நீங்கள் ஈர்ப்புக்கொண்டிருந்த அதே நபருக்கும் உங்கள் மேல் ஈர்ப்பு இருக்கிறது என்று தெரிந்துகொண்ட கணம் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? பட்டென்று மனதுக்குள் ஒரு தோட்டமே மொத்தமாய் இதழ் விரித்துப் பூத்தாற்போல… நூறு பாட்டில் உற்சாக பானத்தை அருந்தி போதைக்கும் சுய பிரக்ஞைக்கும் இடையில் இருக்கும் ஒரு நிலைமை போல… அட, சொல்லத் தெரியவில்லை எனக்கு. வார்த்தைகளால் சொல்லிக்கொள்ளும் கணம் கூட இரண்டாம் பட்சம் தான்.
உள்ளே இரவுக்கான தன்னுடைய மருந்துகளை எடுத்துக்கொண்டு லக்கி ஆன்ட்டி அவருடைய வழக்கமான இடத்தில் தூங்கப் போய்விட்டார். சாஹித்யன், “சிவா, பார்வதிக்கு படுத்துத் தூங்க எல்லாம் இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு வருகிறேன்” என்று சென்றிருக்க, இங்கே வர்ணியோ ஜிம்மைச் சுற்றி நடந்து அங்கிருந்த உபகரணங்கள் எல்லாவற்றையும் தொட்டுத் தடவி நலன் விசாரித்துக்கொண்டிருந்தாள். பற்களோ உதடுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவந்துவிட்டன போலும்… முடிவில்லா அசட்டுச் சிரிப்பு முகத்தில் உறைந்து கிடந்தது.
அவன் சொன்னதற்கு அதுதானே அர்த்தம்? ஒரே குதூகலமாய் திடீரென ஓடிப்போய் ட்ரெட்மில்லில் ஏறியவள், திரும்பி குதித்து மறுபக்கம் ஓடிச்சென்றாள்.
“அச்சோ அச்சோ” என்று கன்னத்தைத் கைகளில் தாங்கிக்கொண்டவளின் கண்கள் இப்போது எதிர் சுவரை மொத்தமாய் மறைத்திருந்த நிலைக்கண்ணாடியில் பதிய, அவளைப்பார்த்து அவளே சிரித்துவிட்டாள்.
கருப்பு நைட்டி அவளது அளவுக்கு மிக மிகப் பெரிது… நீளத்திலும் அகலத்திலும்! தலைமேல் ஒரு கொண்டை, ஆனால் முகம் முழுக்க சந்தோஷத்தில் விகசிக்க, கண்கள் பளபளக்க, கன்னங்களில் மெல்லிய சிவப்போடு இருந்த உருவம் அவளுடையது தானா என்று அவளுக்கே சந்தேகம்!
இன்றைக்கு காலையில் என்ன மனநிலையில் இருந்தாள்? ஒரு நாள் கூட முடியவில்லை. அதற்குள் அப்படி ஒரு தலைகீழான மாற்றம்! அவனும் அவளும் ஒரு குடைக்கீழ் இருக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததுமே துக்கம் எல்லாம் தூரப்போய்விட்டது.
நைட்டியை லுங்கி போல மடித்துக் காட்டியவள், “Ooh, I see you, see you, see you every time” என்று செம்ம உற்சாகமாய் கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தோடு வைப் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
அடுத்து என்ன நடக்கும்? தெரியாது. அவன் காதலைச் சொல்வானா? நான் சொல்வேனா? தெரியாது. எனக்கு கல்யாணம் ஆகுமா? சேர்ந்து வாழ்வோமா? அதுவும் எனக்கு எனக்குத் தெரியாது… எனக்குத் தெரிந்ததெல்லாம், “சாமி டான்ஸ் வித் மீ, டான்ஸ் வித் மீ ஒ ஓ…” என்று வரிகளை இட்டுக்கட்டி பாடிக்கொண்டே திரும்பியவளுக்குப் பகீரென்றது.
காமிராவை அவள் பக்கமாய் பிடித்துக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சாஹித்யன்.
முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பதென்றே அவளுக்குத் தெரியவில்லை. நெளிய ஆரம்பிக்க, அவன் பார்வை வேறு அவள் மேல் மேலிருந்து கீழாக உலாப்போக, பட்டென்று நைட்டியை இறக்கிவிட்டவள், அவன் உதட்டுக்குள் சிரித்தபடி மொபைலை ஏதோ செய்ய, ஓடிப்போய் அவன் எதிரே நின்றுகொண்டு, “போனைக் காட்டுங்க!” என்றாள் கஷ்டப்பட்டு முகத்தை முறைப்பாய் மாற்றி வெட்கத்தை மறைத்தபடி.
“எதுக்கு?”
“இந்த மழுப்புற வேலை எல்லாம் வர்ணி கிட்ட நடக்காது. நீங்க போட்டோவோ வீடியோவோ எடுத்தீங்க…எனக்கு தெரியும். அதை அழிக்கணும்.”
“நான் ஒண்ணும் எடுக்கலையே…லூசா நீ” என்று சொன்னாலும் அவன் உதடு துடிக்க நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் அவளுக்கு மானமே போனது.
“அப்போ போனைக் காட்டுங்க…” என்று முறைத்து சமாளிக்க முயன்றாள்.
“நான் எதுக்கு என் போனை உனக்குக் காட்டணும்? தள்ளு…” என்று பழைய சாஹியாய் அவளை முறைத்துவிட்டு உள்ளே போனவனின் உதட்டோர ரகசியச்சிரிப்பே அவளுக்கு உண்மை சொல்லிவிட, அந்த ஆதாரம் அவனுடைய போனில் இருப்பதையும் அதை அவன் பார்த்து சிரிப்பதையும் கற்பனை செய்து பார்க்கவே தாங்க முடியாமல் இருக்க அவனைத் துரத்திக்கொண்டு ஓடியவள் போனைப் பறிக்க முயன்றாள்.
அவன் ஒரே ஜம்பில், ஒரு உடற்பயிற்சி உபகரணத்தைத் தாண்டி மறுபக்கம் போக, இவள் அதன் மேலே ஏறி அவனிடம் இருந்து அதை வாங்க முயல, அவனோ அடுத்த உபகரணத்தை ஒரே ஜம்பில் தாண்டிக்குதித்துவிட்டான்.
“விட்டேனா பார்” என்று இவள் இருக்கை போல கம்பிகளுடன் நீட்டிக்கொண்டிருக்கும் அமைப்பில் கால் வைக்க, அதுவோ அப்படியே சீசோ போல கீழே போக, அரண்டு போனவளை கையில் அப்படியே இடையை வளைத்து இறக்கி தரையில் நிற்க வைத்தவன், “நான்காம் தடவை…” என்றான் நமுட்டுச் சிரிப்போடு.
விழுந்ததை சொன்னாலும் இன்றைக்கு மூன்று தானே வரும்? அதென்ன நான்காம் தடவை என்று குழம்பி “என்ன சொன்னீங்க?” என்று அவனிடம் கேட்டால், அவனோ
“எல்லா உபகரணமும் லோன் வாங்கி வாங்கியது, சர்க்கஸ் பண்ணி உடைச்சுத் தொலைக்காதே என்று சொன்னேன்.” என்று விட்டான்.
“ஆமாம், பெரிய தங்க ஜிம்! வேலை மெனக்கெட்டு உடைச்சு உருக்கி ஒரு மாளிகை கட்டப்போறோம். இப்போ போனைத் கொடுக்கப் போறீங்களா இல்லையா?” அவள் முறைத்துக்கொண்டே கையை நீட்ட
“பார்த்துத் தொலை…” என்றபடி அவன் தொம்மென்று போனை கையில் போட, பாஸ்வேர்ட் போட்டு திறக்க வைத்து மீண்டும் வாங்கியவள் எங்கே தேடியும் அப்படியொரு வீடியோவோ போட்டோவோ கிடைக்கவே இல்லை!
கடுப்பாய் போனைத் திரும்ப அவனது உள்ளங்கையில் போட்டவளுக்கு ஆழ்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. இல்லையே, நாம் பார்த்தோமே… ஒருவேளை நம்மை அப்படி நம்பவைத்து வெறுப்பேற்றி விளையாடுகிறானோ? ஓரக்கண்ணால் பார்த்தால் அவன் முகம் அவள் நினைத்தது சரி என்று தான் சொல்லியது. ஆனால் அதை நிரூபிக்கத்தான் அவளுக்கு முடியவில்லை.
அந்தக் கடுப்பில் அவன் எடுத்து வைத்துவிட்டுப் போயிருந்த யோகா பாய்களை எடுத்துவந்தவள், ஜிம்மின் முன் வாசலில் இப்போது பாதி திறந்திருந்த ஷட்டருக்கு இடமும் வலமுமாய் எதிரெதிரே போடப்பட்டிருந்த இரண்டு ட்ரெட்மில் ஜோடிகளில் வலப்பக்க ஜோடிக்கு நடுவில் இருந்த இடைவெளியில் இரண்டு பாய்களை நீள வாக்கில் ஒன்று சேர்த்துப் போட்டுவிட்டு, அதன்மேல் ஒரு தடிப்பான துணியையும் போட்டுவிட்டுத் தொப்பென்று படுத்துக்கொண்டுவிட்டாள்.
அவனோ இன்னும் உதட்டோரம் இருந்த சிரிப்போடு கிட்டத்தட்ட ஜிம்மின் கடைசி மூலைக்குப் போய் பாயை விரிக்க, அத்தனையும் மறந்து அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அளந்து பார்த்தால் அவளுக்கும் அவனுக்கும் இடையில் அதிக தூரம் வரும் புள்ளி அதுவாகத்தான் இருக்கும்.
இவன் எழுபது வீதம் சாமியே தான்!
அவள் ரகசியமாய் முகத்தைத் துணியில் அழுத்திக்கொண்டு சிரிப்பில் குலுங்க, அதற்கோ எழுந்து அமர்ந்திருந்தவன் அதைக் கண்டு கொண்டுவிட்டான்.
“என்ன சிரிப்பு?” கேள்வி முறைப்பாய் வந்தது.
“இல்லை, உங்களுக்கும் உங்கம்மாவுக்கும் நான் தான் இன்னிக்கு வாச் வுமன்னு நினைச்சேன், சிரிச்சேன்.” என்று கண்களால் வாசலையும் பாதி திறந்திருந்த கதவையும் காட்ட, அவள் இப்போது வாய்விட்டே சிரித்துவிட,
“நீதான் அவசரப்பட்டு அங்கே போய் படுத்த… இல்லைன்னா நான் வந்து படுத்திருப்பேன். நீ முந்திரிக்கொட்டை வேலையைப் பார்த்துட்டு என்னைச் சொல்லக்கூடாது. எந்திரிச்சு இங்கே வா, நான் அங்கே போறேன்.”என்றான் அவன்.
“ஏன், எனக்கு முன்னாடி, வாசல் கிட்டவும் இடம் இருக்கு. இங்கே வந்து படுக்க வேண்டியது தானே?” என்று சொல்லியபடியே அவளுக்கு எதிர்ப்புறமாக இருந்த இரண்டு ட்ரெட்மில்களுக்கு நடுவில் இருந்த இடத்தை பார்த்துவிட்டவள், பட்டென்று வாயைப் பொத்திக்கொண்டு கன்னத்தில் அடித்துக்கொண்டு அப்படியே படுத்துவிட்டாள்.
போச்சு! என்னைப்பத்தி என்ன நினைப்பான்? அசோ, தப்பா நினைச்சிருவானோ? அவளுக்கு பூமிக்குள்ளேயே புதைந்து விடலாம் போல் இருந்தது.
“என்ன, இன்னிக்கு பில்டரே இல்லாம போயிட்டிருக்கு ..”
அச்சோ, எந்த அர்த்தத்தில் எடுத்துக்கொள்வானோ தெரியவில்லையே…
முதலில் நான் அவனிடம் அப்படி கேட்கலாமா? இடப்பக்கமும் வலப்பக்கமும் இருந்த ட்ரெட்மில்களுக்கு இடையே நடைபாதைக்கான இடைவெளி இருக்கும் தான். நீளவாக்கில் எதிரெதிரேதான் இருப்பார்கள், ஆனால் தலைகள் இரண்டும் வெகு அருகில் இருப்பது போலத்தான் இருக்கும்… அச்சோ, என்ன சொல்லி வச்சிருக்கேன்! என்று அவள் தனக்குள் மறுகி “நா… நான் அப்படி… அர்த்தத்துல சொல்லல…” என்று தட்டுத் தடுமாறி சொல்லி முடிக்க,
அவளையே எழுந்து உட்கார்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தவன், போட்டிருந்த படுக்கையோடு எழுந்து அவளை நோக்கி நடக்கலானான். விழிகள் அவளை விட்டு கொஞ்சமும் விலகவில்லை. இவளுக்கோ இதயம் படபடவென்று அடிக்கலானது. அவன் அவளை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் என்னவோ இரு காந்தங்கள் இடதுபுறமும் வலதுபுறமும் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்துகொண்டே போவதான பிரமை! நான் தான் அறிவில்லாம அப்படிச் சொல்லித் தொலைச்சிட்டேன்னா, இவனும் ஏன் இப்படி பண்றான்… ஷட்டரின் கீழ் இருந்து வந்துவந்து மின்னல் வெளிச்சத்தில் அவனுக்கும் அவளது முகத்தைப் பார்க்க முடிந்திருக்கும்.
அவளருகில் வந்து இடது பக்கம் திரும்பி, அங்கிருந்த இரண்டு ட்ரெட்மில்களுக்கு இடையில் அவன் படுக்கையைத் தயார் செய்யப் பாயைக் கீழே போட்ட அந்த நொடி காந்தங்கள் இரண்டும் ஒன்றாய் ஒட்டிக்கொண்டது போலிருந்தது அவளுக்கு.
அந்த நொடி திரும்பி வரவே முடியாத ஒரு பாதைக்குள் நுழைந்துவிட்ட ஒரு பிரமையில் ஓரக்கண்ணால் அவனையே பார்த்திருந்தாள் வர்ணி.
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. அதிசயமாய் வர்ணிக்கு இப்போது மனதில் எந்தச் சங்கடமும் சுத்தமாய் இல்லை. கோட்டை தாண்டிவிட்டதாலோ என்னமோ… இனிய மிதக்கும் மனநிலை தவிர அவள் வேறெதையும் நினைக்கவும் விரும்பவில்லை.
