UU Epi 2(1)

அத்தியாயம்  2

 

மறுநாள் சுமித்ரா, நிவேதா, பவித்ரா மூவரும் சென்னையை சென்று அடைந்ததும் நிவேதாவிற்காக அவளது தந்தை ஏற்பாடு செய்திருந்த கார் ரயில் நிலையத்தில் தயாராகக் காத்திருந்தது. அவர்கள் அதில் ஏறி சுமித்ராவின் அண்ணன் சுமோத்தின் வீட்டிற்கு பயணப்பட்டனர். சுமோத் சென்னையில் இருந்து கொண்டு சொந்தமாகத் தொழில் செய்து கொண்டிருக்கிறான்.

ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சுமோத்தை பார்த்து, “ஹாய்!” என்று கூவிக் கொண்டே மூவரும் உள்ளே நுழைந்தார்கள்.

 

“ஐயையோ! வானரங்களா நீங்க எங்கே இங்கே?” என்று விஷயமறியாதவன் போல் அவன் அலறினான்.

 

சுமித்ராவும், பவித்ராவும் ஒருமித்த குரலில், “என்னது வானரங்களா? எங்களை பார்த்தா வானரங்கள் மாதிரி தெரியுதா?” என்று எகிறினர்.

 

நிவேதா மட்டும் அமைதியாக இருக்க… சுமித்ரா அவளை பார்த்து, “ஏய் நிவி! அவன் வானரம்னு சொன்னது உன் காதிலே விழலையா?” என்று கேட்டாள்.

 

‘ஆமா அவ சும்மாவே ஆடுவாள். இவ வேற அவளுக்கு எடுத்துக் கொடுக்கிறாள்’ என நினைத்தவனாய் அவள் என்ன சொல்லப் போகிறாள் என அவளை பார்த்திருக்க…

 

“யோசிச்சுக்கிட்டு இருக்கேன் சுமி. இந்தக் காலத்திலே மாப்பிள்ளை பார்க்கிறதே கஷ்டம். இதுல நம்ம அண்ணன் வானரத்தை மாப்பிள்ளையா பிடிச்சிட்டு வரணும்னா… நம்ம சுமோத் அண்ணா பாடு எவ்வளவு திண்டாட்டமாப் போயிடும்? யோசிச்சுப் பாருங்க. அதுவும் ஒண்ணு இல்லை. மூணு வானரத்தை! அதுங்க ஒரு பக்கம் இழுக்க… இவர் ஒரு பக்கம் இழுக்க…” என்று அவள் சொன்ன விதத்தில் அனைவரும் சிரிக்க,

 

‘அடிப்பாவி? என்னை குரங்காட்டிக்காரன் ரேஞ்சுக்கு இல்லை கற்பனை பண்ண வைக்கிறாள்!’ என்ற கடுப்புடன், “நான் ஏன் உங்களுக்கு எல்லாம் மாப்பிள்ளை பார்க்கணும்?! ஒழுங்கா மரியாதையா மூணு பேரும் எவனையாச்சும் லவ் பண்ணி…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

“லவ் பண்ணி இழுத்துட்டு ஓடச் சொல்லுறியா?” என்று சுமித்ரா கேட்கவும்,

 

“அடிக்கழுதை. லவ் பண்ணிட்டு வந்து சொல்லுங்க. நான் அண்ணன்காரனா கல்யாணத்தை முடிச்சு வைக்கிறேன்னு சொல்ல வந்தேன். எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு. உன் பேச்சே சரியில்லையே!” என்றவன் தங்கையை சந்தேகமாகப் பார்த்தான்.

சுமித்ராவை முந்திக் கொண்டு நிவேதா, “எங்களுக்கு கூட தான் இப்படி ஒரு அண்ணனான்னு இருக்கு? ஏன் சுமி பேசாமல் நாம அண்ணனை டைவர்ஸ் பண்ணிடுவோமா?” என்று கேட்டதும், சுமித்ரா அவளது கையை குலுக்கி அந்தக் கருத்தை ஆதரித்தாள்.

“முதல்ல அதைச் செய்யுங்க தாயிங்களா! உங்களுக்கு புண்ணியமாப் போகட்டும். என்னால உங்களோட காலம் தள்ள முடியலை. உங்க வருங்காலப் புருஷன்களை நினைச்சாத் தான் பாவமா இருக்கு. உங்களை கட்டி மேய்க்கப் போற அந்த நல்ல இதயங்களுக்கு கோவில் கட்டித் தான் கும்பிடனும்.”

“இப்படியே நாலு பேர் காதுபட எங்களை பத்தி பெருமையா பேசு. ஒரு பய எங்களை கட்டிக்க முன் வரமாட்டானுங்க.” என்று சுமித்ரா அலுத்துக் கொள்ளவும்,

“ஐயையோ! இனிமேல் நான் மூச்சு விடலை தாயே! உங்களை எல்லாம் காலம் முழுசும் பார்த்துக்க முடியுமா? கூடப் பிறந்த தோஷத்துக்கு நான் வேணா சகிச்சுக்கலாம். என்னை கட்டிக்கப் போறவளும் எதுக்காக சகிச்சுக்கணும்? அந்த ஒரே காரணத்துக்காக இனிமேல் உங்களை எல்லாம் நல்லவள் வல்லவள்னு சொல்லிடுறேன்.” என்றான்.

“உங்க பாசத்தை பார்த்து அப்படியே எங்களுக்கு மெய் சிலிர்க்குது போங்க.” என்று நிவேதா நக்கல் பண்ணினாள்.

“சரோஜாம்மா! ஊரிலே இருந்து தங்கச்சிங்க வந்து இருக்காங்க. நீங்க என்ன பண்ணுறீங்க மூணு நாளைக்கு சமையல்கட்டுப் பக்கமே போகாதீங்க. ஒருத்தருக்கும் சமையல் அப்படின்னா என்னன்னு கூடத் தெரியாது. அது என்ன மொழி வார்த்தைன்னு கேட்பாங்க. நல்லா காயட்டும். அப்பத் தான் இனிமேல் என் வீட்டுக்கு வந்து என்னை வெளியே துரத்துற வேலையை பார்க்க மாட்டாங்க.” என்று சமையல்கார அம்மாவிடம் சுமோத் தெரிவிக்க,

“என்னமோ உன்னை வெளியே நடுத் தெருவிலே நிறுத்துற மாதிரி இல்ல நீ பேசுறே. வழக்கம் போல நிவி உனக்கு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு வச்சுட்டாள். பொம்பளை பிள்ளைங்க நாங்க தனியா ஹோட்டலில் போய் தங்க வேண்டாம்னு உன்னோட இந்த இத்துப் போன வீட்டிலே நாங்க இருந்துக்கிட்டு உன்னை ராஜ உபச்சாரணை பண்ணுறோம். ரொம்பத் தான் பிகு பண்ணிக்கிற.” என்று சுமித்ரா நொடித்துக் கொண்டாள்.

தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த துணிப் பையுடன் சுமோத் வெளியேறினான்.

சுமித்ரா மற்றும் நிவேதாவின் பெற்றோர்களின் ஏற்பாடு இது. நிவேதா வெளிநாடு வரை சென்று படித்தவள். அதனால் ரவீந்திரன் அவளை ஹோட்டலில் தங்க அனுமதிப்பார்.

ஆனால் சுமித்ராவோ மதுரை எல்லையை தாண்டாதவள். அதனால் அவளது பெற்றோர் சுமித்ராவை ஹோட்டலில் தங்க அனுமதிப்பதில்லை. சென்னையிலே சுமோத் வீடு இருப்பதால் அவளை அங்கேயே தங்கிக் கொள்ளும்படி கூறுவார்கள்.

சுமோத்தின் வீட்டில், வீடு நிறைய வேலை ஆட்கள், காவலுக்கு காவலாளி என்று இருப்பதால் தம் பெண் பாதுகாப்பாய் இருப்பாள் என்பது சுமித்ராவுடைய  பெற்றோரின் நம்பிக்கை.

சாதாரணமாக நிவேதா சென்னைக்கு வந்தால் ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவாள். ஆனால் சுமித்ராவுடன் வந்தால் அவளுடனே சுமோத் வீட்டிலேயே தங்கிவிடுவாள். அதே சமயம் நிவேதா தங்குவதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறையில் சுமோத் போய் தங்கிக் கொள்வான்.

நிவேதா சென்னைக்கு வந்தால் என்றால் ரவீந்திரனின் ஏற்பாட்டின் படி காவலாளியாக இன்னொருவரும் வந்து நிற்பார். சுமித்ரா வசதியானவள் என்றால் நிவேதா அவளை காட்டிலும் சில மடங்கு வசதி அதிகம் படைத்தவள். அதனால் அவள் எப்பொழுது சென்னை வந்தாலும் சென்னையில் உள்ள சுமோத் வீடு தடபுடல்படும்.

மூவரும் காலையில் குளித்து சாப்பிட்டு தங்கள் தோழியின் திருமணத்திற்கு சென்றனர். திருமணத்திற்கு வந்திருந்த பிற தோழிகளிடம் அரட்டை அடித்துவிட்டு, மணப்பெண்ணை வாழ்த்திவிட்டு சாப்பிடச் சென்றனர்.

சாப்பிட்டு முடித்ததும் இரு வேறு அணிகளாகப் பிரிந்தனர். நிவேதா தன் கம்பெனி வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் அவர்களிடம் விடைபெற்று தனியே செல்ல முடிவெடுத்தாள்.

“ஏற்கனவே சாயங்காலமே ஊருக்குப் போயிடுவேன்னு சொன்னே! இப்போ பார்த்தால் இப்பவே கழண்டுக்கிறே!” என்று சுமித்ரா வருத்தம் தெரிவிக்கவும்,

“முக்கியமான வேலை சுமி. வேலை முடிஞ்சதும் கண்டிப்பா நீ சொன்ன மாதிரி பீச்சுக்கு வந்துட்டு தான் நான் ஊருக்குப் போவேன்.” என்று உறுதி அளித்துவிட்டு தன்னுடைய காரில் ஏறிக் கிளம்பினாள்.

சுமித்ராவும் பவித்ராவும் சுமோத்தின் காரில் ஏறிச் சென்றனர். தோழிக்கு வாக்களித்தபடி மாலையில் நிவேதா முதலில் பீச்சிற்கு வந்து சேர்ந்தாள். காரில் இருந்து இறங்கியவளை கடல் காற்று வரவேற்றது.

எலுமிச்சை மஞ்சள் கலரில் பட்டுச் சுரிதார் அணிந்திருந்தாள். தலையை கிளிப் கூட மாட்டாமல் விரியவிட்டிருந்தாள். அது காற்றின் திசைக்கு ஏற்ப அசைந்தாடியது. இடக்கையால் தன் தலை முடியை கோதிக் கொண்டே சுமித்ராவின் கைப்பேசிக்கு அழைத்தாள்.

அது எடுக்கப்படவில்லை என்றதும் தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தாள்.

ஐந்து நிமிடங்களுக்குப் பின் சுமித்ரா தன் கைப்பேசியை இயக்கி நிவேதாவை அழைத்து, “நிவி! லேட்டாகிடுச்சு. நீ திட்டுவேன்னு தான் உன் போன் காலை எடுக்கலை. இப்போ வந்துட்டேன். அப்படியே திரும்பிப் பாரு.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

அவர்கள் மூவரும் ஒன்றாய் சேர்ந்து மணலில் நடக்க ஆரம்பித்தனர். அங்கே சுமோத் நிற்பதை பார்த்து அவன் அருகே சென்றார்கள்.

நிவேதா அவனிடம், “இன்னைக்கு வெள்ளிக்கிழமை. ஆபிஸிலே வேலையை பார்க்காமல் பீச்சிலே இந்நேரம் இங்க என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டாள்.

அவளது குரலில் திரும்பியவன் அவர்கள் மூவரையும் பார்த்து,  “அடப் பாவிங்களா?! நீங்க எங்க இங்கே? எங்கே போனாலும் என் நிம்மதியை குலைக்கிறதுக்குன்னே வருவீங்களா?” என்று சுமோத் அலறவும்,

அண்ணனின் வரவேற்பில் கடுப்பான சுமித்ரா, “இந்த பீச் என்னமோ இவருக்கு மட்டுமே சொந்தங்கிற மாதிரி  பந்தா விடுவதைப் பாரேன் நிவி.”  என்றாள்.

Scroll to Top