KKP Epi 10(2)

“அடங்காப்பிடாரி, அறிவுக் கெட்டவ, ராங்கிப் புடிச்சவ” எனத் திட்டியபடியே தனது வேலையைப் பார்த்தான் சங்கர்.

மதிய உணவை முடித்துக் கொண்டு, மாலை வியாபாரத்துக்குக் கிளம்பியது இந்தக் குடும்பம். அங்கே நடக்கப் போகும் அசம்பாவிததத்தைப் பற்றி கொஞ்சமாய் உள்ளுணர்வு காட்டிக் கொடுத்திருந்தால் கூட கிளம்பியே இருந்திருக்க மாட்டாள் பவளமல்லி.

எப்பொழுதும் போல இவன் பரோட்டாவைக் கவனிக்க, மல்லி வடை சுட ஆரம்பித்தாள். எம்.என்.சி கூட்டம் மாலை தேநீருக்காக வர ஆரம்பித்தது. கோபாலும் மாறி மாறி அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். இப்பொழுதெல்லாம் இங்கே அடிக்கடி விஜயம் செய்யும் ஆட்களில் அந்த ‘படுக்க வா’ ப்ரோகிராமரும் அடக்கம். உணவைத் தின்றானோ இல்லையோ, ஓரக்கண்ணால் மல்லியைத் தின்றுத் தீர்த்தான். பாப்பம்மா மல்லிக்கும், பரோட்டாவின் மல்லிக்கும் இருக்கும் பத்து வித்தியாசங்கள் என்ன எனக் கேட்டால், சங்கரை விட இவன் இன்னும் விலாவாரியாகச் சொல்வான்.

முன்பு ஒட்டிக் கிடந்த கன்னம், இப்போது உப்பிக் கிடந்தது. உடம்பு தேவையான இடங்களில் சதை வைத்து, இன்னும் கிக்கேற்றியது. கணவனின் கவனிப்பால், முகம் பொலிவாகிக் போயிருந்தது மல்லிக்கு. மொத்தத்தில் மாற்றான் வீட்டு மல்லி, அவன் சித்தத்தைச் சிதறடித்திருந்தாள். அவள் வேண்டும் என மனமும் உடலும் பேயாட்டம் போட்டது. கேவலம் ஒரு முன்னாள் கிளினர், இன்னாள் வடைக்காரி தன்னை மறுப்பதா எனும் ஆத்திரமும், அகங்காரமும் கண்ணை மறைத்தது அவனுக்கு.

சங்கர் வேலையில் கவனமாய் இருக்க, தேநீர் கப்போடு வடையில் மும்முரமாய் இருந்தவளின் அருகே நெருங்கினான் இவன். அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“ஏய் பாப்பம்மா” என மெல்லிய குரலில் அவன் முணுமுணுக்க நிமிர்ந்து பார்த்தாள் மல்லி.

அவள் பார்வையில் அவ்வளவு அலட்சியம். அவனைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

“அஞ்சாயிரம் தரேன்டி! ஒரே ஒரு தடவை, போதும்!”

இவனிடம் கோபத்தைக் காட்டினால், சங்கருக்கு விஷயம் தெரிந்து தேவையில்லாத கைகலப்பு வரும் என நினைத்தவள், எதுவும் பேசாமல் வேலையை மட்டும் பார்த்தாள்.

ஜெய்சங்கரின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே இன்னும் பேச்சை வளர்த்தான் அவன். அவன் பேச்சை எங்கோ நாய் குரைக்கிறது என்பது போலக் கண்டு கொள்ளாமல் இருந்தாள் மல்லி. கோபாலோ அமர்ந்திருந்தவர்களுக்கு சால்னா கொண்டு போய் ஊற்றிக் கொண்டிருந்தார்.

அவளது அலட்சியம் கண் மண் தெரியாத கோபத்தைக் கொடுத்தது அவனுக்கு.

“இந்த அழகு இருக்கவும்தானடி இவ்வளவு திமிரு உனக்கு! அழிக்கறேன்டி இந்த அழகையும், திமிரையும்” என்றவன் இவள் சுதாரிப்பதற்குள், கையில் வைத்திருந்த தேநீரை வடை சட்டியில் பட்டென ஊற்றினான்.

இவள் சட்டென பின்னே நகர்ந்தும் தெறித்து வந்த எண்ணெய் வடை போட்டுக் கொண்டிருந்த கையைப் பதம் பார்த்து விட்டது.

“மாமா!” எனும் இவள் அலறலில் ஓடி வந்தான் ஜெய்சங்கர். சட்டென நடந்ததை ஊகித்தவன், ஓட முயன்ற ப்ராகிரமரை பிடித்து தரையில் தள்ளி வெளுத்து விட்டான்.

விபத்தாய் நடந்த சம்பவம் என நினைத்துக் கொண்டதால்தான் அவனுக்கு ரத்தக்காயத்தோடு நிறுத்தி உயிரை மிச்சம் வைத்திருந்தான் ஜெய்சங்கர். வேண்டும் என்றே செய்திருந்தான் எனத் தெரிந்திருந்தால் அங்கே ஒரு கொலை விழுந்திருக்கும்.

“மாமா” எனும் மல்லியின் வலி நிறைந்த சத்தத்திலும்,

“டேய்! அந்தப் பரதேசிய விட்டுட்டு புள்ளய பாருடா” எனும் கோபாலின் கூக்குரலிலும்தான் நிதானத்துக்கு வந்தான் சங்கர்.

“இனி எங்க கடைப்பக்கம் எட்டிப் பார்த்துடாதேடா! செத்துருவ” என ஓங்கி அவனை மிதித்துவிட்டு, மனைவியிடம் ஓடி வந்தான்.

வலது கையில் அங்கங்கே திட்டுத் திட்டாய் எண்ணெய் தெறித்துத் தோல் வலண்டுப் போயிருந்தது. பட்டென அவளைத் தூக்கிக் கொண்டவன்,

“நைனா, கடைய அடைச்சிட்டு வூட்டுக்குப் போயிடு!” எனக் கத்தியபடியே, ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஏறிக் கொண்டான்.

தனியார் கிளினிக் ஒன்றுக்குப் போக சொன்னவன், மனைவியின் கையைப் பிடித்து ஊதியபடி,

“வலிக்குதாடி?” எனக் கேட்டுக் கொண்டே வந்தான்.

வலி இருந்தும், அவன் தவிப்பில் இல்லையெனத் தலையாட்டி பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டாள் இவள்.

கிளினிக்கில் டோக்கன் வாங்கி அவளை அமர்த்தி வைத்து விட்டு, லுங்கியின் மடிப்பில் சொருகி இருந்த ஏ.டி.எம் கார்டை வெளியே எடுத்தான் சங்கர்.

“இங்கயே இருடி! நான் ஓடிப் போய் பணம் எடுத்துட்டு வந்துடறேன்”

“இங்க அதிக செலவாகும் போல மாமா”

“வாய மூடு தேவா! எதெதுக்கு கணக்குப் பார்க்கறதுன்னு ஒரு வெவஸ்த்தை வேணா!” என எரிந்து விழுந்தவன், விடுவிடுவென வெளியே நடந்தான்.

அவனின் லுங்கி, அவர்கள் இருவரின் தோற்றம் எல்லாவற்றையும் அருவருப்பாகப் பார்த்தனர் அங்கே அமர்ந்திருந்த சிலர். டோக்கன் வாங்கும் போது கூட ‘காசு இருக்கா?’ என ஒரு மாதிரியான குரலில் கேட்டாள் வரவேற்பு பெண். மற்றவர்களின் பார்வையில் கூனிக் குறுகாமல், உழைத்து உண்பவர்கள் நாங்கள் என நிமிர்ந்தே அமர்ந்திருந்தாள் மல்லி.

சங்கர் திரும்பி வர, இவளது முறையும் வந்தது. டாக்டர் கூட இருவரின் தோற்றத்தை ஒரு மாதிரிதான் பார்த்தார். மல்லியின் கையை சுத்தம் செய்து, குளிர்ச்சியான களிம்பு ஒன்றைப் பூசியவர்,

“ஊசி ஒன்னுப் போட்டுக்கலாம்” எனச் சொன்னார்.

இவள் கணவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தயக்கத்துடன்,

“எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கு டாக்டர்! ஊசிப் போடலாமா?” எனக் கேட்டாள்.

“ஏன்மா, அதை முதல்ல சொல்ல தெரியாதா? இரு, பேபியான்னு கன்பர்ம் பண்ணிட்டு அடுத்து என்ன செய்யறதுன்னு பார்க்கலாம்”

ச்நாள் தள்ளிப் போனது புரியாவிட்டாலும், பேபி என்பது புரிந்தது சங்கருக்கு. சட்டென மலர்ந்த முகம், சற்று நேரத்தில் கடுகடுவென மாறியது. மனைவியை முறைத்தபடி அமர்ந்திருந்தான் இவன்.

நர்ஸ் வந்து சோதனைக்கு அழைத்துப் போய், குழந்தைதான் என உறுதிப் படுத்த, கணவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் பெண். அங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதன் பிறகு வீரியமில்லாத வலி மருந்து கொடுத்து, வாழ்த்துக்கள் சொல்லி வழியனுப்பி வைத்தார் டாக்டர்.

பணம் கட்டி விட்டு ஆட்டோவில் ஏறி அமர,

“மாமா” என அழைத்தாள் பவளமல்லி.

அவன் திரும்பியும் பார்க்கவில்லை, வாய் திறந்தும் பேசவில்லை. இவளும் அதற்கு மேல் அமைதியாகிப் போனாள். உடம்பு அசந்து போக மெல்ல அவன் மேல் சாய்ந்து கொண்டாள். அவள் தோள் மேல் கைப்போட்டு பிடித்து கொண்டவன், அமைதியாகவே வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்த இருவரையும் வரவேற்ற கோபால்,

“எப்படிமா இருக்கு கை? டாக்டர் என்ன சொன்னாங்க?” எனக் கேட்டார்.

“டாக்டர் நீ தாத்தாவாகப் போறன்னு சொன்னாங்க நைனா”

“இன்னடா சொல்ற? நெசமாலுமா?” எனக் கேட்ட கோபாலுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

சின்னப் பையன் போல துள்ளிக் குதித்தார். தகப்பனின் சந்தோசத்தைப் பார்த்தவன், மனைவியைக் கோபமாக முறைத்தான்.

“நீ சந்தோசத்துல தலைகாலு தெரியாம ஆடற! ஆனா உன் கண்ணுக்கு குழந்தை வந்ததுலாம் ஒரு மேட்டரே இல்ல! இல்லைனா விஷயம் தெர்ஞ்சிருந்தும் மறைப்பாளா நம்மட்ட? அவளுக்கு வடை போடனும், காசுப் பார்க்கனும், நல்லா செலவு செய்யனும்! அது மட்டும்தான் மேட்டரு. புள்ள விஷயத்தை சொன்னா, எங்க வூட்டுலயே இருன்னு சொல்லுவோம்னு பயந்து நம்மட்ட மறைச்சிட்டா நைனா” என எகிறினான்.

“டேய் சங்கரு! அப்படிலாம் பண்ணாதுடா நம்ம புள்ள”

“பணப்பேய் நைனா இவ! எப்பப்பாரு துட்டு, துட்டுன்னு அதே நெனைப்புத்தான்” எனக் கத்தினான்.

உடல் சோர்வு, கை எரிச்சல், ப்ரோகிராமர் பேசிய பேச்சு, இப்பொழுது கணவனின் ஆத்திரம் என எல்லாம் சேர்ந்து பொறுமையான மல்லியைக் கோபக்கார மல்லியாய் மாற்றியது. என்ன, ஏது எனக் கேள்வி கேட்காமலே, தன்னைக் குற்றவாளியாக்கிய கணவன் மீது ஆத்திரம் பொங்கி வந்தது.

“ஆமா! நான் பண பேய்தான்னு சொல்லுங்கப்பா உங்க மகன்கிட்ட! எனக்கு துட்டுதான் முக்கியம். வேற எதுவும் எனக்கு முக்கியமில்ல! நான் பணப்பேய்னா இவர் மட்டும் யோக்கியமா? பணத்தைக் காவக் காக்கற பூதம் உங்க மகன்!”

“நைனா! என்னைப் பூதம் கீதம்னா அறைஞ்சி பல்லப் பேத்துருவேன்னு சொல்லி வை”

“அப்பா! என்னை பேய்ன்னு சொன்னாரு, நானும் பாஞ்சி பாஞ்சி அடிச்சிருவேன் சொல்லி வைங்க” என இருவரும் கோபாலை மாற்றி மாற்றித் தங்கள் பக்கம் இழுத்து நியாயம் கேட்டார்கள்.

“ஷப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!” என நொந்து போனார் கோபால்.

கோபம் எல்லாம் அழுகையாய் மாற,

“அவன் அவன் பொண்டாட்டிக்கு என்னேன்னமோ செய்யறானுங்க. ஆனா நான், எனக்குன்னு செலவுக்கு நானே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். பொம்பளன்னு பொறந்தா அது இதுன்னு ஆசை இருக்காதா? எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வைக்க நான் என்ன துறவியா? காசு கேட்டா, வல்லுன்னு மேல விழுந்து பிராண்ட வேண்டியது! இப்படி ஒரு புருசன் வாச்சா, எவளா இருந்தாலும் என்னை மாதிரிதான் நடந்துப்பா! பணப்பேயாத்தான் மாறிப்போவா! இப்படியே பணத்தைக் காபந்துப் பண்ணி நாளைக்கு நான் செத்ததும் என் குழியில கொண்டு வந்துப் போடுங்க!” எனக் கத்தினாள்.

“ஏய் என்னடி சொன்ன?” எனக் கையை ஓங்கியவன், பட்டெனக் கையை கீழே இறக்கிக் கொண்டான்.

“வயித்துல என் புள்ள இருக்கறப்போ, குழி கிழின்னு அபசகுணமாப் பேசாதடி” என்றவனின் குரல் ஓய்ந்து போயிருந்தது.

கண்கள் இரண்டும் சிவந்து போய் கிடக்க, முகம் இரும்பென இறுகிக் போகச் சட்டென வெளி நடப்பு செய்துவிட்டான் ஜெய்சங்கர்.

கீழே மடிந்து அழும் பெண்ணைப் பார்ப்பாரா? இல்லை நொந்து போய் வெளியேறி இருக்கும் மகனைப் பார்ப்பாரா?   

அன்றிரவு என்றும் இல்லாத பழக்கமாக, ஃபுல் போதையில் வீடு வந்து சேர்ந்தான் ஜெய்சங்கர்.

தட்டுத் தடுமாறி வந்தவனை கோபால் தாங்கிப் பிடிக்க, மல்லியோ கண்ணில் நீருடன் அவனைப் பார்த்திருந்தாள். அவளை பார்த்ததும் ஒரு சைட்டாக உதடு இழுத்து இளித்து வைத்தவன் தன் கர்ண கடூரக் குரலில்,

“மல்லிகைப் பூ கையில் வாங்கி சுத்தாதீங்க

முள்ள போல குத்துதுன்னு கத்தாதீங்க

இந்த ஜெய சங்கர் பட்ட பாடு

அத சொன்னாலே வெக்கக்கேடு” எனப் பாடியபடியே கோபால் மேல் உவ்வேக்கென வாந்தி எடுத்து வைத்தான்.

“அட நாரப்பயலே!”

Scroll to Top