IMM Epi 3(1)

அத்தியாயம் 3

‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்’(பாடல் வரி)

அன்றைக்கு காலையிலேயே அழைப்பு வந்துவிட்டது பூர்ணாவுக்கு. இன்றைக்கு, நாளைக்கு என இழுத்தடித்த பார்ட்டி ஒன்று டெப்பாசிட் கொடுக்கப் போவதாக சொல்லியிருக்க, மகனை அவசரமாகக் குளிக்க வைத்தாள். அவனுக்கு பேம்பர்ஸ் போட்டு, பவுடர் பூசி, கன்னத்தில் அழகாய் திருஷ்டி பொட்டொன்றைக் குட்டியாக வைத்தவள், சாப்பிட்டுக் கொண்டே மகனுக்கும் இட்லியைப் பிய்த்து ஊட்டினாள். அவனது பாஷையில் அவன் என்னென்னவோ பேச, சிரித்த முகத்துடன் கேட்டிருந்தாள். சாப்பிட்டு முடித்து, காபி கலக்கி இவள் குடித்து விட்டு, ராஜத்துக்கும் ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்தாள்.

வீடு சத்தமாய் இருந்தாலும், அவர் பாட்டுக்கு வரவேற்பறையின் ஒரு மூலையில் மெத்தை விரித்து, குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.

அவரை மெல்லத் தட்டி எழுப்பியவள்,

“ம்மா, எனக்கு மணியாச்சு! எழுந்துக்கோங்க! இட்லி செஞ்சு வச்சிருக்கேன்! சாப்பிட்டுகோங்க! ரசமும் சாதமும் வச்சிட்டேன்! மீன் ப்ரிட்ஜில இருந்து வெளிய எடுத்து வச்சிருக்கேன்! மதியத்துக்கு வறுத்து, இவனுக்கும் குடுத்து நீங்களும் சாப்பிடுங்க!” எனச் சொல்லி, அவர் எழுந்து காலைக் கடன்களை முடித்து வரும் வரை காத்திருந்து, பின்பு அரக்கப் பறக்க ஓடினாள்.

ஸ்கூட்டியை ஆபிஸ் இருக்கும் இடத்துக்கு விரட்டினாள். கீழே பார்க்கிங்கில் ஸ்கூட்டியை விட்டுவிட்டு, அவசர அவசரமாக அலுவலகத்துக்குள் நுழைந்தாள் பூர்ணா. லாப்டாப்பைத் திறந்து டெப்பாசிட் வாங்கும் போது சைன் வாங்க வேண்டிய பாரத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து, இவளது சூப்பவைசரிடமும் சொல்லி விட்டு, கஸ்டமர் வரச் சொல்லி இருந்த ஒரு ஹோட்டல்லுக்கு ஸ்கூட்டியில் விரைந்தாள். இவள் போய் அமர்ந்து அரை மணி நேரம் கழித்துதான் வந்தார்கள் அந்த தம்பதிகள். மீண்டும் ஆயிரெத்தெட்டு கேள்விகள் அவர்கள் கேட்க, பொறுமையாக பதிலளித்து, பாரத்தைப் பூர்த்தி செய்ய வைத்து, டெப்பாசிட் பணத்தையும் வாங்கிக் கொண்டாள்.

“சார், மேம்! டெப்பாசிட் கட்டினது இந்த வீட்ட நீங்க ரெண்ட்டுக்கு எடுத்துக்கப் போறீங்கன்னு ஒரு கன்பர்மேஷனுக்காக! சோ இதோட வெப்சைட்ல இந்த வீட்டுக்கான விளம்பரத்த நாங்க நீக்கிடுவோம்! இன்னும் சில நாட்கள்ள, எங்களுக்கு வீடு வேணாம்னு நீங்க சொன்னா, இந்த டெபாசிட் காசு வீட்டு ஓனருக்கு உரிமையானதா ஆகிடும்! திருப்பிலாம் குடுக்க மாட்டாங்க!” என விளக்கிச் சொன்னவள், அவர்கள் மீதம் கட்ட வேண்டிய மற்ற தொகையைப் பற்றியும் மீண்டும் விளக்கி சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்து பார்த்தால், மழை தூற ஆரம்பித்திருந்தது. வேலை, வேலை என ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு ‘சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனே’ என ரசித்துப் பாட ஏது நேரம்! ‘நின்னுத் தொலையேன்! வேலை வெட்டி கிடக்குல்ல!’ எனப் புலம்ப மட்டுமே நேரமிருக்கும் அவர்களுக்கு. சாலையில் சேறும் நீரும் கலந்து ஓட, வாகனம் ஓட்டுபவர்களின் நிலை!!! அதுவும் இவளைப் போல இரு சக்கர வாகனம் ஓட்டும் மக்களின் நிலை அந்தோ பரிதாபம்தான். வேலைகள் வேறு வரிசைக் கட்டி நிற்க, அலுவலகத்துக்குப் போயே ஆக வேண்டிய சூழ்நிலை.

பேக்கை பத்திரமாக ஸ்கூட்டியின் உள்ளே வைத்து விட்டு, தலைக் கவசத்தை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள் பூர்ணா. குறித்த நேரத்தை விட தாமதமாக அலுவலகத்தை அடைந்தவள் தொப்பலாக நனைந்திருந்தாள். குனிந்து தன்னைப் பார்க்க, சுடிதார் உடலோடு ஒட்டிக் கிடந்தது.

“நல்ல வேளை, டார்க் ப்ளூல சுடிதார் போட்டுட்டு வந்துருக்கேன்! இல்லைனா உள்ள உள்ளது அப்படியே வெளியே தெரிஞ்சிருக்கும்” என முனகிக் கொண்டே, உள்ளே நுழைந்தாள்.

பேக்கை மேசை மேல் வைத்து விட்டு, கழிவறைக்குள் நுழைந்துக் கொண்டாள். தன்னால் இயன்ற மட்டும் சட்டையைப் பிழிந்து, சுடி பாட்டத்தையும் பிழிந்து விட்டுக் கொண்டவள், வேகமாய் நடந்துப் போய் தனதிடத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

மற்றவர்கள் தங்களது வேலையில் மூழ்கி இருக்க, இவளது ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்தப்படியே அமர்ந்திருந்தது ஓர் உருவம். ஏற்கனவே நனைந்திருந்தவளுக்கு, ஏசி குளிர் ஏகத்துக்கும் நடுக்கத்தைக் கொடுத்தது. அதை முயன்று ஒன்றுமில்லாதது போல ஒதுக்கி லாப்டாப்பைத் திறந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

திடீரென அவள் முன்னே ஆவி பறக்க ஒரு கப் காபி நீட்டப்பட்டது. ஆச்சரியத்துடன் இவள் நிமிர்ந்துப் பார்க்க, அங்கே ஹல்க்குக்கு தம்பி போன்ற உடற்கட்டுடன் ஒருத்தன் நின்றிருந்தான். இவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“குளிருக்கு இதமா இருக்கும்! குடி” என மேசை மேல் வைத்தான் கப்பை.

முதன் முதலில் பார்க்கும் தெரியாத பெண்ணிடம் குடிங்க எனச் சொல்லாமல் குடி என்றதில் இவளுக்கு மனம் சுணங்கியது.

“காபி வேணும்னா எனக்குப் போட்டுக் குடிக்கத் தெரியும்! உன் கரிசனத்துக்கு ரொம்ப நன்றி!” எனப் பட்டென இவளும் உங்களை விடுத்து உன் எனப் பதில் பேசினாள்.

“வேணாட்டி போ” என்றவன் கப்பை எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் தானே பருகவும் ஆரம்பித்தான்.

திராவிட நிறத்தில், முறுக்கேறிய உடம்புடன், கழுத்தில் மொத்தமான சில்வர் சங்கிலி, கருப்பு டீஷர்ட் மறைக்காத இடமெல்லாம் வண்ண வண்ண டாட்டூ, ஒரு பக்க காதில் மட்டும் கடுக்கண் எனப் பார்க்கவே பயங்கரமாய் இருந்தான். எதிர்த்துப் பேசி விட்டவளுக்கு அவன் முழு உருவத்தை ஆராய்ச்சியாய் பார்த்ததில், உடம்பு சிலிர்த்து நடுங்கியது.

‘தலையில ஒரு தட்டுத் தட்டினான்னா, பூமிக்குள்ள ஆறடி அமுங்கிடுவேன் போலிருக்கே!’ என நினைத்தவளுக்கு பயந்து வந்தது.

மற்றவர்கள் கூப்பிடு தூரத்தில் அமர்ந்திருக்க, ஒரு குருட்டுத் தைரியத்தில்,

“ஹலோ! யார் நீங்க? உள்ள வந்து உங்க ஆபிஸ் மாதிரி காபிலாம் போடறீங்க!” எனக் கெத்தாய் கேட்டாள்.

அதில் பாதி வாக்கியம் தந்தியடிக்க, மீதி வாக்கியம் இவளுக்கே கேட்கவில்லை. இவளது தைரியத்தைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு அவனுக்கு. வாய் விட்டு அவன் நகைக்க, முத்துப் பற்கள் பளிச் பளிச்சென மின்னியது.

அவனது சிரிப்பு சத்தம் கேட்டு, வெளியே வந்தார் மேகலை. சிரிப்பவனையேப் பார்த்திருந்தவருக்கு, முகம் மென்மையானது.

“பூர்ணா!” என அவர் அழைக்க, இவன் சிரிப்புப் பட்டென நின்றது.

“எஸ் மேடம்!”

“ரெண்டு பேரும் என் காபினுக்கு வாங்க!” என்றவர் உள்ளே நுழைந்துக் கொண்டார்.

இவள் அவனைக் கண்டு கொள்ளாமல் உள்ளேப் போக, அவளைப் பின் தொடந்து இவனும் போனான்.

“பூர்ணா! வேலைக்குப் புதுசா பையன் வரான்னு சொன்னேன்ல. அது இவன்தான்! பேரு இன்பவாணன். இன்பா! இவதான் உனக்கு இன் சார்ஜ். பேரு சம்பூர்ணா!”

‘இவன் பையனா? பையன்னா சிக்குன்னு சிறுத்தக் குட்டியா இருக்கனும் மேடம்! இப்படி பீமன் கணக்கா பெருத்தக் குட்டியா இருக்கக் கூடாது! ச்சே! சின்னப் பையன் எவனாச்சும் வருவான்! என் வேலையெல்லாம் அவன் தலையில கட்டலாம்னு நெனைச்சேனே! ஆசையெல்லாம் மண்ணோட மண்ணாப் போச்சே! இவனப் பார்த்தா வார்த்தையே தந்தியடிக்குது! இந்த லட்சணத்துல நான் எங்க இவன வேலை வாங்கறது’ என மனதில் நினைத்துக் கொண்டவள், அவனைப் பார்த்து கைக் குவித்தாள்.

அவனோ வலது கரத்தைக் கைக் குலுக்குவதற்காக நீட்டினான். மேகலை பார்த்திருக்க, தான் ஒரு பிற்போக்குவாதியாக கருதப்பட்டு விடுவோமா எனும் தயக்கத்தில் அவனது கரத்தில் தன் கரத்தை வைத்தாள் இவள். ஜில்லென இருந்த இவளது உள்ளங்கை அவனது கைச்சூட்டில் குளிர்காய ஆரம்பித்தது. சட்டென கரத்தை உருவிக் கொண்டாள் பூர்ணா.

“பூர்ணா! உன் பக்கத்திலேயே உட்கார வச்சி, இப்போ நீ என்னெல்லாம் செய்யறியோ அதெல்லாம் கத்துக் குடு! வெளிய கஸ்டமர பார்க்கப் போகிறப்பவும் கூட்டிட்டுப் போ! இனிமே இன்பா உன் பொறுப்பு! சரியா?”

“ஓகே மேடம்!” என்றவள், அறையை விட்டு வெளியேறினாள்.

பத்து நிமிடங்கள் சென்று அவள் மேசை அருகே மீண்டும் வந்து நின்றான் இன்பா.

“அங்கிருக்கற நாற்காலியத் தூக்கிட்டு வந்து இங்க போட்டு உட்காருங்க!” என மெல்லிய குரலில் சொன்னாள் இவள்.

அவள் சொன்னதை அப்படியே செய்தான் இவன். அதற்குள் மொத்த அலுவலகமும் இவர்கள் மேசையில் வந்து நின்றது.

யார், என்ன எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவன் அமுக்குனி போல அமைதியாய் இருக்க, இவள்தான் சொல்ல வேண்டியதாகிப் போனது.

அவர்கள் கலைந்துப் போக, இவளோ அருகில் ஒருத்தன் அமர்ந்திருப்பதில் வேலையில் கவனம் வைக்க முடியாமல் தடுமாறினாள். இங்கே வேலைக்கு வந்த புதிதில் மற்றவர்களிடம் கற்றுக் கொண்டதை நோட்ஸாக எழுதி வைத்திருந்த புத்தகத்தை அவனிடம் நீட்டினாள். என்ன என்பது போல அவன் பார்த்து வைக்க,

“இது என்னோட நோட்ஸ்! முதல்ல இதப் படிங்க! எதாச்சும் புரியலைனா என்னைக் கேளுங்க! எனக்கு கொஞ்சம் கால்ஸ் செய்ய வேண்டியது இருக்கு!” எனச் சொன்னவள், முயன்று வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

Scroll to Top