புதன்கிழமை மதுவின் சடங்கு. அன்று ராஜீவ் அரசாங்கப் பணிக்கு மட்டும் விடுப்பு எடுத்திருந்தான். மதியத்துக்கு மேல் தனியார் மருத்துவமனைக்கு சென்று கொள்ளலாம் என முடிவு செய்திருந்தான்.
காலையில் அவனுக்கு முன்பே எழுந்த நிவேதா தங்கள் கல்யாணப் புடவையை உடுத்தி போலி நகை அணிந்து தலையில் பூ வைத்து என அலங்காரம் பண்ணிக் கொண்டு தயாராவதை பார்த்த ராஜீவிற்கு மயக்கமே வந்தது.
“நீ தானாடா நிவி? அன்னைக்கு என்னமோ எதுக்கு இந்த பங்ஷன் என்று கேட்டுக்கிட்டு இருந்த… இன்னைக்கு என்னடான்னா ஊருக்கு முந்தி முதல் ஆளா சும்மா ஜம்முன்னு கிளம்பி நிற்கிற. என்னங்க மேடம் விஷயம்?” என அவன் நக்கல் பண்ணினான்.
“இப்பவும் தான் சொல்லுறேன். இந்த பங்க்ஷன் எனக்கு பிடிக்கலைன்னு. அதுக்காக எங்க அண்ணன் பொண்ணு பங்க்ஷனுக்கு போகாமல் இருக்க முடியுமா? நானெல்லாம் என் பொண்ணுக்கு இந்த மாதிரி பங்க்ஷன் எல்லாம் வைக்க மாட்டேன்.”
“அது சரி… இன்னும் இங்க பிள்ளை பெத்துக்கிற ஐடியாவே இல்லையாம். அதுக்குள்ளே அவ சடங்கு வரைக்கும் யோசிக்க ஆரம்பிச்சுட்டியா? பலே! பலே!”
“நான் மாட்டேன்னு சொல்லலையே ராஜ். இப்ப கூட நான் ரெடி தான். சீக்கிரமாப் பெத்துக்குவோம். அப்படியாச்சும் என் அப்பா என்னை மன்னிச்சு அவர் கூட சேர்த்துக்குவார்.”
“ஏன் உன் அப்பா வீடு மாதிரி இந்த வீடு உனக்கு வசதியா இல்லைன்னு உங்க அப்பா கூட சேரணும்னு நினைக்கிறியா?”
“ராஜ்! நீங்க பேசுறது அபத்தம்னு தெரிஞ்சே எப்படி ராஜ் இப்படிப் பேசுறீங்க? சரி நம்ம பிரச்சனையை அப்புறமா பேசிக்கலாம். கிளம்புங்க.” என்று சொல்லி ஒரு பெரிய பையை தூக்கிக் கொண்டு வந்தாள்.
அவள் மீதிருந்த கோபத்தில் அவன் அது என்னவென்று கேட்கவில்லை. அவள் ஏறி அமர்ந்ததும் வண்டியை கிளப்பியவன் தன் அக்கா வீடு சென்று சேரும் வரைக்கும் பேசவில்லை.
முதல் நாள் இரவே குருவாயூர் ரயிலில் சுந்தரமும், யசோதாவும் சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். மகளுக்கு உதவி செய்ய வேண்டி நேராக அங்கேயே சென்று இறங்கிவிட்டார்கள்.
காயத்ரி தன் தம்பியையும், தம்பி மனைவியையும் கூட முதல் நாளே வந்துவிடும் படி அழைத்திருந்தாள். ராஜீவ் தான் மறுத்துவிட்டான்.
தாய் மாமன் என்பதால் அவன் முதல் ஆளாய் வர வேண்டும் என்று தன் அத்தை எதிர்பார்ப்பார்களே என்று தான் காயத்ரி தம்பியை முன் தினமே வரச் சொல்லி அழைத்தாள்.
தம்பி மனைவி ஒரு வேளை தயாராக தாமதமாகி அல்லது இடையில் போக்குவரத்து நெரிசலில் மாட்டி அவர்கள் வந்து சேரத் தாமதமானல் தனது மாமியாருக்கு என்ன பதில் சொல்வது என்று வேறு அவளுக்கு பயமாக இருந்தது.
முதல் ஆளாய் ராஜீவும் நிவேதாவும் வந்து இறங்கவும் காயத்ரிக்கு அப்பாடா என்றிருந்தது. ஆனால் அடுத்த நொடியே அந்த மனநிலை மாறியது. மாற்றியவள் நிவேதா தான்.
வந்தவள் நேராகத் தனது மாமியாரை பார்த்து நலன் விசாரித்தவாறே மகேஷின் தாயிடம் சென்றவள், “அம்மா! நீங்க சொன்னபடியே எல்லாம் வாங்கிட்டேன். உங்களை அந்த தட்டு மட்டும் எடுத்து வைக்கச் சொன்னேனே! அது ரெடியா?” என்றாள்.
மகேஷின் தாயும் நிவேதாவிடம், “நானும் உன்கிட்ட சொன்னபடி உனக்கு தாம்பாளம் ரெடி பண்ணி வச்சுட்டேன் பாரு.” என்று சொல்லி இரு தாம்பாளங்களை அவளிடம் தந்தார்.
‘என்னடா இது… இவ பாட்டுக்கு இப்படி ஆப்பு வச்சுட்டாளே!’ என்று சுந்தரம், யசோதா, காயத்ரி, மகேஷ் ஆகிய நால்வரும் திகைத்துப் போய் நின்றிருந்தனர்.
ராஜீவ் வந்ததும் மகேஷின் அம்மாவுக்கு தெரியாமல் நால்வரும் சேர்ந்து அந்த நகையை யசோதா மூலம் ‘இது எங்க பரிசு. இது என் பையனோடது’ என்று கொடுத்துவிடலாம் எனத் திட்டமிட்டு இவர்கள் காத்திருக்க…
நிவேதா வந்தவளோ நேராக மகேஷின் அம்மாவின் முன்னிலையிலேயே அவள் வாங்கி வந்த பொருட்களை கடைபரப்பினால்… என்ன செய்ய முடியும்? எப்படி அந்த நகையை அவற்றுடன் சேர்க்க முடியும் என்று தெரியாமல் விழித்தனர்.
ராஜீவ் தன்னால் நகை வாங்க முடியவில்லை என்பதால் அன்று காயத்ரி சொன்னது போல் மதுவின் கல்யாண சமயத்தில் பெரிய அளவில் பரிசு கொடுத்துவிடலாம் என்று முடிவுகட்டி இருந்தான்.
நிவேதா தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து தேங்காய், பழம், ஸ்வீட் என்று ஒவ்வொன்றாக எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
ராஜீவிற்கு தன் அக்கா மற்றும் மாமாவின் ஏற்பாடு தெரியாததால் அவன் மட்டுமே அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இல்லையில்லை… தன் மனைவி குறித்து பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
நிவேதா இரண்டாவது தாம்பாளத்தில் முதலில் ஒரு பட்டுப் புடவையை வைத்தாள். அதன் பின்னே மல்லிகைப் பூவை வைத்தவள் ஒரு நகை டப்பாவையும் எடுத்து வைத்தாள்.
ராஜீவ் தவிர அனைவரின் முகமும் மலர்ந்தது.
‘ஓ! அவர்களே ஏதோ ஏற்பாடு பண்ணிவிட்டார்களா?’ என்று முதலில் முகம் மலர்ந்தவர்கள் ஆனால் எப்படி என்ற எண்ணம் தோன்றியவுடன் வேகமாக ராஜீவின் புறம் பார்வையை திருப்பினர்.
பாறை போல் இறுகி இருந்த அவனது முகத்தை பார்த்ததுமே அவனுக்கும் தெரியாமல் இது நடந்திருப்பது அவர்களுக்கு புரிந்து போனது.
‘இதெல்லாம் நிவேதாவின் வேலையா? ஆனால் அவளால் மட்டும் இது எப்படி சாத்தியமானது?! செய்த வேலையையும் கணவனுக்கு தெரியாமல் வேறு செய்திருக்கிறாள் போலவே! இது எதிலே கொண்டு முடியப் போகுதோ?’ என அவர்கள் நால்வரும் கவலைப்பட்டனர்.
ராஜீவ் தன் மனதிற்குள் ‘அன்னைக்கு நான் அப்பா, அம்மாகிட்டே பேசியதை கேட்டாள் என்பது அன்று மதியம் ஆக்ஸிடென்ட் நடப்பது பற்றி சண்டை போட்டதிலேயே தெரிந்தது. ஆனால் முக்கியமான இந்த விஷயத்தை பற்றி பேசாமல் இருக்கிறாளே என்ன காரணம் என்று நான் யோசித்துக் கொண்டிருக்க… தானே ஏதோ வேலை செய்து இருக்காள். அதை என்னிடம் சொல்லாததில் இருந்தே எனக்குப் பிடிக்காத வேலையை செய்து இருக்காள் என்று தெரிகிறது. என்னவாக இருக்கும்? அவங்க அப்பா சம்பந்தப்பட்ட யாரிடமாவது கடன் வாங்கி இருப்பாளோ?’ என்று நினைக்கும் பொழுதே அவனது முகம் மிகக் கடுமையாக மாறியது.
அவள் நிமிர்ந்து தன்னை பார்ப்பாள் என்று அவனது பார்வை அவளையே தொடர… அவளோ அவன் இருக்கும் திசைப் பக்கம் கூடத் திரும்பவில்லை.
பெரியவர்களின் நிலை இப்படி இருக்க மதுமிதா ஆவலுடன் அந்த நகையை பார்வையிட்டாள்.
“நீங்க செலெக்ட் பண்ணுனீங்களா அத்தை? சூப்பரா இருக்கு. செட்டா கம்மல் வளையல் கூடவா? ரொம்ப சூப்பரா இருக்கு.” என்று சந்தோஷத்துடன் கூவினாள்.
மகேஷின் தாயும் அதை ஆவலுடன் பார்வையிட்டவர், “இந்தக் காலத்துப் பசங்க டேஸ்ட்டுக்கு வாங்கியிருக்கே! ரொம்ப நல்லா இருக்கு. என்னை எல்லாம் கூப்பிட்டுப் போயிருந்தால் நான் பழங்காலத்துப் பாணியிலே செலக்ட் பண்ணிடுவேன்னு தானே விட்டுட்டுப் போயிட்டே!” என்று அவளை பார்த்துக் கேட்க,
“அம்மா! பழைய டிஸைனை தானேம்மா ஆன்டிக் என்ற பெயரில் இப்ப எல்லாம் விக்குறாங்க. உங்களை அலைக்கழிக்க வேண்டாம்னு பார்த்தேன். அவ்வளவு தான். உங்களுக்கு பிடிச்சிருக்கில்லே? எனக்கு அது போதும்.” என்றாள்.
மகேஷின் தாய் தன் மருமகளை பார்த்து, “வா காயத்ரி. உன் தம்பி சம்சாரம் எவ்வளவு அழகா வாங்கிட்டு வந்திருக்காள் பாரு!” என்று அழைத்தார்.
இருக்கும் பிரச்சனையை பற்றி அவரிடம் ஒன்றும் சொல்ல முடியாமல் காயத்ரி மாமியாரின் அருகே வந்து நகையை பார்வையிட்டாள்.
‘நெக்லஸ், கம்மல், வளையல் எலலாத்தையும் சேர்த்தால் பத்து பவுன் தேறுமே! இத்தனை லட்சங்களை இவள் எப்படி ஏற்பாடு செய்தாள்’ என கவலையுற்றாள்.
காயத்ரியின் முகத்தை கவனிக்காத அவளது மாமியார் யசோதாவை பார்த்து, “என்ன சம்பந்தி உங்களை வேற தனியா கூப்பிடணுமா? வாங்க வந்து பாருங்க.” என்று அழைப்பதில் மும்மரமானார்.
காயத்ரி நிவேதாவின் முகம் பார்க்க… அவள் ஏன் இவர்களை எல்லாம் பார்க்கிறாள். இப்போதைக்கு மகேஷின் தாயின் அருகே இருப்பது தான் தனக்கு பாதுகாப்பான இடம் என்று கருதிய நிவேதா அவரின் அருகிலேயே இருந்தாள். அவர் சொல்லும் சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்து மகேஷின் தாயிடம் நல்ல பேர் வாங்கினாள்.
“நம்ம ராஜீவோட சம்சாரம். பெரிய கோடீஸ்வரி. ஆனால் கொஞ்சம் கூட பந்தா இல்லாத பொண்ணு. ரொம்ப அடக்கமான பொண்ணும் கூட..” என்று தன் உறவினர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
‘கிழிஞ்சது கிருஷ்ணகிரி! நான் உங்க வீட்டுப் பையனை மிரட்டிக் கல்யாணம் பண்ணிய கதை தெரிந்தால் நீங்க இப்படிப் பேச மாட்டீங்க. நான் அடக்கமானவளா? சுத்த அடாவடி. ம்ம்ம் என்னைப் பற்றி தெரியாமல் இருக்கீங்க… இதுவும் நல்லதுக்கு தான்’ என நிவேதா மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
விழா முடிந்து சாப்பிட்டு முடித்ததுமே ராஜீவ் கிளம்பத் தயாரானான். ஆனால் நிவேதாவிற்கு வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை. இல்லையில்லை… ராஜீவை தனியாக சந்திக்கவே பிடிக்கவில்லை. அதனால் அவள் வீட்டிற்கு செல்வதை ஒத்தி வைக்கவே விரும்பினாள்.
“ராஜ்! நீங்க ஹாஸ்பிட்டல் கிளம்புங்க. நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறமா வரேன்.” என்று நல்ல பிள்ளை போல் சொல்லிப் பார்த்தாள்.
ஆனால் மனைவியின் உண்மைக் காரணம் தெரிந்ததினாலே ராஜீவ் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அவனுக்கு அவளிடம் பணம் வந்த கதையை உடனே தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தான்.
காயத்ரியுமே ‘நிவேதா இங்கேயே இருக்கட்டுமே!’ என்று தம்பியிடம் சொல்ல முற்படவில்லை. அதனால் வேறு வழியின்றி நிவேதா ராஜீவுடன் கிளம்பினாள்.
கிளம்பும் முன் மகேஷின் தாயிடம் வந்த நிவேதா, “அம்மா! எங்க வீட்டுக்கு ஒரு நாள் வாங்க.” என்று அழைப்பு விடுத்தாள்.
“நானும் உன் வீட்டுக்கு வரணும்னு தான் பார்க்கிறேன். முடிய மாட்டேங்குது. அந்த வீடு பால் காய்ச்சின போது வந்தது தான். சீக்கிரமா வரேன்.” என்று சொன்னதும் ராஜீவின் முகம் இருண்டது.
