அத்தியாயம் 12
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்!!! (பாடல் வரி)
டிப்பிக்கல் மாமியாராய் நடந்துக் கொண்ட வீரம்மாவால், திருமணமான சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் போய்விட்டான் மருது. மகனாய் அம்மா கூப்பிடும் போதெல்லாம் எல்லா உதவிகளையும் செய்பவன், மாதாமாதம் பணமும் கொடுத்து விடுவான். அடிக்கடி போய் தாயைப் பார்த்து விட்டும் வருவான்.
தன் அக்காவின் வாழ்க்கையை இப்படி போனதற்கு முழு முதற் காரணமாக தன் தாயைத்தான் சொல்வான் மருது. கவர்மெண்ட் வேலை, அழகன், வரதட்சணை குறைவு எனப் பார்த்தாரே தவிர, குணம் அப்படி இப்படி எனத் தெரிந்தும் திருமணமானால் எல்லாம் சரியாகி விடும் என அக்காவைப் பாழுங் கிணத்தில் தள்ளியவர் தன் அம்மாவென்பதில் மிகுந்த ஆத்திரம் இவனுக்கு. அந்தக் காலகட்டத்தில் இவனும் விடலைப் பையன்தானே! அக்காவை அடக்கி ஒடுக்கி வைத்து போல இவன் மனைவியையும் அவர் நடத்தப் பார்க்க, சட்டென சுதாரித்தவன் விலகி இருந்துக் கொண்டான்.
ஆனாலும் தீபாவளி, பண்டிகை தினம் என்றால் அம்மா வீட்டில்தான் எல்லாம். அன்று அவன் மனைவி உமாவுக்கு வளைக்காப்பு. விசேஷத்தை பெற்றோரின் வீட்டில்தான் வைத்திருந்தான். வேலைக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, கூட இருந்து எல்லா உதவிகளையும் செய்தாள் பூர்ணா.
இப்பொழுதெல்லாம் அன்னையிடம், தந்தையிடமும் பேசுவாள், பழகுவாள், ஆனால் அதில் ஒர் ஒதுக்கம் இருக்கும். மனம் விட்டுப் பழகுவது மருது ஒருவனிடம்தான். சொந்த பந்தங்களை அறவே ஒதுக்கி வைத்தாள் இவள். எப்பொழுது பார்த்தாலும் இவள் விவாகரத்து செய்தது தப்பென சொல்லி, கணவன் வீட்டை விட்டு பிணமாகத்தான் வெளியே வர வேண்டும் ஒரு திருமணமானப் பெண் என அறிவுரை சொல்லி இவளை வேண்டுமென்றே காயப்படுத்துவார்கள்.
இவளைப் போல தங்களால் எதிர்த்து நிற்க முடியவில்லையே, அடித்தாலும் உதைத்தாலும் கேவலப் படுத்திக் கொடுமை செய்தாலும், சுய சம்பாத்தியம் இல்லாமல் மாமியார், கணவன் காலடியில் விழுந்துக் கிடக்க வேண்டி இருக்கிறதே எனும் பொறாமையே பலரின் பேச்சில் நஞ்சை விதைத்து பூர்ணாவின் மனதை வதைத்தது. ஆரம்பத்தில் நொறுங்கிப் போனவள், இப்பொழுது யாரையும் கண்டுக் கொள்வதில்லை. பெற்றத் தாயே புரிந்துக் கொள்ளாமல் நெஞ்சைக் குத்தி ரணமாக்கும் போது, மற்றவர்கள் பேச்செல்லாம் தன் கூந்தலுக்கு சமம் என ஒதுக்கக் கற்றுக் கொண்டாள்.
ஊரார் பேச்சுக்கும், உறவினர்களின் ஏச்சுக்கும் பயந்து வாழ்ந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. கல்லானாலும் கணவன் என அவன் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்களைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் வெம்பி வதங்கி வாழ்ந்த வாழ்க்கையை நினைக்கவே கூடாது என மனதின் ஓரத்தில் ஒதுக்கி வைத்திருந்தாள். ஆசையாய் இருவர் கூடிக் களித்தால் அது தாம்பத்தியம். வீட்டிற்கு ஒதுங்கி நிற்கும் நாட்களில் கூட கூடலுக்கு அழைத்தால் அது தாம்பைத்தியம் அல்லவா! தானென்ன இவனுக்கு தாலி கட்டி நேர்ந்து விடப்பட்ட வேசியா எனும் எண்ணம் வலுப்பெற அழகிரியை நினைத்தாலே வெறுப்புப் பொங்கி வரும். மனைவிக்கான எல்லா கடமையையும் இவளிடம் எதிர்ப்பார்ப்பவன், கணவனுக்கான எந்தக் கடைமையையும் ஒழுங்காய் செய்ததில்லை. இரண்டுப் பிள்ளைகள் பெற்றிருந்தாலும், இப்பொழுது வரை உறவில் உச்ச நிலையை அடைந்திருக்கிறாளா எனக் கேட்டால், பதில் சொல்லத் தடுமாறித்தான் போவாள் பூர்ணா. அழகிரி அழகாய் இருந்தாலும் மனம் முழுக்க அழுக்கு நிறைந்த ஒரு வக்கிர கொடவுன். அதோடு தன் சுகம் மட்டுமே பெரிதென நினைக்கும் ஒரு சுயநல கொடவுன்!
தாய் வீடு தனக்கில்லை, படிப்பை முடித்திருக்கவில்லை, சம்பாத்தியம் இல்லை, கையில் ஒரு குழந்தை எனப் பல காரணங்களுக்குக்காகக் கணவனை சகித்துப் போகுப் பெண்களில் இவளும் ஒருத்தியாக இருந்தாள். பூமாதேவியேயானாலும் அவள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா!
கண்ணன், கண்ணன் என வாழ்ந்தவளுக்கு கண்ணனையே அள்ளிக் கொடுக்கும் நிலை வந்ததுதான் பொறுமையின் கடைசி தினமாகிப் போனது. பிள்ளைக்கு ரத்தம் கொடுக்கக் கூட கண்டுப்பிடிக்க முடியாத நிலையில் இருந்த அழகிரியை கொல்லும் வெறி வந்தது பெண்ணுக்கு. உள்ளுக்குள் மண்டிக் கிடந்த வெறுப்பெல்லாம் கரை உடைக்க, பொங்கி விட்டாள் சம்பூர்ணா. உலகில் உள்ள தந்தைக்கெல்லாம் அவமானச் சின்னம் அவன்! இனி அவனோடு கூடி வாழ்ந்தால், ஒன்று, தான் உணர்வுகளும் உணர்ச்சிகளும் முற்றும் அழிந்த பிணமாக இருக்க வேண்டும்! அல்லது துன்பத்திலும், துக்கத்திலும் சுகம் காணும் கோழையாக இருக்க வேண்டும் எனத் தோன்றி விட்டது. தன் கணவன், தன் மகன், தன் குடும்பம் எனத் தாங்கிப் பிடித்து எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழாமல் அப்பொழுதே வெட்டி விட்டிருந்தால் தன் கண்ணன் இன்னும் வாழ்ந்திருப்பானோ என பூர்ணா எண்ணித் தவிக்காத நாளில்லை.
தாய் வீட்டுக்கு வந்தது பழைய நினைவுகளைக் கிளறி விட, மிகவுமே மன உளைச்சலில் இருந்தாள் பூர்ணா. பட்டுச் சேலைக் கட்டி, கொஞ்சமாய் நகையணிந்து, சர்வாவை இடுப்பில் சுமந்துக் கொண்டே வளைக்காப்புக்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள், யாரோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வில் திரும்பிப் பார்த்தாள். அங்கே அவளையே வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் அழகிரி.
அருகே வந்த இவள் அம்மா,
“எத்தனை நாளைக்குத்தான் அந்த ராஜம் உனக்குத் துணையா இருப்பா! நாங்களாம் செத்துட்டா, உனக்குன்னு ஒரு துணை வேணாமா? மாப்பிள்ளை முன்ன மாதிரி இல்லடி! திருந்திட்டாரு! வாரா வாரம் வீட்டுக்கு வந்து, கண்ணைக் கசக்கறாரு. மன்னிச்சு மறந்து வாழ்ந்தாதான்டி வாழ்க்கை வண்டிய ஓட்ட முடியும். நான்லாம் குடும்பப் பொறுப்பு இல்லாத உங்குடிகார அப்பன வச்சிக்கிட்டு உங்க ரெண்டு பேரை வளத்து விடலியா! புருஷன் துணைதான்டி பொண்ணுக்குப் பாதுகாப்பு” என முணுமுணுத்தார்.
அவரை முறைத்துப் பார்த்தவள், விசேஷ நாளன்று தன்னால் சண்டை சச்சரவு வேண்டாமே என ஒதுங்கிப் போனாள். இப்பொழுதெல்லாம் அடிக்கடி இவளுக்குப் போன் செய்கிறான், அடிக்கடி கண் பார்வையில் விழுந்து தொலைக்கிறான். தானிருந்த வீட்டையும் விற்று விட்டு, அதிலேயே அழகிரி வாடகைக்கு இருக்கிறான் என மருது சொல்லி இருந்தான். அழகாய் இருந்த மனைவியும், அவள் சம்பாரிக்கும் பணமும், வாங்கிப் போட்டிருந்த அபார்ட்மெண்டும் அவன் கண்ணை உறுத்தித் தொலைக்கிறது என நன்றாகவேப் புரிந்தது இவளுக்கு. போனில் நன்றாகத் திட்டி நம்பரை ப்ளாக் செய்து விட்டாலும், வெட்கமே இல்லாமல் மறுபடி மறுபடி வேறு வழியில் முயல்பவனை நினைக்கையில் ஒரு பக்கம் ஆத்திரம் வந்தாலும், இன்னொரு பக்கம் பயமாய் இருந்தது. தனக்கு என்ன ஆனாலும் தாங்கிக் கொள்வாள், மகனை வைத்து எதாவது கோக்குமாக்கு செய்துவிடுவானோ எனப் பீதியாகவே இருந்தது பூர்ணாவுக்கு.
வேலை இருப்பது போல வீட்டின் பின்னால் இருந்த துணி துவைக்கும் இடத்துக்கு நகர்ந்து விட்டாள் பூர்ணா. மருது மல்லிகைப் பூ போதவில்லை என வாங்கி வர சென்றிருக்க, அழகிரியை விரட்டி விட ஆள் இல்லாமல் போனது. அவள் பின்னோடே அவன் வந்து நிற்க, எரிச்சலாகிப் போனது. கையில் இவள் தூக்கி வைத்திருந்த குழந்தையை கண்டுக் கொள்ளாமல் மனைவியை மட்டும் நோட்டமிட்டான். வந்தவன் யாரோ என்பது போல, தாயின் தோளில் சாய்ந்துக் கொண்டான் சர்வா.
“என்ன?” எனக் கடுப்பான குரலில் கேட்டாள் இவள்.
“யாரவன்?”
“யாரு?”
“என்னடி நடிக்கறியா?”
முறைத்துப் பார்த்தப்படி இவள் நிற்க,
“முறைப்பெல்லாம் அழகாத்தான் இருக்கு! இல்லாமலா பின்னாலேயே குட்டிப் போட்டப் பூனை மாதிரி வந்துட்டு இருக்கேன்” என்றான்.
“சேர்ந்து வாழுன்னு கேக்கறதுக்காக வந்திருந்தா அப்படியே வாசல பார்த்து கெளம்பு! அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு மண்டையில் ஆணி அடிச்ச மாதிரி சொல்லிட்டேன்! என்னைத் திரும்பத் திரும்பத் தொல்லைப் பண்ணாதே!”
“என் கூட வாழ்ந்தப்ப நாலு வார்த்தைப் பேசவே திணறுவே! இப்போ படிச்ச செறுக்குப் பேச வைக்குதா இல்லை கையில நாலு காசு புழங்கற திமிரு பேச வைக்குதா? ஆனாலும் ரொம்ப தைரியமாயிட்டடி! புடிக்குது! இதுவும் ரொம்பப் புடிக்குது!” எனக் கன்னத்தைத் தடவ வந்தவனின் கையை ஆக்ரோஷமாகத் தட்டி விட்டாள் பூர்ணா.
