“அப்போ உங்கம்மா ஒரு பாய்சன் பாட்டிலை கைல வச்சுக்கிட்டு தாலி கட்டுன்னு சொன்னா கட்டிடலாமா?” என்று தலை சரித்து கேட்டாள் வர்ணி
அவன் கைகள் மேசையை இறுகப்பற்றின பிடித்தமின்மையில்.
“அப்படித்தான் ஆகும். உங்கப்பா போற போக்கை பார்த்தா அப்படித்தான் தெரியுது.” என்று வர்ணி இன்னும் தூபம் போட
அவ்வளவு நேரமும் யோசித்துக்கொண்டிருந்த பூஜா “அப்படியெல்லாம் வேகமா நம்ம இஷ்டப்படி பண்ணிக்க முடியுமா?” என்று தயங்கி கேட்க
அவளுக்காக தான் தயங்கினானோ என்னமோ “முடியும். இன்னிக்கே ரெஜிஸ்ட்டார் ஆபீசுக்கு போய் வீட்டுக்கு விஷயம் தெரியாம பார்மாலிட்டியை முடிச்சு நேரத்தை வாங்கிட்டா சரி” என்று சொன்னது சாட்சாத் ப்ரதீப்பே தான்.
பூஜா வர்ணியை திரும்பி பார்க்க “பண்ணிக்கோ இதை விட பெட்டர் ஆப்ஷன் எதுவுமே கிடையாது” என்று இமை மூடித்திறந்தாள் வர்ணி.
“நீ இங்கேயே இரு. நான் என் பிரன்ட்ஸை கூட்டிட்டு போய் ரெஜிஸ்ட்டாரை பார்த்து நேரம் வாங்கிட்டு வர்றேன்” என்று பிரதீப் நொடியில் மறைய பெரிய சிரிப்புடன் தன் கங்கிராஜுலேஷன்ஸ் என்று பூஜாவை இறுக அணைத்தாள் வர்ணி.
சரியாக அந்த நேரம் வெளியே வந்த லக்கி ஆன்ட்டி இருவரும் மாறி மாறி அணைத்துக்கொண்டும் குதித்துக்கொண்டு நின்றதை பார்த்துவிட்டு என்னாச்சு என்று குழப்பமாய் கேட்க இருவருக்கும் சிரிப்பு பீறிட்டது. “நாளைக்கு எங்களுக்கு ஒரு விஷேஷம்” என்று சொல்ல வாழ்த்துக்கள் என்று குழப்பமாய் சொன்னவரை சட்டென்று தங்கள் அணைப்புக்குள் இழுத்து வலது பக்க கன்னத்தில் வர்ணி முத்தம் வைக்க இடது கன்னத்தில் முத்தமிட்டாள் பூஜா.
அஹேம்” என்ற செருமல் கேட்கவும்
ஆத்தாடி ராங் ரைமிங்! என்று திரும்பி பார்க்காமல் அசடு வழிந்து கொண்டே ஆன்ட்டியை விடுவித்தவர்கள் சாஹி அவர்களை ஒரு மார்க்கமாய் பார்த்துக்கொண்டே அம்மாவை அழைத்து செல்ல
“இது சரியா வருமாடி? பயமா இருக்கே” என்று மீண்டும் கேட்டாள் பூஜா
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. உன் ஆளை ஹெவியா லாக் பண்ணாம அவர் வீட்டுக்கு நம்பி அனுப்ப முடியாது. அம்மா விஷம் குடிச்சிட்டாங்க பாட்டி பாயாசம் குடிச்சிட்டாங்கன்னு மணமேடைல போய் உட்கார்ந்திருவார்..எங்கிருந்தாலும் வாழ்கன்னு ஆசீர்வாதம் பண்ண ரெடின்னா வெயிட் பண்ணு” என்று பட்டென்று போட்டுடைத்து விட்டாள் வர்ணி
பூஜா யோசிக்க
“அப்போ அட்சதையெல்லாம் ரெடி பண்ணிக்கோ அப்புறம் பக்கத்துக்கு ரூம்ல இருந்து அழக்கூடாது. கிரைம் சீரிஸ் பார்க்கும் போது எனக்கு டிஸ்டர்பன்ஸ் ஆகும்” என்ற படி வர்ணி ஒரு குக்கீயை எடுத்து கடிக்க
“அடியே” என்று முறைத்தாள் பூஜா.
“நீ தான் எல்லாத்துக்கும் ரெடியா இருக்கியே அப்புறம் என்ன?”
“அதென்ன எல்லாத்துக்கும் ரெடி? சும்மா இருந்தவளை துரத்தி துரத்தி லவ் பண்ணுவாராம் இப்போ வந்து இப்படி சொன்னா சரியா?” என்று கோபமானாள் பூஜா
“புரியுதுல்ல அப்போ எதுக்கு கேள்வி கேட்குற?”
“அதில்லை. நீ சிம்பிளா சொல்லிட்டடி.. எவ்ளோ பார்மாலிட்டி இருக்கு” என்று பூஜா மீண்டும் ஆரம்பிக்க
லீகல் பார்மாலிட்டியை உன் ஆள் பார்த்துக்கிறாராம்.. லாஜிஸ்டிக்ஸ் நம்ம டீல் பண்ணிக்கலாம்..எவ்வளவு பார்த்துட்டோம் இதை பண்ணமாட்டோமா? என்று அவள் மேசையில் இரு தட்டு தட்ட தூரமாய் அம்மாவோடு இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் பட்டென்று திரும்பி பார்த்தான்.
நடு நடுல இவன் வேற கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுக்கிறான் என்று வர்ணி நொந்து மறுபக்கம் திரும்பி கொண்டாள்.
பூஜாவின் மனது கடைசியில் கல்யாண மோடுக்கு வந்திருக்கும் போலும் “லாஜிஸ்டிக்ஸ்.. சேலை சேலை ..என்று உறக்கவே யோசித்தவள் என்கிட்டே ஒரு மயில் கலர் சேலை இருக்கு ப்ளவுஸ் இல்லை.. டெய்லர் அக்காவை பார்த்துட்டு வரேன்” என்று பறக்கலானாள்
அடியேய் நான் சொன்னது அதில்லை என்று கத்தியவள் பூஜா திரும்பி வராமல் அவள் போக முடியாதே ஆக தூரமாய் இருந்த அம்மா மகனில் பார்வையை பதித்து கொண்டிருந்தான்.
அதென்னமோ மென்மையாய் குழந்தையை சமாளிப்பது போல பெரும்பாலும் எப்போதாவது சின்ன கடுமை என்று ஆன்ட்டியை சமாளித்து விடுகிறான்.அவனது கடுமையுமே ஒரு கவசமே தான் இப்போதெல்லாம் புரிகிறது.
கொஞ்ச நாட்களாய் அவளை முறைத்தாலுமே ஆன்ட்டி இங்கே வருவதற்கு அவன் ஒன்றும் சொல்வதில்லை . சரியாய் கடிகார மணி பதினொன்று நாற்பத்தைந்துக்கு அடிக்க சாப்பாட்டோடு ஆஜராகி விடுபவன் அவர்களின் காதில் கேட்காத ஒரு நாற்காலியாய் பார்த்து அமர்ந்து அவரை சாப்பிட வைத்து அழைத்து போவான். அவரின் சந்தோஷத்துக்கு முன்னால் அவனது பிடித்தங்களெல்லாம் ஒன்றுமே இல்லை போலும்.
இவள் யோசித்துக்கொண்டே அந்த பக்கமே பார்த்திருக்க அதை உள்ளுணர்வால் உணர்ந்திருக்க வேண்டும் ஒரு செக்கன்ட் இந்த புறம் திரும்பி பார்த்துவிட்டு அவள் தன் பக்கப்புற முகத்தை கூட பார்க்காதிருக்கும் படி நாற்காலியை அவன் மாற்றி போட்டுக்கொள்ள ஐயே பெரிய மன்மதன் பாரு..என்று நொடித்துக்கொண்டவளுக்கு லேசாய் அசடு வழிந்ததை அவளே ஒப்புக்கொள்ள மாட்டாள்.
சாஹி சாப்பிட்டு முடித்து வழக்கம் போல அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அம்மாவோடு வெளியேறிப்போய்விட்டான்.
பை சொல்றாராமாம்..
வை காட் வை? என்று அவள் சிரிப்போடு நொந்து கொள்ள
“என்ன வர்ணி சாப்பிட போகலை?” என்றபடி அவளை தேடி வந்தான் குமார்.
நடந்ததை குமாருக்கு சொல்லி அக்கம் பக்கம் பார்த்தபடி ரகசியமாய் தங்களது திட்டத்தையும் சொல்ல அவளைப்போலவே உற்சாகமானாலும் “நீ நினைக்கற போல இது இலகுவான விஷயம் இல்லை” என்றான் அவன்.
“ஏய் ஒரு சைன் போடறதுல என்னடா பிரச்சனை வந்துரும்?” வர்ணிக்கு சத்தியமாய் புரியவில்லை.
“நம்ம பிளான் அவங்க வீட்ல தெரிஞ்சு அவங்க சொன்ன நேரத்துக்கு முன்னாடியே கும்பலா வந்து பிரச்சனை பண்ணினா என்ன பண்ணுவ?”
அவள் இதை யோசிக்கவே இல்லை..
“அவங்க பாமிலியே கொஞ்சம் பெரிசா தான் தெரிவாங்க இவரை தவிர” என்று குமார் பாட்டுக்கு சொல்லிக்கொண்டு போக
“அடேய் பயமுறுத்தாத” என்றாள் வர்ணி
“சரிசரி அது பெரிய விஷயம் இல்லை.. நம்மளோட சைட்ல பூஜாக்காக பேசக்கூடிய கொஞ்சம் பேரை கூட வச்சுக்கணும்..அவ்வளவு தான்” என்றான் அவன்.
“யாரெல்லாம் நமக்காக வருவாங்க? என்று பதட்டமாய் யோசித்தாள் வர்ணி. நித்யா அக்கா வருவாங்க.. அவங்க ஹஸ்பண்டையும் போய் பாவமா முகத்தை வச்சுக்கிட்டு கூப்பிட்டா வருவாங்க..
“நீ நான், நித்யா அக்கா, அவங்க ஹஸ்பண்ட் அவ்வளவு பேரும் தான் இருக்கோம்” என்று சத்தமாய் யோசித்த வர்ணி “நமக்கு ஹல்க்கி பல்க்கியா பார்த்தாலே கொஞ்சம் பயம் வர்ற லுக்ல இருத்தர் இருந்தா நல்லா இருக்கும்” என்றவளுக்கு உடனே சாஹியின் முகம் தான் மனதில் நிழலாடியது. ஆனால் அவனிடம் கேட்டால் நேராய் பிரதீப்பின் அப்பாவிடம் நம்மை கொண்டு போய் நிறுத்தினாலும் நிறுத்தி விடுவான் என்று அந்த எண்ணத்தையே எச்சில் தொட்டு அழித்து விட்டவளுக்கு பூக்கடை சார் தான் அடுத்த ஆப்ஷனில் வந்தார். கொஞ்சம் உயரமாய் எப்போதும் முறைப்பு முகத்துடன் சுற்றுவார்
அவர் வருவாரா? அன்றைக்கு சண்டை வேறு போட்டு விட்டோமே.. ஆனாலும் ஒரு வருடமாய் ஒரே இடத்தில் இருக்கிறோம், எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வரமாட்டாரா? என்ற நப்பாசையில் எதற்கும் கேட்டு பார்ப்போம் என்று குமாரை கடைக்கு வெளியே விட்டு விட்டு சிவபெருமான் பூக்கடையை நோக்கி நடை போட்டாள் வர்ணி
அதிசயமாய் கணவன் மனைவி இருவருமே கடையில் தான் இருந்தனர். பூஜாவின் பிரச்சனையை சொல்லி விட்டு கூட வர முடியுமா என்று உதவி கேட்டாள் வர்ணி. கேட்கும் போது அவளுக்குள் நுழைய முனைந்த சுய பச்சாதாபத்துக்கு உடனடியாய் கேட்டை போட்டு விட்டவள் அவரது முகத்தையே பார்க்க
அவரோ முடியாது என்று மறுத்ததும் இல்லாமல் இப்படியெல்லாம் வம்பு வரும் என்று தெரிந்து தான் சின்ன பொண்ணுங்களுக்கு இடத்தை கொடுக்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன்..என்று வேறு சொல்ல வர்ணியின் கண் கலங்கி விட்டது.
அதைப்பார்த்த பார்வதி ஆன்ட்டி பொங்கி எழுந்து “பாவம் நம்ம கூடவே இருக்கற பொண்ணுங்க..யாரும் இல்லாம தானே கேட்கறாங்க? கூட மாட உதவிக்கு போய் நிக்க மாட்ட? என்ன மனுஷன் நீர்?” என்று பாய அங்கே ஒரு இன்ஸ்டன்ட் சண்டை மீண்டும் ஆரம்பித்தது விட்டது.
விழி நீரை உள்ளிழுத்தபடி அங்கிருந்து மெல்ல நழுவி கடைக்கு திரும்பும் போதே அவள் மனம் அடுத்ததாய் யாரை கூப்பிடலாம் என்று தேட ஆரம்பித்து விட்டது.
வரார் தானே என்ற கேட்ட குமார் அருகில் நெருங்கியவளின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டு “நீ இதுக்கெல்லாம் பீல் பண்ணாத. நானும் சின்னவனும் நாலு செயின்லாம் போட்டுட்டு டெரரா வேஷ்டி கட்டி ரவுடி கெட்டப்ல என்ட்ரி கொடுத்துடறோம்” என்று சமாதானம் சொல்ல
அவளுக்கு லேசாய் சிரிப்பு துளிர்த்தது. எப்படி மேக்கப் போட்டாலும் இவனை பார்த்து யாராவது பயப்படுவாங்களா?
அப்படியே யோசித்துக்கொண்டிருந்த போது தான் ஆஹா பெரிய ஹல்க்கி பால்க்கி இல்லைன்னா என்ன, சின்ன ஹல்க்கி பால்க்கி இங்கே தானே வெட்டியா சுத்துவான் என்று சிந்தனையில் பல்ப் எரிந்தது வர்ணிக்கு.
“ஏய் நாளைக்கு எத்தனை மணிக்கு கூப்பிடடாலும் பூஜாவை காபேக்கு லீவு போட சொல்லாத. அவ சாதாரணமா இங்கே சுத்திட்டு இருந்தா தான் யாருக்கும் சந்தேகம் வராது” என்று ரகசியமாய் எச்சரித்த குமார் அவன் பக்கம் யாரையேனும் அழைத்து வர முடியுமா பார்க்கிறேன் என்ற படி கிளம்பி போக
வர்ணி ஒரு தட்டை எடுத்து வைத்துக்கொண்டு அதில் மூன்று காரமல் லாட்டேக்களையும் ஒரு அமெரிக்கானோவையும் வைத்துக்கொண்டு இருக்க பூஜா வந்து சேர்ந்தாள்
“பிரதீப் போன் பண்ணி சொன்னான். நாலு மணிக்கு எங்களுக்கு டைம் கொடுத்திருக்காங்க..” ரகசியமாய் வர்ணியின் காதில் அவள் சொல்ல
நாலா? என்ற வர்ணியை
ஷ்…என்று அடக்கினாள் பூஜா
குமார் அந்த பக்கமிருந்து எத்தனை மணிக்கு? என்று அபிநயிக்க வர்ணி நாலு விரலை தூக்கி காட்ட அவன் மற்ற பக்கம் யாருக்கோ நாலு விரலை காட்டிக்கொண்டிருந்தான்.
“சரி நீ கொஞ்ச நேரம் கடையை பார்த்துக்கோ நான் ஒரு வேலையா போயிட்டு வர்றேன்” என்று தட்டை எடுத்துக்கொண்டு வர்ணி வெளியே வர
“எங்கேடி போற யாருக்கு காபி? என்று பூஜா குழப்பமாய் கேட்டாள்
“மெதுவா பேசுடி எருமை ..இதோ வந்துர்றேன்” என்றபடி ஜிம் பக்கமாய் நடக்கலானாள் வர்ணி
முதலில் டெய்லர் அக்காவுக்கும் அவரது அசிஸ்டன்ட்டுக்கும் காரமல் லாட்டேவை கொடுத்தவள் யாருக்கும் தெரியக்கூடாது என்று அவரோடு ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு நாலு மணிக்கு அவரையும் திருமணத்துக்கு வருமாறு அழைக்க “அட பார்த்துக்கலாம் வர்ணி. நம்ம பூஜாவுக்கு செய்யாமலா?” என்று உற்சாகத்துடன் ஒத்துக்கொண்டவர் “பூஜா இப்போதான் வந்தா..சொல்லவே இல்லையே..நாளைக்கு அவளுக்கு இருக்கு” என்று சிரித்தார்
“யார் கிட்டயும் மூச்சே விடாதீங்க அக்கா” அவள் மீண்டும் அழுத்தி சொல்ல
சம்மதமாய் வாயில் விரலை வைத்து காண்பித்தார் அவர்.
லேசான சிரிப்போடு இப்போது ஜிம்மை நோக்கி நடைபோட்டவளுக்கு உள்ளே போக இன்னும் பயம் தான். சாஹி புதிதாக மாட்டியிருந்த ஆண்கள் மட்டும் போர்டுக்கு அருகில் நின்று கொண்டு தலையை மட்டும் உள்ளே விட்டு நவீனை வர்ணி விழிகளால் துளா விக்கொண்டிருக்க என்ன பண்ற என்று அவளுக்கு பின்னால் சாஹியின் குரல் கேட்டது.
பட்டென்று திரும்பி நின்று கொண்டவள் “நவீனை தேடி வந்தேன்” என்று மிதப்பாய் சொன்னாள்
“எதுக்கு உனக்கு அவன்?” அவன் நெற்றி யோசனையில் சுருங்க
“இது என்ன சர்வாதிகாரமா இருக்கு? அது எதுக்கு உங்களுக்கு?” என்று பதில் கேள்வி கேட்டவளின் குரலில் காரமே இல்லை. இப்போதெல்லாம் வழக்கமாய் வருவது போல சின்ன சீண்டல் தான் கலந்திருந்தது.
“ப்ச்.. நவீன்லாம் இங்கே இல்லை..கிளம்பு” அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவளை விரட்டுவதிலேயே குறியாய் நின்றான்
அதற்குள் “ஹாய் வர்ணி என்ன இந்தப்பக்கம்?” என்று சிரித்துக்கொண்டே வந்த நவீன்..ஹை எனக்கா? என்று காரமல் காபியை எடுத்துக்கொள்ள கடுப்பாய் இருவரையும் பார்த்து விட்டு உள்ளே போய்விட்டான் சாஹி.
கடைக்கு முன்னால் தூரமாய் நின்று கொண்டு யார் காதிலும் கேட்காத வண்ணம் நவீனிடம் விஷயத்தை சொல்லி உதவி கேட்க.
“இதெல்லாம் ஒரு மாட்டாரா? நான் நம்ம ஜிம் பாய்ஸ் நாலைஞ்சு பேரையும் கூடவே கூட்டிட்டு வந்துர்றேன்” என்று சொல்லிவிட அவளுக்கு ஏக சந்தோசம்
“தாங்க்ஸ்டா. ஆனா உங்க பாஸ் கிட்ட இந்த விஷயத்தை பத்தி வாயே திறக்க கூடாது. காரியத்தை கெடுத்து விட்டிருவார்” என்று மறக்காமல் அவள் எச்சரிக்க
“ஏன் அவர்கிட்ட சொல்லி அவர் உன் கூட என்னையும் ஜிம்மை விட்டு தொரத்தவா? நான் பார்த்துக்கிறேன்..காபிக்கு தாங்க்ஸ்” என்றவன் ஓடிவிட
அடேய் இந்த காபி…என்று அவள் அழைத்தது அவள் வாய்க்குள்ளேயே அமுங்கி போனது.
மிஞ்சியிருந்த அமெரிக்கானோவையும் உள்ளே பயிற்சியில் இருந்து கொண்டு அவர்கள் இருவரையும் என்னமோ அவனுடைய ஜிம்மை இழுத்து மூட இருவரும் சதி செய்வதை போல பார்த்துக்கொண்டு இருந்தவனையும் ஒரு பார்வை பார்த்தவள் பிறகு ஒரு முடிவோடு ஜிம்முக்கு உள்ளே நடந்தாள்.
வர்ணி வருவதை கண்டதும் பயிற்சியில் இருந்த பையனிடம் ஏதோ சொல்லிவிட்டு விடுவிடுவென சாஹி முன் பக்கமாய் வர அமெரிக்கானோவை அவன் புறம் நீட்டினாள் வர்ணி
“என்ன இது?”
“காபி”
“நான் கேட்டேனா?” அவன் முறைத்தான்
“பை வன் கெட் டூ ஆபர்ல அமெரிக்கானோ தரோம் எடுத்துக்கோங்க” என்று வர்ணி சொல்ல
“அதெல்லாம் நான் வெளியே வாங்கிப்பேன். உன் காபியை நீயே குடி” என்று வாசலையே குறிப்பாய் பார்த்தான் அவன்
“அதெல்லாம் முடியாது எங்களோட மானேஜரோட பையன் வெளியே பொய் காபி குடிச்சா டார்லிங் காப்பியோட கௌரவம் என்னாகிறது. இனிமே அங்கேயே வாங்கிக்கோங்க..” அவள் அவனது கண்ணை பார்க்கவே இல்லை. பார்த்தால் தானே முறைப்ப
“இங்க பாரு இந்த விளையாட்டை எல்லாம் முன் வாசலோட நிறுத்திக்கோங்க.. இங்கே என்ன பண்ணிட்டிருக்க..முதல்ல கிளம்பு நீ?” என்று அவன் எதற்கும் மசியாமல் கடுகடுக்க
“எப்போ பார் துரத்திட்டே இருக்கீங்க?.பொண்ணுங்கன்னா உங்களுக்கு என்ன பிரச்சனை ஹான்?..இப்படித்தான் நான் ஜிம்முக்கு வந்த போதும் என்னை விரட்டி விட்டீங்க?” என்று அவளுக்கும் கோபம் வந்து விட்டது. சமாதானம் ஆக வந்தேன் பார்..என்னை சொல்ல வேண்டும்.
அவளையே இமைக்காமல் ஒரு கணம் பார்த்தவன் “நீ இங்கே வர முன்னே யாராவது ஒரு பொண்ணு என் ஜிம்முக்கு வந்து ஒர்க் அவுட் பண்ணதை நீ பார்த்திருக்கியா?” என்று கேட்டான்.
அ…அது.. என்று இழுத்தவளுக்கு வார்த்தை வரவில்லை. அப்படி யாரும் வந்ததே இல்லை.
அவள் முதல் தடவை கேட்டபோதே காரணம் சொல்லாமல் எடுத்த எடுப்பிலேயே முடியாது என்று விட்டான். அது வர்ணிக்கு ஈகோவை தாக்கி விட்டிருக்க இவள் தான் நான் வரக்கூடாது என்று எங்கே போட்டிருக்கு காமி என்று லந்து பண்ணி சேர்ந்து கொண்டாள்.
அப்போ முதல்ல இருந்தே இது ஆண்கள் ஜிம் தானா?
அவள் முகம் சிவந்து அவனை பார்க்க
“மத்தவங்களுக்கு சொன்னா புரியும்” என்று முணுமுணுத்தபடி அவனும் அவளையே பார்க்க அந்த பழுப்பு விழிகளில் ஒரு கணம் பார்வையை நிலைக்க விட்டவளுக்கு இதயம் படபடத்தது.
“ஆன்ட்டி எங்கே?”
“தூங்குறாங்க..”
அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியாமல் பட்டென்று காபிக்கப்பை அவன் கையில் திணித்து விட்டு வெளியே வந்து விட்டவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை.
நீ சரியில்லை வர்ணி நீ சரியே இல்லை.
