அத்தியாயம் 4
“ஒரு ஈவண்டுக்கு போனமா, நமக்கு என்ன தேவையோ, நம்ம வயிறு எவ்ளோ எடுத்துக்குமோ அதை மட்டும் தட்டுல போட்டுட்டு வாங்க கண்ணுங்களா! காணாதத கண்ட மாதிரி, எல்லாத்தையும் தட்டுல நிறைச்சுட்டு, சாப்பிட முடியாம அப்படியே வச்சிட்டு வரது கொஞ்சம் கூட சரியில்ல! நீங்க வீணாக்காம இருந்தா, அந்த சாப்பாடு நாலு ஆதரவு இல்லாத மனுஷங்க வயித்த நிறைக்கும்! அளவா சாப்பிட்டு இண்டைரக்டா புண்ணியம் தேடிக்கோங்க! புண்ணியம் தேடி காசிக்குப் போகாம, கல்யாண வீட்டுலயே புண்ணியம் தேட வழி சொன்ன என்னோட பாட்காஸ்ட அலேக்கா ஷேர் பண்ணி விடுங்க லட்டூஸ்!”
“பாட்காஸ்ட் பை பரதேசி”
அந்த மீட்டிங் அறை ஒரே சத்தமாக இருந்தது. அங்கிருந்த நீண்ட மேசையில் ஐந்து, ஐந்து பேராக ஒரு குழுவாய் நின்று தங்களது வேலையைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருத்தர் கருத்தைச் சொல்வதும், இன்னொருத்தர் அதை புல்லட் பாயிண்டாக கொடுக்கப்பட்டிருக்கும் பெரிய அட்டையில் எழுதுவதும், இன்னொருத்தர் அந்த அட்டையை அழகுப் படுத்திக் கொண்டிருப்பதும் என ஒரே ஆரவாரமாக இருந்தது.
ஒரு முறை இவர்கள் ஹோட்டலில் வந்து தங்கும் நபரை, அடுத்த முறை வேறெங்கும் போகாமல் மீண்டும் நம் ஹோட்டலுக்கே வரும்படி செய்வது எப்படி எனக் கேள்விக் கேட்டு, அதற்கான ப்ரசெண்டேஷன் செய்யச் சொல்லிப் பணித்திருந்தான் ட்ரெய்னர் விஷ்ணு. அதை செய்து முடிக்க அரை மணி நேரம் மட்டுமே கொடுத்திருந்தான். குழுக்களையும் இவனேத்தான் பிரித்து விட்டிருந்தான்.
ஓரமாய் ஒரு மேசையின் மேல் சப்பளங்காலிட்டு அமர்ந்தபடியே அங்கிருந்த ஒவ்வொருவரையும் கவனித்தான் விஷ்ணு. ட்ராக் பாட்டமும், ஒரு நீல வண்ண டீ ஷர்டும் அணிந்து, முடியை மெஸ்ஸி பன் எனப்படும் கலைந்து போனக் கொண்டைப் போட்டிருந்த ஊர்மிளா மீது இவனது பார்வை சில விநாடிகள் நிலைத்து நின்றது. அன்றைய காலை நேர உடற்பயிற்சியின் போது கூட மற்றவர்கள் முடித்து விட்டுச் சென்ற பிறகும், இவளை மீண்டும் ஐந்து ரவுண்ட் ஓட விட்டிருந்தான் விஷ்ணு.
“நான் இன்னிக்கு கரேக்டான டைமுக்கு வந்துட்டேனே சார்” எனத் தைரியமாக இவன் முகம் பார்த்துச் சொல்லத்தான் செய்தாள் அவள்.
அந்த நேரம் அவர்களை நோக்கி வந்தான் தேஜா.
“எனி ப்ராப்ளம் சார்?” என அவன் கேட்க,
“இவங்க அஞ்சு ரவுண்ட் ஓடப் போறாங்க! நீங்களும் ஜாயின் பண்ணிக்கறீங்களா?” எனத் திருப்பிக் கேட்டான் விஷ்ணு.
“ஓ நோ! நோ! ஜஸ்ட் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னுதான் வந்தேன்! யூ கேரி ஆன் ஊர்மி! குட் லக்” எனச் சொல்லி அவசரமாய் நகர்ந்து விட்டான் அவன்.
“பாய்ஃப்ரண்டா? உன் கூட ஓட சொன்னதுக்கே நோ நோன்னு பல்டி அடிச்சிட்டான். இவன் போய் உன்னைக் கூட்டிட்டு ஓடிப் போவான்னு எப்படி நம்பற நீ?” எனக் கிண்டலாகக் கேட்டான் விஷ்ணு.
“நாங்க ஓடிப் போறோமோ, இல்ல ஓடத்துல போறோமோ அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது! இப்ப எதுக்கு இந்த பனிஷ்மெண்ட்னு மட்டும் சொல்றீங்களா?”
“இப்போ ஓடச் சொல்றது பங்சுவாலிட்டிக்காக இல்ல! இது வேற காரணத்துக்காக” என நக்கலாகப் பதிலளித்தான் இவன்.
“சில வருஷத்துக்கு முன்ன நடந்தத மனசுல வச்சிக்கிட்டு இப்ப பழி வாங்குறதெல்லாம் உங்களுக்கே சின்னப்புள்ளைத்தனமா இல்லையா சார்?” எனக் கடுகடுத்தாள் இவள்.
“ஹேய்! வெய்ட்! வெய்ட்! மொதல்ல நீ யாரு எனக்கு? எக்ஸ் வைஃப்பா இல்ல எக்ஸ் ஜீ.எஃப்பா(gf) பழி வாங்கி கடுப்பத் தீர்த்துக்க? யூ ஆர் நத்திங் டு மீ! இன்னிக்கு புஷ் அப் பத்து செய்ய சொன்னதுக்கு, நீ எட்டுத்தான் செஞ்ச! அதுக்கான பனிஷ்மெண்ட்தான் இது! டைம் வேஸ்ட் பண்ணாம ஓடி முடிச்சு, இன்னும் அரை மணி நேரத்துல மீட்டிங் ரூம் வந்து சேரு! லேட்டாக்கின, நாளைக்கு இன்னும் அஞ்சு சேர்த்துப் பத்து ரவுண்ட் ஓட விட்டுருவேன்” என மிரட்டினான்.
அவள் முறைத்தப் பார்வையே சொன்னது, உள்ளுக்குள் இவனை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறாள் என.
“ரன்! நவ்” எனக் கட்டளையாய் சொன்னவன், அவள் ஓடுகிறாளா இல்லையா எனக் கூடப் பார்க்காமல் கடந்து வந்து விட்டான்.
அரை மணி நேரத்துக்குள் ஓடி, பின் குளித்து, காலை உணவையும் முடித்து விட்டுக் கண்டிப்பாக அவளால் கரேக்டான நேரத்துக்கு மீட்டிங் ஹாலுக்கு வர முடியாது என இவனுக்குத் தெரியும்.
‘என்னையா ஏய்க்கப் பார்த்த! ஐம் நாட் இண்ட்ரெஸ்டெட்னு சொல்லிருந்தா கூட, சரி போகுதுன்னு விட்டிருப்பேன்! என்னமோ பொம்பள பொறுக்கி நம்பர் கேட்ட மாதிரி, கண்டவன் நம்பர குடுத்து பாட்டு வாங்க வைப்பியா? தொலைஞ்சடி நீ’ என எண்ணிக் கொண்டே, குளித்து முடித்து உணவு வழங்கப்படும் டைனிங் ஹாலுக்குப் போனான் விஷ்ணு.
பஃபே முறையில் உணவு வகைகள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரொட்டி, கேக், பேஸ்ட்ரி வகைகள், ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், சூப், பழங்கள் எனப் பல வெரைட்டியான உணவுகளின் வாசம் பசியைத் தூண்டி விட்டது. வியர்த்து விறுவிறுக்க உடற்பயிற்சி செய்திருந்த இவனது குழு மக்கள் அனைவரும், வேக வேகமாய் தட்டில் உணவை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.
ப்ரோட்டின் அதிகம் இருக்கும் உணவு வகைகளை எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்ட விஷ்ணு, வெளி தோட்டம் தெரியும்படி போடப்பட்டிருந்த மேசையில் போய் அமர்ந்து கொண்டான். கையும் வாயும் உணவோடு உறவாடிக் கொண்டிருக்க, கண்கள் மட்டும் அவ்வறை நுழைவாயிலை நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. பதினைந்து நிமிடங்கள் போயிருக்க, அடித்துப் பிடித்து வந்து சேர்ந்திருந்தாள் ஊர்மிளா.
கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தவளின் முகம் சோர்வைக் காட்டியது. மேக்காப் ஏதும் போட நேரமிருந்திருக்காது போல! முகம் துடைத்து வைத்தது போல இருந்தது. காலையில் செய்திருந்த உடற்பயிற்சியும், மலை தேசத்துக் குளிரும் இரண்டுக் கன்னங்களையும் இயற்கையாய் சிவக்க வைத்திருந்தது. முடியை அவசரமாக அள்ளிக் கொண்டைப் போட்டிருந்தாள். அங்கிங்கு கலைந்தது போல கிடந்தாலும், அதுவும் அவளுக்கு அழகைக் கொடுத்தது.
இவன் கொடுத்த நேரத்துக்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்க, ஒரே ஒரு ப்ரெட்டை மட்டும் எடுத்துக் கடித்து விழுங்கியவள், சுடச் சுட இருந்த காபியை ஊதி ஊதி தொண்டையில் சரித்துக் கொண்டாள். கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தவள், பாதி காபியை அப்படியே வைத்து விட்டு, வேக நடையில் மீட்டிங் ரூமை நாடிப் போனாள். அதையெல்லாம் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.
அவள் இருக்கும் குழுவில் எல்லோரும் ஆர்ப்பாட்டமாகச் சிரித்துப் பேசியபடி கொடுத்த வேலையைச் செய்ய, ஊர்மிளா மட்டும் சிறு புன்னகையுடன் அவர்கள் சொல்வதை அட்டையில் நிரப்பிக் கொண்டிருந்தாள். கொடுக்கப்பட்ட முப்பது நிமிடங்கள் முடிந்திருக்க,
“டைம்ஸ் அப்” எனச் சத்தம் கொடுத்தான் விஷ்ணு.
“ஓ!!!” என ஆட்சேபணை செய்தாலும் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள் அனைவரும்.
“அட்டையைக் கொண்டு போய் மேசை மேல வைங்க! நான் கூப்பிடறப்ப குழுவோட தலைவரோ, தலைவியோ வந்து ப்ரசெண்ட் செய்ங்க” என்றவன், அட்டையை ஒட்டி வைப்பதற்கான ஸ்டெண்டை கொண்டு வந்து முன்னே நிறுத்தி வைத்தான்.
