தாய் தந்தையர் இல்லாமல் வளர்ந்தது எப்படி அந்த குழந்தைகளின் குற்றமாகும்? நாமா வரம் வாங்கி அந்த இல்லங்களில் பிறந்து வளர்கிறோம்? தங்கை, நண்பி, செல்லம் அத்தை என்று விழுந்து விழுந்து உறவு கொண்டாடுகிறார்கள். நிஜ உறவாய் மாற என்றைக்கு நினைக்கிறோமோ அன்றைக்கு அவர்களின் சுயரூபம் தெரிந்து விடுகிறது என்று கசப்புடன் எண்ணிக்கொண்டு வர்ணி அவளுக்கு முன்னே அழுது கொண்டே இருந்த பூஜாவையும் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்த நித்யா அக்காவையும் கனத்த மனதுடன் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கொஞ்ச நாளாகவே அடிக்கடி காணாமல் போய்க்கொண்டிருந்த பூஜாவை பார்த்தபோதே ஏதோ சரியில்லை என்று அவளுக்கு உள்ளுணர்வு சொன்னது பொய்க்கவில்லை.
பிரதீப்பின் அப்பாவுக்கு இவர்களுடைய காதல் விவகாரம் தெரிந்து விட்டது. அவர் அப்பா அம்மா பெயர் தெரியாதவள் என் மருமகளா என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வலுக்கட்டாயமாய் பிரதீப்பை தங்கள் சமூகத்துக்குள்ளேயே ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்திருக்கிறார் பிரதீப் அங்கே இல்லாமலே..
சட்டென்று ஏதோ தோன்ற “அந்த பொண்ணுக்கு பிரதீப்புக்கு இஷ்டமில்லைன்னு தெரியாமலா இருக்கும்?” என்று கேட்டாள் வர்ணி.
“அவங்களுக்கு தெரியும். பிரதீப்பும் நானும் அவங்க கிட்ட போய் பேசினோம். எங்க அம்மா அப்பாவை என்னாலயும் மீற முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றாள் பூஜா சோகமாய்..
அந்த பெண் சொல்வதும் சரிதானே..காதலிக்கும் ப்ரதீப்பாலேயே அப்பாவை ஒத்துக்கொள்ள வைக்க முடியவில்லை எனும் போது எந்த பிரச்சனையும் இல்லாத அவளை மட்டும் எப்படி திருமணத்தை நிறுத்து என்று கேட்க முடியும்? அப்போ இதுக்கு என்ன தான் முடிவு? உண்மையை சொல்லப்போனால் வர்ணிக்கு பிரதீப் மேல் நம்பிக்கை இல்லை.
ஆரம்பத்தில் அவன் கியூட்டாய் பூஜா மறுக்க மறுக்க பின்னால் சுற்றி அவளை ஒத்துக்கொள்ள வைத்த போது அவர்களுடைய ஜோடிப்பொருத்தத்தை சந்தோஷமாய் பார்த்துக்கொண்டிருந்தவள் இந்த பிரச்சனை வந்ததும் பிரதீப் தைரியமாய் இல்லாமல் பயந்து பயந்து செய்வதறியாமல் நிற்பது அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. பூஜாவுக்கு அம்மா அப்பா இல்லையென்று தெரிந்து தானே காதலித்தான்? உன் வீட்டுக்கு இவ்வளவு பயந்தவனுக்கெல்லாம் என்னத்துக்கு காதல்? இவன் மண் குதிரையோ என்று அவளுக்குள் பயம் வேறு.. ஆக பெரிதாக எதிலும் பட்டுக்கொள்ளாமல் நடப்பதை கவனித்துக்கொண்டிருந்தவளுக்கு பூஜா அழுவதை தான் தாங்க முடியவில்லை.
நேரம் ஏழரையை தொட்டுக்கொண்டிருந்தது. அவ்வளவு நேரம் அவளிடம் பேசிப்பேசி ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த நித்யா அக்கா “எதற்கும் பயப்படாதே நாங்கள் எல்லாம் இருக்கிறோம் அப்படியெல்லாம் உன்னை விட்டுவிட மாட்டோம்” என்று ஆறுதல் சொல்லிவிட்டு கணவரை அனுப்பி வைக்க போய் விட ஒரு வழியாய் பூஜாவை கிளப்பி காபேக்கு கூட்டி வந்திருந்தாள் வர்ணி .. அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
“எனக்குதான் அப்பா அம்மா இல்லை. அவனுக்கும் இல்லாமல் ஆகிவிடக்கூடாதுல்ல வர்ணி?”
வர்ணிக்கு அந்த கூற்றில் உடன்பாடு சுத்தமாய் இல்லை ஆனாலும் அவள் அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் காபேயை திறந்து முன்னாயத்தங்களில் ஈடுபட ஆரம்பிக்க இயந்திரமாய் ஜாடிகளில் தொங்கிக்கொண்டிருந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள் பூஜா.
எவ்வளவு தைரியமான பெண் அவள்..இப்படி பேசுமளவுக்கு இந்த காதல் அவளை இப்படி உடைத்து விட்டதே என்று வர்ணி அவளை சோகமாய் பார்த்திருந்தவள் அன்றைய மெனுவில் எதுவுமே யோசிக்காமல் ஹாட் சாக்கலேட்டை எழுதி வைத்து விட்டு வந்து விட்டாள். எதையும் புதிதாய் கண்டுபிடிக்கும் மனநிலை அன்றைக்கு அவளுக்கு இல்லை.
மனம் முழுக்க அழுத்தம், நாங்கள் பேசாமல் குழந்தைகளாகவே அந்த இல்லத்தின் சுவர்களுக்குள்ளேயே இந்த பாகுபாடு நிறைந்த வன்ம உலகத்தினை தெரிந்து கொள்ளாமலே இருந்திருப்போமே..வெளியே வந்து நீங்கள் எங்களுக்கு சமமில்லை என்று கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சொல்லிக்கொண்டே இருக்க இதெல்லாம் என்றைக்கு பழகி மனது மரத்து போகுமோ தெரியாது.
இதற்காகவே தான் வர்ணி எப்போதுமே ஒரு படி முன்னே தான் இருப்பாள். மூளைக்குள் சதா சில்லுகள் சுழல எப்போதும் கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியோடு அவள் போட்டி போட்டுக்கொண்டே தான் இருப்பாள். முந்திரிக்கொட்டை என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அது அவளுடைய சுயமரியாதையை பாதுகாக்கும் கவசம். நாளைக்கு அவளுக்கும் ஒரு காதல் வந்தால் இப்படித்தான் உறவுகள் அவளையும் வெறுப்பார்களா? அவள் யோசித்துக்கொண்டே தன் போக்கில் வந்திருந்த கஸ்டமருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு பில் போட்டுக்கொண்டிருந்தாள்.
“மானேஜர்! என்ன மானேஜர்? வாங்க வாங்க .. வந்து உங்க சோம்பேறி அஸிஸ்டன்ட்டுகளை ரெண்டு போடு போடுங்க ” என்ற குமாரின் உற்சாக குரலில் உட்பக்க ஹாரிடோரை பார்த்தவள் எப்போதும் போல பரிட்சயமான இடத்துக்கு வந்து விட்டாலும் குழப்பமாய் பார்த்துக்கொண்டிருந்த லக்கி ஆன்ட்டி குமாரின் கேள்வியில் சட்டென்று வழமைக்கு திரும்பி “அது தான் வந்துட்டேன்ல” என்று சிரித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்ததை காணவும் அவளுக்குள் என்னமோ அவளது இவ்வளவு நேர வேதனைகளுக்கு மனதுக்குள் மயிலிறகால் வருடிய ஆறுதல் மெதுவாய் பரவி அவளை இலேசாக்கிற்று.
நினைவுகளை தொலைத்தவர் அவர், அவர்கள் இருவரையும் தன்னுடைவர்களாய் உணர்வில் உணர்வதால் தானே ஏன் வருகிறோம் என்று தெரியாமல் குழம்பினாலும் சரியாய் அங்கே வந்து நின்று விடுகிறார்! பாசாங்கே செய்ய முடியாத நிலையில் உணர்வுகளை மட்டும் தோலுரித்து வெளிப்படுத்தும் அந்த ஜீவன் அவர்களை நாடி வருவதை விட வேறு எந்த உறவு அவர்களுக்கு வேண்டும்?
தன்னையும் மீறி முளைத்த பெரிய புன்னகையோடு வர்ணி உற்சாகமாய் நடந்து வரும் லக்கி ஆன்ட்டியையே பார்த்திருக்க அவரும் வழக்கமான உற்சாகத்தோடு சிரித்துக்கொண்டே அவர்கள் இருவரையும் நோக்கி வர பூஜாவின் முகத்திலும் சின்னதாய் ஒரு புன்னகை பூத்திருந்ததை வர்ணியால் உணர முடிந்தது.
கருநீல உடலில் ப்ரவுன் பூக்கள் தெறித்த சேலைக்கு பிரவுன் பிளவுஸ் அணிந்திருந்தாலும் அது அந்த பூக்களின் வர்ணத்தோடு ஒத்துப்போகாதிருந்ததில் அந்த உடைத்தெரிவுக்கு பின்னாலிருந்தவன் யார் என்று புரிந்து போக இதயத்தின் ஓரம் அவளையும் அறியாமல் ஏதோ ஒரு முடிச்சொன்று இழுக்கப்படுவதை போல உணர்ந்தாள் வர்ணி. ஏனோ அவனும் ஆன்ட்டியும் தங்களை போன்றவர்களே தான் என்ற உணர்வு இப்போதெல்லாம் அவளுக்குள் அடிக்கடி முளைக்கிறது.
ப்ச்..இதெல்லாம் வேண்டாத வேலை என்று தலையை சிலுப்பி எண்ணப்போக்கை அறுக்க முயன்றாள் வர்ணி.
அதற்குள் லக்கி ஆன்ட்டி அவர்களை நெருங்கியிருக்க “அழகா இருக்கீங்க மானேஜர்” என்று அவரது கன்னத்தில் கிள்ளி வைத்தவள் விலகிக்கொண்டு அவரை உள்ளே விட அவர்களது வழக்கமான ரூட்டின் ஆரம்பமானது.
சரியாக பத்து மணி இருக்கும். சோகமே உருவாய் பிரதீப் அங்கே வந்து சேர்ந்தான். அந்த நேரம் கூட்டம் எதுவும் இல்லாத சௌகர்யத்தில் காபேக்கு வெளியே இருந்த தடுப்பில் அவன் நின்று கொண்டிருக்க உள்ளே இருந்து கலங்கிய விழிகளோடு பேசிக்கொண்டிருந்தாள் பூஜா.
கேட்காதிருக்க முனைந்தும் காதில் கேட்டு தொலைக்க விதியே என்று பேக்கரி வண்டிக்கான அன்றைய கணக்கை சரி பார்த்துக்கொண்டிருந்தாள் வர்ணி. இன்றைய தொகையை மறுநாள் வாங்கிக்கொண்டு காலைக்கான உணவை கொடுத்து விட்டு போவார்கள்.
“அப்பா கல்யாணத்துல ரொம்ப உறுதியா இருக்கார். இப்போ அவர் கூட அம்மாவும் சேர்ந்துக்கிட்டு விஷம் குடிச்சிடுறேன்னு மிரட்டுறாங்க..இப்படி ஆகும் என்று நான் நினைக்கவே இல்லையே” என்று அவன் கலங்க.
அந்த விஷத்தை நீ வாங்கினால் ஆகாதா? என் விருப்பம் இல்லாமல் கல்யாணம் நடத்தினால் நான் குடித்து விடுவேன் என்று பதிலுக்கு உனக்கு மிரட்ட தெரியாதா? என்று வர்ணி மனதுக்குள் கொதித்துக்கொண்டிருக்க
“நான் தான் சொல்றேன்ல..நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு போன்னு..நான் தானே எல்லாருக்கும் இங்கே பிரச்சனை?” என்று பூஜா கோபமாய் கத்த
“நான் என்ன சொல்றேன் நீ என்ன புரிஞ்சுக்கற? என்று தலையில் கைவைத்துக்கொண்டான் பிரதீப்.
இந்தப்பக்கம் வரணிக்கோ இருவரையும் பிடித்து உலுப்பலாமா என்றிருந்தது.
அவருக்கு பிரியமான கப்புகளை அடுக்கும் வேலையை முடித்து விட்டு வெளியே வந்த லக்கி ஆன்ட்டி பூஜாவின் அழுத விழிகளை பார்த்து விட்டு “டார்லிங் ஏன் அழற?” என்று பட்டென்று கேட்க
பூஜா கண்ணை புறங்கையால் துடைத்து சிரிக்க முயன்றபடி ஒன்றும் இல்லை என்று தலையசைத்தாள்
ஆன்ட்டி அதை ஏற்க முடியாமல் இப்போது வர்ணியை திரும்பி பார்க்க “லவ் பண்றங்க ஆன்ட்டி” என்றாள் அவளும் புன்னகைக்க முயன்ற படி
ஓ..என்று கிரகித்தவர் இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு என்ன பிரச்சனை வீட்ல ஒத்துக்கலையா?” என்று கேட்டார்
“எங்களுக்கு அம்மா அப்பா இல்லையாம் , நாங்க அனாதையாம் அதனால அவங்க வீட்ல அவளை வேணாம்னு சொல்றாங்க” என்று இடையில் குறுக்கிட்டு மீண்டும் வர்ணி சொல்ல பிரதீப்பின் முறைப்பு பார்வை அவளை வந்தடைந்ததை அவள் பொருட்படுத்தவில்லை.
“அதெப்படி அவங்க சொல்லலாம்? நான் தான் இருக்கேனே நான் போய் பேசவா?” என்று ஆன்ட்டி அப்பாவியாய் கேட்க
“ஆங் அப்புறம் உங்க பையன் எங்க முதுகுல டின் காட்டவா?” என்று எண்ணிய வர்ணிக்கு சிரிப்பும் வந்துவிட்டது.
“அவங்க ரொம்ப ரக்கட் ஆன பேரன்ட்ஸ் ஆன்ட்டி. யார் பேச்சும் கேட்க மாட்டாங்க..”என்று அவள் நமுட்டு சிரிப்போடு சொல்ல பிரதீப்பின் உக்கரப்பார்வை அவளை வந்தடைந்தது மீண்டும்.
ரொம்ப பொல்லாதவங்களோ ? என்று ஆன்ட்டி கேட்க
ஹ்ம்ம் என்று தலையை மட்டும் அசைத்தாள் வர்ணி ஒப்புதலாய்
ஒரு நிமிஷம் யோசித்தவரோ பிறகு பிரதீப்பின் கண்ணை பார்த்து “லவ் பண்ணின பொண்ணை கைவிட்டுட்டா அது பாவம், பேசாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோங்க. அப்புறமா வீட்ல சொல்லிக்கலாம். நம்ம அப்பா அம்மா தானே புரிஞ்சுப்பாங்க” என்று விட்டு மீண்டும் அடுக்கிய கப்புகளை திரும்ப கப்களை அடுக்க கிளம்ப
பட்டென்று மூவரின் பார்வைகளும் அர்த்தமாய் சந்தித்து பிரிந்தன.
சமயம் புரியாமல் அந்தப்பக்கம் போன இன்னொரு பெரியவரும் “என்னப்பா பிரதீப் உங்கப்பா உனக்கு கல்யாணம்னு சொல்லிட்டு இருக்காரு? நான் எதுவும் தெரியாததை போல அப்படியான்னு கேட்டுட்டு வந்தேன். அந்த மனுஷன் ஏடாகூடமா எதையும் செய்ய முன்னர் சரி பண்ண பாரு..” என்று சொல்லி விட்டு கடக்க
“நீங்க ஏன் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க கூடாது?” என்று கேட்டு பூனைக்கு மணி கட்டியே விட்டாள் வர்ணி. அவளுக்கு அது தான் சிறந்த தீர்வாய் பட்டது. இந்த பிரதீப்பை இப்படியே அனுப்பினால் கண்டிப்பாய் பூஜா ஏமாந்து நிற்பாள் என்று அவளுக்கு தான் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்ததே..
அவர்கள் இருவரும் இப்போது அவளை பார்க்க ” ஹியர் மீ அவுட்” என்று உற்சாகமாய் ஆரம்பித்தவள் “நாளைக்கே நீங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு உங்க வீட்டுக்கு போய்டுங்க.” என்று சொல்லப்போனவளை இடைமறித்து
“அலைபாயுதே..” என்றாள் பூஜா லேசான நக்கலாய்
“ஆமாம் ஆனா வித் ஜென்டர் ஸ்வாப்” என்று வர்ணி சிரிக்க பிரதீப் இப்போது வர்ணியை மீண்டும் முறைக்க ஆரம்பித்து விட்டான்
“விளையாடாதே வர்ணி”
“ஐயோ நான் நிஜமாவே தான் சொல்றேன், ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு வீட்ல சொல்லாம அப்பா அம்மாவை கன்வின்ஸ் பண்ண முயற்சி பண்ணுங்க. அப்படியும் முடியாம அவர் வற்புறுத்தினா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லிக்கலாம். டிவோர்ஸ் வாங்க ரொம்ப காலம் இழுக்கும்னு உங்க கல்யாணத்தையும் தள்ளிப்போட்டுடலாம். அதுக்குள்ள எல்லாம் சரியாயிடும்” என்று அவள் விழிகள் பளபளக்க சொல்ல
“இது சரியா வருமா?” என்று கேட்டான் பிரதீப்
