UU Epi 17(2)

சுந்தரம் மகன் அருகே வந்து, “ராஜா! மெதுவா விசாரி. ரொம்பக் கோபப்படாதே. அவளுக்கும் உன்னை விட்டால் யாருமில்லை. அதனால சாந்தமாவே விசாரி.” என்று மகனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்.

அவன் அவருக்கு பதிலொன்றும் சொல்லாமல் சரி என்பது போல் தலையை மட்டும் அசைத்தான்.

காயத்ரி தனது தந்தை சொன்ன அறிவரையை கூடச் சொல்லவில்லை.

‘இது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சனை. இதிலே நாம தலையிடக் கூடாது’ என எண்ணியவளாய் அவர்களுக்கு மௌனமாகவே விடை கொடுத்தாள்.

அவர்கள் அனைவருமே நிவேதாவிற்காக கவலைப்பட்டனர். ஏனென்றால் கடந்த சில மணி நேரமாக ராஜீவ் யாரிடமும்… முக்கியமாக அவனது குடும்ப உறுப்பினர்களிடம் சிரித்துப் பேசவில்லை. அவனது முகம் கடுமையாக இறுகியிருந்தது.

வீட்டை அடைந்ததும், “நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணுறேன்.” என்று சொல்லி அவள் படுக்கையறைக்குள் நுழைய பார்க்க,

அவளது கையை பிடித்துத் தடுத்தவன், “எனக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா என்ன வேணா செய்.” என்றான்.

“என்ன சொல்லணும் ராஜ்?”

“பணம் எங்கே இருந்து வந்தது?”

“எந்தப் பணம் ராஜ்?”

“நிவேதா! டோன்ட் டிரை டு ஆக்ட் டூ ஸ்மார்ட். பதில் சொல்லு.” என்று அவன் கடுமையாகக் கேட்க,

இதற்கு மேல் தன்னால் கணவனிடம் மறைக்க முடியாது என்பதை உணர்ந்தவளாய் மெதுவான குரலில், “என் நகையை அடமானம் வச்சேன் ராஜ்.” என்றாள்.

அவள் அப்படிச் சொன்னதும் அவன் அவளது கழுத்தில் உள்ள தாலிச் சங்கிலி இருக்கிறதா என்று பார்வையிட்டான். கணவனின் எண்ணப் போக்கினை உணர்ந்தும் நிவேதா ஒன்றும் சொல்லாமல் கேள்வி அவனிடம் இருந்தே பிறக்கட்டும் என்று பேசாமல் இருந்தாள்.

“உன் நகையா? உன்னிடம் அவ்வளவு நகை கிடையாதே? எந்த நகை?” என்று கேட்டதும்,

“என் வைரக் கம்மல்…” என்று முடிக்கும் முன்பே,

“வைரமா? உன் அப்பா உனக்குப் போட்டாரா? எப்போ?” என்று அவன் மடமடவென்று கேள்விகளை  அடுக்க,

“ராஜ்! நான் வீட்டை விட்டு வெளியேறும் போது என் அப்பா வாங்கித் தந்த எந்த நகையையும் எடுத்துட்டு வரலை. இது எங்க பாட்டி போட்டது. இது எப்பவும் என் கூடவே தான் இருக்கும்.” என்றாள்.

“அவ்வளவு சென்ட்டிமென்டான நகையை ஏன் விற்றாய்?”

கணவன் தன்னை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கேள்விகளாக கேட்பதில் கடுப்பானவள், “நான் நகையை தானே வித்தேன். என்னை விற்கலையே?!” என்று கேட்டு அடுத்த நொடி கன்னத்தில் அறை வாங்கினாள்.

அறை வாங்கியவள் அடுத்த நொடியே, “சாரி ராஜ். ஏதோ ஃப்ளோவிலே சொல்லிட்டேன்.” என்றாள்.

அவளை அறைந்துவிட்டு தனது கண்களை இறுக மூடித் தனது கோபத்தினை கட்டுப்படுத்தி சில நொடிகள் அமைதியாக இருந்தவன் தனது வலது கை எரியவும் தான் கண்களை திறந்து அதைப் பார்வையிட்டான்.

அறைஞ்சவனுக்கே இப்படி வலிச்சால் அறை வாங்கியவளுக்கு என்று நினைக்கும் போதே நெஞ்சு பதறியது. அவளது கன்னத்தை திருப்பிப் பார்வையிட முயன்றான்.

“ஒண்ணும் தேவையில்லை.” என்று அவனது கையை தட்டி விட்டாள்.

“நிவி! படுத்தாதே. சாரிடா. இனிமேல் நீயும் என்ன பேசுறோம்னு யோசிச்சுப் பேசு. நானும் கோபத்திலே இருந்ததால் சட்டுன்னு கை நீட்டிட்டேன். சாரிம்மா. இது தான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் டைம்.” என்று சொன்னதும்,

“ஓ! டாக்டர் சாருக்கு இன்னொரு முறை கூட அறையணும் என்ற நினைப்பு இருக்கோ? எதுக்கு ராஜ் இப்போ என்னை அறைஞ்சீங்க?” என்று கேட்கவும்,

“என் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசினால் அறைய தான் செய்வேன்.” என்று சொன்னவன் அவள் தடுத்ததையும் மீறி அவள் கன்னம் திருப்பி பார்வையிட்டவன், “ஓ காட்!” என்று அதிர்ந்தான்.

“இரு வரேன்.” என்று சொல்லி மருந்துப் பெட்டியை எடுத்து வந்தான்.

“லூசு லூசு. எப்பவுமே ஒரு டாக்டராத் தான் நடந்துக்கணுமா? ஒரு ஹஸ்பண்டா நடந்துக்கத் தெரியாதா? அடிபட்டதுக்கு பார்க்கிற வைத்தியத்தை பாரு!” என்று சத்தமாகவே முணுமுணுத்தாள்.

அவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டான். பின் மருந்துப் பெட்டியில் இருந்து மருந்தை எடுக்கவும்…

‘அவ்வளவு தானா?’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “நகையை அடமானம் வச்சியா? இல்லை மொத்தமா வித்துட்டியா?” என்று கேட்கவும்,

“ஓ! உங்க கேள்வி பதில் செஷன் இன்னும் முடியலையா? அப்போ நீங்களே வச்சுக்கோங்க உங்க கிஸ்ஸை.” என்று சொல்லியவள் அவன் முத்தம் கொடுத்த தன் கன்னத்தைக் கிள்ளி அவனது உதட்டில் கொண்டு போய் வைத்தாள்.

அவளது செய்கையை பற்றி விமர்சிக்காமல் அவன் மீண்டும் அதே கேள்வியை கேட்க,

“நான் அப்போ சொன்னதை சரியாக் காதிலே வாங்கிக்கலையா? அடமானம் தான் ராஜ் வச்சேன்.” என்றாள் கடுப்பாக.

“எவ்வளவு ரூபாய்க்கு?”

“மூணு லட்ச ரூபாய் வாங்கினேன்.”

“ஒரு சின்ன கம்மலுக்கா அவ்வளவு பணம் கிடைச்சது?”

“அந்த வைரம் ஆபூர்வமானது. அதை எங்க பாட்டி  ஸ்பெஷலா செஞ்சு வாங்கினாங்க.”

அவளது கன்னத்தில் மருந்ததை தடவியவன் மேலும் மருந்துப் பெட்டிக்குள் தலையைவிட்டு எதையோ குடைய ஆரம்பித்தான்.

நிமிர்ந்தவன் அவளிடம், “டிரஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் படுத்திரு. நான் இதோ வரேன்.” என்று சொல்லி வெளியேறினான்.

திரும்பி வந்தவன் அவளிடம் ஒரு மாத்திரையை கொடுத்து விழுங்கச் சொன்னான். அவள் அதை விழுங்கியவுடன் அவள் கையில் ஒரு கவரை கொடுத்தான்.

அது என்னவென்று தெரியாமல் ஒரு யோசனையுடனே வாங்கிப் பிரித்தவள் உள்ளே மூன்று ஆயிரம் ரூபாய் கட்டுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்தாள்.

“என்ன ராஜ் இது?” என்று கேள்வி எழுப்பினாள்.

“பார்த்தா தெரியலை. பணம். அதிலே மூணு லட்சம் இருக்கு. இதுல மேற்கொண்டு கொஞ்சப் பணம் இருக்கு. இந்த மூணு நாளுக்கு வட்டி கட்டணும் இல்லையா? இந்தா இதையும் வச்சுக்கிட்டு அந்த அடகு கடைக்குப் போய் அந்த கம்மலை மீட்டுக் கொண்டு வா.” என்றான்.

“இந்தப் பணத்தை எங்கேயிருந்து ராஜ் வாங்கினீங்க?”

இப்போது கேள்வி கேட்பது அவள் முறையாயிற்று.

“சுமோத்கிட்டே இருந்து வாங்கினேன்.”

“சுமோத் அண்ணாகிட்டே என்ன காரணம் சொல்லிப் பணம் கேட்டீங்க?”

“உண்மையை தான் சொன்னேன்.”

“அன்னைக்கு உங்க அம்மா அப்பா சொன்ன போதே நீங்க ஏன் சுமோத் அண்ணாகிட்ட வாங்கலை?”

“அப்போ…” என்று சொல்லத் தொடங்கியவனை ஒரு கை காட்டித் தடுத்தவள்,

“உங்களுக்கு உங்க பொண்டாட்டியை விட பிரண்டு பெருசா போயிட்டார். அதாவது உங்க பிரண்டு முன்னாடி என்னை தோற்கடிச்சுட்டீங்க. அப்படித் தானே?” என்று சத்தமாகக் கத்தியவள்,

“அப்படி இல்லை நிவி.” என்று அவன் சொல்லத் தொடங்கிய சமாதானத்தை கேட்க அவள் அந்த இடத்தில் நிற்கவில்லை.

மடமடவென்று ஒரு சுரிதாரை எடுத்தவள் குளியலறைக்குள் சென்று உடை மாற்றி வந்தாள். பணத்தை எடுத்து கைப்பையில் வைத்தவள் அந்த அடமான ரசீதையும் பீரோவில் இருந்து எடுத்து வைத்துக் கொண்டாள்.

“நீங்க ஹாஸ்பிட்டல் போற வழியிலே நான் இறங்கிக்கிறேன்.” என்றதும் ராஜீவிற்கு ‘இவள் அதிரடியா செய்யுற வேலைக்கு பின்னாலே என்ன வில்லங்கம் காத்திருக்குன்னு தெரியலையே!’ என்று தோன்றியது.

Scroll to Top