‘மேகலை இவனை வரக் கூடாதுன்னு மெரட்டிருக்காங்களா! என் கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை சொன்னதில்லையே!’ என யோசித்தாள் இவள்.
இருவரையும் பார்த்து விட்டு அருகில் வந்த பாதுகாவலர்,
“பூர்ணா மேடம்! எதாவது ப்ராப்ளமா?” எனக் கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க! சார் நம்ம வீட்டுக்கு விருந்தாட வந்திருக்காரு! ஒரு படையலப் போட்டுட்டு, நானே அனுப்பி வச்சிடறேன்!” எனச் சொன்னவன் சாட்சாத் இன்பவாணன்தான்.
“யார்டா நீ?” என அழகிரி குரலை உயர்த்த,
“பூர்ணாவோட காவல் தெய்வம்!” எனத் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றான் இன்பன்.
அவனது ஆக்ரோஷமான உடல் மொழியையும், கோபக்கனலைக் கக்கும் கண்களையும் பார்த்த அழகிரிக்கு அல்லு விட்டது. பெண்களிடம் மட்டுமே வீரத்தைக் காட்டிப் பழகி இருந்தவனுக்கு, உடம்பெல்லாம் டாட்டூவுடன், உருண்டு திரண்டிருந்த உடற்கட்டுடன் நின்றிருந்தவனைப் பார்த்துத் தப்பித்தால் மட்டும் போதும் என்றாகிப் போனது.
“இன்னொரு நாள் பேசலாம்” என நழுவ முயன்றவன் தோளில் தன் கையைப் போட்டு உள்ளே அழைத்துப்/இழுத்துப் போனான் இன்பன்.
“இன்னிக்கே ஒரேடியா பேசித் தீர்த்துடுவோம்”
ஒரேடியாவுக்கும் தீர்த்துடுவோமுக்கும் இன்பன் கொடுத்த அழுத்தத்தில் கதி கலங்கிப் போனான் அழகிரி.
“வீட்டுக்குப் போகலாம் சம்பூ!” என அழுத்தமாக இன்பன் சொல்ல, முதலில் திகைத்தாலும், பின் மெல்லியத் தலையசைப்புடன் முன்னே நடந்தாள் பூர்ணா.
இன்பனின் கை கரளாக்கட்டைப் போல தோளை அழுத்த, தப்பிக்க முடியாமல் பலியாடாக கூட சேர்ந்து நடந்தான் அழகிரி. வீட்டைத் திறந்து கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் உள்ளே விட்டாள் சம்பூர்ணா.
தூக்கம் கலைந்ததில் சிணுங்கலுடன் சர்வா தாயின் மார்பைத் தடவ,
“பையனைப் பாரு சம்பூ! சார நான் கவனிச்சிக்கிறேன்” என்றான் இன்பன்.
“இது என்னோட பிரச்சனை இன்பூ! நானே பார்த்துக்கறேன்!”
“உன்னோட பிரச்சனை உன்னோட, என்னோட பிரச்சனை என்னோடன்றதுலாம் மரினா பீச்லயே சமாதி கட்டியாச்சு! இனி எல்லாமே நம்ம பிரச்சனை! புரிஞ்சதா?” என அவளை ஆழ்ந்துப் பார்த்தபடி இவன் கேட்க, அந்த கண்களில் தெரிந்த பாவத்தில் ஸ்தம்பித்து நின்றாள் இவள்.
“உள்ள போம்மா!” என மென்மையாய் இவன் சொல்ல, மந்திரம் போட்டது போல அறைக்குச் சென்றாள் சம்பூர்ணா.
‘என்னடா நடக்குது இங்க!’ என அதிர்ந்துப் போய் நின்றான் அழகிரி.
பூர்ணா அறைக்குள் நுழைந்துக் கொண்டாலும், கதவை முழுதாக மூடாமல் வெளியே நடப்பதைக் கேட்க முயன்றாள். மகனைக் குளிப்பாட்டி, உடை மாற்றி, படுக்க வைத்து தட்டிக் கொடுத்தப்படியே பால் கொடுத்தாலும், காது இரண்டும் வரவேற்பறையில்தான் இருந்தது.
“என்னவாம்?” என அழகிரியைப் பார்த்துக் கேட்டான் இன்பன்.
“அது.. எனக்கு என் மகன் வேணும்!”
எங்கே அடித்தால் பூர்ணாவுக்கு வலிக்கும் என நன்கு அறிந்திருந்தவன், மகன் எனும் அஸ்திரத்தை எடுத்து விட்டான். கோர்ட்டில் மகன், அம்மாவிடம் இருக்க வேண்டுமேன தீர்ப்பாகி இருந்தது. பொது இடத்தில் குழந்தையை இவன் பார்க்கலாம் என சொல்லி இருக்க, அதை ஒரு நாளும் செய்ததில்லை இவன்.
“யாரு மகன யாரு வேணும்னு கேக்கறது?” எனக் கேட்ட இன்பன் ஓங்கி விட்டான் ஓர் அறை.
“பூர்ணா எனக்குப் பொண்டாட்டின்னா, சர்வா எனக்கு என்ன முறை?” எனக் கோபமாகக் கேட்க,
“ம..மகன்” எனத் தட்டுத் தடுமாறினான் அழகிரி.
இன்பன் விட்ட ஒற்றை அறையே கன்னம் தீப்பற்றியது போல எரிந்தது. தலை ஒரு பக்கம் நிற்காமல் தள்ளாடியது அழகிரிக்கு.
“கரேக்டு! சர்வா இந்த இன்பாவோட மகன். வெறும் ஸ்பேர்ம் டொனெட் பண்ண நீயெல்லாம் அப்பன் சுப்பன்னுட்டு எங்க வீட்டுப் பக்கம் வந்த, மறுபடி அப்பனாகிற தகுதிய இழந்துடுவ! ஏற்கனவே சொல்லிருக்கேன், திமிரெடுத்து ஆடிட்டு இருக்கற ‘அதை’ உன் கண் முன்னாடியே கதற கதற கட் பண்ணி கூவத்துல போட்டுருவேன்னு! செய்யவா?” என்றவன், மறு கன்னத்தில் இன்னொரு அறை விட்டான்.
இடியென இறங்கிய அறையில் அவனது அழகிய சிவந்த கன்னம் ரத்த நிறமாகிப் போனது.
“பொம்பளன்னா உனக்கு படுக்கை மட்டும்தான் ஞாபகம் வருமாடா? நான் குடுக்கற குடுப்புல இனி எந்த பொண்ணப் பார்த்தாலும் உலகாளும் தாய் மீனாட்சி அம்மா ஞாபகம் வரனும்! கருணையின் தெய்வம் மதர் தெரேசா ஞாபகம் வரனும்! உன்னைப் பெத்து இப்படி வளத்து விட்டுருக்காளே அந்தப் பாவப்பட்ட ஆத்தா ஞாபகம் வரனும்!” எனச் சொல்லிச் சொல்லி அடித்தான்.
தன்னால் முயன்ற வரை தடுக்க முயன்றான் அழகிரி. கட்டுப்கோப்பாக பயிற்சிகள் செய்து உடம்பை வளர்த்து வைத்திருந்தவனின் அடிக்கு, கண்டப் பெண்களிடம் கண்ட நேரம் படுத்தெழுந்து உடம்பின் சக்திகளை வீணாக்கி இருந்தவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உடம்பு பஞ்சராகிப் போனது அழகிரிக்கு.
“விட்டுடு!” எனக் கெஞ்சினான் அவன்.
“நீ விட்டியாடா? பொண்டாட்டித்தானே என்ன வேணும்னாலும் செய்யலாம்ங்கற அலட்சியம்! மனைவியாவே இருந்தாலும் அவ சம்மதம் இல்லாம தொட்டா அது கற்பழிப்புக்கு சமம்டா! நீயெல்லாம் ஆம்பள இனத்துக்கே ஒரு அவமானம்!” என இன்னும் ஆக்ரோஷமாகத் தாக்கினான் இன்பன்.
மகன் தூங்கியவுடன் கதவை சாற்றி விட்டு, அதன் அருகே கையைக் கட்டியபடி அழகிரி அடி வாங்குவதைப் பார்த்தபடி நின்றாள் பூர்ணா. அழகிரியின் உதடு கிழிந்து ரத்தம் ஊற்றியது. கை, கன்னமெல்லாம் கன்றிப் போய் கிடந்தது. கால் இரண்டும் நிற்க வலுவில்லாமல் துவண்டதில் கீழே விழுந்தான் அவன். உதட்டில் இருந்து சொட்டிய ரத்தத்தையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் பெண்.
இன்பனின் அருகில் போனவள்,
“விட்டுரு இன்பூ! கொலை கேஸாகிடப் போகுது!” எனச் சொல்லியபடியே குனிந்து அழகிரியின் உதட்டில் வழிந்த ரத்தத்தைத் தொட்டு, அதை உற்றுப் பார்த்தாள்.
“இந்த ரத்தம் அப்போ கிடைச்சிருந்தா, என் புள்ள பொழச்சிருப்பான்! என் கண்ணன் உசுரோட இருந்துருப்பான். இப்போ வேஸ்டா கீழ போகுது!” என உச்சுக் கொட்டியவள்,
“இவன் ரத்தம் என் வீட்டுக்குள்ள சிந்தக் கூடாது இன்பூ! இது என் மகனுக்காக நான் பார்த்து பார்த்து உருவாக்கன அன்புக் கோட்டை! அதுல இவனோட பாவ கறை விழறத என்னாலப் பொறுத்துக்க முடியாது! வெளிய தொரத்து ப்ளிஸ்” எனச் சொல்லியவள் சமயலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அழகிரியைத் தூக்கி நிறுத்த முயன்றான் இன்பன். நிற்க கூட முடியாமல் தள்ளாடினான் அவன்.
“லேசாத்தானடா ஒரு காட்டு காட்டுனேன்! அதுக்கே இப்படியா? பிஞ்சி உடம்பு உனக்கு! அதான் பலமா பட்டுருச்சு! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல! இனி என் பொண்டாட்டி, பிள்ளை இருக்கற திசைல கூட உன் மூச்சுக் காத்து வரக் கூடாது! அவங்களுக்கு உன்னால லேசா கீறல் விழுந்தா கூட, எந்த பொந்துல போய் நீ ஒழிஞ்சிருந்தாலும் தேடி வந்து பாடையில ஏத்திடுவேன்! பீ கேர்ஃபூல்!” என்றவன்,
“சம்பூ! இவன வெளிய கொண்டு போய் தள்ளிட்டு வருவேன்! கதவ சாத்திடாதே! உன் கிட்ட பேசனும்” எனச் சொல்லி விட்டே சென்றான்.
அவன் திரும்பி வந்த போது, சுடச் சுட தேநீர் காத்திருந்தது. எதையும் பேசாமல் இருவரும் அமைதியாகப் பருகினார்கள்.
பின் மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்த சம்பூர்ணா,
“இன்பூ! இவன் இப்படி வந்து டார்ச்சர் பண்ணறானே, பாவம் இந்த சம்பூ எப்படி சமாளிப்பான்னு பரிதாபத்துல எனக்கு வாழ்க்கைக் குடுக்க முடிவு பண்ணிட்டியா?” எனக் கலக்கத்துடன் கேட்டாள்.
பட்டென எழுந்துக் கொண்ட இன்பன், திறந்திருந்த முன் கதவை சாற்றி விட்டு பூர்ணாவை நோக்கி நடந்து வந்தான். வரும் போதே அவன் அணிந்திருந்த நீல வர்ண டீ ஷர்டைக் கழட்டியபடிதான் வந்தான்.
சட்டென வேறு புறம் திரும்பிக் கொண்ட பூர்ணா,
“என்னடா பண்ணற நீ?” எனத் திட்டினாள்.
அவள் அருகில் வந்து முட்டிப் போட்டு அமர்ந்தவன்,
“என்னை பாரு சம்பூ” என்றான்.
“சட்டையைப் போடு முதல்ல”
“நீ பாரு, அப்புறம் போடறேன்”
மெல்லத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள் இவள்.
“இங்கப்பாரு!” எனத் தன் இடது புற நெஞ்சைக் காட்டினான் இன்பன்.
படபடப்புடன் அவன் காட்டிய இடத்தைப் பார்த்தவள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துப் போனாள்.
“சம்பூர்வா! உங்க ரெண்டு பேரோட பெயர் காம்போ டாட்டூ! நீயும் நம்ம மகனும் ரொம்ப நாளாகவே என் நெஞ்சுக்கு உள்ளயும், வெளியயும் இருந்து இம்சைப் பண்ணறீங்க” எனப் புன்னகையுடன் சொன்னான்.
“உங்க ரெண்டுப் பேர் மேலயும் கொள்ளைப் பாசம் வச்சிருக்கேன்! நட்புன்னு சொல்லிட்டு காதல சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோன்னு பயந்து, உள்ளுக்குள்ளயே வச்சிக்கிட்டுப் புழுங்கிட்டு இருந்தேன்டி சம்பூ. என்னைப் பார்த்து, பரிதாபத்துல வாழ்க்கைக் குடுக்கறேனான்னு கேக்கறியேடி! நீ சொன்னது போல ஒருத்தர வெறுக்கறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும்! ஆனா பிடிச்சுப் போக காரணமே தேவையில்லைடி! உன்னைப் பிடிக்குது! ரொம்ப ரொம்பப் பிடிக்குது சம்பூர்ணா! வாழ்க்கைனா அது உன் கூட மட்டும்தான்னு முடிவு பண்ணிதான் இந்த டாட்டூவ குத்துனேன்.”
“இப்படி டாட்டூவா எங்க பேர குத்தி வச்சிருக்கியே, நான் உன்னை லவ் பண்ணலனா என்ன ஆகிருக்கும்?”
“போட்ட டாட்டூவ அழிக்கவா முடியும்? அடுத்த கேர்ள்ப்ரேன்ட் யாரு இந்த சம்பூர்வான்னு கேட்டா, எங்க குல தெய்வம்னு சொல்லி சமாளிச்சிட்டுப் போறேன்” எனச் சிரிப்புடன் சொன்னான் இன்பன்.
படபடவென அவனை அடித்தவள், வாய் விட்டுச் சிரித்தாள்.
“இப்படிலாம் நான் சிரிச்சுப் பேசி, வம்பிழுத்து அடிச்சு, கொஞ்சிக் கெஞ்சிலாம் வாழ்ந்தது இல்ல இன்பூ! என்னைப் பார்க்க எனக்கே ஆச்சரியமா இருக்கு! புது சம்பூர்ணாவ எனக்கு அறிமுகப்படுத்தி இருக்க நீ!” என்றவள் அப்படியே அழுது விட்டாள்.
அவளது தாடையைத் தன் இரு கரங்களால் தாங்கிக் கொண்ட இன்பன்,
“பழச எல்லாம் மறந்துடுன்னு சொல்ல மாட்டேன்! ஆனா கம்ப்பேர் பண்ணாதே சம்பூ! அது உனக்கு மன வலியைத்தான் குடுக்கும்! எனக்கு தெரிஞ்ச அளவுல உன்னையும் சர்வாவையும் நான் நல்லாப் பார்த்துப்பேன்! அந்த அழகிரியோட நிழல் கூட உங்க மேல விழாத அளவுக்குப் பாதுகாப்பா வச்சிக்குவேன். பட், நானும் ஒரு சராசரி ஆம்பளைத்தான். எனக்கும் உன்னைப் புரிஞ்சு நடந்துக்கற விஷயத்துல சறுக்கல்கள் வரலாம். யாருமே பெர்ஃபெக்ட் இல்ல பாரு! அந்த மாதிரி டைம்ல சொல்லிக் குடு, நான் கத்துக்குவேன்! கோபம் வந்தா சட்டுன்னு கத்திடுவேன்! அதை மனசுல வச்சிப் புழுங்கிட்டு இருக்காம, நான் சாந்தமா இருக்கறப்போ திட்டி விட்டுடு! ஏன் முடியப் புடுச்சுக் கூட ஆட்டு! நான் வாங்கிப்பேன்! சர்வாவ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு, எங்கப்பா என்னைப் பார்த்த மாதிரி பாசமாவும், கண்டிப்போடும் வளப்பேன்! பாசமா பார்க்கறத மட்டும் ஏத்துக்கிட்டு கண்டிக்கறப்போ மனம் சுணங்கக் கூடாது நீ! அவன் என் மகன்! எனக்கு அவன் மேல எல்லா உரிமையும் இருக்கு! நான் சொல்ல வரதெல்லாம் புரியுதா சம்பூ? உனக்கு என்ன பிடிக்குது, என்ன பிடிக்கலன்னு தெளிவா, பயப்படாம என் கிட்ட சொல்லனும்! அதே போல என் கிட்ட என்ன எதிர்ப்பார்க்கிறன்றதயும் தெளிவா சொல்லனும்!” என மென்மையாய் மொழிந்தவன் அவள் கண்களைத் துடைத்து விட்டு அணைத்துக் கொண்டான்.
மறுமணத்தின் சிக்கலை உணர்ந்து, வாழ்க்கையை எப்படி கொண்டு செலுத்துவது எனத் திட்டமிடலுடன் இருந்தவனை அவ்வளவு பிடித்தது இவளுக்கு. இவனுடனான வாழ்க்கை சண்டை, சச்சரவு, கோபதாபம், காதல், அன்பு, கனிவு, எரிச்சல், புகைச்சல், நக்கல், நையாண்டியென அமோகமாகப் போகும் எனக் கணிக்க முடிந்தது இவளால்.
“ஐ லவ் யூ!” எனச் சொன்னவள் தனது முதல் காதல் முத்திரையை அந்த டாட்டூவின் மேல் பதித்தாள்.
“ஐ லவ் யூ டூ சம்பூ” என்றவனின் மேனி அவள் முத்தத்தில் சிலிர்ந்து அடங்கியது.
