அத்தியாயம் 6
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்!!!(பாடல் வரி)
மேலும் சில வாரங்கள் வேகமாய் உருண்டோடி இருந்தன. தன்னைப் பற்றி அதற்கு மேல் இன்பனிடம் வேறெதையும் பகிர்ந்துக் கொள்ளவில்லை பூர்ணா. மேலும் ஏதாவது சொல்வாளா என இன்பன் அவள் முகத்தை கேள்வியாய் நோக்கினாலும், கண்டுக் கொள்ளாமல் போய் விடுவாள் இவள். அவனும் அவளே சொல்லாமல் எதையும் வாயைத் திறந்துக் கேட்க வேண்டாமென அமைதியாகி விட்டான். வேலை விஷயங்களைப் பற்றி சாதாரணமாய் பேசினார்கள். சம்பூவும் இன்பூவும் காணாமலே போயிருந்தது. சம்பூர்ணா என அவன் நீட்டி முழக்க, இன்பன் சார் என இவள் தள்ளி நின்றாள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டு அப்பாயிண்டேண்ட் ஏதும் இல்லாததால், பிரபலமான மாலில் இருக்கும் தனது டாட்டூ பார்லருக்கு வந்திருந்தான் இன்பவாணன். டாட்டூ போட்டுக் கொள்வதோடு மற்றவருக்குப் போட்டு விடவும் பிடிக்கும் இவனுக்கு. அதற்காகவே பல கோர்ஸ்கள் சேர்ந்து சர்டிபிகெட்டும் வாங்கி இருந்தான். வங்கியில் லோன் வாங்கி அதற்கான பார்லரும் திறந்திருந்தான் இன்பன். அதில் நல்ல டாட்டூ ஆர்டிஸ்ட்களை தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்தி இருந்தான். இவனுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்குதான் குடி இருப்பான் இவன். பூர்ணாவிடம் வீக்கேண்ட் சரக்கு, சயனம், சாப்பாடு எனச் சொல்லி இருந்தது அவளைக் கடுப்பேற்ற மட்டுமே. அவனது வார இறுதிகள் கழிவது இவ்விடத்தில்தான்.
டாட்டூ அல்லது பச்சை குத்துவது என்பது நம்மால் தவறான விஷயமாகப் பார்க்கப் படுகிறது. அதற்கு காரணமும் இருக்கிறது. ரௌடி அல்லது குண்டர் கும்பலை சேர்ந்தவர்களே பெரும்பாலும் இதைக் குத்திக் கொள்வதால், மற்றவர்களையும் தப்பாகவே பார்க்க நேரிடுகிறது. அதோடு டாட்டூவின் கெமிக்கல் வர்ணங்களினால் தோல் அரிப்பு, தோல் வியாதிகள் வரக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஒரே ஊசியை பயன்படுத்தி இன்னொருவருக்கும் டாட்டூ போட்டதால் எச்.ஐ.வி கிருமி தொற்றி உள்ளது எல்லாம் நடந்திருக்கிறது.
ஆனாலும் நமது பண்டைய இந்திய நாகரிகத்தில் பச்சைக் குத்துவது பரவலாகவே இருந்தது. மேல் ஜாதி ஆட்களுக்கு ஒரு வகை டாட்டூ, கீழ் ஜாதிக்கு வேறு வகை, திருமணம் ஆனப் பெண்களுக்கு ஒரு வகை, தங்களது பொருளாதார வளத்தைக் காட்ட டாட்டூ, அணிகலனாக டாட்டூ, பாதுகாப்புக்காக கடவுளின் உருவத்தை டாட்டூவாக்குவது என பல காரணங்களுக்காக பச்சைக் குத்திக் கொண்டனர் அக்காலத்து மக்கள்.
இன்பனுக்கு என்னவோ இதன் மேல் அதீத காதல். இவன் உடம்பில் டாட்டூ இல்லாத இடம் என்பது இல்லை. நம் உடலில் வலி ஏற்படும் போதோ ஸ்ட்ரேஸ் ஆகும் போதோ எண்டோர்பின் எனும் ஹார்மோன் ஒன்று வெளி வரும். அது வலி நிவாரணியாகவும், நமது மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இவனுக்கு எப்பொழுதெல்லாம் ஸ்ட்ரெஸ் ஆகிறதோ அப்போதெல்லாம் சின்னதாகவோ பெரிதாகவோ ஒரு டாட்டூ குத்திக் கொள்வான். அப்படி செய்வதால் மீண்டும் உற்சாகமாய் இருப்பது போன்ற பிரமை அவனுக்கு. இது தவறென மூளை சொன்னாலும், உடலும் மனமும் என்னவோ டாட்டூவுக்கு அடிமையாகிக் கிடந்தது இன்பனுக்கு.
இவன் உள்ளே நுழைந்த நொடி, அவனது பார்லரில் வேலை செய்யும் இரண்டு ஆர்ட்டிஸ்டுகளும் பாஸ் என ஆனந்தக் கூச்சல் போட்டனர். அவர்கள் இருவருக்கும் வாங்கி வந்திருந்த ஸ்டார்பக்ஸ் கப்பை மேசை மேல் வைத்தவன், இருவரையும் கட்டித் தழுவிக் கொண்டான்.
சுத்தமாய், பாதுகாப்பாய் டாட்டூ போடப்படும் இவர்கள் பார்லருக்கு பெண்கள் கூட வருவார்கள். உடலின் மறைவான பாகங்களுக்கு டாட்டூ போட ஆசைப்பட்டால், அவர்களுக்காக அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து, பார்ட் டைம்மாக வரும் பெண் ஆர்ட்டிஸ்ட்டை வரவழைப்பது இவர்கள் வழக்கம். கை, கால், முதுகு, கழுத்து என்றால் அந்த பெண்களுக்கும் ஓகேவென்றால் இவர்களே போட்டு விடுவார்கள். சில சமயம் டிசைன்களை கஸ்டமர்களே எடுத்து வருவார்கள். பல சமயம் இவர்கள் வைத்திருக்கும் டிசைன் புத்தகத்தில் இருந்து தேர்ந்தெடுப்பார்கள்.
“அடிக்கடி உங்கள பார்க்க முடியல பாஸ் இப்போலாம்!” எனக் குறைப்பட்டுக் கொண்டவர்களிடம்,
“வேலை ஜாஸ்தியாகிடுச்சு கைய்ஸ்! இன்னிக்கு ஃபுல்லா நான் ஃப்ரீதான். ஒருத்தருக்கு ஒருத்தர் டேக் டர்ன் எடுத்துக்கிட்டு ஜாலியா சுத்திட்டு வாங்க! நான் பார்த்துக்கறேன்” என்றான் இவன்.
“யாஹூ!” என அதற்கும் கூச்சல்.
இருவரில் யார் முதலில் செல்வது என அவர்கள் விவாதிக்க, தன்னுடைய காபியை பருகிக் கொண்டே, கணக்கு வழக்குகளைப் பார்க்க அமர்ந்தான் இன்பன். ஆள் வந்ததற்கு அறிகுறியாக டிங்டாங் எனும் சத்தம் கேட்க, நிமிர்ந்துப் பார்த்தான் இவன். பெண்கள் சிலர் வந்திருக்க, சலசலவென சத்தம். இவர்கள் டிசைன் புத்தகத்தைப் பார்ப்பதும், போனில் இருந்து டிசைனைக் காட்டுவதுமாக ஒரே ஆர்ப்பரிப்பு. அவர்கள் பேச்சுக் குரல்களில் இருந்து, இப்பொழுதுதான் காலேஜ் முடித்திருப்பவர்கள் என அறிந்துக் கொண்டான். படிப்பை முடித்து, வேலைக்கு போவதைக் கொண்டாட கூட்டமாக டாட்டூ குத்திக் கொள்ள வந்திருந்தார்கள் அப்பெண்கள்.
கணக்கு வழக்கை மூடி வைத்து விட்டு, இவனும் அவர்களுக்கு டிசைன் தேட உதவ போனான். ஒரு மணி நேரமாய் அதையும் இதையும் பார்த்து, பின்பே என்ன வேண்டும் என தேர்ந்தெடுத்தார்கள் இவர்கள். ஒருத்தி இடுப்பில் போட கேட்க, இன்னொருத்தி பின்னங் கழுத்தில் கேட்க, மற்றவள் கையில் வேண்டுமென கேட்க, அவர்களை சமாளித்து டாட்டூ போட்டு பணம் வாங்கி அனுப்புவதற்குள் போதும் போதுமென ஆகி விட்டது இவர்களுக்கு.
ஒருவன் ஓய்வுக்குப் போய் வந்திருக்க, மற்றவன் மாலையில் போவதாக சொல்லி விட, மதிய உணவு சாப்பிடலாமென பார்லரில் இருந்து வெளியே வந்தான் இன்பன்.
“சர்வா!!!” எனும் சத்தம் கேட்க, குரலும் தெரிந்த குரலாக இருக்க, கத்தல் வந்த திசையை நோக்கினான் இன்பன். அங்கே, பேம்பர்சைக் கழட்டி வீசி விட்டு மேல் சட்டை மட்டும் இருக்க, கீழே மணியை ஆட்டியபடி ஓடிக் கொண்டிருந்தான் சர்வா.
அவனது செய்கையைப் பார்த்து இவனுக்கு சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தது. கைகளில் ஷாப்பிங் பைகளோடு, குட்டிக்கு தேவைப்பட்டதை வைத்திருக்கும் பெரிய பேக்கையும் தூக்கிக் கொண்டு மகன் பின்னால் ஓடிய பூர்ணாவைப் பார்த்து புன்னகை அரும்பியது இவனுக்கு.
நான்கு எட்டில் சின்னவனை நெருங்கிப் பிடித்துத் தூக்கிக் கொண்டான் இன்பன்.
“குட்டி மனுஷா! இப்படி மொத்த ஆம்பள பசங்க மானத்தையும் வாங்கற மாதிரி அம்மணக்கட்டையா ஓடி வரது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா? இனி இப்படி செய்வியா?” எனக் கேட்டபடி அவனது குட்டி வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டினான் இவன்.
கிலுக்கி சிரித்தவன்,
“இன்னும்!” என வயிற்றைக் காட்டினான்.
“கிச்சு கிச்சு காட்டனா புடிக்குமோ சாருக்கு!!” எனக் கேட்டபடியே இன்னும் சிரிப்புக் காட்டினான் இன்பன்.
இன்பனை அங்கே எதிர்ப்பார்க்காத பூர்ணா, மெலிதாகப் புன்னகைத்தாள்.
“பேம்பர்ஸ் நெறைஞ்சுட்டா, பேண்ட்டோட எல்லாத்தையும் கழட்டிடுப் போட்டுடுவான். பெரிய சுத்தக்காரன்! பேம்பர்ஸ எடுக்கறதுக்குள்ள கையை விட்டுட்டு ஓடி வந்துட்டான்” எனச் சொன்னவளுக்கு கண்ணெல்லாம் கலங்கிப் போயிருந்தது.
தன் கையை விட்டு ஓடி, உலகத்தையே விட்டுப் போயிருந்த பெரிய மகனின் ஞாபகம் வந்து விட்டிருந்தது. அவளது கலங்கிய முகத்தைப் பார்த்தவனுக்கு, உள்ளே என்னவோ செய்தது.
“குடுங்க!” என மகனுக்காக அவள் கை நீட்ட, சின்னவனை அவள் கையில் கொடுத்தான் இன்பன்.
சரி வருகிறோம் என்பது போல தலை அசைத்தவள், சர்வாவை அள்ளிக் கொண்டு கழிவறை இருக்கும் இடத்துக்கு நடந்து விட்டாள்.
உள்ளே சிங்க் அருகே இருந்த இடத்தில் அவனைக் கிடத்தி, பேம்பர்சை போட்டு விட்டவளுக்கு மூச்சு வாங்கியது.
“பேண்ட்ஸ் போல இருக்கற பேம்பர்ஸ் போட்டா கழட்ட தெரியுதேன்னு, ஜட்டி போல உள்ளது போட்டா, அதையும் கழட்டி எறிஞ்சா எப்படிடா? ஒன்னு, பாத்ரூம் வருதுன்னு வாயத் தொறந்து சொல்லனும், இல்ல பேம்பர்ஸ் ஒழுங்கா போட்டுக்கனும்! ரெண்டும் முடியலனா நான் என்ன செய்ய?” எனப் புலம்பியபடி மகனைத் தூக்கிக் கொள்ள, அவனோ,
“சர்வா ஹேப்பி!” எனச் சொல்லிக் கொண்டான்.
