LV Epi 13(1)

காரில் இருந்து இறங்கும் போது சாஹித்யனின் கண்கள் ரியர் வியூ கண்ணாடியில் இருந்த பொட்டில் அனிச்சையாய் படிய, அவனது இதழ்களில் சின்னதாய் ஒரு புன்னகை ஏறிக்கொண்டது, எப்போதும் போலவே! பச்சை நிறத்தில் கறுப்பு அவுட்லைன் போட்டு, கீழே நீர்க்குமிழி போல ஆரம்பித்து மேலே நெளிந்து செல்லும் அந்த பொட்டு  டிசைனை பார்க்கும் போதெல்லாம், அவனுக்கு ஒருத்தியின் கண்களும் புருவங்களும் நினைவு வருவது என்ன விந்தையோ தெரியவில்லை!

அன்று மழை நாளின் மறுநாள் காலை அவனது முகத்தை எதிர்கொள்ள முடியாமல் வர்ணி தலைமறைவாகியிருக்க, அந்த இரவின் மௌன சாட்சியாய் அவனது ஜிம்மின் குளியலறை கண்ணாடியில் புதிதாய் முளைத்திருந்தது இந்த பச்சைப்பொட்டு. எல்லாரும் வரும் இடத்தில் அதை விட்டு வைக்க மனதில்லாமல் அப்படியே பொத்தினாற்போல அதைக் கடத்திக்கொண்டு வந்து, கார் கண்ணாடியில் ஓரமாய் ஒட்டி வைத்திருக்கிறான் சாஹித்யன். “ஒருதடவை உரித்தால் பொட்டு மீண்டும் ஒட்டுமா?” போன்ற பொட்டு டெக்னாலஜி குறித்த கேள்விகளெல்லாம் அவனுக்குள் முளைத்திருக்க, அதை எல்லாம் உடைத்து எப்படியோ அப்படியே ஒட்டிக்கொண்டு அவனது நாளாந்த வாழ்க்கையில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டது அந்தப் பொட்டு வர்ணியை போலவே!

தன்னை நினைத்தே தலையை அசைத்துக்கொண்டு இறங்கிப்போனவன், போட்டி நடைபெறும் இடம் நோக்கி போனான். இன்றைக்கு நடைபெறும்  மாவட்ட மட்ட போட்டியில் கலந்துகொள்ளும் திரு, அவனிடம் பயிற்சி எடுத்துக்கொள்பவன் தான். வழக்கமாக இது போன்ற போட்டிகளுக்கு நவீனையும் இன்னும் இருவரையும் தான் மாறி மாறி அனுப்பி வைப்பான் சாஹித்யன். இன்றைக்கு அவனே  தன்னுடைய போட்டிக்கு  நேரில் வந்திருந்ததில் திரு மிகவும் உற்சாகமாகிவிட்டான்.

நான்கு கட்டங்களாக போட்டி நடக்க, முதற்கட்ட போட்டியில் பங்குகொள்ள அவன் மேடைக்குப் போக, மேடைக்குக் கீழேயே இருந்து கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் சாஹித்யன்.

“என்ன தம்பி, அதிசயமா இன்னிக்கு நீயே வந்திருக்க?” ஒரு வயதான பிரபல பயிற்சியாளர் கேட்க வெறுமனே புன்னகைத்து வைத்தான் அவன்.

“உன்னோட பயிற்சியில் நிறைய பேர் ஜெயிக்கிறாங்க. ஆனால் நீயும் முன்னாடி வந்து அவங்களோட கூட நிக்கணும். பயிற்சி கொடுத்ததோட என் வேலை முடிஞ்சதுன்னு நிக்க கூடாது. அடிக்கடி உன்னை நான் இனிமே இங்கே பார்க்கணும்” என்று அவர் ஆதுரமாய் சாஹித்யனின் முதுகில் தட்ட சரி என்று மரியாதையாய் தலையசைத்து வைத்தான் அவன். வேறே என்ன சொல்ல முடியும்?

பக்கத்தில் நின்ற இன்னொருவரும் அவரோடு சேர்ந்து கொண்டு, “இந்த காலத்து பசங்க, கொஞ்சம் வெற்றியை பார்த்ததுமே  அவங்களை பெரிய கொம்புன்னு நினைச்சுகிட்டு கீழே இறங்கி வேலை பார்க்க மாட்டேங்குறாங்க. தொழிலில் நுட்பத்தை கத்துக்க முன்னாடி ரீல்ஸ் போட்டு வைரலா ஆகறதுலயே அவங்க கவனம் இருக்கு. இங்கெல்லாம் வந்து எது எது எப்படி நடக்குதுன்னு பார்த்தால்தானே தொழிலில் மேலேறி மேலே மேலே போக முடியும்? நான் கூட நீயும் அப்படித்தானோன்னு நினைச்சேன். இனிமே அடிக்கடி வாப்பா” என்று சொல்லிக்கொண்டே போக, “அட போங்கடா” என்றிருந்தது அவனுக்கு.

அவனது கடமைகளும் பொறுப்புக்களையும் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? மூச்சு முட்டிப்போய் சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு இப்போதுதான் மெலிதான அவகாசம் கிடைத்திருக்கிறது. இதில் மேலும் மேலும் தொழிலில் முன்னேறுவது பற்றி சிந்திப்பதற்கே கொடுத்து வைத்திருந்தால்தான் முடியும் போல. ஒவ்வொரு நாளையும் வாழ்ந்து முடிப்பதே இப்போதெல்லாம் அவன் வரையில் பெரிய சாதனை!

“அண்ணா!” என்று ஆச்சர்யமாய் அழைத்தபடி ஓடி வந்த நவீனைப் பார்த்தவன், “என்னடா போன வேகத்துல வந்துட்ட?” என்று கேட்டான்.

“நேத்து பதிவு பண்ற வேலை மட்டும்தான்; விரிவுரைகள் எல்லாம் அடுத்த வாரம் தான் ஆரம்பிக்கும். அங்கே சும்மா இருந்து என்ன பண்ண?, அதுதான் வந்துட்டேன்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் திருவின் முறை வந்து விட, இருவரும் அங்கே கவனத்தை குவித்து விட்டனர்.

முதல் ரவுண்டில் ஜெயித்தவன் அடுத்து அடுத்து என்று இறுதி வரை சென்று, அவர்களின் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூவரில் ஒருவராக வர, இவர்களுக்கும் பேசக்கூட நேரமில்லை. அவனுக்கு தேவையானதை செய்து, அவனுக்கு  என்ன தேவை என்று பேசி, சமயங்களில் அவனை அமைதிப்படுத்தி என்று அவர்களுக்கும் வேலை இருந்து கொண்டே இருந்தது.

“வாழ்த்துக்கள் நண்பா!” வென்று வந்தவனை அவர்கள் இருவரும் வாழ்த்த, “சார், உங்களை கண்டதும் பெரிய பூஸ்ட்டே கிடைச்சது போலிருந்தது. கடைசிவரை கூடவே நின்னதுக்கு பெரிய நன்றி” என்று அவனும் நெகிழ்ந்து, சாஹித்யனுக்கும் நவீனுக்கும் நன்றிகளை சொல்லிக்கொண்டு  அகல, இவர்கள் இருவரும் வெளி வாசல் பக்கம் நடந்தனர்.

“அண்ணா, அம்மா யார் கூட இருக்காங்க?” என்று நவீன் கேட்க

“வர்ணி கூட.” என்றான் சாஹித்யன் கார் சாவியை பாக்கட்டுக்குள் இருந்து எடுத்து உள்ளே அமர்ந்தபடி.

ஓடிவந்து அவனது பக்கத்தில் ஏறிக்கொண்ட நவீன் “ஹை ஜாலி! அப்போ பிரியா ஒரு ஹாட் சாக்லேட் கிடைக்கும்னு சொல்லுங்க.. டார்லிங் காபேக்கு போலாம், ரைட்!” என்று குதூகலமாக

அவனது  பின்னந்தலையில் ஒரு அடியை வைத்தவன் , “ஞாயிற்றுக்கிழமை எப்போடா கடை திறந்தது?” என்று கேட்க,

“அப்போ அம்மா வர்ணிக்கூட இருக்காங்கன்னு சொன்னீங்க?” என்று இப்போது குழப்பமாய் அவனது முகத்தை பார்த்தான் நவீன்.

காரை வெளியே எடுத்துக்கொண்டிருந்தவனும் “வர்ணி வீட்லடா.” என்று இதைக்கூட சொல்லணுமா உனக்கு என்று அலுப்பாய் புரியவைக்க

“எதே?” என்று அவன் புறமாய் திரும்பியே அமர்ந்து விட்டான் நவீன்

“என்னடா?” என்று கடுப்பாய் கேட்டவனுக்கு  எதுக்கு இவன் இப்படி ரியாக்ஷன் கொடுக்கிறான் என்றிருந்தது.

“இல்லை, வர்ணி வீட்லயா?” நவீன் மீண்டும் கேட்டான்

“அதுக்கென்ன?” என்று கேட்டபிறகுதான் இவனுக்கு மெதுவாய் பல்ப் எரிந்தது.

புரிந்த பிறகு பிறகு, “அதுக்கிப்ப என்ன?” என்ற நிமிர்வும் வர, கண்களில் கூலரை மாட்டிக்கொண்டு அவன் பிரதான தெருவுக்கு வண்டியை விட முகமே ‘ஈஈ’ என்ற சிரிப்பில் பளபளக்க ஹம் செய்ய ஆரம்பித்திருந்தான் நவீன்.

“இந்தாடா. காலேஜுக்கு போய் ஒழுங்கா படிச்சு PhD க்கு அட்மிஷன் வாங்குற வழியை பார். மறுபடி மறுபடி இங்கே சுத்துறது, ஊர்க்கிழவிகள் போல வம்பு பேசுறதுன்னு சுத்திட்டிருந்தேன்னா தோலை உரிச்சிடுவேன்.” என்று அவன் என்ன செய்வான் என்று ஊகித்து சாஹி மிரட்ட

“சரிண்ணா, சரிண்ணா” என்று சொன்னவன் இன்னும் சிரிப்பை அடக்காமல் அமர்ந்திருக்க, கடுப்பாகிப்போனவன் அதன் பிறகு அவனிடம் எதுவுமே பேசவில்லை.

ஒரு பரோட்டாக்கடையில் இறங்கி நான்கு பார்சல்களை வாங்கிக்கொள்ள, இப்போது மீண்டும் நவீன் முகத்தில் குறும்பு புன்னகை முளைக்க, “அடி  வாங்கப்போறடா” என்று அடிக்குரலில் மிரட்டியவனுக்கும் இப்போது வெட்கச் சிரிப்பு வரப்பார்த்தது.

ஒரு வழியாய் ஒரு பரோட்டா பார்சலோடு அவனை இறக்கி விட்ட பிறகுதான் அவனுக்கு மூச்சே வந்தது. காரை விட்டுவிட்டு அப்பார்ட்மென்டில் ஏறியவனுக்கு, எப்போதும் போல அது எப்போது இடியுமோ என்ற எண்ணம் வர, ‘உப்பென்று’ ஊதிக்கொண்டே மேலே வர, “அடடா சாஹித்யா, அம்மாவை கூப்பிட வர்றியா?” என்று கேட்டுக்கொண்டே பதிலுக்கு காத்திருக்காமல் கையசைத்துக்கொண்டே நந்தன் படிகளில் இறங்கிப் போய்விட, நெற்றியை தேய்த்துக்கொண்டே மேலேறி வந்தவன் வர்ணி வீட்டின் முன் இருந்த காலிங் பெல்லை ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை தட்டினான்.

அவளிடம் எல்லாமே இருக்கும், ஆனால் எதுவுமே அதற்கான வேலையை செய்யாது. எப்படித்தான் தேடி கண்டுபிடிக்கிறாளோ ஆண்டவா!

அரை நிமிட தாமதத்தின் பின் பெரிய சிரிப்போடு கதவை திறந்தாள் வர்ணி. கிளிப்பச்சையில் ஒரு பைஜாமாவும், சிவப்பு கையில்லாத டாப்பும் என்று ஒரு கண்ராவி காம்பினேஷனில் அவள் இருக்க  இவன் கண்களோ அதை கூட விட்டு வைக்காமல் மேய,

“அஹீம், எப்படிப்போச்சு உங்க காம்பிட்டிஷன்?” என்று கேட்டவளின் கன்னங்களில் லேசான சிவப்பு.

“அவன் செலக்ட் ஆயிட்டான். அடுத்து வலய மட்ட போட்டிக்கு போகணும்.”

“வாவ்!”

அந்த நேரம் கதவை திறந்து கொண்டு வந்த நித்யா இவர்களைக் கண்டதும் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு அப்புறம் வர்றேன் என்று வர்னியிடம் வாயசைத்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் போக, நொந்து போய்விட்டவன் வர்ணியை பார்க்க அவளும்  உதட்டுக்குள் சிரித்தபடி கதவை அகலத் திறந்தாள். உள்ளே வாங்க

“இல்லல்ல, அம்மாவை கூப்பிடணும், டைம் ஆச்சு” என்றபடி அவளிடம் பரோட்டா பார்சலை நீட்டினான் சாஹி.

“வாசல்ல வச்சு எதுவும் வாங்க கூடாதுன்னு சிஸ்டர் சொல்லிருக்காங்க.”

அவளும் தன்னுடைய கூச்சத்தை மறைத்துவிட்டுதான் வம்பு செய்கிறாள் என்று புரிய, அவளை ஏறிட்டுப் பார்த்தவன், “ஏனாம்?” என்று குறும்பாய் கேட்டான்.

“கொடுக்கற பொருள் குறைஞ்சு போய்டுமாம்.”

Scroll to Top