IMTP Epi 1(2)

“அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ

தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோஎனப் பாடிக் கொண்டே வந்தவளின் எதிரே வந்து நின்றான் முத்துலிங்கம்.

“யாருகிட்ட தூது போகனும்? இந்த மாமன் கிட்டயா?” எனக் கேலியாக கேட்டான்.

முத்துலிங்கம் அன்னம்மாவுக்கு தம்பி முறை.

“முத்து மாமா! எப்போ வந்த ஊருல இருந்து?” எனக் கேட்டபடியே மாமனின் கைகளைப் பற்றிக் கொண்டாள் சுப்புலெட்சுமி.

அவன் வேறு ஒரு எஸ்டேட்டில் லாரி ஓட்டும் வேலை செய்கிறான். அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டு இவர்களைப் பார்க்க வருவான். சுப்புலெட்சுமியைக் கட்டிக் கொள்ள வேண்டும் என நெஞ்சு நிறைய ஆசை அவனுக்கு.

அவள் கைகளை விடுவித்துக் கொண்டவன்,

“நேத்துதான் புள்ள வந்தேன். இந்தா போன தடவை நீ கேட்ட கடலை மிட்டாய்” எனச் சொல்லி மிட்டாயை சுப்புவின் கைகளில் திணித்தான்.

“ஐ கடலை மிட்டாய்! இங்கனவே இரு மாமா. கொஞ்சத்தை தங்கச்சிங்களுக்கு குடுத்துட்டு ஓடியாறேன்” என ஓடிப் போனாள் சுப்பு.

ஓடிட் செல்லும் அவளையே கண் இமைக்காமல் பரவசமாகப் பார்த்திருந்தான் இவன்.

மூச்சு வாங்கத் திரும்பி வந்தவள், அவன் முன்னாலேயே மீதம் இருந்த மிட்டாய்களை வாயில் திணித்தாள். அவள் சாப்பிடுவதை ஆசையாகப் பார்த்திருந்தான் முத்து.

“நீ எப்போடி வயசுக்கு வருவ?” என மனம் தாங்காமல் கேட்டும் விட்டான்.

“ஏன்?”

“சீக்கிரமா உன்னைக் கட்டிக்கிட்டு என் கூட கூட்டிட்டுப் போகதான்”

“அஸ்க்கு புஸ்க்கு! நான் உன்ன மாதிரி கருப்பனை எல்லாம் கட்டிக்க மாட்டேன். எனக்கு எம்.ஜி.ஆருதான் புருஷன்”

“உன் முகரைக்கு நான்தான்டி கிடைப்பேன் என் கருத்தக் குட்டி! எம்.ஜி.ஆரு வேணுமாம்லே!”

“நெசமா மாமா! அன்னிக்கு கொட்டாயில தாய்க்குப் பின் தாரம் படம் போட்டாங்கல, அதுல இருந்து அவரதான் நான் கட்டிக்கறதுன்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன். எதிர்த்த வீட்டு அலமு சொன்னா, அவரு பார்க்க நல்லா கலரா இருப்பாராம்”

விழுந்து விழுந்து சிரித்தான் முத்து.

“படிக்காத கேணைக் கிறுக்கி! அவரு நடிகருடி. அதுவும் இந்தியால இருக்காரு. கல்யாணம் வேற ஆயிருச்சு. இந்த ஜென்மத்துல உனக்கு நான்தான்டி” என வம்பிழுத்தான் அவளை.

கண் கலங்க உதடு துடிக்க,

“ஒன்னும் வேணா போ! எனக்கு வெள்ளையா எம்.ஜி.ஆர் கணக்கா ஒருத்தன் கிடைப்பான். சின்னாத்தா அப்பவே சொன்னுச்சு, உன் கூட தனியா நின்னு பேசக் கூடாதுன்னு. நான்தான் மிட்டாய் குடுத்தியேன்னு நின்னு பேசனேன். உன் மிட்டாய் எனக்கு வேணா போ! இரு வாந்தி எடுத்துக் குடுக்கறேன்” என வாய்க்குள் விரலை விட்டாள் அவள்.

“ஹே! நில்லுடி கிறுக்கி. வாந்தி, கீந்தி எடுத்து தொலைச்சிறாத. சின்ன புள்ளைன்றது சரியாதான் இருக்கு. உன் கிட்ட வம்பு வளர்த்தேன் பாரு, என் புத்திய!” எனத் தலையிலேயே அடித்துக் கொண்டான் முத்து.

அதற்குள் வீட்டுக்கு ஓடி இருந்தாள் சுப்புலெட்சுமி. அவள் பின்னாலேயே வந்தான் முத்து.

“வாப்பா முத்து! வீட்டுல எல்லாம் சுகமா?” என வரவேற்றார் அன்னம்மா.

“அம்புட்டு பேரும் சுகம் அக்கா. ஒரு சோலியா இங்கன வந்தேன். அப்படியே உங்கள எல்லாம் பார்க்கலாம்னு வந்தேன்!” எனப் பேசிக் கொண்டே தங்கள் தோட்டத்தில் விளைந்திருந்த மாங்காய்களை நீட்டினான்.

“தோ பாரு முத்துலிங்கம்! நீ இங்கன அடிக்கடி வரது எதுக்குன்னு எங்களுக்கு விளங்காம இல்ல. புள்ள சமஞ்சதும் சொல்லி விடறோம். அப்ப வந்து உங்காத்தாவ பரிசம் போட சொல்லு. அதுக்கு முன்ன சும்மா, சும்மா வந்து நின்னு பச்ச புள்ள மனசுல சலனத்த கூட்டாதே! உனக்கே புரியும்னு நினைக்கறேன்” என ஒரே போடாகப் போட்டார் தங்கம்.

“சரி சின்னக்கா! இனி வரல! எனக்குத்தான் சுப்புன்னு மாமா வாக்கு குடுத்துருக்காரு. அத மட்டும் நீங்க மறந்திறாதீங்க. இப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன்”

கிளம்பும் முன் சுப்புலெட்சுமியை ஆசையாக ஒரு பார்வைப் பார்த்தான். அவள் ஆத்தாவின் பின் ஒளிந்துக் கொண்டு நாக்கைத் துருத்திப் பழிப்புக் காட்டினாள். சிரித்த முகமாகவே வெளியேறினான் முத்து. அடுத்த முறை வரும் போது இதே சிரிப்பு அவன் முகத்தில் நிலைத்திருக்குமா?

 

தூண்டுவான்…

Scroll to Top