IMM Epi 7(2)

சொத்து எனப் பெரிதாக இல்லாவிட்டாலும், ஒரு மளிகைக் கடை இருந்தது! தற்பொழுது இவர்கள் இருக்கும் சின்ன வீடும், தகப்பன் இருக்கும் ஒரு வீடும் இருந்தது. அப்பா குடும்பச் செலவைப் பார்க்கவும்தான், எடுக்கும் சம்பளத்தைக் குஜாலாக செலவு செய்கிறான். அதுவும் இல்லையென்றால், அதோகதிதான் என எண்ணியவன், கோபத்தை விட்டு மலையிறங்கினான். மனைவியை உள்ளே சேர்த்துக் கொண்டவன், அதன் பிறகு தனது வெளி லீலைகளை இன்னும் கவனமாக நடத்திக் கொண்டான்.

கணவன் வெளியே தள்ளி நிர்க்கதியாய் நிற்க வைத்திருக்க, தாய் வீட்டுக்குப் போனாலும் அவர் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள மாட்டார் எனப் புரிந்ததால் கலங்கிப் போயிருந்தாள் சம்பூர்ணா. அதோடு மாமனாரின் வாய் வழியாக கணவனின் வண்டவாளங்கள் வெளியே வர, மனம் விண்டு வலித்தது. ஏற்கனவே கணவன் மேல் சந்தேகம் இருந்தது. வேலை முடித்து தாமதமாக வரும் போது அவன் மேல் வரும் பல கலவையான வாசனைகள், சட்டையில் சிக்கி இருக்கும் நீள முடி எனப் பல தடயங்களைப் பார்த்திருந்தாலும், முட்டாளாய் நம்ப மறுத்தாள் பூர்ணா. இப்பொழுது மாமனாரின் வாய் வழியாகவே விஷயம் வந்து விட, முட்டாளின் சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.

தனக்கென ஒரு பாதை அமைக்கும் வரை இவர்களை எல்லாம் பொறுத்துப் போவது என முடிவெடுத்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். மகனை ஈன்றெடுத்தவள், தனக்கென ஒரு வேலையைத் தேடிக் கொண்டாள், அதோடு தபாலிலும் படிக்க ஆரம்பித்தாள். வேலை, வீடு, மகன், படிப்பு, கணவனின் டார்ச்சர் என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள் சம்பூர்ணா. உணவும், மகனின் அன்பும் மட்டுமே அவளது மன உளைச்சலுக்கு மருந்தானது. கொழுக் மொழுக் உடல் குண்டாகிப் போனது.

கணவன் அணு அணுவாய் ரசிக்கும் உடல் அழகில் இவளுக்கு ஒரு விதமான அசட்டை வந்திருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்தாலும், வீட்டு சாப்பாட்டின் மேல் கை வைக்காமல் இருந்ததில்லை அழகிரி. சில சமயங்களில் கணவனின் அலும்பில், மகனுக்குக் கூட பால் போதாமல் இவள் கஸ்டப்பட்ட நாட்களும் உண்டு.

இவளது மாமனாரும் கண்ணனுக்கு இரண்டு வயது பூர்த்தி ஆவதற்குள் இறந்திருக்க, அழகிரிக்கு கொண்டாட்டம்தான். கடையும், ஒரு வீட்டையும் அவன் பெயருக்கு எழுதியவர், இன்னொரு வீட்டை மருமகளுக்கு பிராயச்சித்தமாக எழுதி வைத்திருந்தார். கடையை விற்றவன், வந்த பணத்தில் வெளிநாட்டு சுற்றுலா, கோவா பயணம் என ஆட்டமாய் ஆடினான்.

மனைவி கொடுக்கும் சுகம் வேண்டும், அந்த சுகத்தால் விளைந்த குழந்தை வேண்டாம்! அப்படித்தான் இருந்தான் அழகிரி. மகனை கிட்டவே அண்ட விடமாட்டான். ஆசையாய் அப்பாவென அருகே போகும் கண்ணன், அழுது கொண்டுதான் இவளிடம் வருவான். எப்பொழுதுமே கூடவே இருந்து அன்பு செய்யும் ஆட்களை விட, தள்ளி நிற்கும் ஆட்கள் மேல்தானே ஏக்கம் வரும். கண்ணனும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்னொரு குழந்தை அதே கஸ்டத்தை அனுபவிக்கக் கூடாது எனக் கணவனுக்குத் தெரியாமலே கருத்தடை மாத்திரை எடுக்க ஆரம்பித்தாள் இவள். அதுவும் உடல் பருமனுக்கு காரணமானது. உடல் ஊதிப் போனதால், மாதவிடாயும் கோளாறாய் போயிருக்க, கர்ப்பத்தடை மாத்திரையை மாற்றிக் கொடுத்தார் டாக்டர். அந்த நேரத்தில்தான் விபத்தாகி மகனைப் பறிகொடுத்திருந்தாள் இவள். மருது இவளை தாய் வீட்டுக்கு அழைத்து வந்து விட, அங்கே மறுபடியும் ஆரம்பித்தது அம்மாவின் பாராயணம்.

“மாட்டேன்! போக மாட்டேன்”

“செருப்புத் தேயத் தேய அடிப்பேன்! கல்யாணமாகிட்டா அம்மா வீடு, விருந்தாளி வீடு போலத்தான். மூனு நாளு தங்கனமா, தின்னமா, சீராடனமா, கெளம்பிப் போய்ட்டே இருக்கனும்! பொட்டிப் படுக்கையைக் கட்டி வை! தம்பி வந்ததும் கொண்டு போய் விட்டுட சொல்லறேன். மருமகன் போன் போட்டு கூப்டுட்டே இருக்காப்ல!”

“ம்மா! மறுபடியும் வெக்கம், மானம், ரோஷத்த விட்டு அவன் கூட வாழ சொல்றியா? என் புள்ள செத்துட்டான்மா! அப்பான்னு கதறிட்டே செத்தான்! எப்படிமா இனி அந்தாளு மூஞ்ச சகிச்சிட்டு வாழ்வேன். அவன் கூடப் படுத்தா ஒவ்வொரு நொடியும் ரத்த வெள்ளத்துல துடிச்ச என் மவன் ஞாபகம்தானேம்மா வரும்! அவன் அங்க உசுருக்குப் போராடிட்டு இருக்க, இந்தாளு எவ முந்தானையையோ மோந்துட்டுக் கிடந்தான்மா! போதும்! உங்க எல்லார் பேச்சயும் கேட்டு, நான் சீரழிஞ்சது போதும்! வெவரம் தெரியாத வயசுல கல்யாணத்தக் கட்டி வச்சு, வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும் போல, புருஷன்னா இதுக்குத்தான் வருவான் போலன்னு எனக்கு தப்பு தப்பா போதனை பண்ணதெல்லாம் போதும்! நாலு பேர் கிட்ட பழகறேன்! உலகம் என்னன்னு இப்போத்தான் புரியுது! எனக்கு அவன் வேணா! வேணவே வேணாம்! புரியுதா???” என ஆங்காரமாய் கத்தியவள், மயங்கி விழுந்திருந்தாள்.

அந்த நேரம் மருது, வீட்டுக்கு வந்திருக்க தண்ணி தெளித்துப் பார்த்தும் மயக்கம் தெளியவில்லை. அவளை அள்ளிக் கொண்டு கிளினிக்குப் போக, டாக்டர் இவள் கர்ப்பமாய் இருப்பதாய் அறிவித்தார். கண்களில் கண்ணீர் இறங்க, வயிற்றைத் தடவியவள்,

“அம்மா கிட்டவே திரும்ப வந்துட்டியாடா கண்ணா!” என முணுமுணுத்தாள்.

கர்ப்பத்தடை மாத்திரை மாற்றிய போது, இவள் சரியாக டைமிங் ஃபோலோ செய்யாமல் விட்டிருக்க அது மடியில் பலனைக் கொடுத்திருந்தது. பிள்ளை வந்துவிட்டது, இனி கணவனுடன் சேர்ந்து இரு என மீண்டும் தாய் ஆரம்பிக்க,

“ஏன்மா? என்னை வலிச்சுத்தான் பெத்தியா இல்லை தவுட்டுக்கு வாங்கிட்டு வந்தியா? ஏன்மா என் மேல பாசமே இல்லாம போச்சு? உன் வாய்க்கு பயந்துகிட்டே சீக்கிரமா கல்யாணம் பண்ணி போய் நான் பட்டதெல்லாம் போதும்மா! தயவு செஞ்சு என்னை விட்டுடு! இனி நானும் என் வயித்துல இருக்கற இந்தக் குழந்தையும் மட்டும்தான் ஒரு குடும்பம். எங்களுக்கு நீங்க யாருமே வேணா! டேய் மருது! அக்காவுக்கு காசு குடுத்துத் தங்கிக்கற மாதிரி எங்கயாச்சும் ரூம் பார்த்துக் குடுடா! இனி என் புள்ளைக்காக நான் நிம்மதியான சூழலுல வாழனும்!” என ஒற்றைக் கரம் தூக்கிக் கெஞ்சலாய் கேட்டாள் தம்பியிடம்.

கண் கலங்கி விட்டது சின்னவனுக்கு. அக்காவுக்கு இனி மன நிம்மதி முக்கியம் என யோசித்து அவன் தேடிப் பார்த்துக் கொடுத்த இடம்தான் ராஜத்தின் வீடு. அங்கே போய் வர இருக்க, ராஜத்தின் கடைசி மகளை இஸ்டப்பட்டுக் கட்டிக் கொண்டான் மருது.        

வயிற்றில் குழந்தை வளர, விவாகரத்துக்கு அப்ளை செய்தவள், வேலையில் மீண்டும் சேர்ந்தாள். அதோடு படிப்பையும் தொடர்ந்தாள். கடை விற்றப் பணத்தை, ஜாலிக்கே அழித்திருக்க, விவாகரத்து வேண்டுமென்றால் தந்தை கொடுத்த வீட்டை எழுதி தர சொல்லிக் கேட்டான் அழகிரி. மாமனார் கொடுத்தது தன் மகனுக்கே சேர வேண்டும் என உறுதியாய் இருந்த பெண், சமூக சேவகி ஒருவரின் உதவி நாடி, அவர் பார்த்துக் கொடுத்த ஒரு பெண் வக்கீலின் மூலம் போராடியே விவாகரத்துப் பெற்றாள்.

மாமனார் கொடுத்த வீட்டை விற்றவள், சின்னதாக ஒரு அபார்ட்மேண்ட் வாங்கிக் கொண்டாள். மிச்ச பணத்தை மகன் பேரில் டெப்பாசிட் செய்து வைத்தாள். குழந்தைப் பிறந்த சில மாதங்களில், படிப்பும் முடிந்திருக்க, ராஜத்துடன் அபார்ட்மேண்டுக்கு குடிப் போனாள் சம்பூர்ணா. அதன் பிறகே மேகலையிடம் வேலைக்குச் சேர்ந்தாள்.

எதுவுமே சுலபமாகக் கிடைத்து விடவில்லை பெண்ணுக்கு! நித்தம் ஒரு போராட்டம்தான். விவாகரத்து ஆகியும் சில சமயங்களில் இவளைத் தேடி வந்து அசிங்கமாக இளிக்கும் மாஜி கணவனிடமிருந்து தப்பிக்க, மீண்டும் கோர்ட் வாசல் ஏற வேண்டிய கட்டாயம். இந்த போராட்டங்களில் உணவு மறந்துப் போயிருக்க, உடல் உழைப்பு அதிகரித்திருக்க, இளைத்துப் போனாள் பூர்ணா. அது வேறு அந்த அழகிரி சைத்தானின் கண்ணை உறுத்தித் தொலைத்தது. போலீசுக்கு பயந்து அடக்கி வாசித்தாலும், முற்றும் முழுதாக விலகி விடவில்லை அழகிரி.

தாலாட்டில் மகன் தூங்கிப் போயிருக்க, அவனை நன்றாகப் படுக்க வைத்தவள், கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள். பெரிய மகனின் படமருகே வந்து நின்றவள், அதை மெல்ல வருடினாள்.

“கண்ணா! சாமி கிட்ட போய்ட்டவங்கள அடிக்கடி நெனைச்சு அழக் கூடாதுன்னு சொல்வாங்க! அப்படி அழுதா மேலுலகத்துல அவங்க நிம்மதியா இருக்க மாட்டாங்களாம். அம்மாவும் எவ்வளவோ முயற்சி பண்ணுறேன்டா உன்னை நிம்மதியா விட்டுட! முடியலையேடா கண்ணா! என்ன செய்யட்டும் நான்? அம்மா சுயநலமா இருக்கேனோ? சாரிடா என் புஜ்ஜூ செல்லம்! ஐ லவ் யூடா கண்ணா! சூன், ஐ வில் லெட் யூ ரெஸ்ட் இன் பீஸ்” எனச் சொல்லியவள் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

Scroll to Top