IMTP Epi 9(1)

அத்தியாயம் 9

“ஐ லவ் யூ! யெஸ் யெஸ், குட் பாய்!”

அந்தி சாயும் நேரத்தில் ஜோனியை தடவிக் கொஞ்சிக் கொண்டிருந்தான் எட்வர்ட். ஜோனி தாவியும், பல்டி அடித்தும் தன் எஜமானனைக் குஷிப்படுத்திக் கொண்டிருந்தது. அதன் காதோரம் சொறிந்து கொடுத்தவன்,

“சொல்லு ப்ளேக்கி!” என்றான்.

“ஐ துரை! நான் பின்னால வந்து நிக்கறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

ஆச்சரியம் அவள் குரலில். அவளைத் திரும்பிப் பார்த்து,

“உன்னோட மஞ்சள் வாசம் நீ வரதுக்கு முன்னுக்கே வந்துருதே!” எனச் சொன்னவன் கண்களில் சிரிப்பு இருந்தது.

“அது கஸ்தூரி மஞ்சள். சின்னப் புள்ளையில இருந்து அத பூசிதான் ஆத்தா குளிப்பாட்டும். அப்போத்தான் சொறி புடிக்காது துரை. உங்களுக்கும் எடுத்து வந்து தரவா?”

“அப்போ எனக்கு சொறி புடிச்சிருக்குன்னு சொல்லுறியா ப்ளேக்கி?” என அவளை வம்பிழுக்கக் கேட்டான் எட்வர்ட்.

“ஐயோ துரை! நான் எப்ப அப்படி சொன்னேன்? அப்படியே சொறி பிடிச்சாலும் நான் சொறிஞ்சி விடறேன்” என அவசரமாகத் தலையாட்டிட் சொன்னாள் சுப்பு.

அவள் செய்கையில் வாய் விட்டுச் சிரித்தான் எட்வர்ட். அவன் சிரிப்பதையே வாய் பிளந்து பார்த்திருந்தாள் சுப்பு. இவ்வளவு நாட்களில் அவன் தன்னை மறந்து சிரிப்பதை இப்பொழுதுதான் பார்க்கிறாள்.

“துரை எவ்வளவு அழகா சிரிக்கிறீங்க! கன்னத்துல குழி விழுகுதே”

அவனது நெஞ்சளவில்தான் சுப்புவின் தலை இருக்கும். அவன் கன்னத்துக் குழியைத் தொட்டு பார்க்க எம்பினாள் அவள்.

“தொடக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல!” என மிரட்டலாக சொன்னான் இவன்.

முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள் சுப்பு.

“இப்பலாம் உனக்கு அடிக்கடி கோபம் வருது ப்ளேக்கி! முன்னுக்கு திரும்பு!”

எப்பொழுதும் போல முடியாது எனும் தலையாட்டல் மட்டும் வந்தது.

“ரொம்ப பிடிவாதம் வேற!” என இன்னும் திட்டினான்.

அப்படியேத்தான் நின்றிருந்தாள் இவள்.

“இப்போ திரும்பறியா இல்ல ஜோனிய விட்டு கடிக்க சொல்லவா?”

‘நான் ரெடி பாஸ்’ என்பதைப் போல பல்லைக் காட்டியது ஜோனி.

“இல்ல, இல்ல வேணா துரை” எனப் பதறியவள் முன்னால் திரும்பி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“இனிமே அடிக்கடி எனக்கு முதுக காட்டுவியா?”

“மாட்டேன்!”

“பேசாம இருப்பியா?”

“மாட்டேன்”

காயம் ஆறி கன்னத்தில் சின்னதாக தெரிந்த தழும்பை தடவிக் கொடுத்தவன்,

“மழை வர மாதிரி இருக்கு. உள்ள போ ப்ளேக்கி” என மென்மையாகச் சொன்னான்.

தலையாட்டியவள் உள்ளே ஓடிப் போனாள். திருவிழா சம்பவம் நடந்து பல நாட்கள்  ஓடியிருந்தன. சுப்பு மேல் கை வைத்தவனுக்கு கூட கருமாதி முடிந்திருந்தது.

அன்று சிராய்ப்புக் காயங்களோடு இருந்தவளுக்கு மருந்திட்டு படுக்க அனுப்பினான் எட்வர்ட். நடு இரவில் மனம் கேட்காமல் எழுந்து அவளைப் பார்க்க வந்தவனை அவளது அணத்தல் சத்தம்தான் வரவேற்றது. சுப்புவை நெருங்கி நெற்றியில் கை வைத்துப் பார்த்தான், அனலாய் கொதித்தது. ரூமுக்குள் ஓடிச் சென்று மருந்துப் பெட்டியை எடுத்து வந்தான். அதனுள்ளே இருந்த கிளாஸ் தர்மாமீட்டரை எடுத்தவன், சுப்புவை அசைத்து எழுப்பினான். கண்களைக் கூட திறக்க கஷ்டப்பட்டவளை தன் மீது சாய்த்துக் கொண்டு, வாயைத் திறந்து நாக்கடியில் தர்மாமீட்டரை வைத்தான் எட்வர்ட். சிறிது நேரம் கழித்து எடுத்துப் பார்க்க உடல் சூடு எக்கசக்கத்துக்கும் எகிறி இருந்தது. யோசனையாக நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் அவன்.

இந்த சூட்டுக்கு ஊசி போட்டால் சட்டெனக் காய்ச்சல் இறங்கும். மருந்து என்றால் சில மணி நேரங்களுக்கு ஒரு தடவைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சுப்பு உதடு நடுங்க ஊசி வேண்டாம் எனச் சென்னதை நினைத்துப் பார்த்தவனுக்கு, இரண்டாவது வழியையே செயல் படுத்தலாம் எனத் தோன்றிவிட்டது.

நாடு தாண்டி, வசதி இல்லாத நாடுகளை ஆள வரும் இவனைப் போன்ற பிரிட்டிஷ்காரர்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாக்க கொஞ்சமாவது மருத்துவ ஞானத்தை வளர்த்து வைத்திருப்பார்கள். நமக்கு அந்தக் காலத்தில் கிட்டாத மருந்து மாத்திரைகளும் இவர்கள் கைவசம் இருக்கும். 

அவள் கன்னம் தட்டி எழுப்பி மாத்திரை ஒன்றை வாயில் போட்டு தண்ணீரை புகட்டினான். அப்படியே படுக்க வைத்தவன், அவனது ரூமுக்கு ஓடி இரு போர்வைகளை எடுத்து வந்தான். கீழே ஒன்றை விரித்து, அவளைத் தூக்கி அதன் மேல் படுக்க வைத்தான். பின் சின்ன துண்டை நனைத்து அவள் நெற்றியில் வைத்தவன், இன்னொரு போர்வையைப் போர்த்தி விட்டான். இவ்வளவு நேரமும் கண்களை மூடியே இருந்தவள் அவன் மீண்டும் எழவும் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“துரை, இங்கயே இருங்க! எனக்கு பயமா இருக்கு!” என மெல்லியக் குரலில் முனகினாள்.

“உன் கூடதான் இருப்பேன். கண்ணு கூசுதுல, லைட்டை சாத்திட்டு வரேன் ப்ளேக்கி” என மென்மையாகச் சொன்னான் எட்வர்ட்.

மீண்டும் வந்து அவள் அருகில் அமர்ந்தவனின் கையைப் பிடித்துக் கொண்டாள் சுப்பு. ஒருக்களித்துப் படுத்திருந்தவள், தன் இரு கரங்களாலும் அவன் கையைப் பிடித்து அணைத்தப்படி நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.

‘என்னைத் தொடாதே ப்ளேக்கி!’ என மனதில் மட்டுமே சொல்லிக் கொண்டான் எட்வர்ட்.

அன்று இரவு முழுக்கத் தூங்காமல் அவளுக்கு மருந்துக் கொடுத்து, நெற்றியில் துண்டை நனைத்து வைத்து என அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான் அவன். விடிகாலையில் பட்டு வருவதற்குள் தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான். அதன் பிறகு பட்டு அவளைக் கவனித்துக் கொண்டாள்.

இரண்டு நாட்களுக்குக் காய்ச்சல் படுத்தியது அவளை. பகலில் பட்டுவும் பவுனுவும் கவனித்துக் கொள்ள இரவில் எட்வர்ட் பார்த்துக் கொள்வான்.

“ஏ புள்ள, அன்னைக்கு துரை உனக்கு காசு குடுத்தாருன்னு பவுனு சொன்னாளே, நெஜமா?”

காய்ச்சலில் படுத்திருந்த சுப்புவுக்கு கஞ்சி கொடுத்துக் கொண்டே கேட்டாள் பட்டு.

தலையை ஆமென ஆட்டினாள் சுப்பு.

“நீ காசு வேணும்னு கேட்டியா?”

“இல்லக்கா! துரையேதான் குடுத்தாரு”

“ஓ! அன்னிக்கு காட்டுக்குள்ள ஒன்னை அவருதான் கண்டுபிடிச்சாராம்! ஆமாவா?” எனத் தூண்டில் போட்டாள்.

“ஆமாக்கா! நான் ரொம்ப அழுதனா, இப்படி கட்டிப் பிடிச்சிக்கிட்டாரு”

கைகளை தன்னையே அணைத்தவாறு செய்து காட்டினாள் சுப்பு.

பட்டுவின் முகம் வெளிறியது.

“வேற என்னலாம் செஞ்சிருக்காரு?” எனக் கலக்கத்துடன் கேட்டாள்.

நேரம் எடுத்து யோசித்தவள்,

“நாய் கடிச்சப்ப ஊசி போட்டாரு, நேத்து என் பக்கத்துல படுத்துருந்தாரு” என இன்னும் யோசித்தாள்.

“பக்கத்துல படுத்திருந்தாரா?”

“ஆமாக்கா! நான்தான் பயத்துல துரை கையப் பிடிச்சு இப்படி வச்சிக்கிட்டேனே, அப்புறம் என் பக்கத்துலதான படுக்கனும்”

கஞ்சி பாத்திரத்தை வாங்கி கீழே வைத்துவிட்டு, பட்டுவின் கைப்பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் காட்டினாள் சுப்பு.

“ஓஹோ!”

பாக்கியத்தின் முகம் கண் முன்னே வந்துப் போனது பட்டுவுக்கு. எட்டூரை நாறு நாறாக கிழிக்கும் அவர் வாயும்தான். சுப்பு பாக்கியத்தின் ஜாதிக்கார பெண். சுப்பு மானத்துக்கு ஏதாவது ஆகி விட்டால், எட்வர்டை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், கூட இருந்த தங்களை வகுந்து விடுவார்கள் அந்த ஜாதியினர் எனப் பட்டுவுக்கு நன்றாக தெரிந்தது.

Scroll to Top