IMM Epi 10(2)

“இன்னைக்கும் என் பேர்த்டேதான்! ஏன், தூங்கி தினம் தினம் முழிக்கற நாளேல்லாம் என் பேர்த்டேதான்” என இவன் சமாதானமாய் சொல்ல,

“நீ தூங்கி எழுந்திரிக்கறதுக்கெல்லாம் தெனம் உனக்கு செலவுப் பண்ண முடியாது! ஃப்ராடு! இன்னிக்கு நான் செலவு பண்ண பஜ்ஜி பணத்த ஒழுங்கு மரியாதையா எடுத்து வை!” எனக் கையை நீட்டினாள் பூர்ணா.

“அதானே! பூர்ணாட்ட காசு விஷயத்துல வாலாட்ட முடியுமா!” என மற்றவர்கள் கலாய்க்க, சிரித்த முகமாக பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான் இன்பன்.

அவ்விடமே கலகலப்பாய் இருக்க, எல்லோரும் வாங்கி வந்திருந்ததைக் காலி பண்ணிவிட்டு தத்தம் இடத்துக்குப் போனார்கள். மேகலை மட்டும் பூர்ணாவையும், இன்பனையும் ஒரு மாதிரி பார்த்து விட்டுப் போனார்.

மேசையை இவள் சுத்தம் செய்ய, அவளுக்கு உதவினான் இன்பன். அதற்கு மேல் அமைதியாகப் போனது வேலை நேரம். மறுநாள் இன்பனிடம் ஒரு டிபன் கேரியரைக் கொடுத்தாள் பூர்ணா.

“என்னதிது?”

“நேத்து லஞ்ச் வாங்கி குடுத்ததுக்கு ரிட்டர்ன் கிப்ட்! என் கையால சமைச்சி எடுத்து வந்துருக்கேன்! அன்னைக்கு உப்புமா மெரட்டி வாங்கி சாப்பிட்டு, ரெண்டு நாளா வயத்து வலின்னு சீன் போட்டல்ல! இத சாப்பிட்டு ரெண்டு வாரத்துக்கு ‘வருது, வருது, விலகு விலகு’ன்னு டாய்லட்டே கதியா கெடக்கனும் நீ” எனச் சொல்லிப் புன்னகைத்தாள் பூர்ணா.

எதை வாங்கினாலும் திருப்பிக் கொடுத்து விட நானென்ன வட்டிக்காரனா என மனம் சுணங்கினாலும், அவள் கையால் சமைத்த சாப்பாடு என மனம் மகிழ்ந்துதான் போனது இவனுக்கு. ஒன்றும் சொல்லாமல் இன்முகத்துடனே வாங்கிக் கொண்டான் இன்பன்.

மற்றொரு நாள், இவர்களுக்கு ஈ.சி.ஆர் ஏரியாவில் இருந்த ஒரு வீட்டைப் பார்க்க வரச் சொல்லி ஓனரிடமிருந்து வெப்சைட் மூலம் அழைப்பு வந்திருந்தது. மாலை நான்கு மணியளவில் அந்த சந்திப்பு இருக்க, இவர்கள் கம்பெனி கார் கிளப்ப முடியாமல் மக்கர் செய்தது.

“என்னதிது இன்பூ! மணி வேற ஆகுது!” எனப் பதட்டப்பட்டவள்,

“நான் ஸ்கூட்டில போறேன்! நீ உன் பைக்ல வந்திடு” எனக் கிளம்ப முனைந்தாள்.

“இரு சம்பூ! ரெண்டு பேரும் ஒரே இடத்துக்குத்தானே போகப் போறோம்! உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா என் பைக்ல போலாம்! ட்ராபிக் டைம்ல, இங்கருந்து ஸ்கூட்டில போகறதுக்குள்ள ஒரு வழியாகிடுவ நீ”

இவளுக்கு அவனுடன் ஒட்டிக் கொண்டு அந்த பெரிய பைக்கில் போவதற்கு தயக்கமாக இருந்தது.

“என்ன யோசனை??” என எரிச்சலானவன்,

“தொடாம, படாம கூட்டிட்டுப் போறேன்! போதுமா? இப்போ நம்பி வருவியா?” எனக் கேட்டான்.

“இன்பூ மேல இமயமலை அளவுக்கு நம்பிக்கை இருக்கு!”

‘இமயமலை அளவுக்கா!!! இதயத்துல இஸ்க்கு இஸ்க்கு இருக்குன்னு தெரிஞ்சா ஒலக்கையைக் கொண்டு இடிச்சுப் புடுவாளே இடிச்சி!’ என மனதளவில் ஜெர்க்கானான் இன்பன்.

“ஆனா உன் போலவே பெருசா இருக்கற இந்த பைக்ல ஏறத்தான் கொஞ்சம் பயமா இருக்கு!”

“அதெல்லாம் போக போக பழகிடும்! வா, டைம்மாகுது!” என்றவன் அவளை தனது ஹார்லி டேவிட்சனில் ஏற்றிக் கொண்டான்.

“டீ முன்னாள் காதலி! மீட் மை இன்னாள் காதலி!” என அவனது பைக்குக்கு மெல்லியக் குரலில் இண்ட்ரோ வேறு கொடுத்துக் கொண்டான் இன்பன்.

அவனது பைக் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல, அலுவலக வளாகத்தில் இருந்து இவர்களைப் பார்த்தப்படி நின்றார் மேகலை.

அந்த பைக்கில் அமர்ந்ததும் இவள் இன்பனுக்கு சரி சம வளர்த்தியாக தெரிந்தாள். அவன் தோள் தாண்டி முன்னால் போகும் வாகனங்களைப் பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் பயத்துடன் விறைப்பாக அமர்ந்து வந்தவள். போக போக அந்தப் பயணத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டாள். இன்பன் லாவகமாக பைக்கை செலுத்த, கடை வரிசைகள், போஸ்டர்கள், நடந்து போகும் மக்கள், நாய்கள், என எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டே வந்தாள். எப்பொழுதும் தானே ஸ்கூட்டியை செலுத்தும் போது, சாலையில் கவனமாய் இருக்கத் தோன்றுமே தவிர, இப்படி ரசிக்க முனைந்ததில்லை பூர்ணா. காற்று வேறு அடித்து வீச, முடி அங்கும் இங்கும் பறந்தது. லாப்டாப் பேக் இருவருக்கும் நடுவே இருக்க, இன்பனின் ஸ்போர்ட் ஜாக்கேட் இடுப்பு பகுதியைப் பிடித்தபடி வந்தாள் இவள்.

திடீரென விபரீத ஆசை ஒன்று முளைத்து மெல்ல, மெல்ல அவளை ஆட்டிப் படைத்தது. குனிந்து ஹெல்மெட் போட்டிருந்த இன்பனின் காதருகே,

“இன்பூ! ரெண்டே ரெண்டு நிமிஷம் ஓடற பைக்ல எழுந்து நின்னு ஓன்னு கத்தவா?” எனக் கேட்டாள்.

அவள் பேசியது காற்றின் வேகத்தால் கேட்காமல் போக, மெல்ல சாலையோரம் பைக்கை நிறுத்தியவன், திரும்பிப் பார்த்து என்னவென கேட்டான்.

“ம்ப்ச்! ஒன்னுமில்ல!” என மழுப்பினாள் பூர்ணா.

“என்னன்னு கேக்கறேன்ல!”

“டீவிலலாம் பார்க்கற மாதிரி, ஓடற பைக்ல பின்னாடி உக்கார்ந்துருக்கறவங்க எழுந்து நின்னு கையை விரிச்சி ஸ்டண்ட் காட்டுவாங்கல்ல, அந்த மாதிரி எனக்கும் செய்யனும்னு ஆசை வருது” என்றாள் இவள்.

அவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,

“திடீர்னு டேஞ்சர் ஆக்ட்லாம் பண்ணனும்னு ஏன் தோணுது உனக்கு?” எனக் கேட்டான்.

“இத்தனை வருஷ வாழ்க்கைய உப்பு சப்பு இல்லாம வாழ்ந்துட்டேன்! உன் கூட இருக்கறப்ப, உன்னோட ஆட்டிட்டியூட் பார்க்கறப்போ, எனக்கும் வாழ்க்கையை நம்ம இஸ்டப்படி வாழ்ந்துப் பார்க்கலாம்னு தோணுது இன்பூ”

“அப்படி என்ன நான் இஸ்டப்பட்டு வாழறேன்? எனக்கொன்னும் அப்படி தோணலியே!”

“வெளிய இருந்து பார்க்கறவங்களுக்குத்தானே தெரியும் இன்பூ! யார் என்ன நினைச்சா எனக்கென்னன்னு, உடம்புல இப்படி டாட்டூவா போட்டு வச்சிருக்க. என் லைஃப் என் இஸ்டம்னு, பிடிச்சா வேலைக்கு வர, இல்லைனா டாட்டூ பார்லருக்குப் போயிடற! விருப்பப்பட்டத சாப்பிடற! என்னைப் பத்தின உன்னோட ஒப்பினியன நீயே வச்சிக்கோன்றது போல மத்தவங்க கிட்ட திமிர் காட்டற! யாருக்கும் வளைஞ்சிக் குடுக்க மாட்டற! உன் ஃபேஸ்புக்ல ட்ரேக்கிங் போட்டோஸ், டைவிங் போட்டோஸ், காயாக்கிங் போட்டோஸ்னு நெறைய பார்த்தேன்! எவ்ளோ சந்தோசமா லைஃப லீட் பண்ணற! உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்கு இன்பூ! நான்லாம் என்னடா வாழ்ந்துருக்கேன்னு தோணுது!” என்றவளுக்கு குரல் கம்மியது. 

“வெளிய இருந்து நீ பார்க்கறப்போ, நான் லைஃப எஞ்சாய் பண்ணறது போல தோணுது! ஆனா நெஜத்துல, தனிமைன்ற பேயை ஓட்டி விட, நான் ஓடிட்டே இருக்கேன்”

அவன் சொன்ன பாவமும், குரலின் ஏக்கமும் இவளை என்னவோ செய்தது. என்ன சொல்லி அவனைத் தேற்றுவது என இவள் யோசிக்க, அவனோ சட்டென புன்னகையை முகத்தில் ஒட்ட வைத்திருந்தான்.

“நான் கொஞ்சம் ஸ்லோ டவுன் பண்ணறேன் சம்பூ! என் தோளுல ரெண்டு கையையும் இறுக்கிப் புடிச்சுக்கோ! கொஞ்சம் ஸ்டேபிள் ஆனதும் ஒரு கைய விட்டுட்டு, ஒரு கையத் தூக்கி வேணும்னா ஸ்டண்ட் பண்ணிக்கோ! இன்னைக்கே ரெண்டு கையையும் விட்டுட்டு, விழுந்து வாரி வைக்காதே! எங்கம்மாவ என்னடா பண்ணன்னு சர்வா என்னை சாத்திடப் போறான்! கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு கையையும் விட்டுட பழகிக்கலாம்” எனச் சொன்னவன், மீண்டும் மெல்ல சாலையில் கலந்தான்.

அவன் சொன்னது போலவே மெல்ல எழுந்து நின்றவள், இறுக்கமாக அவனிரு தோள்களையும் பற்றிக் கொண்டாள். பின் மெல்ல ஒற்றைக் கையை விட, அவனது வலது கரம் பின்னால் வந்து இவளது இடுப்பை வளைத்துக் கொண்டது. இன்பனின் பிடிமானம் இருக்க பயத்தை உதறி, ஓவென கத்தினாள் இவள். இன்பன் இன்னும் கொஞ்சம் வேகத்தைக் கூட்ட, இன்னும் வேகமாக யாஹூவென கத்தினாள் பூர்ணா. மனதில் அடைத்து வைத்திருந்த பாரங்கள் எல்லாம் கரைந்து போவது போலத் தோன்ற, கத்திக் கொண்டே இருந்தாள். பக்கத்தில் பயணித்தவர்கள் வினோதமாகப் பார்த்ததைக் கூட கண்டுக் கொள்ளாமல் தனதுலகத்தில் இருந்தாள் பூர்ணா. இன்பனுக்கு அவளது செய்கையில் அப்படி ஒரு புன்னகை.

சரியான நேரத்துக்கு வீட்டை அடைந்திருந்தார்கள் இவர்கள். இறங்கி நின்றவள், பட்டென இன்பனைக் கட்டிக் கொண்டாள்.

“தேங்க்ஸ் இன்பூ! தேங்க் யூ சோ மச்! ரொம்ப நாளைக்கப்புறம் மனசு லேசானது போல ஒரு ஃபீலிங்! தேங்க்ஸ்” எனச் சொன்னவள், சட்டென விலகிக் கொண்டாள்.

“அந்த கத்து கத்திருக்க! அதுலயே பாதி ஸ்ட்ரேஸ் ஓடிருக்கும்!” என்றவனுக்கு அந்த சில நொடி அணைப்பு, சாலையில் நடக்கும் போது, மரத்திலிருந்து நீர்த்துளிகள் சடசடவென கொட்டி மேனியை சிலிர்க்க வைப்பது போல இவனையும் சிலிர்க்க வைத்திருந்தது.

Scroll to Top