LV Epi 11(1)

அவள் அப்படி நினைத்துக்கொண்டிருக்க இந்தப் பக்கம் ஜிம்மில் குளித்து விட்டு உடைமாற்றிக்கொண்டிருந்த சாஹித்யனும் தலையில் கையை வைக்காத குறையாய் தான் நின்று கொண்டிருந்தான்.

தன் மனம் எங்கே செல்கிறது என்று புரிந்து கொள்ளத்தெரியாத குழந்தையா அவன்? ஆனால் அவனது மனத்தாலும் உடலாலும் களைத்துப்போயிருந்தவனுக்கு தன் வாழ்க்கையை குறித்து யோசிக்கக்கூட இதுவரை நேரமிருந்ததில்லை என்பது தான் மெய். வர்ணியை அவனுக்கு பிடித்திருந்தது, அது ஒன்றும் இன்று நேற்று நடந்ததும்  அல்ல.  கல்லூரி முடித்ததும் மிரண்ட விழிகளுடன் உள்ளே வந்தவள் சற்று நாட்களிலேயே அங்கே ஒரு ரவுடி ராட்சியத்தை கட்டமைத்து சுற்ற ஆரம்பித்ததை அங்கே பல இளைஞர்களை போல அவனது  கண்களும்  ஆர்வமாய் பின் தொடராமல் இல்லை. அவனும் ஆசாபாசங்கள் உள்ள இளைஞன் தானே. ஆனால் அந்த ஈர்ப்பை தொடர்ந்து எடுத்து செல்லவோ அவளோடு வாழ்க்கையை பிணைப்பது  குறித்தோ  அவன் யோசித்தது கூட இல்லை. வர்ணியோடு மட்டுமல்ல வேறு யாருடனும் கூட.

அவனோடு அம்மாவையும் ஏற்பது என்பது பெரும் சுமை. அதை யார் தலையிலேனும் ஏற்ற சாஹித்யன்  விரும்பவில்லை. மருந்து செலவுகள், மருத்துவமனை விஜயங்கள்  என்று அதிகமாகும் பொருளாதார செலவுகள் மட்டுமல்ல,  உடல், மனதளவிலும் முகம் சுளிக்காமல் அவரை ஏற்றுக்கொள்ள பெற்ற பிள்ளையை தவிர வேறே  யார் வருவார்?

அதிலும் நாளைக்கு, இன்றிருப்பதை விட நிலைமை மோசமாகுமே!

ஆகவே தான் தன்னுடைய கடுமை கவசத்தை யாருக்காகவேனும் கழற்றவோ யாரையும் தங்கள் வாழ்க்கைக்குள்ளே கொண்டு வரவோ அவன் முயலவே இல்லை.  வாழ்க்கையில் ஒரு லயத்தை உண்டு பண்ணி, அவனால் முடிந்தவரை அதை கட்டுக்கோப்பாய் நிறைவேற்றத்தான் அவன் முயன்று கொண்டிருந்தான்.

ஆனால் கடந்த சில வாரங்களாய் வாழ்க்கை என்னும் சூழல் அவனை சிந்திக்கவே விடாமல் சுழற்றிக்கொண்டு அவன் எண்ணவும் விரும்பாத திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. வேண்டாம் என்று அறிவு   அபாயமணி அடித்தாலும் பாலைவனத்தில் அபூர்வமாய் கிடைக்கும் நீர்த்துளிகள் போல கிடைக்கும் தருணங்களை எல்லாம்  பொக்கிஷமாய் சேகரித்து விட சொல்கிறது மனது!

ஜிம்முக்கு வெளியே சலசலப்பு இப்போது தெளிவாகவே கேட்டது. “பாத்ரூம், ஷவர்,  டிரஸ் எல்லாம் வச்சிருக்கார்னு திமிர் மேனேஜர், எவ்ளோ நேரமா குளிக்கிறார் பாருங்க..இவரை  வேலையை விட்டு தூக்குங்க..” என்று வர்ணியின் குறும்புக்குரலும்

“நான் இங்கே மேனேஜர் இல்லையே..” என்ற அம்மாவின் குழப்பக்குரலும் அவனது இதழ்களில் மெல்லிய புன்னகையை வரவழைக்க அவசரமாய் உடை மாற்ற ஆரம்பித்தான் சாஹித்யன்.

“ஆமாமா. நான் தான் இந்த ஜிம்முக்கு மானேஜர், மறந்தே போய்ட்டேன்” என்று அவள் சொல்லவும் 

பதிலுக்கு “பொய் சொல்லாத டார்லிங்.. அது கெட்ட பழக்கம் “ என்று அம்மா கடினமாய் சொல்வதும்

“இதிலே மட்டும் தெளிவா இருங்க.. “ என்று அவள் நொந்து கொள்வதையும் கேட்க அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

தலையை துவட்டிக்கொண்டே “என்ன என் ஜிம்மை சைடு காப்ல ஆட்டையை போட பார்க்கிறியா?” என்றபடி  வெளியே வந்தவன் அவர்களை பார்த்ததும் பக்கென்று அதிர்ந்து விட்டான்.

வர்ணி எங்கே அதெல்லாம் கவனித்தாள்!

“ஏன் உங்கம்மாவை அனுப்பி நீங்க மட்டும் எங்க டார்லிங் காபேயை ஆட்டையை போடலாம், அதையே நான் பண்ணா தப்பா?” என்று சண்டை போடுவதிலேயே குறியாய் இருந்தாள்.

அவனது அதிர்ச்சிக்கு காரணம், நல்ல நீளமான எக்ஸெல் சைஸ் கறுப்பு நைட்டி ஒன்றை மாட்டிக்கொண்டு தலைமுடியை கொண்டை போட்டபடி ஜாலியாய் அமர்ந்திருந்தாள் வர்ணி. அவளின் அருகே அதே சைஸ் நைட்டி ஆனால் கருநீலத்தில் அணிந்த படி உட்கார்ந்திருந்தார் அவனது அம்மா.. அவர்கள் அணிந்திருந்த நைட்டிகள்  எதிர் டெய்லர் கடையில் தொங்கிக்கொண்டிருந்தவைகள் என்று அவனுக்கா அடையாளம் தெரியாது?

“ஏய்…யாரை கேட்டு டெய்லர் கடைல திருடிட்டு வந்திருக்க? நீ திருடினது பத்தாம அம்மாக்கு வேற போட்டு விட்டிருக்க?” அவனுக்கு ரத்த அழுத்தம் ஏறி விட்டது.

“இன்னொண்ணும் இருந்தது. அது பிங்க். சோ பாரு ஆன்ட்டிக்கு கொடுத்துட்டேன் . ஐ ஆம் நாட் ஏ பிங்க் கர்ள்!” அவள் சிரிக்காமல் சொல்ல

“விளையாடாத வர்ணி!” என்று கடுப்பாகிவிட்டவன் “ அவங்க கஷ்டப்பட்டு தச்சு வச்சிருந்தாங்க..கேட்டு கேள்வியில்லாம எடுத்து போட்டுக்கிறது  என்ன பழக்கம்? அம்மாவோட  சேலைல்லாம் ஒரு மேலதிக செட் ஜிம்மிலேயே  இருக்கு ..உன்னை யார் அதிகப்பிரசங்கி வேலை மார்க்க சொன்னது?” என்று டென்ஷனாக

“எதுக்கு இப்போ தேவையே இல்லாம டென்சன் ஆகுறீங்க..?” என்று அவனிடம் எகிறிக்கொண்டு வந்து எதிரே நின்றவள் “ அவங்களே உடம்பு சரியில்லாதவங்க.. அவங்களுக்கு கம்பார்ட்டபிளா ஒரு டிரஸ் போட்டு  விடுவோம்னு இல்லாம ஜவுளிக்கடை பொம்மை மாதிரி சேலையை சுத்தி விட்டுட்டு இருக்கீங்க? நைட்ல தூங்கும் போது கூட அவங்க சேலை தான் கட்டணுமா? ஹான்? நீங்க என்ன இந்த துப்பட்டா போடுங்க தோழி குரூப்பா? அவங்களுக்கு அறுபது வயசுய்யா..கடுப்பாயிடுவேன் சொல்லிட்டேன்” என்று முறைத்தாள்

அவளின் கண்களையே பார்த்திருந்தவனுக்கும்  “அதானே. ஏன் நமக்கு தோணலை? நமக்குமே வேலை மிச்சமாய் இருந்துருக்கும்! சேலைக்கு ஜாக்கட் கண்டுபிடிக்கறதை விட, காலைல பத்து பேருக்கு கூட சமைச்சிடலாம். எதுக்கு கஷ்டப்பட்டு இந்த வேலையை பார்த்துட்டு இருந்தேன்?” என்று யோசனை ஓட பிறகு தலையை உலுக்கியவன் அடச்சே என்று தன்னையே கொட்டிக்கொண்டு

“ஏய் நான் ஏன் அந்த டெய்லர் அக்கா கடைல திருடுனேன்னு கேட்டுட்டு இருக்கேன் என்ன பேச்சை மாத்துறியா நீ” என்று இப்போது ரகசிய சிரிப்போடு நின்று கொண்டிருந்தவளை முறைத்தான்.

“சும்மா சும்மா திருடினேன் திருடினேன்னு சொல்லாதீங்க. அதெல்லாம் ப. மு. க வோட பர்மிஷன் மொத்தமாவே என்கிட்டே இருக்கு. நான் தான் நைட்டுக்கு இந்த மாலுக்கே ராஜா, என் கிட்ட வம்பு பண்ணலைன்னா உங்களுக்கும் கொஞ்சம் சலுகை கிடைக்கும் பார்த்து இருந்துக்கோங்க..மானேஜர் வாங்க எவ்ளோ முக்கியமான வேலைலாம் இருக்கு, வெட்டியா பேசிட்டிருக்கீங்க” என்று அம்மாவுக்கு சொல்வது போல  கடைக்கண்ணால் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு  அவள் உயரத்துக்கு  கொஞ்சம் பெரிதாய் இருந்த  நைட்டியை இழுத்துக்கொண்டு துள்ளலாய் முன்னே நடக்க ஆரம்பித்திருந்தாள் வர்ணி.

“ப. மு. க?” கேட்காதே என்று எச்சரித்த அறிவையும் மீறி கேட்டுவிட்டான் சாஹி.

கழுத்தை மட்டும் திருப்பி அவனை பார்த்தவள் “பரமேஸ்வரி மால்  முன்னேற்ற கழகம். தலைவருக்கே கழகப்பெயர் தெரியலை, ஐயோ பாவம்!” என்று நக்கல் செய்து கொண்டு கையால் மொபைல் போனை சைகை காட்டியபடியே  அவள் ஓடிவிட்டாள்.

தலைவனான நானா? இப்போ என்ன புதுசா கிளப்பி விட்டிருக்காங்க என்று குழம்பி போனை திறந்து வாட்சப் மெசேஜ்கள் எல்லாவற்றையும் அலசினான் ஆனால் எதையும் காணோம்.  என்னவா இருக்கும் என்று யோசித்தவனுக்கு  அப்போது தான் மின்னலடித்தது. பூஜா திருமண சமயத்தில் யாரோ ஒரு வாட்ஸப் க்ரூப்பில் அவனை பிடித்து போட கடுப்பில் அதை ஆர்க்கைவில்  போட்டு விட்டிருந்தான். அதை திறந்து பார்த்தால் அதுவே தான்! பா முக என்ற தலைப்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய செய்திகள் இப்போதும் வந்து கொண்டே இருந்தன.

எல்லாவற்றையும் படிக்க பொறுமையின்றி கடைசி செய்திகளுக்கு போனால்  மொத்த கடை உரிமையாளர்களும் என் கடைல அது இருக்கு..எடுத்துக்கோ..எடுத்துக்கோ என்று அனுமதிகளை அள்ளி  வழங்கி விட்டிருக்க இன்னும் சுட சுட செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

நைட்டிகளோடு அம்மாவும் அவளும் ஈ என்று எடுத்துக்கொண்ட செல்பிக்கு டெய்லர் அக்கா ஹார்ட்டின் வேறு போட்டிருந்தார். கொடுமையே!

இவர்கள் இப்படி இருந்தால் இவளுக்கு கொழுப்பு ஏறாமல் என்ன செய்யும்?

“அச்சோ ..இன்னிக்குன்னு பார்த்து நான் நேரத்தோடே கிளம்பிட்டேனே .கொஞ்சம் லேட் பண்ணியிருந்தா  ஜாலியா இருந்திருக்குமே” என்று பலர் உச்சுக்கொட்டிக்கொண்டிருந்ததை நல்ல வேளை என்று நினைத்தபடி சாஹி கடுப்போடு பார்த்துக்கொண்டிருக்க கடைசியில் யாரோ “அடேய் தலைவர் பமுக வுக்கு திரும்பி விட்டார்” என்று சொல்லவும் மீண்டும் அவசரமாய் வெளியே போய்விட்டான் அவன்.

வெறும் புன்னகைகளும், பரஸ்பர உயிர்வாழ்தல்களுமாய் இருந்த மால் எந்த புள்ளியில் இப்படி ஒன்று கூடி கும்மாளமிட ஆரம்பித்தது என்று அவனுக்கு  சத்தியமாய் தெரியவில்லை!

இப்போவே கண்ணை கட்டுதே..நாளைக்கு  காலை வரை நாம் தாக்கு பிடிப்போமா என்று  அவனுக்கு சந்தேகம் வர விதியே என்று அவளை தேடிக்கொண்டு நடந்தான் சாஹி. ஆனாலும் இதழோரம் அவனையும் மீறிக்கொண்டு சின்ன சிரிப்பு உயிர் பெற்றிருந்தது.

அவன் எண்ணியது பொய்யாகவில்லை. ரொட்டிக்கடையை மூடியிருந்த தடுப்பு பலகையில் ஏறி மறுபக்கம் குதித்துக்கொண்டிருந்தாள்  வர்ணி.

என்ன பண்ற நீ? என்று ஆயாசமாய் கேட்டான் அவன்

“பிரைட் ரைஸ் செய்யப்போறோம். ரொட்டி கடையில தான் பெரிய கடாய் இருக்கும். அரிசியும் காய்கறி எல்லாம் இங்கேயே இருக்கும் எடுத்துக்க சொன்னார் ரொட்டிக்கடை மார்ட்டின் சார்” அவளுக்கு அவனை பார்க்க எங்கே நேரம் இருந்தது..அவள் உள்ளே பிசி

அதானே பார்த்தேன் என்று எண்ணிக்கொண்டவன்

“ஏன் உன் கடைல இல்லாததா? ப்ரீஸரை திற . அதுக்குள்ளே  இருக்கறதை எல்லாம் சூடு பண்ணி சாப்பிட்டு முடிச்சிரலாம். உன் கஸ்டமர்களுக்கு ஏதோ  நம்மாலான உதவி”  அவன் அந்த தடுப்பில் ஏறி அமர

“ஹலோ என்ன நக்கலா? நாங்கள் ஒண்ணும்  கடைல மீந்து போனதை ப்ரீஸரில் வைப்பது இல்லை.. “ என்று எகிறிக்கொண்டு சண்டைக்கு வந்ததை பார்த்து ஊமையாய் சிரித்தவன் ஒன்றும் சொல்லவில்லை.

அவளுக்கும் அந்த தனிமையை எதிர்கொள்வது என்று புரியவில்லை போலும். அவனது முகத்தை பார்க்காமல் தவிர்த்து இந்த கடாய் செட்டாகுமா? அது செட்டாகுமா? என்று பார்த்துக்கொண்டிருக்க அவளையே பார்த்திருந்தான் இவன்.

அந்த நைட்டியில் பார்க்க சிரிப்பு வந்தாலும் அவள் இன்னும் அழகாய் இருப்பதாய் பட்டது! உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு என்று இவன் தன்னையே தட்டிக்கொள்ள

எந்த கடையில் இருந்தோ குடை மிளகாய், காரட், பாசுமதி அரிசி போன்றவைகள் இருந்த பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் போனவர்கள் போலவே உற்சாகமாய் வந்து கொண்டிருந்தார்கள்  அம்மாவும் பார்வதியும்.

Scroll to Top