவனருகே சென்றவள் அவனது சட்டை காலரை கொத்தாகப் பிடித்து, “வாய் இருக்குன்னு என்ன வேணா சொல்லுவியாடா?” என்றாள்.
என்னடா இவள் நாம கேட்க வேண்டிய கேள்வியை அவள் கேட்கிறாள் என நினைத்துக் கொண்டு விழித்துக் கொண்டு நின்றான். அவள் அடுத்துப் பேசிய பேச்சு காலையில் இருந்து அவள் புதிராக நடந்து கொண்டதின் மர்மத்தை அவனுக்கு விளக்கியது.
“ஏன்டா ரோட்டிலே நீ மட்டும் தான் போறியா? நாங்க எல்லாம் நடமாடலையா? எங்களுக்கு எல்லாம் ஆக்ஸிடென்ட் ஆகாதா? அடிபடாதா?” என்று கண்களில் வடியும் கண்ணீருடன் கேட்டவளை,
தன்னருகே இழுத்தவன் அவளது வாயில் கை வைத்து, “சாரிடா நிவி. ரியலி சாரி. நீங்க எல்லாம் இவ்வளவு ஹர்ட் ஆவீங்கன்னு நான் நினைக்கலை.” என்று சொல்லிக் கொண்டே அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவன் தன்னோடு இறுக்கி அணைத்து ஆறுதல்படுத்தினான்.
புதிய பிரச்சனையில் பழைய சண்டையும், அதற்கான சமாதானமும் தேவையில்லாமலே போனது.
அவளின் விசும்பல் ஒலி நிற்காததை கண்டவன், “அதான் சாரி சொல்லிட்டேனில்லை. இன்னும் எதுக்குடா அழறே? இனிமேல் யோசிச்சு கவனமாப் பேசுறேன்.” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தி, “நீ காலையிலே ஏதாச்சும் சாப்பிட்டியா?” என்று கேட்கவும் நிவேதா தலை குனிந்தாள்.
அவன் முகத்தை பார்த்து அவளால் பொய் சொல்ல முடியாது. அதே சமயம் உண்மையை சொன்னாலும் திட்டு கிடைக்கக் கூடும் என்றறிந்தே தலை கவிழ்ந்தாள்.
“உனக்கு எத்தனை தடவை நிவி சொல்லியிருக்கேன். உன் கோபத்தையும், துக்கத்தையும் சாப்பாட்டிலே காட்டாதேன்னு.” என்று சொல்லிக் கொண்டே சாப்பாட்டு மேஜையில் இருந்த மதிய உணவை தட்டில் வைத்து அவளை பார்த்து, “முதல்ல சாப்பிடு!” என்றான்.
அவள் அசையாமல் அவனையே பார்த்தாள்.
“என்ன பார்வை வேண்டிக் கிடக்கு? வா வந்து சாப்பிடு.”
அவள் ஒன்றும் சொல்லாமல் அவனை பார்த்து ஒரு கேலிப் புன்னகையை உதிர்த்துவிட்டு தண்ணீர் கூஜாவை எடுத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்டவன் புன்னகைத்தவாறு அந்தத் தட்டை எடுத்துக் கொண்டு அவளை பின் தொடர்ந்தான்.
படுக்கையில் அமர்ந்திருந்தவளிடம் தட்டை நீட்ட அப்பொழுதும் அதை வாங்காமல் ‘ஆ’ என்று தன் வாயைப் பிளந்து காட்ட…
“என்ன ராஜ் நிவிக் குட்டிம்மா இன்னைக்கு ஒரேடியா செல்லம் கொஞ்சுறாங்க!” என்று சத்தமாகத் தன்னைத் தானே கேள்வி கேட்டவனிடம்,
“எப்படி ராஜ் கூப்பிட்டீங்க? இன்னொரு தடவை கூப்பிடுங்க.” என்று அவள் கண்களில் மின்னல் மின்னக் கேட்க, அவன் சட்டென்று முகம் மாறினான்.
அவன் முகம் மாறிய விதத்தில் அவள் மனம் சுருங்கினாள்.
அவன் அமைதியாய் ஒரு வாய் சாதத்தை எடுத்து அவளது வாய் அருகே கொண்டு போக அவள் ஒன்றும் சொல்லாமல் தன் வாய் திறந்து அதை வாங்கிக் கொண்டாள்.
நான்கு வாய் சாதம் உண்டதும் தன் கையை அவளும் தட்டுக்குள் விட… சரி அவளே சாப்பிட்டுக் கொள்வாள் என நினைத்து அவன் தனது வாயருகே தனது கையைக் கொண்டு போக, அவள் வேகமாகத் தடுத்து நிறுத்தி தனது வாய்க்குக் கொண்டு சென்றாள். தன் கையிலிருந்த சாதத்தை கணவனுக்கு ஊட்டியவள்,
“அது என்ன ஒரு வேலையை பாதியிலே விடுறீங்க? நானே எடுத்து சாப்பிடுறதுன்னா எப்போ சாப்பிட்டு முடிக்க? உங்களை பார்க்க வச்சிட்டு சாப்பிட்டால் எனக்கு வயிறு வலிக்குமேன்னு தான் உங்களுக்கு ஊட்டினேன். அவ்வளவு தான். மரியாதையா ஊட்டுங்க!” என்றாள்.
“மேடம் நிவேதா சாப்பிடுங்க!” என்று சொல்லிக் கொண்டே அடுத்த கவளத்தை ஊட்டியவன்,
அதற்கு அடுத்து, “மிசஸ்.ராஜ் சாப்பிடுங்க!” என்றான்.
“என்ன இது ?” என்று கேலியாகக் கேட்டவளிடம்,
“மரியாதைம்மா… நீ தானே சொன்னே!” என்றதும்,
“ஹேய்! எல்லோரும் ஓடி வந்து சிரிச்சிடுங்க. என் ஹஸ்பன்ட் ஜோக் அடிக்கிறாராம்.” என்று சிரிக்காமல் நக்கல் பண்ண… அவன் அவளது கேலியில் சிரித்தான்.
அவன் சாப்பிட்டு முடித்துக் கை கழுவிவிட்டு வந்தான். அவளருகே படுக்கையில் அமர்ந்ததும் கணவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“எதுக்கு ராஜ் நேற்று வெளியே போய் தரையிலே படுத்தீங்க?” என்றாள்.
இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதா வேண்டாமா என ஒரு நொடி யோசித்தான். பின் ‘மரியாதைப் பன்மையிலே கேள்வி கேட்கும் போதே சொல்லிடுடா ராஜ். இல்லைன்னா ஆபத்து’ என்று உணர்ந்தவனாய்,
“நீ மட்டும் அப்படிப் பேசலாமா?” என்றான்.
“தப்பாப் பேசினால் வாயிலயே ரெண்டு போடுங்க.” என்றாள்.
“இங்கேயா?” என்று கேட்டுக் கொண்டே அவளது உதடுகளை வருடியவன், “அப்புறம் வீங்கிடுச்சுன்னா எனக்கு தானே கஷ்டம்.” என்று கண்ணடித்துச் சொன்னான்.
அது அவளிடம் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
“எனக்கு வாய்த் துடுக்கு ஜாஸ்தியில்ல. நிறைய நேரம் நான் பாட்டுக்கு ஏதாச்சும் சொல்லிப் பிரச்சனையாக்கிடுறேன்ல…”
“அப்படியில்லை நிவி. நிறைய நேரம் பிரச்சனை எதனால ஏற்பட்டதுன்னு அலசி ஆராய்ஞ்சு அதை உடனுக்குடன் தீர்க்கப் பார்க்கிற.”
“நான் முன்கோபி தானே ராஜ்? எனக்கு சட் சட்டுன்னு கோபம் வந்துடுது தானே?”
“இல்லைடா. நீ எழுபதைந்து பெர்சென்ட் கலகலப்பானவள். மீதி இருபதைந்து பெர்சென்ட் தான் உனக்கு கோபம் வரும்.” என்றதும்,
‘நாம நம்மிடம் உள்ள குறையை சொன்னால் இவர் நம்மகிட்டே உள்ள நிறைகளை சொல்கிறாரே’ என மனம் வருந்தியவள் ஒன்றும் பேசாது அவனது மார்பில் சாய,
அவளது முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டே, “மனசைப் போட்டு அலட்டிக்காதே. போகப் போக நீயே நிதானமா செயல்பட ஆரம்பிச்சிடுவே. பிரச்சனையை தீர்க்காமல் ரெண்டு மூணு நாளைக்கு இழுத்துக்கிட்டுப் போனால் தான்டா கஷ்டம். நீ தான் உடனுக்குடன் என் கூட சமாதானாம் ஆகிடுறியே. அப்புறம் என்னடா…” என்று ராஜீவ் சொன்னதும் நிவேதா சமாதானம் அடைந்தாள்.
இனிமேல் ஒரு முறைக்கு இரு முறை யோசிச்சுத் தான் பேச வேண்டும் என்று தனக்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டாள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது காயத்ரி அழைத்தாள்.
கைப்பேசியை இயக்கியவன், “சொல்லு காயுக்கா.” என்றான்.
“டேய் ராஜீவ்! இன்னைக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா?”
“சொல்லுக்கா! என்ன விஷயம்? எனக்கு வெளியே போற வேலை எல்லாம் இல்லை. வழக்கம் போல நைட் டின்னருக்கு தான் வெளியே போகணும்.”
“நீயா சொல்லாதே. நிவேதாகிட்ட கேட்டுட்டு சொல்லு.”
“உனக்கு எங்கேயாச்சும் வெளியே போகணுமா நிவி?” என்று மனைவியை பார்த்துக் கேட்க, அவள் ‘இல்லை’ என்று தலை அசைத்ததும்,
“இல்லக்கா. நாங்க எங்கேயும் போகலை.” என்றான்.
“ஒண்ணுமில்லைடா. ஒரு ஐந்து மணி போல வந்து உங்க ரெண்டு பேருக்கும் மதுவின் சடங்குக்கு இன்விடேஷன் குடுக்க வரலாம்னு இருக்கோம். அதான் கேட்டேன்.”
“ப்பூ இதுக்குத் தானா இவ்வளவு பில்டப் குடுத்த! நான் உன் வீட்டுக்கு வரேன்டா. நீ வீட்டில இருன்னு சொன்னால் இருந்துட்டுப் போறேன். அதை விட்டுட்டு… ஆயிரம் கேள்வி கேட்கிறே. நீ வா. நான் எங்கேயும் போகலை.” என்று சொன்னதும்
“சரிடா. சாயங்காலம் பார்க்கலாம்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
தனது அக்கா சொன்னதை மனைவியிடம் பகிர்ந்தவன், “நான் ஒரு மணி நேரம் தூங்கி எழுந்துக்கிறேன். உன் போனிலே அலாரம் வை.” என்றான்.
