IMM Epi 3(2)

இவனோ, புத்தகத்தை ஏனோதானோவெனப் புரட்டினான். ஏதோ பாடலை ஹம் செய்து கொண்டு இவளது மேசையில் தாளம் வேறு தட்டினான். வேலையைப் பார்த்துக் கொண்டே அருகில் அமர்ந்திருந்தவனை ஓரக் கண்ணால் நோட்டமிட்டாள் பூர்ணா. அவனது தோற்றம் இவளுக்கு பயத்தைக் கொடுத்தது. இவளைக் கண்டுக் கொள்ளாமல், அவன் பாட்டிற்கு இருந்தாலும், என்னவோ மிக அருகில் அவன் அமர்ந்திருந்தது அசௌகரியமாக இருந்தது இவளுக்கு.  

தொலைப்பேசி அழைப்பை முடித்துக் கொண்டவள், இவனை விட்டு சற்று நேரம் விலகினால் போதும் எனும் எண்ணத்தோடு பேண்ட்ரீ போக எழுந்தாள். அவனைத் தாண்டி அவசரமாக நடக்க, இவளது கால் மேசையின் காலில் இடித்துக் கொண்டது. அலுவலகத்தில் அணியும் ஸ்லீப்பர் போட்டிருக்க, சரியான வலி காலில்.

“அம்மா” வென முனகியவள், படக்கென மீண்டும் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.

அவளது ஒவ்வொரு அசைவையும் பார்த்திருந்தவனுக்கு, கோபமாய் வந்தது.

“உன்னை என்ன செஞ்சிடுவேன்னு இவ்ளோ பயம்! பொறுக்கியப் பார்க்கறது போல பயந்து பயந்து ஓரக் கண்ணாலப் பார்க்கற! இங்க பாரு சம்பூ, நான் எந்தப் பொண்ணையும் கையப் புடிச்சு இழுத்தது இல்ல! அதுலலாம் இப்போதைக்கு எனக்கு இண்ட்ரேஸ்ட்டும் இல்ல! மழையில நனைஞ்ச கோழி போல வெடவெடன்னு நடுங்கிட்டு இருக்கியேன்னுதான் காபி கொண்டு வந்து குடுத்தேன். என்னமோ காபி குடுத்து உன் கற்பை சூறையாடிடப் போற மாதிரி பார்த்து வைக்கற நீ! இப்போலாம் நல்லதுக்கே காலம் இல்லடா சாமி! ஒரு ஆம்பள என்ன செஞ்சாலுல் உள்நோக்கம் எதாச்சும் இருக்கான்னே பார்க்கறீங்க! தெரியாமத்தான் கேக்கறேன், என்னைப் பார்த்து என்ன பயம்? இல்ல என்ன பயங்கறேன்!! பெருசா கருப்பா இருக்கேன்! அதுக்கு நான் என்ன செய்ய முடியும்! ஜெனெடிக் அது! டாட்டூ என்னோட ஸ்ட்ரேஸ் ரீலீவர்! எப்போ தோணுதோ அப்போலாம் போய் ஒன்னு குத்திக்குவேன்! அதுல என்ன தப்பு? பூமர் ஆண்ட்டி மாதிரி பிஹேவ் பண்ணாதே” என்றவன், கிரீச்சென நாற்காலியைத் தள்ளி விட்டு விடுவிடுவென அலுவலகத்தின் வெளியே போய் விட்டான்.

அவனது கோபத்தில் நடுங்கிப் போனாள் பூர்ணா! சத்தமில்லாத அழுத்தமான குரல்! அதில் தெரிந்த கோபம் இவளை அசைத்துப் போட்டது.

‘ஐயோ! வேலைக்கு வந்த முத நாளுலயே கோபப் படுத்திட்டோமே! இவன் போய்ட்டான்னு, அதுவும் என் மேல உள்ள கோபத்துல போய்ட்டான்னு தெரிஞ்சா மேடம் என்ன சொல்லுவாங்க!! வேலையை விட்டுத் தூக்கிடுவாங்களா? ஐயோ! ஐயோ!’ எனப் பதைப்பாய் இருந்தது இவளுக்கு.

‘ஓர் ஆளோட வெளித் தோற்றத்தப் பார்த்து குணத்த எடைப் போடற அளவுக்கு நீ பெரிய பருப்பாகிட்டியாடி! கவரப் பார்த்து ஒரு புத்தகத்தை எடைப் போடாதேங்கறது யாருக்குத் தெரியுமோ இல்லையோ, பட்டுத் தெளிஞ்ச உனக்கு நல்லாவே தெரியும்! ஒழுங்கு மரியாதையா அந்த பீம்பாய தேடிப் புடுச்சு மன்னிப்புக் கேளு!’ என மனசாட்சி இவளை சாட, அவசரமாய் இவளும் வெளியே நடையைக் கட்டினாள்.

மழை நின்றிருக்க, அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு மரத்தடியில் நின்று புகைப் பிடித்துக் கொண்டிருந்தான் இன்பன். மெல்ல அவனை நோக்கி நடந்தாள் பூர்ணா. தன்னை நோக்கி இவள் வருவதைப் பார்த்தவன், புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை கீழேப் போட்டு காலால் மிதித்தான்.

அவனருகே வந்தவள்,

“சாரி” எனச் சொல்ல, அதே நேரத்தில் அவனும்,

“சாரி” என்றிருந்தான்.

“ஒரே டைம்ல சேம் வோர்ட் சொல்றோம்! அப்படி சொன்னா மழை வரும்னு சொல்லுவாங்க தெரியுமா! போச்சு, நின்ன மழை மறுக்க வரப் போகுது!” என சகஜமாகப் பேச விழைந்தாள் பூர்ணா.

அப்படியா என்பது போல பார்த்து நின்றான் இன்பன்.

“ரொம்ப சாரிங்க இன்பன். உங்க தோற்றத்தப் பார்த்து தப்பா நெனைச்சது தப்புதான்! என்னை மன்னிச்சுடுங்க! இனிமே இப்படிலாம் நடந்துக்க மாட்டேன்!” என்றவள், மீண்டும் தன் கரத்தை நீட்டி,

“ப்ரேண்ட்ஸ்?” எனக் கேட்டாள்.

முகத்தை சுருக்கி, கண்களால் மன்னிப்பை யாசித்தவளைப் பார்த்து, இவனுக்கும் லேசாய் புன்னகை மலர்ந்தது.

நீட்டிய அவள் கரத்தைப் பற்றிக் குலுக்கினான் இன்பன்.

“ப்ரேண்ட்ஸ்!” எனச் சொன்னவன்,

“நம்ம ப்ரெண்ட்ஷிப்ப செலிபரேட் பண்ண ஒரு கப் காபி கலந்து தரவா?” எனக் கேட்டான்.

சரியென இவள் தலையாட்ட, இருவரும் அலுவலகத்தின் உள்ளே புன்னகை முகத்துடன் நுழைந்தனர்.

Scroll to Top