SC–EPI 12

அத்தியாயம் 12

“இந்த ஆம்பளைங்க இருக்காங்கல்ல, கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுக்கிட்ட ‘நீ காற்று நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்’ அப்படிங்கற மாதிரி நடந்துப்பாங்க! அதே கல்யாணமானதும், ‘சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே!’ அப்படின்னு பல்ப் குடுப்பாங்க பொண்டாட்டிக்கு! அதே இந்தப் பொண்ணுங்க இருக்காங்கல்ல, கல்யாணத்துக்கு முன்னாடி, ‘இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போல பொன்னானது’ன்னு புகழ்ந்து தள்ளுவாங்க! அதே கழுத்துல தாலி விழுந்ததும், ‘மாமா மாமா மக்கு மாமா!’ன்னு டேமேஜ் பண்ணிடுவாங்க! இதுனாலத்தான் நான் இன்னும் பேச்சிலராவே சந்தோஷமா(?) சுத்திட்டு இருக்கேன்! பொண்ணு கிடைக்கலிங்கறத எப்படி பாலிஸ்ட்டா சொல்லுறேன் பார்த்தீங்களா! எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!!!”

(பாட்காஸ்ட் பை பரதேசி)

“நவீனு! ஊஞ்சல கெட்டியா புடிச்சுக்கோ! அப்போத்தான் அக்கா ஆட்டறப்ப விழுகாம இருப்ப”

“சரிக்கா” என்றவனின் முன்னிரு பற்கள் விழுந்திருக்க, பார்க்கவே அவ்வளவு கியூட்டாய் இருந்தான்.

எப்பொழுதும் போல தனது மூன்று வயது தம்பியின் கன்னத்தில் முத்தமிட்டவள்,

“என் தம்பி முருகன் சாமி மாதிரி ரொம்ப அழகு” எனக் கொஞ்சிக் கொண்டாள்.

“ஆமா! நான் அழ்குதான், அக்கா மாதியே” எனப் பதில் சொன்னக் குட்டி,

“ஆட்டுக்கா!” எனச் சிணுங்கினான்.

இவளும் புன்னகையுடனே ஆட்டி விட்டாள்.

“க்கா! பாட்டு பாடு! தம்பிப் பாட்டு!” என அவன் கேட்க,

“தம்பிக்கு ஒரு பாட்டு

அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு

வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு

உதவும் நான் சொல்லும் கதை பாட்டு!” என அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எம்.ஜி.ஆர் பாடலைப் பாடினாள் இவள்.

தம்பி எனும் வார்த்தை வருவதால், அது அவனது பாட்டாம்! எப்பொழுதும் அக்காவைப் பாடச் சொல்லிக் கேட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வது அவனுக்கு வாடிக்கை!

அதிகாலையிலேயே இவர்களின் அப்பா வேலைக்குப் போய் விடுவார்! இரவு ஒன்பது மணி போல தள்ளாட்டத்தோடுத்தான் வீடு திரும்புவார். இவர்களின் அம்மா ஓர் இல்லத்தரசி. வீட்டு வேலைகளையும் பார்த்து, இவர்களையும் கவனித்துக் கொள்வார். பெரிதாய் வசதிகள் இல்லாவிட்டாலும், சம்பள நாட்களில் ஹோட்டலில் சாப்பாடு, ஐஸ்க்ரீம், சினிமா எனக் குதூகலமாகத்தான் போனது இக்குட்டிகளின் வாழ்க்கை.

இப்பொழுது சில வாரங்களாகத்தான் வீட்டில் சில பல மாற்றங்கள். ஐந்து முடிந்து ஆறு வயதை நெருங்கி இருந்த அக்காவுக்கு எதுவும் புரியவில்லை. அன்பாய் இருந்த அம்மா அடிக்கடி கோபப்படுவது இவளுக்குப் பயத்தைக் கொடுத்தது! சில சமயங்களில் கையையும் நீட்டி விடுகிறார். ஏனோதானோவெனச் சமைத்து வைத்து விட்டு, போனில் பொழுதைப் போக்குகிறார். தம்பி பசிக்கிறது என்றால், இவளைத்தான் ஏவுகிறார். உணவைப் போட்டு அவனக்கு ஊட்டத் தெரியாமல் ஊட்டி விட்டு, இவளும் சாப்பிடுவாள்.

“அம்மா! தயிர்சாதம்தானா? எனக்கு சாம்பார் வேணும்!” என ஒரு நாள் இவள் கேட்டதற்கு, முதுகில் படீரென ஓர் அடி விழுந்திருந்தது.

இவள் கண் கலங்கி அதிர்ச்சியாய் பார்க்க,

“ஆக்கி வச்சத சாப்பிடனும்! நானென்ன உனக்கும் உங்கப்பனுக்கும் வேலைக்காரியா? எனக்குன்னு ஆசாபாசம், தேவைலாம் இருக்காதா? உங்களுக்காக காலமுச்சோடும் ஓடா தேஞ்சு சாகனுமா?” எனக் கத்தியவர், மேலும் இரண்டு அடிகளை வைத்தார் இவளுக்கு.

நவீன்,

“அம்மா! அக்காவ அடிக்க நானா! நானாம்மா” என அழ,

“இந்த வீட்டுல மனுசனுக்கு நிம்மதியே இல்ல” எனக் கத்தியபடி போனை எடுத்துக் கொண்டு, அறைக்குள் நுழைந்து கொண்டார்.

“அக்கா! அழ நானா” எனச் சின்னவன் இவள் கண்களைத் துடைக்க, மெல்ல அழுகை நின்றது இவளுக்கு.

அன்றிலிருந்து என்ன சமைத்து வைக்கப்பட்டிருந்தாலும், அதை வாய் பேசாமல் சாப்பிட்டுத் தம்பிக்கும் ஊட்டி விடக் கற்றுக் கொண்டாள். இரவில் வீட்டுக்கு வரும் தந்தை இவர்களின் தலையை வாஞ்சையாய் தடவி விட்டு அறைக்குள் போய் விடுவார்! இவர்கள் இருவரும் ஹாலில்தான் பாயில் படுத்துக் கொள்வார்கள். அறையில் சண்டைப் போல சத்தம் கேட்கும். இவள் தம்பியை இறுக அணைத்துப் படுத்துக் கொள்வாள். பெற்றவர்கள் நடுவே என்ன நடக்கிறது எனப் புரியவில்லை இவளுக்கு! ஆனாலும் இனி தம்பிக்கு எல்லாம் தாம்தான் செய்ய வேண்டும் என்பது மட்டும் புரிந்தது! பெற்றவர்களின் பூசலில் இரு குருத்துக்களும் ஒருத்தருத்துக்கு ஒருத்தர் உறுதுணையாக இருக்கப் பழகிக் கொண்டார்கள்.

இவர்களின் வீடு சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்தது. ஒவ்வொரு வீடும் சற்றுத் தொலைவாய்த்தான் கட்டப்பட்டிருக்கும். யாரோடும் இந்த வீட்டினர் பெரிதாய் பழக்கம் வைத்துக் கொண்டது இல்லை.

ஒரு நாள் இவர்களின் அப்பா வேலைக்குப் போனதும், இவர்களை அவசரமாக எழுப்பி விட்டார் அம்மா!

“இட்லி இருக்கு! நீயும் சாப்பிட்டுட்டு தம்பிக்கும் குடு! சாப்பிட்டதும் ரெண்டு பேரும் பாட்டில்ல தண்ணிப் புடிச்சு எடுத்துக்கிட்டு, தெரு முக்குல இருக்கற ஊஞ்சல்ல போய் விளையாடுங்க! அம்மா வந்து வாங்கன்னு கூப்புடற வரைக்கும் வீட்டுக்கு வரக் கூடாது! சரியா?” என மிரட்டலாகக் சொல்ல, சரியெனத் தலையாட்டினாள் பெண்.

விளையாடப் போகிறோம் எனும் சந்தோஷத்தில் தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சல் இருக்கும் மரம் நோக்கி நடந்து போனாள் குட்டி. நேரம் போனதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தவர்களை, சில மணி நேரங்கள் சென்று வீட்டுக்கு அழைத்துப் போனார் அம்மா!

அந்த நாளுக்குப் பிறகு, அடிக்கடி இப்படி விளையாட அனுப்பி விட்டார் அவர்!

“அப்பா கிட்ட வெளிய விளையாடப் போனத எல்லாம் சொல்லக் கூடாது! ஏன் அங்கல்லாம் போனீங்கன்னு, பெல்ட்டால அடிச்சிடுவாரு! புரியுதா?” எனப் பிள்ளைகள் வாய்க்குப் பூட்டுப் போட்டு வைத்திருந்தார் அவர்!

அம்மா சில சமயங்களில் கை நீட்டுவதையே தாங்கிக் கொள்ள முடிவதில்லை பிள்ளைகளால்! இப்பொழுது அப்பாவும் அடிக்க ஆரம்பித்தால் என்ன செய்வது எனும் பயம் பெண் பிள்ளையின் வாயை அடக்கியது! அப்பாவின் மேல் மது வாடை வருகிறது என சும்மாவே சின்னவன் அவரிடம் போய் கொஞ்ச மாட்டான்! இவள்தான் அப்பா, அப்பா என அவர் வீட்டில் இருக்கும் சமயங்களில் பின்னாடியே சுற்றுவாள். சின்னவளுக்கு வெளியே விளையாடும் நேரம் மட்டுமே சந்தோஷமாய் இருப்பதைப் போலத் தோன்ற ஆரம்பித்தது! இப்பொழுதெல்லாம் அம்மா துரத்தி விடும் முன்னே, பிஸ்கட், தண்ணீர் பாட்டிலுடன் கிளம்பி விடுவாள் தம்பியை அழைத்துக் கொண்டு!

இருவரும் மண்ணில் எதையாவது வரைந்து விளையாடுவார்கள். ஓடிப் பிடித்து, ஒளிந்து மறைந்து விளையாடுவார்கள். பசிக்கும் போது பிஸ்கட் சாப்பிட்டு விட்டு, மீண்டும் விளையாடுவார்கள். அந்த மரம் அவர்களுக்கு நிழல் கொடுத்தது மட்டுமில்லாது, தாய் மடியாகவும் தாங்கிக் கொண்டது!

ஒரு நாள் இரவு, வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை! அம்மா அழுவது, அப்பா கத்துவது, பொருட்கள் கீழே விழுந்து நொருங்குவது எனப் பல பல சத்தங்கள். நவீன் இவளை இறுக அணைத்துக் கொண்டான். இவளுக்குமே பயமாய் இருந்தது! என்ன செய்வது எனத் தெரியவில்லை! கண்களில் கண்ணீர் வழிந்தது! இவள் கண்ணீரைப் பார்த்து, இவன் இன்னும் வேகமாய் அழ, கன்னத்தை அவசரமாய் துடைத்துக் கொண்டாள் குட்டி!

“அழக் கூடாது நவீனு! அக்கா பாட்டுப் பாடறேன்! பயப்படாம இருக்கனும்! சரியா?” எனச் சொல்லியபடியே,

“தம்பிக்கு ஒரு பாட்டு!” என ஆரம்பித்தாள் இவள்.

சண்டைச் சத்தம் ஓயும் வரை, முப்பது முறையாவது அதே பாடலைத் திரும்பித் திரும்பிப் பாடியிருப்பாள். ஒரு வழியாக இவளும் அப்படியே தூங்கிப் போனாள்.

மறுநாள் காலை, அப்பா வேலைக்குப் போனதும் வீங்கிய முகத்துடன்தான் நடமாடினார் அம்மா! இவளுக்கு அவரிடம் பேசவே பயமாய் இருந்தது. ஒன்றும் சமைக்கவில்லை அவர்.

“அக்கா! பசிக்கி” என வயிற்றைத் தடவிக் காட்டினான் நவீன்.

முந்தைய நாள் மீந்திருந்த சாதம் மட்டும் அடுப்படியில் இருந்தது! அதில் தனக்குத் தெரிந்த வரை, தண்ணீரை ஊற்றிப் பிசைந்து தம்பிக்கு ஊட்டினாள் இவள். அவனுக்கு மட்டுமே போதுமானதாய் இருக்க, வெறும் தண்ணீரைப் பருகிப் பசியைக் கொஞ்சம் கட்டுப்படுத்தினாள் குட்டிப் பெண்.

அம்மா சொல்லும் முன்னரே தம்பியை அழைத்துக் கொண்டு, அவர்களுக்குப் புகலிடம் கொடுக்கும் மரத்தடியை நாடிப் போனார்கள் இருவரும். ஒரு மணி நேரத்துக்குள் இவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது! வீட்டில் பிஸ்கட் பேக்கெட்டும் இருக்கவில்லை. கையில் தண்ணீர் பாட்டில் மட்டும்தான் கொண்டு வந்திருந்தாள். மீண்டும் தண்ணீரைக் குடித்து பசியை அடக்க முயன்றாள். அந்த நேரம் அவரக்ளின் அம்மா வந்தார்.

“பாப்பா! வீட்டுக்கு வாங்க” எனச் சிரித்த முகமாய் அவர் அழைக்க, முகம் மலர்ந்து போனது இவளுக்கு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பாப்பா என்ற அம்மாவின் அழைப்பில் மனம் குளிர்ந்து போனது பெண்ணுக்கு! ஓடிப் போய் அவர் கைப்பற்றிக் கொண்டாள் இவள். மகளை இறுக அணைத்துக் கொண்ட அம்மா, மகனைத் தூக்கிக் கொண்டாள்.

‘எல்லாம் சரியா போய்டுச்சு! அம்மா சிரிக்கறாங்க! பாப்பான்னு கூப்பிடறாங்க’ என மனதுக்குள் மகிழ்ந்து போனாள் இவள்.

“அம்மா! தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி பிரியாணி வாங்கிட்டு வரச் சொல்லிருக்கேன்! நானே உங்க ரெண்டுப் பேருக்கும் ஊட்டி விடறேன்!” என அவர் சொல்ல, ஒரே சிரிப்பு இருவர் முகத்திலும்.

தம்பிக்கு முகம் கழுவிக் கைகால் சுத்தம் செய்து விட்டவள். இவளும் கை கழுவிக் கொண்டு வந்தாள். இருவரும் ஆசையாய் தரையில் அமர, அவர்களோடு ஒன்றாய் அமர்ந்தார் அம்மா! பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது. பிள்ளைகள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் சந்தோஷமாய் பார்த்துக் கொண்டனர்.

சிரித்த முகமாய் பிரியாணியை இருவருக்கும் ஊட்டினார் அம்மா!

“அம்மா! சிக்கின்” எனக் கேட்டு வாங்கிக் சாப்பிட்டான் நவீன்.

நீண்ட நாட்களுக்குப் பின்பு பிரியாணி சாப்பிடுகிறாள் குட்டி! என்னவோ வாசனை வந்தது அதில் இருந்து! ஆனாலும் வயிறு பசியாய் பசிக்க, வாயைத் திறந்து ஆவலாகவே வாங்கிக் கொண்டாள் இவள். இவர்களுக்கு ஊட்டி முடித்தவர், கைகளைக் கழுவிக் கொண்டு அறைக்குள் நுழைந்தார்.

அம்மா வெளியே வந்த போது கையில் பேக் ஒன்று இருந்தது.

“எங்கம்மா போறோம்?” எனக் கேட்டாள் இவள்.

“அம்மா மட்டும்தான் போறேன்! சீக்கிரம் வந்திடுவேன்! நிம்மதியா தூங்குங்க ரெண்டு பேரும்” எனச் சிரித்தவர், கதவைத் திறந்து வெளியேறி விட்டார்.

அம்மா போவதையே பார்த்திருந்தவள்,

“க்கா!” எனும் ஈனஸ்வரத்தில் திரும்பிப் பார்த்தாள்.

வாயில் நுரை தள்ள கீழே விழுந்து துடித்தபடி இருந்தான் நவீன்.

“நவீனு!” என அலறியபடி அவனருகே ஓடினாள் குட்டிப் பெண்.

“வவுறு வலிக்குதுக்கா!” என்றவன் துடியாய் துடிக்க, இவளுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை!

அழுகையாய் வந்தது! வெளியே ஓடிப் போய் அம்மா கண்ணுக்குத் தெரிகிறாரா எனப் பார்த்தாள். அவர் சுவடே இல்லை. மீண்டும் வீட்டுக்குள் ஓடி வந்தாள். தம்பி அருகே அமர்ந்து அவன் வாயில் வழியும் நுரையைத் துடைத்து விட்டாள்.

“நவீனு! நவீனு” என அழுதபடியே இருந்தவளுக்கு வயிற்றைப் பிரட்ட ஆரம்பித்தது!

ஆவேனக் கத்தியபடியே வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். தொண்டை எல்லாம் நெருப்பு வைத்தது போல எரிந்தது.

“அம்மா! அம்மா” எனக் கதறியபடியே மடிந்து அமர்ந்தாள்.

நவீன் இவள் கையைப் பிடித்துக் கொண்டு,

“அக்கா! அக்கா!” என அழுதான்.

அவன் கண்கள் மெல்ல மேலே சொறுக ஆரம்பித்தன.

“நவீனூ!!!!!!” எனக் கதறியபடியே விழித்த ஊர்மிளாவை மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் விஷ்ணுசேனா!!!

(சேர்ந்தாடுவாளா???)

(வணக்கம் டியர்ஸ்!! இந்த எபிய நான் பெருசா குடுக்க விரும்பல! ரெண்டு எபி மட்டும்தான் சோகம்! உடனே இது ஜோகக் காவியம்னு சொல்லப்படாது! ஓகேவா? என்ன நடந்திருக்கும்னு உங்களால கெஸ் பண்ண முடியுதா? கமேண்ட் பண்ணுங்க பார்ப்போம்! அவளோட வாய் வழியா அடுத்தடுத்த எபில கதை வரும்! இனிமே ஹேப்பியா பயணிக்கும் கதை! நாமளும் சேர்ந்தாடுவோம் அவங்க கூட!! லவ் யூ ஆல் டியர்ஸ்!)

Scroll to Top