KKP Epi 3(2)

“சொல்லுங்க சார், எதாச்சும் பிரச்சனையா?” என அந்த நிர்வாகியைப் பார்த்து பவ்யமாய் கேட்டாள் இவள்.

“அப்படிலாம் ஒன்னுமில்லம்மா! இன்னிக்கு ஈவ்னிங் ஒரு கிளையண்ட் மீட்டிங் இருக்கு. நெறைய வெள்ளைக்காரங்க வருவாங்க அட்டேண்ட் பண்ண. சாப்பாடுலாம் வெளிய ஆர்டர் குடுத்துருக்கோம். நீயும் இன்னும் யாராச்சும் ஒரு ஆளும் இருந்து, மீட்டிங் முடிஞ்சதும் கொஞ்சம் கிளின் பண்ணிடுங்கம்மா! நாளைக்கு வரைக்கும் போட்டு வச்சா, நாறிடும் மீட்டிங் ஹால்! நாளைக்கு காலையிலயும் ஒரு மீட்டிங் இருக்கு. நீ இருந்தா எந்தக் குறையும் இல்லாம எல்லாம் பார்த்திடுவ. அதான் உன்னை இருக்க சொல்றேன்” எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த மாதிரி அதிகப்படி வேலைக்கு ஏஜென்சி கம்பெனியிடம் தனியாக வசூலித்துவிடும். அதோடு அன்று தங்கி இருந்து சுத்தம் செய்பவர்களுக்கும் ஓவர்டைம் கிடைக்கும். எப்பொழுதும் மற்றவர்களை வேலைக்கு அமர்த்தி விட்டு இவள் கிளம்பி விடுவாள். இந்த நிர்வாகி கொஞ்சமே கொஞ்சம் நல்லவர். இவளை மதித்து நல்லபடி நடத்துவார். அதனாலேயே இருந்து வேலை செய்வதற்குச் சரியென ஒத்துக் கொண்டாள் பவளமல்லி. தனது டப்பா போனை எடுத்து, வீட்டுக்கு அழைத்து ஓவர்டைம் பற்றி கனகாவிடம் சொல்ல, அவர் பொரிந்து தள்ளிவிட்டார்.

“நெஜமா ஓவர்டைம்மா இல்ல வீட்டு வேலைக்குப் பயந்துகிட்டு பொய் சொல்றியா? அனாதையா கிடந்தவள, கூட்டி வந்து சோறு போட்டு, நல்ல துணிமணி எடுத்துக் குடுத்து வளர்த்து விட்டுருக்கேன்! அதை என்னைக்கும் மறந்துடாதடி மல்லி. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுல கொண்டு வந்து வச்சாலும், பழக்கதோஷத்துல எதையோ திங்கறதுக்கு தேடிப் போகுமாம். அது மாதிரி என்ன குலம், என்ன கோத்திரம்னு தெரியாத உன்னை கொண்டு வந்து சீவி சிங்காரிச்சு நடு வீட்டுல உக்காத்தி வச்சிருக்கேன். நாய் எதையோ தேடிப் போன மாதிரி நீ எவனையோ தேடிப் போயிடாத! அப்புறம் இன்ஸ் பெல்ட்டாலேயே பூஜைப் போட்டுருவாரு. ஞாபகம் வச்சி நடந்துக்க. நான் ஏஜேன்சி ஓனர் கிட்ட ஓவர்டைம்மா இல்லையான்னு இப்போவே விசாரிக்கறேன். போனை வைடி!” எனத் திட்டித் தீர்த்து விட்டுத்தான் வைத்தார்.

அவர் பேசியதில், பசி கூட மரத்துப் போனது பவளமல்லிக்கு. கண்ணில் துளிர்த்த நீரைச் சுண்டி விட்டவள், மதிய உணவை ஒதுக்கிவிட்டு வெறும் தண்ணீரைக் குடித்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

மாலை மணி ஐந்தாகி இருந்தது. வேலையில் ஒரு கண்ணும் எம்.என்.சி வாசலில் ஒரு கண்ணுமாக இருந்தான் ஜெய்சங்கர்.

“கோவாலு!!”

“என்னடா?”

“இன்னிக்கு என் தேவாவ இன்னும் காணோம்!”

“யாரு தேவா? வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடின்னு கானா பாடுவாரே வெள்ளை சொக்கா தேவா, அவரா?”

“போ நைனா! தேவதைய சுர்க்கி தேவான்னு சொன்னேன்! அவ பேரு தெரியலையே, மன்சுக்குள்ள தேவான்னு கூப்டு பழகிடுச்சு”

“யெச்சூஸ்மீ மவனே! வெறும் சைட்டுனுட்டு மன்சுக்குள்ளலாம் அந்த பொண்ணு பேர இன்னாத்துக்கு கூப்ட்டுட்டு இருக்க நீ! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்!”

“விடு நைனா! மனுஷனே பீலிங்குல இருக்கான், நீ வேற நொய் நொய்ன்னுட்டு. வேபாரத்தப் பாரு!” என்றவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

‘இன்னிக்கு வேலைக்கு வரலியோ! ஒடம்பு கிடம்பு முடியலியோ!’ என எண்ணியவாறே பரோட்டாவைக் கொத்தினான்.

ஆறாகியும் ஆளைக் காணாமல், அன்று அவள் வேலைக்கு வரவில்லை என முடிவெடுத்தவன் கவனத்தை வேலையில் திருப்பினான். ஆறுக்கு மேல் வியாபாரம் சூடு பிடிக்கும் நேரமாதலால் அவனுக்கும் வேறு சிந்தனைகளுக்கு நேரமில்லாமல் போனது.

மெல்ல இருள் கவிழக் கூட்டமும் குறைந்திருந்தது. ரேடியோவில் இரவு மணி ஒன்பது எனச் சொல்ல,

“அதுக்குள்ள ஒம்பது ஆச்சி நைனா! நீ வேலையை விட்டுட்டு மொதல்ல சாப்பிடு! நான் கஸ்டமர பார்த்துக்கறேன்” என்றான் இவன்.

“டேய் சங்கரு, அங்க பஸ் ஸ்டாப்ல பாரு! நம்ம புள்ள மாதிரியே இருக்கு!”

சடாரென தலையைத் திருப்பிப் பார்த்தான் இவன். இவர்கள் கடைக்கு எதிர்புறம் கொஞ்சம் தள்ளி இருக்கும் அந்த பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தாள் அவள். எப்பொழுதும் பரோட்டா வாங்கி விட்டு அந்த நிறுத்தத்தில் போய்தான் பஸ் ஏறுவாள் மல்லி.

அவளருகே  இரண்டு ஆண்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் பேசுவது கேட்காவிட்டாலும், எதோ வம்பு செய்கிறார்கள் என அவர்களின் உடல் மொழியில் இருந்து புரிந்தது. அதில் ஒருவன் இவனது தேவாவின் சடையைப் பிடித்து இழுக்கவும், பட்டென ஜல்லிக் கரண்டியைப் தூக்கிப் போட்டு விட்டு சாலையைத் தாண்டி பஸ் நிறுத்தத்துக்கு ஓடினான் ஜெய்சங்கர்.

“அடிதடி வேணாண்டா சங்கரு! கையால பேசாம, வாயால பேசுடா டேய்!” என கோபால் கத்தியதைக் காதில் வாங்கவேயில்லை இவன்.

மூவரையும் நெருங்கியவன்,

“என்னங்கடா, தனியா நிக்கற புள்ளக்கிட்ட ரவுசு காட்டறீங்களா?” எனக் கோபமாய் கேட்டான்.

“தோடா வந்துட்டாரு ஹீரோ! இவளுக்கு நீ என்ன மாமனா இல்ல மச்சானா?” எனத் திமிராய் பேசினான் ஒருத்தன்.

மல்லியின் சடையைப் பிடித்து இழுத்தவனோ, மீசையை முறுக்கிக் கொண்டு சங்கரை அடிக்க வந்தான்.

மல்லியோ கலக்கமாய் ஆண்கள் மூவரையும் பார்த்தாள்.

“நான் யாரா இருந்தா ஒனக்கு என்னடா? தனியா போற பொண்ணுக்கு சேப்டி இல்லைன்னா இந்த ஜெகத்தையே அழித்திடுவோம்னு காந்தி தாத்தா சொல்லிருக்காருடா என் வெண்ட்ரு!” என்ற ஜெய்சங்கர், அடிக்க வந்தவனின் இரு கைகளையும் இறுக்கிப் பிடித்து பளார் பளாரென அறைந்தான்.

வாய் பேசியவன் நண்பனுக்காக நடுவே வர, அவன் வயிற்றில் ஓங்கி ஓர் எத்து விட்டான் ஜெய்சங்கர்.

“யப்பா!” எனும் கதறலுடன் அவன் வயிற்றை பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து விட, கையில் அகப்பட்டிருந்தவனுக்கு அல்லு விட்டது.

“இனிமே இப்படிலாம் செய்ய மாட்டேங்க! விட்டுருங்க” எனக் கெஞ்ச ஆரம்பித்தான் அவன்.

‘ரெண்டு மாசமா சைட்டடிக்கற நானே, நிழலக் கூட தொட்டுப் பார்த்தது இல்ல. இந்த மொள்ளமாரி என் தேவா முடியைப் புடிச்சுப் பார்த்திருக்கு’ எனக் கோபமாக நினைத்தவன்,

“இனிமே செய்ய மாட்ட, சரி! இப்போ செஞ்சதுக்கு தண்டனை வேணா?” எனக் கேட்டான்.

“இப்ப அறைஞ்சதே இடியை இறக்கன மாதிரி வலி உசுரு போகுது! விட்டுருங்கண்ணா” என இறைஞ்சினான்.

“உனக்கு அம்மா இருக்காங்களாடா?”

“இருக்காங்கண்ணா!”

“இத்த அவங்க குடுக்க வேண்டியது! அவங்க சார்பா நான் குடுக்கறேன், வாங்கிக்க!” எனச் சொல்லி ஒரு பேயறை வைத்தான் ஜெய்சங்கர்.

“அம்மா!!!!!!!” எனக் கதறினான் அவன்.

“அக்கா இருக்கா?”

எங்கே இருக்கிறாள் எனச் சொன்னால், அவள் சார்பாகவும் அறை விழுமோ எனப் பயந்து இல்லை என்றான் அறை வாங்கியவன்.

“இல்லாங்காட்டி போகுது! இல்லாத அக்கா சார்பா இத்த வாங்கிக்க!” என இன்னொரு அறை வைத்தான்.

தங்கை, பாட்டி, சித்தி, அத்தை, சின்னம்மா, அண்ணி இப்படி ஒவ்வொரு உறவு முறைக்கும் ஓர் அறை கிடைக்க, கதி கலங்கிப் போனான் பெண்ணிடம் வீரத்தைக் காட்டியவன்.

ஜெய்சங்கர் அடிப்பதையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் பவளமல்லி.

கீழே அமர்ந்திருந்தவனுக்கும் சைக்கிள் கேப்பில் அறை விழத்தான் செய்தது.

மாறி மாறி இருவரையும் வெளுத்தவன்,

“என் கண்ணு முன்னாடி நிக்காம இப்படியே அப்பீட் ஆயிடுங்க! இருக்கற காண்டுல ரெண்டு பேரையும் காலி பண்ணிடுவேன்” என மிரட்ட, இருவரும் எடுத்தார்கள் ஓட்டம்.

அவர்கள் ஓடியதும் பவளமல்லியைத் திரும்பிப் பார்த்தவன்,

“அறிவில்ல உனக்கு?” எனக் கோபமாக இரைந்தான்.

அவன் கோபக் குரலில் டக்கென உடம்புத் தூக்கிப் போட்டது இவளுக்கு. இருந்தாலும் யாரிடமோ பேசுகிறான் என்பதைப் போல அமர்ந்திருந்தாள் இவள்.

“லேட்டா ஆபிசு முடிஞ்சா, வீட்டுல யாரயாச்சும் கூப்ட வர சொல்லனும்னு தெரியாது? இப்படித்தான் தன்னந்தனியா இருட்டுல வந்து நிப்பியா! மண்டைல மசாலா இருக்கா இல்லையா? காலம் கெட்டுக் கிடக்குது! நீ வேற அழகா இருந்து தொலையற! ஒன்னுக் கிடக்க ஒன்னு ஆனா யாருக்கு நஷ்டம்!” எனப் பொரிந்து கொட்டினான்.

பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல அமர்ந்திருந்தாள் பவளமல்லி. இவனுக்கு இன்னும் கோபம் எகிறியது. அவளை நெருங்கி வந்தவன்,

“தோ பொண்ணு, பேசமாட்டியா? வாயில என்ன கொழுக்கட்டையா அடைச்சி வச்சிருக்க?” எனக் கத்தினான்.

இவள் சட்டென எட்டி அவன் கையை இறுக பிடித்துக் கொண்டாள்.

“ஏய், ஏய்!”

அவள் தொடுகையில் கோபம் எங்கோ ஓடிப் போயிருக்க, வார்த்தை வராமல் தடுமாறினான் ஜெய்சங்கர். அவள் பிடி இன்னும் இறுக, அவளின் நகம் சங்கரின் கையைப் பதம் பார்த்தது. அக்கைகளின் நடுக்கத்தில் என்னவோ சரியில்லை என புரிந்து கொண்டவன்,

“தேவா! என்ன பண்ணுது உனக்கு?” எனக் கேட்டான்.

“தலை….சுத்துது, மயக்கம் வர மாதிரி இருக்கு”

“ஐயயோ!!!! ஒனக்கு கல்யாணம் ஆகிடுச்சா! உண்டாகி இருக்கியா? கழுத்துல தாலியப் பார்க்கவேயில்லையே நானு!” எனப் பதறினான் இவன்.

களைப்புடன் இருந்தாலும் அவன் கேட்ட கேள்வியில் கோபம் வந்தது இவளுக்கு.

“பசி மயக்கம்யா!” என்றவளுக்குக் கண்களில் லேசாய் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. பார்த்திருந்தாலும், முன்னே பின்னே பழகியிராத ஓர் ஆண்மகனின் கையைப் பற்றிக் கொண்டு இருப்பது அவமானமாக இருந்தது. கையை விட்டால், விழுந்து விடுவோமோ எனப் பயமாக வேறு இருந்து தொலைத்தது.

தள்ளாடியவளின் கையை இவனும் இறுக்கிக் கொண்டான்.

“என்ன பொண்ணு நீ! உழைக்கறதே இந்த வயித்துக்குத்தான். சாப்பிடாம கொள்ளாம என்ன வேலை பார்த்துக் கிழிக்க வேண்டிக் கிடக்கு!” என இவளைக் கடிந்து கொண்டவன்,

“நைனா!” எனக் கத்தி அழைத்தான்.

சாலையின் மறுபுறம் இருந்து,

“என்னடா மவனே” என கோபால் குரல் கொடுத்தார்.

“மூனு பரோட்டா தட்டுல போட்டு கொண்டா நைனா!”

“ரெண்டு போதும்” என மெல்லிய குரலில் இவள் சொன்னாள்.

“நீ சும்மா இரு!” எனச் சிடுசிடுத்தான் மல்லியிடம்.

இவளை இப்படியே விட்டுவிட்டு இவன் போய் உணவு எடுத்து வருவதற்குள் கீழே விழுந்து வைத்து விடுவாளோ எனப் பயந்துதான் தகப்பனை கொண்டு வரச் சொன்னான்.

கோபால் உணவுடன் தண்ணீர் பாட்டிலும் கொண்டு வந்து கொடுத்து விட்டு, என்னவென விசாரித்தார். விஷயம் அறிந்து அவர் பங்குக்கு மல்லிக்கு அறிவுரையை அள்ளி விட,

“போ நைனா, போய் வேபாரத்தாப் பாரு! துன்னுட்டு துட்டு குடுக்காம ஓடிற போறானுங்க!” என விரட்டி விட்டான் சங்கர்.

அவர் போனதும் இவளைப் பார்த்து,

“தேவா, சாப்பிடறதுக்காச்சும் தெம்பிருக்கா? இல்ல ஊட்டி விடவா?” எனக் கேட்டவனை முறைத்தாள் இவள்.

“ஒடம்புக்கு முடியலைன்னாலும் இந்த மொறைப்புக்கு ஒன்னும் குறைச்சலில்ல!”

அவசரமாய் அவன் கொண்டு வந்திருந்ததை அள்ளி விழுங்கினாள் பவளமல்லி. கிட்டத்தட்டக் காலை உணவைத் தவிர அன்று முழுக்க அவள் பட்டினியாக இருந்திருந்தாள். வேலையும், மனச் சோர்வும், மாதாந்திர பிரச்சனையும் அவளது பசியை மந்தித்திருந்தன. என்னவோ சட்டெனத் தலையைச் சுற்றிவிட்டது. வயிற்றுக்குள் உணவு விழவும்தான் கொஞ்சம் தெம்பு வந்தது அவளுக்கு.

சாப்பிட்டு முடித்து, தண்ணீர் குடித்து அந்த பாட்டில் தண்ணீரிலேயே கையையும் கழுவினாள் பவளமல்லி. அதன் பிறகே சுற்றுப்புறம் உறைத்தது. தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் பரோட்டாக்காரனும் கண்ணுக்குத் தெரிந்தான். மயக்கத்தில் சட்டென அவன் கையைப் பற்றியதை நினைத்து தர்மசங்கடமாக இருந்தது இவளுக்கு.

தட்டைப் பக்கத்தில் வைத்து விட்டு, கைப்பையில் இருந்து பணத்தை எடுக்க முயல,

“தோ பாரு! காசுலாம் மெதுவா குடுத்துக்கலாம். நான் எங்கும் ஓடிப் போயிட மாட்டேன்! இப்போ எப்டி இருக்கு உடம்பு? இன்னும் மயக்கம் வருதா?” எனக் கேட்டான்.

இல்லையெனத் தலையாட்டினாள் இவள். தட்டை தண்ணீரில் அலசி, அவனிடம் நீட்டினாள் பவளமல்லி. அவள் ஸ்டெடியாக நிற்கிறாளா என ஆராய்ந்தபடியே தட்டை வாங்கிக் கொண்டான் ஜெய்சங்கர்.

இவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவளது பஸ் போய் விட்டிருந்ததால், அடுத்த பஸ்க்காக காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம். அவனிடம் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் இவள் பஸ் வரும் பாதையையேப் பார்க்க,

“ஒரு தேங்க்சு சொன்னாளா பாரேன், ராங்கிப் புடிச்சவ!” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் இவன்.

அவன் முனகியது கேட்டாலும், அதற்கு மேல் அவனிடம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை இவள். அப்படி இருந்தும் அவள் பஸ் வரும் வரை அங்கிருந்து நகரவில்லை ஜெய்சங்கர். பஸ் வந்ததும், அவனிடம் ஒன்றுமே சொல்லாமல் ஏறிக் கொண்டாள் பவளமல்லி.

“போய்ட்டு வரேன்னாச்சும் சொல்றாளா பாரேன்! திமிர் புடிச்ச ராட்சசி” என இவன் முணுமுணுத்தான்.

பஸ் கொஞ்சம் நகர்ந்ததும்,

“ஹோய் பரோட்டா!” எனக் குரல் கேட்டது.

“அடிங்க!!!” என்றபடி இவன் பஸ்சை பார்க்க, படிகளில் நின்றபடி இவனை எட்டிப் பார்த்து,

“ரொம்ப நன்றிஈஈஈஈஈஈஈ!” எனக் கத்தினாள் பவளமல்லி.

இவனது முகம் பூவாய் மலர்ந்து போனது.

“சொல்லிட்டாளே அவ நன்றிய

சொல்லும் போதே சுகம் தாளல” எனப் பாடியபடியே லுங்கியை மடித்துக் கட்டி ஆட்டம் போட்டுக் கொண்டே சாலையைத் தாண்டி தனது கடைக்குப் போனான் ஜெய்சங்கர்.

இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு நின்றது ஒருத்தனின் கண்ணில் பட்டதையும், அது கன்னியின் வாழ்வில் கண்ணி வெடியைக் கொழுத்திப் போட போவதையும் யார் சொல்வது பவளமல்லியிடம்!!!!!!

Scroll to Top