அத்தியாயம் 1
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி
கை தட்டுதே!!! (பாடல் வரி)
வட சென்னையில் ஒரு குறுக்கு சந்தில் அமைந்திருந்தது அந்த சிறிய வீடு. அதன் வெளியே ஆட்கள் குழுமி இருக்க, உள்ளே ஒரே அழுகைச் சத்தம்.
வேட்டியில் இருந்த பெருசு ஒருவர்,
“பாடிய தூக்கலாம்னா அப்பன்காரன இன்னும் காணலியேயா! ஏன்டா மருது, உன் மாமன் போனுக்கு லைனு கிடைச்சதா இல்லையா?” எனக் கேட்டார்.
“லைனு போகுது சித்தப்பா! அந்த பொறுக்கி நாய் எடுக்க மாட்டறான்” எனக் கறுவினான் மருது.
“ஆக்சிடெண்டான பாடிய இன்னும் எவ்ளோ நேரம்தான் நடு வீட்டுல போட்டு வைக்கறது? காலாகாலத்துல சாங்கியம் சடங்கெல்லாம் முடிச்சிட்டு, சுடுகாட்டுக்குப் போயிட்டு வரனும்ல” எனச் சத்தமாக முணுமுணுத்தார் அந்தப் பெரியவர்.
ஆத்திரத்துடன் மீண்டும் முயன்றான் மருது. இந்த முறை அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ மாமா!”
“இந்தாளு உன் மாமனா?”
“ஆமாங்க! யாரு பேசறது?”
“ஈ2 போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து ஏட்டு பேசறேன்!”
“போலிஸ் ஸ்டேஷனா? மாமாக்கு என்னாச்சு?” எனும் அவன் பதற்றமானக் குரலில் மற்றவர்கள் மருதுவின் அருகே குழுமிப் போனார்கள்.
மருதுவின் சித்தப்பா அவனின் போனை வாங்கி லவுட்ஸ்பீக்கரில் போட்டார்.
“மாமாவுக்கு மஜாவாச்சி! கேக்கறான் பாரு கேள்வி! உன் மாமன், நாங்க ரைடுக்குப் போன லாட்ஜ்ல எவ்ளோ ஒருத்தி கூட கூடி கூத்தடிச்சிட்டு இருந்தான்யா! அப்படியே அள்ளிட்டு வந்து ஜட்டியோட உக்கார வச்சிருக்கோம் போலிஸ் ஷ்டேசன்ல!”
ஆத்திரம் தலைக்கேறியது மருதுவுக்கு. இரவெல்லாம், குழந்தைக்கு ரத்தம் ஏற்ற வேண்டி அப்பன்காரனை எங்கெல்லாம் தேடி அலைந்திருப்பான். இறந்துப் போன பாவப்பட்ட ஜீவனின் ரத்தம் அவனது அப்பாவை ஒத்திருந்தது. மருதுவின் அக்காவின் ரத்தம் வேறாகிப் போக, நர்ஸ் குழந்தையின் அப்பா இன்னும் வரவில்லையா எனக் கேட்ட போதெல்லாம் ரத்தம் கொதித்தது இவனுக்கு. தொலைப்பேசியை இவனது மாமன்காரன் அடைத்து வைத்திருக்க, வெளிய ரத்தத்துக்கு முயன்றதும் தாமதமாகிப் போக அகால மரணமடைந்திருந்தான் இவன் அக்காவின் நான்கு வயது மகன்.
“கேஸ் இன்னும் ஃபைல் பண்ணல! உன் மாமன் கிட்ட நாங்க எதிர்ப்பார்க்கற அளவுக்கு பணமில்லை. ஜீ பே குடுக்கவான்னு கேக்கறான் பரதேசி! ஏன், ஆதாரம் காட்டி எங்கள லஞ்சக் கேசுல காட்டிக் குடுக்கவா? துட்டுக்கு எதாச்சும் ஏற்பாடு பண்ணிட்டு வந்து கூட்டிட்டுப் போங்க இவன! இல்லைனா உள்ளப் புடிச்சுப் போட்டுருவோம்” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார் ஏட்டு.
“துத்தேரி! அவன் உள்ளயே கிடந்து சாகட்டும்” எனக் கத்தினான் மருது.
அதற்குள் விஷயம் உள்ளே அழுதுக் கொண்டிருந்த பெண்கள் வரை பரவியிருந்தது.
“அப்படிலாம் விட முடியாதுடா மருது! பெத்த அப்பன் இல்லாம காரியமெல்லாம் யார் பார்ப்பா! கொள்ளி வைக்கவாவது அவன் வேணும்டா!” என்றார் மருதுவின் அப்பா.
மருதுவின் அப்பா, அவரது தம்பியையும் இன்னும் நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்குக் கிளம்பினார் மருமகனை அழைத்து வர.
கண்ணீர் தாரை தாரையாக வழிய, மகனின் இறந்த உடலருகே அமர்ந்திருந்தாள் அவள். அள்ளி முடிந்திருந்த கேசம், கசங்கிய சேலை, அழுதழுது வீங்கிக் கிடந்த முகமெனப் பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.
“புருஷனத்தான் முந்தானையில முடிஞ்சிக்க துப்பில்லன்னுப் பார்த்தா, இப்போ பெத்த புள்ளையையும் பறி கொடுத்துட்டு நிக்கறாளே பாதகத்தி. பொறந்தப்பவே சனியனை சடையில முடிஞ்சிகிட்ட மூதேவிடி நீ! உருப்படாதவளே” எனப் பெத்த மகளை ஒப்பாரி எனும் பேரில் வசைப் பாடினார் அவளது அம்மா.
“இவ ஒழுங்கா லட்சணமா நடந்திருந்தா, புருஷன்காரன் ஏன் ஊர் மேயப் போறான்!”
“இப்போ கூட லாட்ஜ்ல வச்சி குட்டியோடவும் புட்டியோடவும் புடிச்சிட்டாங்களாம் அவன! எல்லாரும் கூட்டிட்டு வரப் போயிருக்காங்க”
“ஆளப் பாரேன்! ஒத்தப் புள்ளைக்கே இப்படி ஊதிப் பெருத்துப் போயிட்டா, எந்த புருஷன் வீடு தங்குவான்!”
“சரியான அடங்காப்பிடாரிடி இவ! புள்ளய வச்சிக்கிட்டு, வேலைக்கும் போய்கிட்டு, தபால்லயும் படிக்கறாளாம். அப்புறம் எங்கிருந்து புருஷனுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப் போடறது, மத்தப் பசியையும் ஆத்தி விடறது! அதான் வெளிய தேடிப் போய்ருக்கான் மவராசன்! வீட்டு சாப்பாடு சரியில்லனா ஹோட்டலுக்குப் போறது சகஜம்தானே!”
இப்படியாக பல குற்றச்சாட்டுக்கள் பெண்ணவளை நோக்கி வீசப்பட்டன. எதற்கும் பதில் பேசாமல், மகனின் கன்னத்தை வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள் இவள். வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோடாக இருந்த மகனை, காலன் அள்ளிக் கொண்டு போய் விடுவான் எனக் கனவிலும் நினைத்ததில்லை பெண்.
தெரிந்திருந்தால் நான்கு மணி நேரம் உறங்கும் உறக்கத்தை மூன்றாகக் குறைத்து இன்னும் ஒரு மணி நேரம் மகனின் பூமுகத்தைப் பார்த்தப்படி கழித்திருப்பாளே! போலிஸ் பொம்மைக் கார் கேட்ட மகனைத் திசைத் திருப்பி விடாமல், இன்னும் ஒரு வேளைப் பட்டினி கிடந்து வாங்கிக் கொடுத்திருப்பாளே! இவள் பாடம் படிக்கும் வேளையில் விளையாட அழைக்கும் மகனைத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்திராமல், சேர்ந்து விளையாடி இருப்பாளே! மகனுக்காக செய்யாமல் விட்டதெல்லாம் ஞாபகம் வந்து நெஞ்சைக் குத்திக் கிழித்தன.
பெரிதாய் வெள்ளைத் துணியில் கட்டுப் போட்டிருந்த தலையில் திட்டு திட்டாய் ரத்தக் கறை. கொஞ்சமாய் தெரிந்த நெற்றியிலும், கன்னத்திலும், உலர்ந்து போயிருந்த உதட்டிலும் மாறி மாறி முத்தமிட்டவள்,
“கண்ணா!” என மீண்டும் கதற ஆரம்பித்தாள்.
ஒரு மணி நேரத்தில், பணத்தைக் கட்டி குழந்தையின் தகப்பனை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள். குடுகுடுவென உள்ளே ஓடி வந்தவன், மகனது காலருகே அமர்ந்து,
“ஐயோ ராசா! என் கண்ணா! அப்பாவ விட்டுட்டுப் போயிட்டியேடா! அய்யோ இனி நான் என்ன செய்வேன்! ஒத்தப் புள்ளய பறிகொடுத்த பாவியாகிட்டேனே” எனக் கதறினான்.
அவனது கண்ணீரையும் கதறலையும் தலை நிமிர்த்தி அமைதியாகப் பார்த்திருந்தாள் பெண். அவளது பக்கத்தில், ஏதோ ஒரு நல்லுள்ளம் குடிமா எனக் கொடுத்திருந்த காபி தண்ணீர் ஒரு லோட்டாவில் இருந்தது. நல்ல கனமாய் இருந்த அந்த லோட்டாவைக் கையில் எடுத்தவள், காபியோடு தூக்கி புருஷன் மீது விட்டடித்தாள்.
அது சரியாக அவனது நெற்றியைப் பதம் பார்த்து, ரத்தம் கொட்ட வைத்தது.
“ஐயோ!” என நெற்றியைப் பிடித்துக் கொண்டான் அவன்.
அவளது செயலில் திகைத்துப் போனார்கள் அங்கிருந்தவர்கள். எழுந்து நின்று, தன் முடியைக் கொண்டையிட்டவள், இன்னும் எதாவது கையில் கிடைக்கிறதா கணவனை அடித்துக் கொல்ல எனத் தேடினாள். அவளது உத்தேசம் அறிந்த மற்றப் பெண்கள், ஓடி வந்து இவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள்.
காளியைப் போல ஆக்ரோஷமாக கத்தியபடியே திமிறினாள் இவள். அவளது திமிறலில் மற்றவர்கள் பிடிக்க முடியாமல் விட்டு விட, கணவனை நெருங்கியவள் தன்னால் முடிந்த அளவு ஓங்கி ஓங்கி அடித்தாள். கோபத்தில் அவன் இவளைப் பிடித்துத் தள்ள, ஏற்கனவே சோர்ந்திருந்தவள் பட்டென தரையில் வீழ்ந்தாள்.
