LV–Epi 9(1)

அன்றைய நாளின் மாலை இதழ்களை மீறி வரத்துடித்த சிரிப்பைப் பற்களால் கடித்து அடக்கிக்கொண்டு, கணினித்திரையில் விரிந்திருந்த டார்லிங் காபேக்கான அந்த மாத பேக்கரி கணக்கினை பார்த்துக்கொண்டிருந்தாள் வர்ணி .

காலையில் நடந்ததை நினைக்க அவளுக்கு கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. ஆசை ஆசையாக ஆரம்பித்த காபே. அதன் தொழில்முறை வேலைகளை எல்லாமே முன்னே நேர்த்தியாக முடித்து வைத்துத்தான் அவளுக்குப் பழக்கம். இது பண விஷயம் இல்லை; இது மாதத்தின் மூன்றாம் வாரம். இரண்டிரண்டு வாரங்களாய் கணக்கை கையளித்து விட்டால் அந்த மாதத்துக்கான இறுதி பில் மாசக்கடைசியில் வரும். அதைத்தான் அந்த ஆள் ஒரு வாரமாய் கேட்டுக்கொண்டே இருக்க, வர்ணி தான் இப்போது அவளாக இல்லையே! “நாளைக்கு, நாளைக்கு” என்று மூன்று நாளாய் தள்ளிப்போட, அதற்காய் தான் அவன் இன்றைக்குச் சீறிவிட்டுச் சென்றான்.

அநியாயம் தான். மாதம் முடிய இன்னும் பத்து நாட்கள் இருக்கையில், அவளுக்கு கணக்கை கையளிக்க இன்னும் ஒரு வாரமேனும் நேரம் இருந்ததுதான்… இருந்தாலும் இதையெல்லாம் கேட்கும்படி வைத்துக்கொண்டதே அவள் தவறுதானே? ஆனாலும் அதற்கு அப்படியா திட்டுவான்?

பிரதீப்பின் அப்பாவில் ஆரம்பித்து இப்போது இவனிடமா என்று அவள் உதட்டை கடித்து இறுகிப்போய் குறுகி நின்ற போதுதான் சாஹி வந்தான்.

அவ்வளவு நேரமும் பாய்ந்த புலி பம்மி ஓடியே விட்டது.

நமக்காக யாரேனும் பரிந்து பேசுவதையே அவமானமாய் கருதுபவளுக்கு அன்றைக்கு அதெல்லாம் தோன்றவே இல்லையே! உள்ளுக்குள் இருந்து பொங்கி வந்த மகிழ்வை எப்படித் தடுத்தும் நிறுத்தவே முடியவில்லை.

ஆற்றின் வேகத்தில் சுழலும் ஓடமொன்றில் தொற்றிக்கொண்டு சிரிக்கும் மனதினை கடிவாளமிட்டு நிறுத்த முடியாமல் தவித்தவளுக்குத் தன்னைக்குறித்தே பயம் தான் வந்தது. அவன் கண்ணைக்கூட பார்க்க முடியவில்லை; ஓடியே வந்துவிட்டாள்!

அது மட்டுமா? அந்த நொடியில் இருந்து உற்சாக பானம் அருந்தியவள் போல அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு, இதோ கடைசியாய் ஆட்கள் இல்லா சௌகர்யத்தில் கணக்கையும் முடித்துக்கொண்டிருக்கிறாள்.

“ஏய், மழை தூற ஆரம்பிக்குது பார். சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்பு” என்று குமார் கடையைப் பூட்டிக்கொண்டு வர,

“இதோ முடிஞ்சிருச்சு, கிளம்பிருவேன்டா. நீ போயிட்டு வா” என்றபடி அவன் கணினித்திரையிலேயே கவனமாய் இருக்க,

“மேகம் கருக்குது சம் சக்க சம் சம்” என்று பாடிக்கொண்டே கீயை சுழற்றிக்கொண்டே குமார் மாலை விட்டு வெளியேற,

சின்னச்சிரிப்போடு மீண்டும் தன் கையில் இருந்த விஷயத்துக்குத் திரும்பிவிட்டாள் வர்ணி . வீட்டுக்குப் போய் மறுபடியும் கவனத்தை ஒருமுகப்படுத்தி உட்கார்ந்து இதை முடிப்பதற்கு, இதோ எழுபத்தைந்து வீதம் முடித்தாயிற்று, இங்கேயே முழுவதையும் முடித்துவிட்டே போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டே ஒரு ஒப்பீட்டுக்காகப் போன வார விற்பனைத் தகவல்களைத் திறந்தாள்.

மழை வெளியே வலுக்க ஆரம்பித்திருக்க, மாலின் முன்புறத்தை மழை நீர்த்திரையாக மறைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது. சில்லென்ற குளிரும் நாலு மணிக்கே இரவு வந்தது போன்ற இருட்டும் அவளுக்கு ஒரு வித மோனநிலையையே கொடுத்திருக்க, அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், மழை அப்படி ஆங்காரமாய் கொஞ்சம் கூட த்வனி குறையாமல் ஒரே லயத்தோடு அடித்துப்பொழிந்துகொண்டிருந்தது.

இந்த மழையில் எப்படி ஸ்கூட்டியில் போவது? மழைக்கோட் கொண்டுவந்திருந்தாள் தான், ஆனால் இந்த மழையின் வேகத்துக்கும் கனத்துக்கும் பாதையில் சமாளித்து ஓட்ட முடியுமா என்று சந்தேகமாய் இருந்தது.

மாலில் எல்லாருமே கிளம்பிப் போய்விட்டிருப்பார்கள் போலவே… சுற்றிலும் எல்லா கடைகளும் பூட்டப்பட்டிருக்க, ப்ச்…சலித்தபடியே கணனியை அணைத்தாள் வர்ணி .

அவளுக்கு பயம் எல்லாம் இல்லை, கொஞ்சம் மழை விடட்டும், நாமும் போகலாம் என்று அவள் எழுந்து வெளியே வர, பெரிய குடையை மடக்கிக்கொண்டு உள்ளே ஓடிவந்த பார்வதி ஆன்ட்டி இவளைக் கண்டு விழி விரித்து, “நீ இன்னும் வீட்டுக்குப் போகலையா, வர்ணி ?” என்று கேட்டார்.

“போகணும் ஆண்ட்டி… டைமை பார்க்காம இருந்திட்டேன்… நீங்க முன்னாடியே கிளம்பிட்டீங்களே?” என்று திருப்பிக்கேட்க

“நீ வேற! பாதி தூரம் போய்ட்டேன்… நாளைக்கு வந்த ஒரு ஆர்டர் வேற கான்சல் ஆயிடுச்சு. என் மொபைல் ரிப்பேர். கடையில இருந்துதான் போன் பண்ணி சப்ளையருக்குச் சொல்லணும். நீ கடையைப் பூட்டு முதல்ல, இந்த மழைக்கு குடையோ உன் ஸ்கூட்டியோ தாங்காது… காப்  எதையாவது பிடிச்சிட்டு நம்ம ரெண்டு பேரும் போயிடலாம்” என்று ஆன்ட்டியே  முடிவும் செய்துவிட்டுப் போக, வர்ணிக்கும் அதுவேதான் சரியாய் பட்டது.

இந்த மழையை அவள் சமாளித்தாலும் ராக்கி சமாளிக்க மாட்டான் என்று எண்ணிக்கொண்டு கடையைப் பூட்டிக்கொண்டிருந்தவளின் மனதில், “லக்கி ஆன்ட்டியும் சாஹியும் வீட்டுக்குப் போயிருப்பாங்களா?” என்ற எண்ணம் ஓடியது.

“அதெல்லாம் அந்த உத்தமபுத்திரன் அவங்களை ஒரு மழைத்துளி பட விடாமலே கூட்டிட்டுப் போயிருப்பான்” என்று எண்ணும்போதே அவளின் இதழ்களில் சிரிப்பு ஜனிக்க, வாசலில் நின்று மழையைப் பார்த்தவளுக்கு, அதற்குள் எங்கும் தண்ணீர் மயமாகிக் கிடப்பதை பார்க்க, உள்ளே காப் வருமா என்றே சந்தேகமாய் இருந்தது.

அந்த நேரம் உள்ளிருந்து வந்த “அம்மா!” என்ற சாஹியின் பதட்டக்குரலை அவளே எதிர்பார்க்கவில்லை.

‘இவன் இன்னும் போகலையா? ஆண்ட்டி எங்கே?’ என்று அவளுக்கும் பதட்டம் தொற்றிக்கொள்ள, அவனருகில் ஓடிச்சென்றாள் வர்ணி .

பதட்டமே உருவாய் இருந்தவன், “அம்மாவை பார்த்தியா?” என்று அவளிடம் அவசரமாய் கேட்டுவிட்டு, பிறகு அந்த கேள்வியின் அபத்தத்தை உணர்ந்து, “அம்மாவைக் காணோம்!” என்று முடித்தவனின் கண்களில் இருந்த பயம் இப்போது அவளையும் தொற்றிக்கொள்ள,

“ரொம்ப நேரமா தேடுறீங்களா?” என்று கேட்டாள் வர்ணி .

“அரை மணி நேரம் எனக்கு ஒரு வீடியோ கால் இருந்தது. இவங்க உள்ளே டிவி பார்த்துட்டு இருந்தாங்க… முடிச்சிட்டு வந்து பார்த்தாக் காணோம். கீழே எல்லா இடமும் தேடிட்டேன்.”

“ப்ச்… டென்ஷன் ஆகாதீங்க. நான் இங்கேதான் இருந்தேன், இந்த வாசல் வழி அவங்க வெளியே போயிருந்தா எனக்குத் தெரிந்திருக்கும்.” என்று சொன்னவளின் மனம் அவனுக்குச் சொன்னதா, அவளுக்குச் சொன்னதா தெரியவில்லை. அவள் நேரத்தைக்கூட கவனிக்காமல்  வேலையில் மூழ்கி இருந்தாளே, அந்த நேரம் அவர் வெளியே போயிருந்தால்… கடவுளே!

அவளுக்கு உள்ளிருந்து ஒரு பயம் வியாபிக்க ஆரம்பித்தது.

‘இந்த மழையில் குடையும் இல்லாமல் ஆன்ட்டி வெளியே போயிருந்தால் எங்கே என்ன செய்வார்?’

இவர்களின் பேச்சைக்கேட்டு, ‘லக்கியைக் காணோமா?’ என்றபடி பார்வதி ஆன்ட்டியும் பதட்டமாய் எழுந்து நிற்க,

“ஆன்ட்டி, நீங்கள் உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க. நான் இவர் கூடப் போய் தேடிட்டு வர்றேன். மானேஜர் இங்கேதான் இருப்பாங்க…” என்று அவசரமாய் சொன்ன வர்ணி , இப்போது மாலுக்கு உட்புறம் வேகவேகமாக நடக்க, அவளுக்கு அருகில் வந்த சாஹி, “பார்க்கிங் பக்கமா  கீழே போயிருப்பாங்களோ?” என்று யோசிக்கலானான்.

வர்ணி யின் முகத்திலும் மெல்லிய ஆசுவாசம் “அப்படித்தான் இருக்கணும். கிளம்புற டைம் ஆயிடுச்சுன்னு கீழே இறங்கிப் போயிருக்கலாம்”

‘கீ இல்லாமல் பின் கதவு திறக்காதுதான். ஆனால் யாரேனும் வெளியே போகும்போது போயிருக்க முடியும்’

மூச்சிரைக்க படிகளில் இறங்கி கீழ்த்தள பார்க்கிங்குக்குப் போனவர்கள் சாஹியின் கார் நிற்கும் இடத்தைத் தேடி ஓடினால், அங்கே லக்கி இல்லவே இல்லை. மழை வெள்ளம் வேறு மெல்ல மெல்ல உள்ளே வர ஆரம்பித்துக்கொண்டிருந்தது.

ஓரிரண்டு கார்களைத் தவிர இப்போது வெறிச்சோடிக்கிடந்த பார்க்கிங்கை ஓடி ஓடி மூலை முடுக்கெல்லாம் அலச, எங்கேயும் அவரைக் காணோம்…

வர்ணியின் முகத்தில் பதட்ட அலைகள் தோன்றியிருக்க, சாஹியோ இன்னும் இன்னும் இறுகி, “வெளியேதான் போயிருக்காங்க போலிருக்கு” என்று அவசரமாய் மீண்டும் படிகளில் ஏறி ஓட ஆரம்பிக்க,

“இந்த மழையில் ரொம்ப தூரமெல்லாம் போயிருக்க முடியாது” என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே அவனைத் தொடர்ந்தவளுக்கும்  அழுகை வந்துவிட்டது.

‘லக்கிக்கு டார்லிங் காபேக்கு ஏன் வருகிறோம் என்றே தெரியாது. யாராவது ‘மானேஜர்’ என்று அழைத்தால் மட்டும்தான் ஞாபகம் வரும். அப்படிப்பட்டவர் இந்த மழையில் திக்குத்திசை தெரியாமல் எப்படி பயந்து போய் நிற்கிறாரோ தெரியவில்லையே… நாம் வேறு பார்க்கிங்கை தேடி நேரத்தை வீணாக்கி விட்டோம்’

அவள் கண்ணைத் துடைத்துக்கொண்டு சாஹியின் பின்னே ஓடியவளுக்கு, ‘இன்னிக்கு காலைல எவ்ளோ சந்தோஷமா பாட்டு பாடி அபிநயம் பிடிச்சிட்டு இருந்தார்’ என்ற நினைவில் மீண்டும் கண்களில் நீர் ததும்பியது.

எல்லாமே மழைப்பாடல்கள்… அதுவும் ‘அந்தி மழை பொழிகிறது’ என்று அவர் பாட, அன்றைக்கு கடைக்கு வந்திருந்த சதாசிவம் அங்கிளின் மனைவியும் அவரோடு கூடச்சேர்ந்து பாட, அதைத்தொடர்ந்து இருவரும் எண்பதுகளில் இளையராஜா மழை தீம் பாடல்களைக் கச்சேரி செய்து சிரிக்க வைத்துக்கொண்டிருந்தனர்.

சட்டென்று ஏதோ தோன்ற “வெயிட் ஏ மினிட்!” சாஹியை முந்திக்கொண்டு ஐஸ்கிரீம் கடையைத் தாண்டிக்கொண்டு மாலின் அடுத்த எல்லையை நோக்கித் தலைதெறிக்க ஓடலானாள் வர்ணி .

“எங்கே போற?” என்று கத்திக்கொண்டே பின்னால் அவனும் வர,

எல்லையில் இருந்த அரைச்சுவரில் நின்று எட்டிப்பார்த்தவளுக்கு இப்போது சிரிப்பு முட்டிக்கொண்டு வர, வாய்விட்டுச் சிரித்தாள்.

அவளுக்குப் பின்னே ஓடிவந்திருந்தவன் அவனும் எட்டிப்பார்த்து, “அம்மா” என்று களைத்துப்போன குரலில் சொல்லி, இடமும் வலமும் தலையசைத்தவன் ஆசுவாசமாகச் சுவரில் அப்படியே சாய்ந்துவிட்டான்.

கீழ்த் தளம் பார்க்கிங் என்பதால் மாலின் இந்தப்புற எல்லைக்கும் அருகில் இருந்த ஸ்டோர் பில்டிங்குக்கும்  இடையில் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளிக்கு மறுபக்கம் ஸ்டாருக்கு மேலே பிளேட் போடப்பட்ட தண்ணீர் தொட்டி கூரையோடு இருக்கும்… காலையில் அவரது புது மழைப்பாட்டுத் தோழியோடு காரிடர் முழுக்க பாடிக்கொண்டே நடந்து கொண்டிருந்தவர்கள், இந்த அரைச்சுவரில் நின்று வெளியே எட்டிப்பார்த்தபடி தான் ‘வான் மேகங்களே வாழ்த்துக்கள் கோருங்கள்’ என்று பாடிக்கொண்டிருந்தார்கள்.

அதற்கு காபேயிலிருந்து யாரோ பதில்பாட்டுப் பாடியதால் தான் வர்ணி  அவர்களைக் கவனித்தாள்.

Scroll to Top